ரஜினியை நிர்பந்திக்க பாஜகவின் வேதகால அஸ்திரங்கள்…!

சாவித்திரி கண்ணன்

உலகத்தில் எங்குமே நடக்காத அதிசயங்கள் அரங்கேறும் இடம் தமிழ் நாடாகத் தான் இருக்கும்!

அரசியலில் ஈடுபட விருப்பம் காட்டாத ஒரு நடிகரை நம்பி, இந்தியாவை ஆளும் ஒரு கட்சி இடைவிடாமல் பகிரத பிரயத்தனங்களைச் செய்த வண்ணம் உள்ளது!

‘அரசியலுக்கு வரமுடியாது’ என்பதை துணிந்து சொல்ல முடியாமல், பல காலம் தவித்து வந்த ரஜினிக்கு கடைசியில் கொரானா கை கொடுத்தது!

ஆனால், அவரை நம்பி பல வருடங்களாக களவேலை பார்த்து, பல தரப்பிலும் பழைய அரசியல் வி.ஐ.பிக்களை தயார்படுத்தி வைத்து, பல கனவுகளோடு இருந்த பாஜக ரஜினியின் அரசியல் விலகலை ஒத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை என்பது பல வகைகளிலும் வெளிப்பட்டு வருகிறது!

சமூகவலைதளங்களில் மீண்டும்,மீண்டும் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்தும், ரஜினி வரவில்லை என்றால்,ஏதோ தமிழ் நாடே அழிந்துவிடும் என்பதாகவும் கெஞ்சியும், கதறியும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இயங்கி வருகின்றனர்!

ரஜினி ரசிகர்களை தமிழகம் முழுக்க தொடர்பெடுத்து வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு  நிர்பந்திக்கும் ஒரு போராட்டத்தை பாஜக முன்னெடுத்தது! உண்மையில் ரஜினி இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் எதிர்கொள்ளவும் தயங்கவில்லை!

மன்றத்தில் இருந்து என்னால் விலக்கப்பட்டவர்களைக் கொண்டு அது நடத்தப்பட்டது என்பதை பகிரங்கப்படுத்தி,எச்சரிக்கையும் தந்துவிட்டார்! தமிழக உளவுத் துறையின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் முன்னதாகவே ஒரு முக்கியஸ்தர் மூலம் ரஜினி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது! அந்த தகவல்கள் உண்மை தான் என்பதை வள்ளுவர் கோட்ட போராட்டத்தின் விஷுவலை தன் வீட்டில் இருந்து பார்த்தவாறு மட்டுமல்ல, நம்பகமான மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டும் உறுதிபடுத்திக் கொண்டார்!

”சரி, என்னை நிர்பந்தப்படுத்தி அவர்கள் அரசியல் செய்தால், நானும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ எதிர்கொள்வேன்! அன்பாகவும்,பணிவாகவும் சொல்லிப் பார்ப்பேன். விடமாட்டார்கள் என்றால்…, அதன் விபரீதங்களை அவர்களும் பார்த்தாகணும்’’ என்று நெருங்கிய வட்டாரத்தில் அவர் பேசியுள்ளார்! ‘’தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகள் இரண்டும் எனக்கு ஆதரவாக நிற்பாங்க..!’’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

ஆனால்,ரஜினிக்கு எதிராக அவரது ரசிகர்களே கொந்தளித்து அவரை திட்டுவது போல அவர் வெளியீட்ட அறிக்கைக்கு பயங்கர ரியாக்‌ஷன் வெளிப்பட்டுள்ளது! இது இனி மேன்மேலும் தொடரலாம்! ஏனெனில், இது தான் மூன்றாவது படி நிலை அஸ்திரமாகும்!

தினமலர் பத்திரிகை ரஜினியை இழிவுபடுத்தும் விதமாக கிண்டலும்,கேலியும் செய்யத் தொடங்கிவிட்டது!. தினமணி ஒரு பக்க அளவில் மெனக்கெட்டு, (எம்.ஜி.ஆர் 1972 ரஜினி 2021?) ரஜினிக்கு அரசியல் அழுத்தம் தரும் கட்டுரையை என்று போட்டது!

”வருகின்ற சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தின் முக்கிய திராவிட இயக்க ஆளுமைகள் இல்லாமல் நடக்க உள்ள தேர்தல்! இந்த தேர்தலில் எப்படியாவது திராவிட அரசியல் இயக்கங்களின் பலத்தை மட்டுப்படுத்த வேண்டும். இரு திராவிட கட்சிகளுக்குமே மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது! அதற்கு மட்டும் ரஜினி உதவினால் கூட போதுமானது. தேர்தலுக்குப் பிறகு கூட அரசியலில் அவர் இருப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யட்டும்.அப்போது நாங்கள் நிர்பந்திக்கமாட்டோம்’’ என்றும் ரஜினிக்கு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது!

”தேர்தலுக்கு வந்து அசிங்கப்பட்டு நான் விலகுவதை தவிர்க்கத் தான், நான் முன்கூட்டியே விலகிக் கொண்டேன்’’ .என அவர் தெரிவித்துள்ளார்!

”நீங்கள் அப்படியெல்லாம் பேசப்படாது! நீங்கள் அந்த அசுரர்களை அழிக்கும் ஒரு புனிதப் பணிக்கு உதவத்தான் வேண்டும்! நீங்கள் தோற்றால் கூட உங்க இமேஜ் கெடாமல் தமிழக மக்கள் மீது அந்தப் பழியைப் போட்டுவிடுவோம்! நாங்கள் உங்களைவிட்டுக் கொடுக்கமாட்டோம்! தயவுசெய்து மறுபரிசீலனை பண்ணூங்கோ….! ஒரு மாசம் கூட ரெஸ்டு எடுத்துக்கோங்க…! பிப்ரவரி மாசம் வந்தால் கூட போதுமானது…’’ என்று நயந்தும், கெஞ்சியும் அவருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது!

முதலில் சாம, தானத்தை பிரயோகிப்பது! அதற்கு அவர் ஒத்துவராவிட்டால், வேறு வழியின்றி பொது நலன் கருதி (?) பேத தண்டத்தை வேத முறைப்படி எடுக்க வேண்டியது தானாம்! எட்டுகோடி மனுஷாளுக்காக ஒரு மனுஷன்…இறங்கிவரப்படாதா…? ஆனால், 98 சதவிகிதம் முதல் இரு நிலைகளிலிலேயே அவரை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்பதாக பாஜக வட்டாரத்தில் பேசிவருகின்றனர்!

சாம,தான,பேத,தண்டம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் கீழ் உள்ள விளக்கத்தை படித்து புரிந்து கொள்ளவும்!

சாமம் – சமாதானம் கூறியும், இனிய சொற்களைக் கொண்டு பேசியும்  பிரயத்தனம் செய்ய வேண்டும். இது முதல் படிநிலை!

தானம் – எதிர்பார்ப்பதற்கும் மேலாக தானம் தந்து வழிக்குக் கொண்டு வருதல் – இது இரண்டாம் படிநிலை!

பேதம் – ஒதுக்கி வைத்தல் அல்லது புறக்கணித்தல், மிரட்டுதல் போன்றவகை முயற்சிகள்! – இது மூன்றாவது படிநிலை!

தண்டம் – இது அகிம்சையிலிருந்து விலகிய நிலைபாடாகும்! அதாவது, வன்முறையைக் கையாள்வது.  – இது நான்காவது படி நிலையாகும்!

சாம, தான, பேத , தண்டம் என்பதற்கு நமது சனாதான தர்மம் தரும் விளக்கம் இது தான்!

ஒரு நடிகரை,அதுவும் முதியவரை,அதுவும் நோயோடு போராடும் ஒருவரை நம்பித் தான் தங்கள் அரசியலை நடத்த வேண்டுமா? என்பதை இந்துத்துவ ஆதரவாளர்கள், அதாவது திராவிட இயக்க வெறுப்பாளர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஏன் உங்களில் ஒருவர் மக்கள் சேவை செய்து மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கமுடியும் என்று நம்ப மறுக்கிறீர்கள்?

தமிழ் நாட்டு மக்களை நடிகர்களைக் கொண்டு தான் வென்றெடுக்க முடியும் என்பது மிகத் தவறான மதிப்பீடு! அந்த மதிப்பீட்டிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்வது மட்டுமே உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை தரும்! தமிழ் நாட்டின் எதிர்கால நன்மைக்காகவும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time