அத்துமீறிய அதிகார மையமா அர்னாப் கோஸ்வாமி…?

சாவித்திரி கண்ணன்+

அர்னாபின் வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவுமே புதிதல்ல! ஆனால், அரசியல் தரகராக அல்ல, ஆட்சியின் ஒர் அங்கமாகவே – பல சதி திட்டங்களின் பங்குதாராக – அர்னாப் இருந்துள்ளார் என்ற புரிதலையே பார்தோ தாஸ் குப்தாவுடனான அர்னாப் வாட்ஸ் அப் உரையாடல்கள் நிருபிக்கின்றன…!

தேசபக்தியின் பெயரால் எந்த பஞ்சமா பாதங்களையும் செய்யக் கூடிய லைசென்ஸை பாஜக அரசு அர்னாப் கோஸ்வாமிக்கு தந்துள்ளது என்பதை என்னைப் போல ஊடகத்தில் இருக்கும் ஒரு சிலர் ஓயாமல் கூறி வந்ததற்கு சற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று வேண்டுமானால் சொல்லலாம்!

டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ரிபப்ளிக் டிவி மட்டுமின்றி, மேலும் இரண்டு சேனல்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்த போது அந்த இரு நிறுவனங்களும் உடனே தண்டிக்கப்பட்டதும்,அர்னாப் மட்டும் யாரும் நெருங்க முடியாதவராக சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக வலம் வந்ததையும் இந்த நாடு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது!

கட்டிட வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை பணம் தராமல் அலைகழித்து, மனை உளைச்சல் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான அர்னாபிற்கு பதற்றத்தோடு பரிந்து பேசி, ஒடோடி வந்தார்களே உள்துறை அமைச்சர் அமித்ஷா, யோகி ஆதித்தியநாத், ஸ்மிருதிராணி உள்ளிட்ட பாஜக அதிகார மையங்கள்! இதைத் தொடர்ந்து, உடனடியாக அர்னாபை விடுதலை செய்ததோடு சகிப்புதன்மை குறித்து மகாராஷ்டிர அரசுக்கு பாடம் எடுத்தது உச்ச நீதிமன்றம் என்பதை நினைவுபடுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்! இது குறித்து ஏற்கனவே அறம் இணைய இதழில் ’’யார் இந்த அர்னாப் கோஸ்வாமி’’ என எழுதியுள்ளேன்.

அர்னாப் என்ன செய்தாலும் சட்டம் அவரைத் தொடமுடியாது..என்பதை எழுதபடாத விதியாக பாஜக அரசு அமல்படுத்தி வருகிறது!

எதிரி மீதான தாக்குதல் குறித்த இராணுவ ரகசியத்தை – அதன் எதிர்காலத் திட்டங்களை – ஒரு பத்திரிகையாளன் முன்கூட்டியே அறிந்து கொண்டு பேச முடிகிறது என்றால், குற்றம் அந்த பத்திரிகையாளன் மீது மட்டுமல்ல, அந்த ராணுவ ரகசியத்தை கசியவிட்ட ஆளும் தரப்பின் உயர்மட்டமும் தண்டிக்கப்பட வேண்டியது தானே!

ராணுவத்தின் உயிர் தியாகங்களை, அர்ப்பணிப்புகளை மீடியாவிற்கான டி.ஆர்.பி.ரேட்டிங் மற்றும் அதன் விளம்பர வருமானம் தொடர்பாக அர்னாப் கருதியுள்ளார் என்பதை மட்டும் நமக்கு இந்த வாட்ஸ்அப் பரிமாற்றங்கள் அம்பலப்படுத்தவில்லை! 130 கோடி மக்களை ஆட்சி செய்யும் ஆளும் உயர்மட்டத்திற்கு ராணுவ வீரர்களும், அவர்களின் தியாகங்களும் தங்கள் தேசபக்தி அரசியல் வியாபாரத்திற்கான முதலீடாக தெரிந்துள்ளது என்பதும்,அவர்களின் கூட்டாளிகளில் ஒருவர் தான் அர்னாப் என்பதுமே அர்னாப் விவகாரத்தில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது!

காஷ்மீருக்கான 370 சிறப்பு சலுகை ரத்து விவகாரத்தை பிரதமர் அலுவலகமும், அமைச்சர்களும் அர்னாப்பிடம் பகிர்ந்து கொள்ளும் அளவு இந்த அரசின் நிர்வாக ரகசியம் பேணப்படுகிறது என்பது பாஜக அரசுக்கு மாபெரும் மானக்கேடாகும்!

இந்த அளவுக்கு நெருக்கமாக ஆட்சியாளர்கள் அர்னாபை கூட்டாளியாக கொண்டிருந்தார்கள் என்றால் இந்த ஆட்சியாளர்களின் யோக்கியதையைத் தான் நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்! எப்படி அர்னாப் இந்த ஆட்சியாளர்களுக்கு இவ்வளவு நெருக்கமாகிப் போனார் என்றால், அவர்களின் அஜெண்டா அனைத்தையும் – நியாய தர்மங்களை புறக்கணித்து – அசுர அவதாரமெடுத்து அர்னாப் கோஸ்வாமி செய்வதால் தான்!

# பாஜகவின் அரசியல் எதிரிகளை கேரக்டர் அசாசினேசன் செய்வது!

# நாட்டின் ஒவ்வொரு அசைவிலும், நிகழ்விலும் உள்நோக்கம் கற்பித்து, பாஜகவின் அரசியல் எதிரிகளை பந்தாடுவது!

# சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோருக்கு தீவிரவாத இமேஜை கட்டமைப்பது!

# இஸ்லாமிய வெறுப்பை ஊதி பெரிதாக்குவது!

# பொய்,புரட்டு,புரளி ஆகியவற்றை பரப்பி, மக்களை பிளவுபடுத்தி சமூகத்தை கொந்தளிப்பு நிலைக்கு கொண்டு செல்வது!

ஆகிய இந்துத்துவ பாஜக அரசின் அபிலாசைகளை நிறைவேற்ற அர்னாப் செய்யும் ஊடக செயல்பாடுகளுக்கு கைமாறாகத் தான் அவருக்கு அரசின் நிர்வாக ரகசியங்கள், இராணுவ ரகசியங்கள் முன் கூட்டியே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது!

ஆகவே, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார்? அர்னாபை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக வலம்வர வைத்திருப்பவர்கள் யார்? அவர்கள் பக்கம் தான் நம் கோபம் திரும்ப வேண்டும்!

# ஒட்டுமொத்த தேசபக்தியையும் ஒற்றை மனிதனாக குத்தகைக்கு எடுத்து கூவிக் கூவி ஓலமிட்டவர்..!

# அநீதிகளை அம்பலப்படுத்தவென்றே பிறப்பெடுத்த அவதார புருஷர்!

# அரசியல்வாதிகளை மடக்கி கேள்வி கேட்பதில் அசாய சூரர்!

என்று அர்னாப்பிற்கு ஒரு மாயத்தோற்றத்தை கட்டமைக்க ஆட்சியாளர்கள் துணை போனார்களே…!

பிரபல வழக்குரைஞரான பிரசாந்த் பூஷண் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்:

அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்தோ தாஸ்குப்தாவுக்கு இடையிலான இந்த வாட்சாப் உரையாடலில், பல சதித் திட்டங்களை அர்னாப் செய்வது, மற்றும் இதுவரை இந்த அரசின் உயர்மட்ட அதிகார மையங்களை அர்னாப் அணுக முடிவது, தன் ஊடகத்தையும், தன் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி அதிகார தரகராக செயல்படுவது ஆகியவை தெரிய வருகிறது! சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் அர்னாப் இருந்திருந்தால், நீண்ட நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்”

அர்னாப் கோஸ்வாமி,குருமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் இந்த ஆட்சியாளர்களின் கண்களுக்கு சாணக்கியர்களாகத் தெரியும் வரை இவர்கள் எவ்வளவு அத்துமீறினாலும் தண்டிக்கப்பட வாய்ப்பேயில்லை! ஏனெனில், அத்துமீறுவதற்காகவே  ஆட்சியாளர்களால் இவர்கள் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகின்றனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time