அமெரிக்க டைம்ஸ்சும், அண்ட புளுகு பாஜகவும்!

-மணிமாறன்

கடந்த சில நாட்களாக வட இந்திய ஊடங்கங்கள் பிரேக்கிங் நியூசாகவும்,தலைப்புச் செய்தியாகவும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையே பாராட்டுவதாக சொல்லி வரிக்கு,வரி அந்த டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையை வாசித்தும், மறுபிரசுரம் செய்தும் புகழ்ந்து தள்ளிவிட்டன!

”உலகமே யோகியைக் கொண்டாடுகிறது….! உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது…!’’

என்றெல்லாம்.. ஒரே பாராட்டு மழை தான்! உ.பி.மக்களே ஒரு கணம் அசந்து போய்விட்டார்கள்! ஏதோ நாம் தான் நமது முதல்வரை தவறாக புரிஞ்சிக்கிட்டோமா…? அமெரிக்க பத்திரிக்கையே இப்படிப் பாராட்டுதே…என்று நினைத்துவிட்டார்கள்!

கொரானா காலத்தில் யோகி ஆதித்தியநாத் மிகச் சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்பட்டு உ.பி.மக்களை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியதாகவும்,மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சைகளும்,உதவிகளும் மக்களுக்கு வழங்கியதாகவும் அந்த மூன்று பக்க கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது!

ஆனால்,கொரானா காலத்தை மிக மோசமாக கையாண்டது யோகி அரசு என்பது மக்களின் சொந்த அனுபவமாகும்! அதுவும் புலம் பெயர் தொழிலாளர்களை அது எவ்விதம் மனித நேயமின்றி நடத்தியது என நாம் அனைவருமே அறிவோம்!

அப்படியிருக்க எப்படி இப்படி ஒரு பாராட்டு கட்டுரையை அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை எப்படி எழுதியது..? என்று பலரும் தோண்டித்துருவிப் பார்த்தபோது தான் தெரிந்தது..!

உத்திரப் பிரதேச  பா.ஜ.க அரசு, அமெரிக்க டைம்ஸ்சுக்கு விளம்பரம் கொடுத்துவிட்டு, அதையே பாராட்டாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது என்பது…!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு சிறப்பாக கட்டுப்படுத்தி இருப்பதாக டைம் பத்திரிகை பாரட்டி இருக்கிறது என பிரபல வட இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட பல செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால்,மூன்று பக்கத்துக்கு உரிய கட்டணம் செலுத்தி, உத்தரப்பிரதேச அரசு கொடுத்த விளம்பரம், டைம் பத்திரிகையின் பாராட்டாக திரிக்கப்பட்டுவிட்டது என தெரிய வந்த போது மக்கள் ’’அடச்சே…இதென்ன அண்ட புளுகுவாவுல இருக்கு’’ என சலிப்படைந்தனர்!

புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகையின் டிசம்பர் 21-28  தேதியிட்ட இந்திய  பதிப்பில்,  ’’கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் உத்தரப்பிரதேச அரசின் புதுமையான மாதிரி’’ என்ற தலைப்பில் மூன்று பக்க செய்தி வெளியாகியுள்ளதானது,  செய்தி வடிவில் உத்தரப்பிரதேச அரசு கொடுத்திருக்கும் விளம்பரமேயன்றி,செய்திகட்டுரையல்ல! ஆனால், யோகி ஆதித்யநாத் அரசுக்கு புகழ்பெற்ற டைம் பத்திரிகை பாராட்டு என பா.ஜ.க.வினரும்  பெரும்பாலான இந்திய ஊடகங்களும் பரப்பி வருகின்றன.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் அரசின் பணிகளுக்கு டைம் பத்திரிகை அங்கீகாரம் என செய்தி வெளியிட்டுள்ளது ஜீ நியூஸ். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கைக்கு டைம் பத்திரிக்கை பாராட்டு என ‘டிவி9’ இந்தி ஒளிபரப்பு பாராட்டு மழையை பொழிந்துவிட்டது. ஜீ நியூஸ்,‘நியுஸ்18 இந்தி’, ‘ஏபிபி நியூஸ்’ போன்ற தொலைக்காட்சிகளும், பர்ஸ்ட் போஸ்ட் உள்ளிட்ட ஆங்கில,இந்தி செய்தி தாள்களும்  குறைவைக்காமல் பாராட்டி தள்ளிவிட்டன.

‘ஓபிஎல்’ போன்ற செய்தி வலைத்தளங்களும் இந்தப் பணியைச் செய்துள்ளன.

இது குறித்து உண்மை அறியும் ஆய்வில் ஈடுபட்ட ‘லாஜிகல் இந்தியன்’ இணைய தளம், உத்தரப்பிரதேச அரசு கொடுத்திருக்கும் விளம்பரம் என்பதை கண்டுபிடித்தது. டைம் பத்திரிகையை தொடர்புகொண்டு பூம்லைவ் இணைய தளமும் விசாரித்திருக்கிறது. அதில், டைம் ஆசிரியர் குழுவுக்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பு  இல்லை என்பதும் கட்டணம் செலுத்தி வெளியிடப்படும் செய்தி (sponsored content) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக டைம்ஸ் இதழ் எந்த ஒரு கட்டுரைக்கும் எழுதியவரின் பெயரையும் பிரசுரித்துவிடும்.ஆனால், இதில் உ.பியில் இருந்து வந்த கருத்து என தெரிவித்துள்ளது! இது டைம்ஸ்சின் இந்திய பதிப்பில் மட்டுமே வெளியாவதற்கான் கட்டணம் செலுத்தபட்டதாகத் தெரிகிறது!

ஆனால், நம்ம ஊரு பாண்டே, மாலன்..மாதிரியாக அங்கு உ.பியில் உள்ள பாஜக அறிவுஜீவிகள் தங்கள் பேஸ் புக்கிலும்,டிவிட்டரிலும் யோகியை அமெரிக்க டைம்ஸ் அங்கீகரித்ததாக பாராட்டு தெரிவித்துள்ளனர்!

காட்டில் திரிந்த நரிகளைப் பிடித்து குதிரையாக்கிய கதையை திருவாசகத்தில் படித்திருக்கிறோம். இன்றைக்கு நிஜத்தில் அதனைப் பார்க்கிறோம்.

பா.ஜ.க.வும் அதன் தொண்டர்களும் இதுபோன்ற பரப்பியதற்கும் மேலாக, ஊடகங்கள்,அறிவு ஜீவிகள் இப்பணியை மேற்கொள்வது தான் கவலை அளிக்கக்கூடியது.

ஒரு செய்தியின் உண்மையை உரசிப் பார்க்காமல் ஊடகங்கள் சான்று கொடுக்க முயன்றால் வாசகர்கள் என்ன ஆவார்கள்?

உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய ஊடகங்களே, திரிப்பதும், பொய்களை கட்டமைப்பதும் ஆபத்தானது. சமுதாயத்திற்கு கேடானது.

இதைத்தான் ‘‘பொய் சொல்லாதீங்கடா, பொச கெட்டவங்களா..’’ என எளிய மக்கள் கூறுகின்றனர். பாரதியார் இன்னும் ஒரு படி மேலே போய்..

‘‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்

போவான் போவான் ஐயோன்னு போவான்’’ என்கிறார்.

இதைத்தான் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இது குறித்த புலனாய்வுகளை அறிய விரும்புபவர்கள் கிழே தந்துள்ள இணைப்பிற்குள் சென்று பார்க்கலாம்!

https://thelogicalindian.com/fact-check/yogi-adityanath-26001

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time