உச்சநீதிமன்றம் கட்டப் பஞ்சாயத்தில் இறங்குகிறது..!

-கே.பாலகிருஷ்ணன்

உறுதிமிக்க விவசாயிகள் போராட்டத்தை கண்டு அரண்டு போயுள்ள அரசு, உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க திட்டமிடுகிறது. அதன் விளைவே நான்கு பேர் கமிட்டி. இந்த நான்கு பேர் வேறு யாருமல்ல, இந்த சட்டங்கள் உருவாக்கத்தின் பின்னணியில் செயல்பட்டவகளே..! கொலைகாரர்கள் கையில் அதிகாரபூர்வமாக கத்தியை தந்ததைப் போல விவசாயிகள் அழிவுக்காக திட்டமிட்டவர்களிடமே தீர்வையும் கேட்டுப் பெறுகிறது உச்ச நீதிமன்றம்!

எட்டாவது சுற்று பேச்சு வார்த்தை அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே தோல்வி அடைந்த நிலையில் அடுத்த சுற்று பேச்சு வார்த்தை ஜனவரி 15 என்று அரசு அறிவித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக உள்ள சிலர் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான வழக்குகளைத் தொடுத்திருந்தார்கள். மேலும் அரசும் இந்தப் போராட்டத்ததை நிறுத்த வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தது. அதுபோல திருச்சி சிவாவும் இச்சட்டங்களின் constitutional validity பற்றி உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இவைகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 11ம் தேதி வந்தது. இவைகளை விசாரித்து வந்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச், அரசை நோக்கி கேள்வி கணைகளைத் தொடுத்தது. இச்சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? இச்சட்டங்களை இயற்றுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களைக் கலந்து பேசினீர்களா? பிரச்சினைகளின் ஒரு பகுதியாக அல்லது தீர்வின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள்தான் இந்தப் பிரச்சினைகளைக் கொண்டு வந்தீர்கள்; எனவே நீங்கள்தான் தீர்க்க வேண்டும் என்பவை போன்ற கேள்விகளைச் சாட்டை எடுத்து வீசுவது போல உச்ச நீதிமன்றம் அரசை விளாசியது.

நாங்கள் இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கப் போகிறோம். ஒரு கமிட்டியை அமைக்க விரும்புகிறோம் என்று கூறியது.  11ம் தேதி நடந்த இந்த விசாரணையைப் பற்றி பலரும் உச்ச நீதிமன்றம் பற்றி ஒரு உயர்ந்த கருத்தை வெளிப்படுத்தினார்கள். அன்று இரவில் மத்திய அரசு ஒரு அவசர மனுவைத் தாக்கல் செய்தது. அதில் ஒரு சிறு கூட்டம் மட்டுமே போராட்டம் நடத்துகிறது என்றும், பெரும்பாலான விவசாயிகள் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்றும், விவசாயிகள் அல்லாதோர் இந்தப் போராட்டத்தை வழி நடத்துகிறார்கள் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது.

ஆனால் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் செல்லவில்லை, இது அரசுக்கும் எங்களுக்குமான அரசியல் பிரச்சினை, இதில் உச்ச நீதிமன்றம் தலையிட ஒன்றுமில்லை, உச்ச நீதிமன்றம் திரும்பி போ என்றாலும் திரும்பி போவதாக இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது. மறுநாள் 12ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த 3 சட்டங்களின் அமலாக்கத்தினை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

எங்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சட்டத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழுவை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம் .என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

முன்னதாக விவசாயிகள் போராட்டத்தை உச்ச நீதிமன்றம் எப்படிப் பார்த்தது என்பதையும், இப்படி ஒரு குழுவை அமைப்பது தொடர்பாகவும், அந்த குழுவில் விவசாயப் போராட்டத்தை நன்கு உணர்ந்துள்ளவரும் பல வருடங்களாக எளிய விவசாயிகளுக்காக எழுதிவருபவருமான பி.சாய்நாத் இடம்பெறுவார் என்பதாகவும் டிசம்பரில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருந்தது;

பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாதவரை. ஒரு போராட்டம், அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும். மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு தரப்பினரும், தங்கள் தரப்பு வாதங்களை வைப்பதற்கு முன்னர், பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான குழு அமைப்பது குறித்து சிந்தித்து வருகிறோம். இந்த குழுவானது. எதை பின்பற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு சொல்லட்டும். அதேநேரத்தில் போராட்டமும் தொடரலாம்.

சுதந்திரமான குழுவில் பாரதிய கிஷான் சங்கத்தின் பி சாய்நாத் இடம் பெறட்டும்!

உச்ச நீதிமன்றம் தற்போது மூன்று சட்டங்களையும் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஆணையை வெளியிட்டு, அத்துடன் மூன்று சட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கான நான்கு பேர் அடங்கிய ஆய்வுக்குழுவையும் அமர்த்தி இருக்கிறது. இதில் பி.சாய்நாத் இடம் பெறவில்லை! இந்த நால்வரும் ஏற்கெனவே இம்மூன்று சட்டங்களையும் ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவர்கள் என்பது மட்டுமல்ல, இந்த சட்டம் உருவாதற்கே பின்னணியாக பல்லாண்டுகள் செயல்பட்டவர்கள்!

இந்த நால்வரில் ஒருவரான பிரமோத் குமார் ஜோஷி என்பவர்,அரசின் அங்கமான தேசிய விவசாய ஆராய்ச்சி அகாதெமியின் இயக்குனராக இருந்தவர். கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம், விவசாயத்தில் நவீனதொழிக் நுட்பம் ஆகியவை பற்றி இடையறாது எழுதி வருபவர்.இத்துடன்  “மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது  தவறான கோரிக்கை என ஊடகங்களுக்குப் பேட்டியும்  கொடுத்திருக்கிறார். அடுத்த உறுப்பினர் அசோக் குலாத்தி, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். பல ஆண்டுகளாக விவசாயத்தை கார்ப்பரேட் கண்ணோட்டத்துடன் அணுகி எழுதி வருபவர்! மூன்று சட்டங்களையும் வரவேற்று, “மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கைகள்; சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டங்கள் உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் பயன்படும்” என்று ஏற்கெனவே கூறியுள்ளார்.

மூன்றாவது உறுப்பினரான புபீந்தர்சிங் மான்,ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர்! “இந்தச் சட்டங்கத்தின் சில அம்சங்கள் வரவேற்கத் தக்கவை. இந்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ள திருத்தங்களை நிறைவேற்றி விட்டால் முழுமையான பயன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். ஆனால், அனைத்து விவசாய அமைப்புகளின் வேண்டுகோளை மதித்து குழுவில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்! அதே சம்யம் மற்றொருவரான அனில் கான்வாண்ட் சேத்கரி சங்காதனா என்ற அமைப்பின் தலைவர். விவசாயத்தில் அரசாங்கத்தின் கண்காணிப்பும்,அதிகாரமும் முற்றிலும் விலக்கி கொள்ளப்பட வேண்டும்.’’என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக  40 ஆண்டுகளாக எழுதியும்,பேசியும் வருபவர்! ’’சுதந்திர இந்தியாவில் துணிச்சலாக விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த அரசு தான்’’ என பாராட்டு சான்றிதழ் வாசித்தவர்! ஆக, இப்படிப்பட்டவர்களை கொண்ட குழுவிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து கேட்டு உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பினால்,அதன் பொருள் அரசுக்கு ஆதரவாக உசா நீதிமன்றம் களத்தில் இறங்கி கட்டபஞ்சாயத்து செய்ய துணிந்துள்ளது என்றே அர்த்தமாகும்!

உச்ச நீதிமன்றம் குழுவை அறிவித்த கையோடு இப்படி சொல்கிறது; “இதற்குப்பின் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறோம்!’’

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தக்கூடாது என்று அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபொழுது, அதற்குத் தனியாக ஓர் அஃபிடெவிட் தாக்கல் செய்யுமாறு கூறியது.

தீவிரவாதிகள் இந்தப் போராட்டத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் ஹரி சால்வே கூறியபோது, அதை அரசாங்க வக்கீல் ஆமோதித்தார். அதற்கும் ஓர் அஃபிடெவிட் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

நால்வர் குழுவுக்குத் தலைமையாக ஓய்வு பெற்ற நீதிபதி லோதாவை நியமித்தது. இவர் ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக சில வழக்குகளைத் தீர்ப்பை அளித்துள்ளவர். அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை ஏற்க மறுத்து விட்டார். இது அநீதிக்கு துணை போக அவர் விரும்பாததை காட்டுகிறது!

கமிட்டி பரிந்துரையை அளிக்க  இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளைப் பொறுத்தவரையில் கமிட்டியிடம் “நாங்கள் பேசப் போவதில்லை. அரசிடம் மட்டுமே நாங்கள் பேசுவோம்” என்பதில் உறுதியாக உள்ளனர்,

யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி கூறும் போது, இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பானது “பட்டினால் செய்யப்பட்ட தூக்கு கயிறு” என்று சொல்லியிருக்கிறார். போராட்டம் இன்னும் வீரியத்துடன் தொடரும்.

கட்டுரையாளர்: கே.பாலகிருஷ்ணன்

அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவின்( AIKSCC )  தமிழக ஒருங்கிணைப்பாளர், தொழிற்சங்கவாதி, இடதுசாரி சிந்தனையாளர்.

யோகேந்திர யாதவ் தொடங்கியுள்ள சுய ஆட்சி இந்தியா என்ற அமைப்பின் தமிழக நிர்வாகியாகவுள்ளார்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time