நாட்டுமாடுகளைப் பார்க்கமுடியாத மாட்டுப் பொங்கல்…!

மு.பத்மநாபன்

மாட்டுப்பொங்கல் ஒரு  அதிர்ச்சியான செய்தியை மக்களுக்கு சொல்லிச்சென்றது.

எங்க ஊர் வந்தவாசியில் அந்தக் காலத்தில் உழவு மாடுகளும், பசுக்களும் அழகழகாக ஜோடித்து,  தான் விரும்பும் கட்சிக்கொடிகலர்களை கொம்புகளில் தீட்டியும்  500 மாடுகளுக்கு குறைவில்லாமல் வரும் திடலில் இன்று 50க்கு குறைவான மாடுகள்?.

அந்த மாடுகளில் நாட்டு காளைமாடுகளோ பசுக்களோ ஒன்றுகூட  இல்லை.

அனைத்தும் ஜெர்ஸி இனகலப்பின பசு மாடுகளே.

இன்றைய விவசாயம் 100%டிராக்டர்,டில்லர்கள் மூலம் செய்யப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு நாட்டு ஆண்மாடுகள் தேவையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது. மாட்டுச் சாணமே இயற்கை உரமாக பயன்பட்ட நிலத்தில் ரசாயண உரங்கள்…!

உழவு இயந்திரங்களை வாங்க மானியங்களை கொடுத்து விவசாயத்தை இயந்திரமயமாக்கிவிட்டது அரசு. உழவுமாடுகளை அரசே முற்றிலுமாக  ஒழித்துவிட்டது.

உழவு மாடுகள் காணாமற்போனதால் நாட்டு பசுக்களும் காணாமற் போய்விட்டன.

கடுமையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். உலகிலேயே கலப்படமில்லாத ஒரே பொருள் தாய்ப்பால் பிறந்த குழந்தையின் உயிர் காக்கும் கவசம்.

தாய்ப்பாலுக்கு அடுத்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் காப்பது மாட்டுப்பால்தான்..

எந்தமாட்டுப்பால்?.

அதுதான் பிரச்சினையே.

அந்தக்காலத்தில் கிராமங்களில் அனைவர் வீடுகளிலும் பசுமாடு  கட்டாயம் இருந்தன. சென்னை போன்ற நகரங்களில் கூட 1970 கள் வரை தெருவிற்கு தெரு மாடு வளர்ப்போரை பார்க்க முடியும்! வீட்டுக்கு முன்பு மாட்டைக் கொண்டு வந்து கறந்து தந்து சென்றவர்களும் உண்டு!

அது பாக்கெட் பால் அறிமுகமில்லாத காலம்! ஆவின் கூட 1970 களுக்கு பிறகு தான் பெரிய  நிறுவனமாயிற்று!

1970ல் சனியன் பிடித்தது, வெண்மை புரட்சி என்ற வடிவில்.

எந்த மஹானுபாவன் ஐடியா கொடுத்தானோ…,ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜெர்ஸிஇன காளைகள் வந்தன. போதாதற்கு வெளிநாடுகளிலிருந்து ஜெர்ஸி ரக காளைகளின்  உறைந்த விந்தணுக்கள் தொடர்ந்து  இறக்குமதி செய்யப்பட்டன.

மாடு வளர்ப்பும், பால் விற்பனையும் பெருவியாபாரமாக கட்டமைக்கப்பட்டதில் இருந்து தான் நமது ஆரோக்கியம் போனது!

அந்தக்காலத்தில்  குழந்தைகளுக்கு தோல் ஊசி எனப்படும் அம்மை தடுப்பூசி புஜத்தில்  போடுவார்கள். மனிதனோடு அந்த தழும்புகள் காலம்பூரா அழியாது இருக்கும்.அவன் வாழ்நாள் முழுமைக்கும் அந்த ஒரு ஊசி தான்.

இன்று 16வயதுவரை பல தடுப்பூசிகள் அட்டவணையிட்டு போடப்படுகிறது. ஏன் இந்த அவல நிலை?

அந்தக்கால குழந்தைகள் நோயற்று இருந்ததற்கு தாய்ப்பாலுடன் இயற்கையையொட்டிய வாழ்வை மனிதன் வாழ்ந்ததுதான்.

குடிக்கும் பாலிலிருந்து அனைத்தையும்  விஷமாக்கியது அரசுகள் தான்.

மனிதனை திட்டமிட்டு நோயாளிகளாக்கியது அரசுகளே.

நாட்டு மாடு தினம் 2-3லிட்டர் பாலை தரும். இன்னும் சில ஐந்து லிட்டர் வரை கூட தந்தன! அது அனைத்து சத்துக்களும் குறைவின்றி நிறைந்திருக்கும் பால்.

கலப்பின ஜெர்ஸி இன மாடு 10-12லிட்டர் பாலை தரும்.  இது சத்துகுறைந்த பால்.பாலை அதிகமாக தருவதால் மனிதனின் மனதில் விதைக்கப்படுவது ஆசை….பேராசை தான்.

அரசுகள் சபதமெடுத்து நாட்டு மாடுகளை ஒழித்துவிட்டது.

சக்தி குறைந்த பாலை குடித்து தான் நோயை விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

(அந்தக்காலத்தில் இவ்வளவு டாக்டர்கள் இருந்தார்களா? .

அந்தக்காலம் நோயற்ற காலம். காற்றும்,நீரும் பூமியும் கெடாத காலம்.)

நாட்டு மாடுகளை பார்க்க ஜல்லிக்கட்டுக்கு போனால்தான் பார்க்கமுடியும் என்ற நிலை இன்று.

50 வருடத்திற்கு முன்பு ஜல்லிகட்டில் கலந்து கொண்ட காளைகள் சிலவற்றின் பெயர்கள் சிலருக்கு மறந்து போயிருக்கலாம்! ஆனால் அந்த வகை மாடுகளில் பல இன்று மறைந்துவிட்டன…! இதோ சிலவற்றை ஞாபகப்படுத்துகிறேன்! பால்வெள்ளை, பொட்டைக்கண்ணன், பொங்கு வாயன், போருக்காளை, மட்டை கொலம்பன், மஞ்சள் வாலன், மறைச்சிவலை, மஞ்சலிவாலன், மஞ்சமயிலை, மயிலை, மேக வண்ணன், முறிக்கொம்பன், முட்டிக்காலன், முரிகாளை, சங்குவண்ணன், செம்மறைக் காளை, செவலை எருது, செம்மறையன், செந்தாழைவயிரன், சொறியன், தளப்பன், தல்லயன் காளை, தறிகொம்பன், துடைசேர் கூழை,தூங்கச்செழியன், வட்டப்புல்லை, வட்டச்செவியன், வளைக்கொம்பன், வள்ளிக் கொம்பன், வர்ணக்காளை, வட்டக்கரியன், வெள்ளைக்காளை, வெள்ளைக்குடும்பன், வெள்ளைக் கண்ணன், வெள்ளைப்போரான், மயிலைக்காளை, வெள்ளை, கழுத்திகாபிள்ளை, கருக்கா மயிலை,பணங்காரி, சந்தனப் பிள்ளை, செம்பூத்துக்காரி, காரி மாடு, காங்கேயம் காளை, புலிகுளம் காளை..இப்படி 80 க்கு மேற்பட்ட நாட்டு மாட்டு இனங்கள் இருந்தன!

ஜல்லிக்கட்டு என்ற ஒன்று மீண்டும் எழுச்சி பெற்றதால் காளைமாடுகளின் அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது!

இந்த ஜல்லிக் கட்டிலும் பாரம்பரிய நாட்டுமாடுகள் தற்போது காணாமல் போய் கலப்பின மாடுகள் இடம் பெறத் தொடங்கிவிட்டன! அதை தடுக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது! ஆயினும் பலனில்லை!

 

போதாக்குறைக்கு தமிழ் நாடு கால் நடை இனப்பெருக்க சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து காளை வளர்ப்பவர்களை துன்புறுத்துகிறார்கள்.இனி செயற்கை கருத்தறித்தல் மூலம் சினை ஊசி போட்டுத் தான் மாடு இனப் பெருக்கம் நடக்க வேண்டும்! பிரிடிஷ்காரன் கூட இப்படி சட்டம் போட்டதில்லை! பாராம்பரியத்தை அழித்தே தீருவது என்று அரசுகள் கங்கணம் கட்டிக் கொண்டனவா..?

காளைகளும் அழிந்து போனால்  அரசு நடத்தும் மியூசியம் சென்று, பதப்படுத்தப்பட்ட நாட்டு மாடுகளைப் பார்த்து இதுதான் நாட்டு மாடு என்று கண்கள் வியப்பாய் விரிய பார்க்கலாம்.

இன்று இயற்கை உணவுக்கு மாறிக்கொண்டிருக்கும் மனிதன்  நாட்டு மாட்டு பாலுக்கு மாறுவதை  ஒரு இயக்கமாக மாற்றித் தான் ஆக வேண்டும்.

என்ன செய்யப் போகிறோம் நாம்….?

.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time