கொடுஞ்சிறையில் குழந்தைகள்..! கொண்டாடுவதா இஸ்ரேலை…?

- பீட்டர் துரைராஜ்

உலகத்திலேயே பல்லாயிரகணக்கான சிறுவர்களை கல் எறிந்த காரணத்திற்காக கடும் சிறை தண்டணைக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்யும் ஒரே நாடு இஸ்ரேல் தான்! உலகில் மனித நேயமுள்ள எந்த ஒரு மனிதனாலும் இஸ்ரேலின் அரபு முஸ்லீம்களுக்கு எதிரான இதயமற்ற கொடூரங்களை ஏற்கமுடியாது! அப்படிப்பட்ட இஸ்ரேலை காந்தி காலத்திலிருந்து ஏற்க மறுக்கும் நாடாகத் தான் இந்தியா இருந்தது! ஆனால், யூதவெறி கொண்ட இஸ்ரேலை – சதா சர்வ காலமும் அரேபியர்களை வேட்டையாடும் கொடுமையை – ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட பாஜக அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது…என்றால், இந்த மன நிலையை எப்படிப் புரிந்து கொள்வது?

காந்தி காலத்தில் இருந்தே இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு எதிரான நிலையை இந்தியா கடைபிடித்து வந்தது. இப்போது அந்த பாதையில் இருந்து வழுவி வருகிறது.  நியாயத்திற்கு எதிரான நிலை எடுத்து வருகிறது. 2017 ல் இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் செய்தார் நரேந்திர மோடி. அதன் மூலம் முதன்முதலில் இஸ்ரேலுக்குச் சென்ற இந்தியப்பிரதமர் என்ற விமர்சனத்திற்கு ஆளானார்.

2019 ல் இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகுவும் இந்தியாவிற்கு வந்தார். அப்பாவி அரபு முஸ்லிம்களான பாலஸ்தீனர்களை கொடுமைக்கு உள்ளாக்கும்  இனவெறியை கடைபிடிக்கும், இஸ்ரேல் அரசோடு இராணுவ ஒத்துழைப்பை மோடி நடத்தி வருகிறார்.எனவே அமெரிக்காவோடு சேர்ந்துகொண்டு  அநியாயத்தை  கண்டிக்கும் தார்மீக பலத்தை இந்தியா இழந்துவிட்டது. நேரு, இந்திரா காந்தி காலங்களில் ஒலித்த  இந்தியாவின் குரலை ஒட்டி, தமது நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை மூன்றாம் உலக நாடுகள் வகுத்துக் கொண்டன. அப்போது  இருந்த சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா இப்போது கைவிட்டு வருகிறது.பழைய காலமாக இருந்திருந்தால் பாரதப் பிரதமர் குழந்தைகள் சிறையில் இருப்பதைக் கண்டித்து பேசி, உலக நாடுகளின் கவனத்தை இருந்திருப்பார்.

நேரு சிறையில் இருந்த போது தன் மகள் இந்திரா பிரியதர்சினிக்கு பாலஸ்தீனம் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 1980 ல் இந்தியாவிற்கு வந்தார்.மக்கள் அவருக்கு நாடெங்கிலும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா என்ற பெயர்களைப் போல ‘யாசர் அராபத்’ என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். கோவைக் கலவரத்தை மையமாக வைத்து சம்சுதீன் ஹீரா எழுதிய ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலின்  கதாநாயகன் பெயர் யாசர் அராபத்.

விடுதலைப் போராட்ட காலத்தில்  இந்தியாவில் நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்தது போலவே, மேற்கு ஆசியாவில் பாலஸ்தீனர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப்  போராடினர். யூத மதத்தை (Zionism) கடைபிடிக்கும் யூதர்களுக்கும் (Jew), அங்கு பெரும்பான்மையாக இருக்கும் அரபு முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரிவினையை ஆங்கிலேயர் ஊக்குவித்தனர். மேற்கு ஆசியாவில் உள்ள இடங்களை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது மற்ற வளைகுடா நாடுகளுக்கு விடுதலை தந்தனர். ஆனால் பாலஸ்தீனத்திற்குத்  தரவில்லை. “ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோ, பிரஞ்சியர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ, அப்படியே அரபு இனத்தவருக்கு பாலஸ்தீனம் சொந்தம் ” என்று  காந்தி அடிகள் 1938 ல் தெரிவித்தார்.

திடீரென்று 1948 ல் உலகம் முழுவதும் இருந்து  யூதர்களை அங்கு  குடியமர்த்தி இஸ்ரேல் என்ற நாட்டை   ஏற்படுத்தினர். அதனை அங்குள்ள அரபு முஸ்லிம்கள் எதிர்த்தனர். விடுதலைக்கு போராடினர். நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது.138 நாடுகள் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. இதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே, அரபு நாடுகளுக்கு அடுத்தபடியாக பாலஸ்தீனத்தை  முதன்முதலில் அங்கீகரித்த  நாடு இந்தியா. 1980 லேயே தூதரக உறவை இந்தியா ஏற்படுத்தியது.

பாலஸ்தீன மக்களுக்கும்,  இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே  பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. அதன் விளைவாக ‘கல் எறிந்தார்கள்’ , ‘ பாலஸ்தீன கொடியை எடுத்துச் சென்றார்கள்’  என்ற காரணங்களைச் சொல்லி பாலஸ்தீன மக்கள் சிறையில் அடைக்கப்படுவது நித்தமும் நடந்து வருகிறது.  சின்னஞ் சிறுவர்கள் கூட இஸ்ரேல் நாட்டின் கொடுமைகளுக்குத்  தப்பவில்லை. இவர்களின் விடுதலைக்கு  ஐ.நா. போன்ற  சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உலக தொழிலாளர் சம்மேளமனம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் 130 நாடுகளில், 105 மில்லியன் தொழிலாளர்கள்  உலக தொழிலாளர் சம்மேளனத்தில் (World Federation of Trade Unions) உறுப்பினர்களாக    உள்ளனர். ‘ஆயுதங்களுக்குச்  செலவழிப்பதைக் குறைக்க வேண்டும்; யுத்தம் இல்லாத  உலகு வேண்டும்’ என்பதை இந்த தொழிற்சங்க அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் தலைநகரில் உள்ளது. இந்தியாவில் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி    போன்ற  தொழிற்சங்கங்கள் அதோடு இணைந்துள்ளன. அதன் பொதுச் செயலாளராக இருக்கும் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் (George Mavrikos) இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் சிறுவர்களுக்காக, ஜனவரி மாதம் ஆதரவு  இயக்கம் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறுவர்கள் மட்டுமின்றி தாய்மார்கள், முதியவர், பெண்கள், உடல்நலிவுற்றோர், நிரந்தர நோயாளிகள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ளனர். நாள்தோறும் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அதிக எண்ணிக்கையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ரொட்டி, தண்ணீர், இறைச்சி போன்ற ரேஷன்களின் அளவைக்கூட  சிறை நிர்வாகம் குறைத்துள்ளது.பலர் தனிமைச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா கால தடுப்பு நடவடிக்கையை எடுக்காததால் கில்போ(Gilboa) சிறையில் 137 பேர் பாதிக்கப்பட்டனர். சிறைகளில் வாடும் சிறுவர்களுக்கு ஆதரவாக சர்வதேச  மனித உரிமை, சட்ட  அமைப்புகள் தலையிட வேண்டும் என்று ஜார்ஜ் மாவ்ரிகோஸ் வலியுறுத்தி உள்ளார்.

2015 ஆம் ஆண்டு, கல் எறிபவர்களுக்கு இருபது ஆண்டுகள் வரை சிறை என்ற சட்டம் இஸ்ரேல் அரசால்  கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் 7000 சிறுவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சிறைவாசிகள் குழு (Palestine Prisoners Club) கூறுகிறது. காசா( Gaza), ராமல்லா (Ramallah), துல்கரிம் (Tulkarem), லெபனான் (Lebanon) என்ற இடங்களில் இருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களுக்கு முன்பு பாலஸ்தீன சிறைவாசிகளுக்கு ஆதரவாக  இயக்கங்கள் நடந்தன.

இது குறித்து உலக தொழிற்சங்க சம்மேளனத்தின், பெண்கள் செயற்குழுவில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த வகிதாவிடம் பேசினோம் “அல்ஜீரியா நாட்டில்  பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில், தொழிற்சங்க சம்மேளன  பிரதிநிதியாக கலந்து கொண்டேன். விமானத்திற்குள் வந்து என்னை அழைத்துச் சென்றனர்;  இந்தியாவின் பிரதிநிதியாக என்னைப்  பார்த்தனர். பாலஸ்தீனியர்களுக்கு   இந்தியா மீது நல்ல மரியாதை உள்ளது. பாலஸ்தீன குழந்தைகளை  கம்பி வேலிக்குள் அடைத்து  வைத்திருப்பதைப்  பார்க்கையில் மனம் பதைக்கிறது. குழந்தைகள் அதில் வதைபட்டுச் சாகிறார்கள். உலக அரங்கில் கெடு நோக்கம் கொண்ட இஸ்ரேல் நாட்டை தனிமைப் படுத்துவது அவசியம் ” என்றார் வகிதா.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு  எதிரான  நிலையை  இந்தியா எடுத்திருந்தது. அதனோடு  1992 வரை தூதரக உறவைக் கூட வைத்திருக்கவில்லை. சமீப காலங்களில் பாஜக அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுக்கத் தொடங்கி உள்ளது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு அமெரிக்காவிற்கு மிக ஆதரவான கொள்கையை இந்தியா எடுத்துள்ளது. அது மட்டுமின்றி யூத இன மேலாண்மையை வலியுறுத்தி வரும், அரபு முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை மேற்கொள்ளும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு பாஜக விரும்புகிறது.  அதனால்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது,  2003 ஆம் ஆண்டு , இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷாரோன்  முதன்முதலில் இந்தியாவிற்கு வந்தார்.

அதற்கு  இந்தியாவில் எதிர்ப்பு இருந்தது. சென்னையில்  பத்திரிக்கையாளர்கள் ஸ்ரீராமன், கோபால கிருஷ்ணன்,கரிமுல்லா சுப்பிரமணியம்  ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். 2017ம் ஆண்டு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு எதிராக ஐநா அவையில் இந்தியா வாக்களித்தது.

உலகப் போரின்போது  ஹிட்லரால்  கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட யூத இனம்தான்  உள்நாட்டு அரபு முஸ்லிம் மக்கள் மீது மூர்க்கமான தாக்குதலை இப்போது  நிகழ்த்தி வருகிறது.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time