குற்றவாளிகளுக்கு துணைபோன குருமூர்த்தி – ஆன்மீகவாதி தாக்கு!

சாவித்திரி கண்ணன்

துக்ளக் ஆண்டு விழாவில் ஆணவத்தோடு பேசிய குருமூர்த்திக்கு அரசியல்வாதிகளான தினகரன்,ஜெயகுமார் மட்டுமல்லாது, ஆன்மீகவாதியான ரங்கராஜன் நரசிம்மனும் எதிர்தாக்குதல் தொடுத்துள்ளார்!

விழாவில் வரதராஜன் என்ற வாசகர் அற நிலையத்துறை தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் கூறிய குருமூர்த்தி, ”ஏதோ அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வருகிறார்கள்’.தமிழகத்தில் அரசாங்கமும்,இந்து மதமும் இணைந்துவிட்டன! இந்துமதம் அரசாங்கத்திற்குள் சிக்கி கொண்டுவிட்டது’’ என்று முட்டாள்தனமாக பதில் சொல்லி இருக்கிறார்! ஆனால் உண்மையில் அப்படி கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பவர்களுக்கு துணை போனவர் மட்டுமல்ல, பாதுகாப்பு தந்தவரே குருமூர்த்தி தான் என்பதாக காட்டமாகப் பேசியுள்ளார்! இதை விரிவாகப் பேசி யுடியூப்பில் வெளியிட்டுள்ளார்!

வேணு சீனிவாசன் குறித்து நானும் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன்! இவர் டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர்! இவர் பாராம்பரியமான கோவில்களை இடித்து, புதுப்பித்து சீரமைப்பதாகக் கூறிக்கொண்டு பல்வேறு கிராமங்களில் உள்ள புராதனக் கோயில்களை கையிலெடுத்துக் கொள்வார்! பின்னர் அங்குள்ள  கோவில்களை தோண்டி சிலைகளை பாலிஷ் போடுகிறோம், கோவில்களை செப்பனிடுகிறோம் என்ற பெயரில் அங்குள்ள விலை மதிக்கமுடியாத பாரம்பரிய சிலைகளை,தூண்களை,சிற்பங்களை ,கற்களை எடுத்துக் கொள்வார்! இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான பாரம்பரிய கோயில்களில் தன் கைவேலையைக் காட்டியுள்ளார்! இதற்கு எதிராக கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே சுமார் 70 வழக்குகள் தொடுத்து போராடி வருபவர் தான் ரங்கராஜன் நரசிம்மன்! ஆனால் வேணு சீனிவாசன் அதிகார மையங்களோடு தனக்கிருக்கும் செல்வாக்குகளைக் கொண்டும்,ஸ்ரீரங்கம் அர்ச்சகர்களைக் கொண்டும் வழக்கு தொடுத்த எளிய பிராமணரான ரங்கராஜனையே அவதூறு செய்வதாகக் கூறி கைது செய்ய வைத்தார்!

 

அதிலும், தான் தப்பித்துக் கொள்ள வேணு சீனிவாசன் செய்த தகிடுதத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ்..என்றெல்லாம் சுற்றி, அதன் பிறகு  மடாதிபதிகளையும் தனக்கு ஆதரவாக பேச வைத்தார்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக் கோயிலில், மயிலொன்று மலரெடுத்து சிவனுக்கு பூஜை செய்யும் சிலை 2004 ல் காணாமல் போகிறது.அதற்கு மாற்றாக வேறொன்று வைக்கப்படுகிறது.

அதற்கடுத்து,திருவரங்கம் ரங்கநாதன் கோயில் மூலவர் விக்ரம் களவாடப்பட்டு,வேறு ஒன்று மாற்றப்பட்டதாகப் புகார்.

இவை தொடர்பாக இது வரை அற நிலைய துறைக்கும், காவல் துறைக்கும் புகார் தரப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் நீதி மன்றத்தை ரங்க ராஜன் என்பவர் அணுகுகிறார்.

நீதி மன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன்மாணிக்கவேல் அவர்களை விசாரிக்க ஆணையிட்டது. உடனே முன் ஜாமின் கோரினார் வேணு சீனிவாசன்!

அந்த நேரம் இந்துக்களுக்காகவே அரசியல் செய்வதாக சொல்லி வந்த குருமூர்த்தி, சுந்தரம் ஐயங்காரின் பேரன் வேணுசீனிவாசனுக்கு ஒரே பாய்ச்சலாக ஓடிவந்து துணை நின்றார்! சிலை திருடர்களுக்கு அப்பட்டமாக துணை போகும் வண்ணம், ”கோயில் திருப்பணியில் ஈடுபடுவோர் மீது ஆதாரமின்றி வழக்கு போடக் கூடாது” என்று குருமூர்த்தி வரிந்து கட்டிக் கொண்டு துக்ளக்கில் எழுதினார் என்றால்…, அவரது நோக்கம் தான் என்ன?

அவரைப் போலவே தமிழக மடாதிபதிகள் பலரும் வேணுவை ஆதரித்தனர்! பொன் மாணிக்கவேல் என்ற அந்த காக்கி உடைக்குள் இருக்கும் அறச்சீற்றமும், அறச்சிந்தையும் கூட இந்த காவிகளின் உள்ளத்தில் இல்லையே..!

வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக வைகோ, மாபா.பாண்டியராஜன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பொங்கினார்கள்! அடேங்கப்பா,எத்தனை அச்சுறுத்தல்கள், அறிக்கைகள்..அவரை விசாரிக்கவே கூடாதாம்,அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதற்கே விசாரணை நடத்த வேண்டுமாம்!

இந்தியாவின் மிக செல்வாக்குள்ள தொழிலதிபரான டி வி எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசனுக்காக குருமூர்த்தி செய்த அதிகார துஷ்பிரயோகங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

சிலை கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது, என வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியது ஏன்? விசாரணையை எதிர் கொள்ள பயந்தது ஏன்?

அன்று துக்ளக்கில் தலையங்கம் எழுதி ,”வேணு சீனிவாசன் மீது எப்.ஐ.ஆர் போட்டது தவறு, விஷமத்தனம்’’ என்று கண்டித்தவர் தான் குருமூர்த்தி! வேணு சீனிவாசனைக் காப்பாற்ற பிரதமர் அலுவலகம்,உள்துறை அமைச்சகம் வரை அனைவரையும் சந்தித்து கைது நடவடிக்கையை இன்று வரை நிறுத்தி வைத்திருப்பவர் தான் குருமூர்த்தி!

ஏனென்றால்,வேணு சீனிவாசன் செல்வாக்கு அப்படிபட்டது!

வேணு சீனிவாசன் தன் சொந்த பணம் எதையும் எடுத்து கொடுத்துவிடவில்லை ! வெளி நாடு வாழ் பக்தர்கள் தரும் பணத்தை தான் அறக்கட்டளை வழி தருகிறார்.

கோயில்களை புனரமைக்க நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அரசிடம் பணம் செலுத்த வேண்டுமேயல்லாது தாங்களே எல்லா அதிகாரத்தையும் கையில் எடுக்க அனுமதிக்க கூடாது. ஆந்திராவில் இப்படித்தான் அரசிடம் பணம் தந்துவிடுகிறார்கள்! தமிழ் நாட்டிலும் அவ்விதமே இருந்தது! ஆனால்,ஜெயலலிதா தான் அந்த விதிமுறையை மீறினார்!

ஜெயலலிதா ஆட்சியில் 1995 தொடங்கி, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஒரு பேரலல் [இணை] அற நிலையத் துறையையே நடத்தி வந்தவர் தான் இந்த வேணு சீனிவாசன். இவரது அறக்கட்டளை எந்தெந்த கோயில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிற தோ, அங்கெல்லாம் இவரே அறங்காவல் குழு தலைவர், அந்தந்த கோயில்களில் அற நிலையத் துறைக்கு உள்ளது போலவே டி வி எஸ் குழுமத்திற்கும் ஒரு அலுவலகம், சம்பந்தப்பட்ட கோயில்களின் முக்கியமான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டி வி எஸ் குழுமத்தில் இருந்தும் சம்பளமாம்!இப்படியெல்லாம் வேணு சீனிவாசனுக்கு அதிகாரம் தந்து ஆடவைத்தார் ஜெயலலிதா!

இந்த நிலையில் தான் கபாலீஸ்வரர் கோயில், திருவரங்கம் கோயில்களில் சிலை திருட்டு நடந்துள்ளது. பக்தர்கள் பதற, கதற , கலங்க…அற நிலைய துறையோ அமைதி காத்துள்ளது !

அற நிலைய துறையில் உள்ள அனுபவமுள்ள ஸ்தபதிகள் சிலரிடம் பேசிய வகையில், ”இந்த இரண்டு கோயிகளில் மட்டுமல்லாது, டி வி எஸ் குழுமம் எங்கெங்கெல்லாம் புனரமைப்பு பணிகள் மேற் கொண்டதோ ,அங்கெல்லாமே இந்த புகார்கள் நீண்ட காலமாகவே அந்தந்த பகுதி மக்களால் வேதனையுடன்கூறப்பட்டு வந்தாலும், இது வரை நடவடிக்கையே இல்லை என்பது தான் நிஜம்’’ என்றனர்!

உதாரணத்திற்கு ஓசூர் சந்திர மெளீஸ்வரர் கோயில், அதன் அருகேயுள்ள அகரத்தில் உள்ள சிறிய கோயில் திருநெல்வேலி திருக்கருங்குடி வைஷ்ணவ கோயில் போன்றவை ! அதுவும் திருக்குருங்குடியில் வைஷ்ணவ கோயிலில் எப்படி சிவன் சிலை இருக்கலாம் என கேள்வி எழுப்பிய டி வி எஸ் குழுமத்தினர், முதல் பிரகாரத்தில் இருந்த சிவனை வெளியில் எடுத்து வைத்து விட்டனராம்! இதை காண பொறுக்காமல் கேள்வி கேட்ட ஒரு சிவ பக்தர் அடுத்த ஒரிரு நாளில் மர்மமான முறையில் மரணமடைந்ததை இன்று வரை அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பேசி வருகின்றனர்.

ஆகவே தான், ரங்கராஜன் நரசிம்மன் இரண்டு கேள்விகளை குருமூர்த்திக்கு வைத்துள்ளார்! இந்துக்களுக்கு ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பவரான குருமூர்த்திக்கு மேற்படி விஷயங்களை தைரியமாக துக்ளக்கில் எழுதும் தைரியமுண்டா? கோவில் சொத்துகளை கொள்ளையிட்டவர்களை அடையாளம் காட்டும் துணிச்சல் உண்டா? என்று கேட்டதோடு, நாம் இப்படிப்பட்டவர்களை நம்பி மோசம் போகக் கூடாது, நம்பினால் நம் கோவில்கள் தான் நாசமாகும் எனக் கூறியுள்ளார்!

அற நிலையத் துறையை குற்றம் சொல்லியும், அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்லியும் கோயில்களை பக்தர்கள் வசமே ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகி நிற்க வேண்டும் என்றும் சொல்லி வருகிற குருமூர்த்தி போன்ற இந்து ஆதரவு பித்தலாட்ட அரசியல் செய்பவர்களின் உள் நோக்கம் என்ன என்பதை நாம் அவர்கள் வேணு சீனிவாசனுக்கு துணை போனதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time