இன்றைய நிலவரப்படி சசிகலா ஜனவரி 27 விடுதலையாவது உறுதி என நம்பப்படுகிறது.
ஆட்சி, அதிமுக வசம் இருந்தாலும், அது கேப்டன் இல்லாத கப்பலாகவே அதிகார மிதப்பில் மிதந்து கொண்டுள்ளது!
ஆட்சிக்கு தலைமை என்பதை யார் வேண்டுமானாலும் தாங்கலாம்! ஏனெனில், வழி நடத்தி செல்ல அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கட்டமைப்பு உள்ளது. ஆனால், கட்சித் தலைமை என்பது ஒரு கலையாகும்! அதற்கு அசாத்தியமான தலைமைப் பண்பு வேண்டும்! தலைவன் நினைப்பதை செயல்படுத்த அடிமட்டத் தொண்டன் அவர் கட்டளைக்கு காத்திருக்கும் மன நிலையை ஏற்படுத்த வேண்டும்! தலைவனின் தலைமைத் தகுதி குறித்து கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை அனைத்து மட்டத்திலும் வலுவாக இருக்க வேண்டும்!
தமிழகத்தில் இந்த தகுதிகளை பரிபூரணமாக கொண்டிருந்தவர்கள் காமாராஜர், அண்ணா இருவர் மட்டுமே! இருவருக்கும் சுயநல மறுப்பும் இயல்பாகவே இருந்ததானது, அவர்களுக்கு சகலமட்டத்திலும் கேள்விக்கு அப்பாற்பட்ட பெரும் மரியாதையை பெற்றுத் தந்தது!
தற்போதைய அதிமுகவின் தலைவர்களாக அறியப்படும் இருவரும் தலைவர்களல்ல! இவர்கள் இன்று மதிக்கப்படுவது ஆட்சியிலும், கட்சியிலும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் காரணமாகத் தானேயன்றி, வேறல்ல! அந்த இரண்டும் இவர்களிடமிருந்து பறிக்கப்படுமானால், இவர்களும் அக் கட்சியில் சாதாரண ஏரியா தலைவர்களாகிவிடுவார்கள்!
சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பறிப்பது போல ஒரு முயற்சி அதிமுகவில் நடந்தது. அவர் அப்போது ஜெயிலில் இருந்தார். அதை கோர்டில் அவர் சேலன்ச் செய்தார். அதற்குப் பிறகு அதை முழுமைப்படுத்தாமல் அமைதியாகிவிட்டது அதிமுக! இன்றுவரை சசிகலாவை கட்சியில் இருந்தோ, பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தோ விலக்குவதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்! அதைச் செய்யும் துணிச்சல் அந்த கட்சியில் யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை! இது தான் யதார்த்தம்! அதனால் தான் தற்போது கூட ’நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்று அவர்களால் விளம்பரப்படுத்த முடிகிறது!
கோகுல இந்திரா சசிகலாவை, ”தவ வாழ்க்கை வாழ்ந்தவர்’’ என புகழ்ந்து பேசுகிறார்! அவரைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் அங்கு யாருக்குமே இல்லை! ஜெயலலிதா தலைவராக இருக்கும் போது எம்.ஜி.ஆரைப் புகழவே கட்சிக்காரர்கள் பயப்படுவார்கள்! ஒ.எஸ் மணியன்,செல்லூர் ராஜீ, உதயகுமார் ஆகிய முக்கியஸ்தர்கள் இன்றும் சசிகலா என்ற பெயரையே பயபக்தியோடு உச்சரிக்கிறார்கள்!
இதற்கு காரணம் ஜெயலலிதா இருந்த போதே சசிகலா ஒரு அறிவிக்கப்படாத தலைவராக பல்லாண்டுகளாக அந்த கட்சியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்! ஜெயலலிதாவின் விசுவாசத்தை முழுமையாக வென்றெடுத்து, அதன் மூலம் கட்சியிலும்,ஆட்சியிலும் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் சக்தியாக அந்த கட்சியில் அனைவராலும் அறியப்பட்டதாலும், இன்றுள்ளவர்களில் பெரும்பாலாலோர் தங்கள் தகுதியினாலோ,திறமையினாலோ அல்லாமல் சசிகலாவிடம் காட்டிய விசுவாசத்தால் இந்த அந்தஸ்த்தை அடைந்தவர்கள் என்பது தான் அவரது அசைக்கமுடியாத தாக்கம் அந்த கட்சிக்குள் தொடர்வதற்கு காரணம்! அந்த தாக்கத்தை இவ்வளவு அவகாசம் கிடைத்தும், ஆட்சி அந்தஸ்து மற்றும் வாய்ப்புகள்,பண பலம் கிடைத்தும் அந்தக் கட்சிக்குள் யாராலும் தகர்த்து மேல் எழ முடியவில்லை! அவரது வெற்றிடம் நிரப்பட ஆளின்றித் தான் உள்ளது! அதனால் தான் இருவருமே தங்களை ஒருங்கிணைப்பாளர் என்ற அளவில் மட்டுமே நிறுத்திக் கொண்டார்கள்!
ஆக, சசிகலா களத்தில் இறங்கினால் கட்சியில் கணிசமானவர்கள் அவர் பின்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பாஜக நினைத்தது என்றால், சசிகலாவின் வருகையை தேர்தல் முடியும் வரை மற்றொரு வழக்கு போட்டு நீடிக்கலாம்! இருக்கவே இருக்கிறது. சிறையில் அவர் சொகுசாக இருப்பதற்கு இரண்டு கோடி ரூபாய் கொடுத்த விவகாரம்!
இவை அனைத்தும் பாஜக போடும் கணக்கிற்கு அதிமுக ஒத்துழைக்கும் பட்சத்தில் தான் உள்ளது. ”பாஜக கேட்கும் சீட்டுகளைத் தர வேண்டும், கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்’’ ஆகிய நிபந்தனைகளை எடப்பாடி ஏற்றுக் கொண்டால், பாஜக சசிகலா தொடர்பாக அதிமுகவிற்குள் நிகழ இருக்கும் நெருக்கடிக்கு முற்றுபுள்ளி வைக்கும்படி காய் நகர்த்தலாம்! அல்லது சசிகலாவை வெளியில்விட்டு அதிமுக இரண்டாக பிளவுபடுவதை வேடிக்கை பார்ப்பதோடு, அதில் ஒரு அணியை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளக் கூடும்! இரட்டை இலை யாருக்கும் போகாமல் தடுக்கலாம்!
எடப்பாடியையும், பன்னீர் செல்வத்தையும் கையாள்வது போல சசிகலாவை பாஜகவால் சுலபமாக கையாள முடியாது! சசிகலாவைப் பொறுத்த வரை அவர் அடிபட்ட புலி! ஆகவே, அவர் பாஜகவிற்கு பணிவது போல பாசாங்கு காட்டி சமயம் வரும் போது பாயவும் தயங்கமாட்டார்! சசிகலாவிற்கு சாதி ஆதரவும், அதிமுக நிர்வாகிகள் ஆதரவும் இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் ஆதரவு அவ்வளவாக இருக்க வாய்ப்பில்லை. அத்துடன் மக்கள் செல்வாக்கும் இல்லை! ஆனபோதிலும் அந்தக் கட்சிக்குள் அவரை நிராகரித்து கட்சியை கட்டுக் கோப்பாக கொண்டுபோகும் துணிச்சல் யாருக்கும் இல்லை என்பது தான் யதார்த்தமாக உள்ளது!
Also read
ஆனால், சசிகலாவைப் பொறுத்த வரை அவர் பல தரப்புகளை எதிர் கொண்டு மேல் எழ வேண்டும்! ஆட்சி கையில் இருக்கும் வரை சசிகலாவிடம் பணிந்து போக இ.பி.எஸ்சும்,ஒ.பி.எஸ்சும் மறுக்கக் கூடும்! போதாக்குறைக்கு பாஜகவின் பின்னணி இருப்பதால் கொஞ்சம் கெத்து காட்டலாம்! ஆனால், ஆட்சி இழந்த பிறகு கட்சியை காப்பாற்றுவது இருக்கும் இயலாத ஒன்றாகும். ஆகவே, என்ன நடக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. சசிகலாவிற்கு இவர்கள் இருவரைவிடவும் தினகரனை சமாளிப்பது தான் ரொம்ப கடினமாக இருக்கப் போகிறது. ஏனெனில் அவர் கட்சித் தலைவராக இருந்து சுகம் கண்டுவிட்டார்.அத்துடன் முதலமைச்சர் பதவி மீதான ஆசை வேறு யாரைக் காட்டிலும் தினகரனுக்கு அதிகம்! அந்த வகையில் ஜெயலலிதா தினகரனை ஒதுக்கி வைத்தது போல வைத்தால் மட்டுமே அவரால் எதுவும் சாதிக்கமுடியும். அல்லது தினகரனாலேயே கூட சசிகலா வீழ்த்தப்படவும் வாய்ப்புண்டு. தினகரனை சசிகலா எவ்வாறு கையாள்கிறார் என்பதில் தான் அவரது எதிர்காலம் உள்ளது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply