அரசியல் மாபியாக்கள் பலனடையவே கள்ளுக்கு தடை!-செ.நல்லசாமி

-மாயோன்

உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு அனுமதி! ஆனால், உடலுக்கு நன்மை செய்யும் பாரம்பரிய பானமான கள்ளுக்குத் தடையா…?  விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரும் கள்ளை தடை செய்துவிட்டு, அரசியலில் உள்ள மாபியாக்கள் கல்லா கட்டுவதற்காக டாஸ்மாக் மதுபானத்தை தமிழகத்தில் ஆறாக ஓடவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்…! என்று பொங்கி வெடித்தனர் விவசாயிகள்!  சென்னையில் இன்று (21.01.21) தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான  செ.நல்லசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் பார்த்தவர்களின் இதயத்தை உலுக்கியது.

இப்போராட்டம் ஏன் ? என்பது குறித்து செ.நல்லசாமி பேசியதாவது:

உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் கள் இறக்கவும் பருகவும் தடை இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இந்தத் தடை 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இது நியாயமற்றது.

உலக அளவில் மதுவிலக்கு தோற்றுப்போய் இருந்தாலும் ஓர் அரசின் இலக்கு மதுவிலக்கை நோக்கியே என்றும் இருத்தல் வேண்டும் .கள்  இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை ஆகும்.

சங்ககாலத்தில் கள் புழக்கத்தில் இருந்ததை நற்றிணை, மணிமேகலை, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், பதிற்றுப்பத்து ஆகிய பாடல்கள் மூலம் அறிய முடியும். கள்ளுண்ட மகிழ்ச்சியால் உழவர்கள் மிக்க செருக்கினை கொண்டிருந்ததாக  அகநானூறு கூறுகிறது. “கள்ஆர் உவகைக் கலிமகிழ் உழவர்” -( அகம் : 246-5).

பனை இந்த மண்ணின் அடையாளம்!

சுதந்திரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இன்று இது நான்கு கோடியாக குறைந்து விட்டது. பனைமரம் வேகமாக அழிந்து வருவதற்கு முக்கியக்  காரணம் கள் மீதான தடையும் அந்த காரணத்தைக் காட்டி மரமேறும் தொழிலாளிகள் வேட்டையாடப் படுவதும் தான்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 47 மதுவிலக்குப் பற்றி விளக்குகிறது. “ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தைப் பேணுவதையும்  அரசு கடமையாகக் கொள்ளுதல் வேண்டும், அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள் ,போதை மருந்துகள் ஆகியவை மருந்துக்காகவன்றி,  மாற்று வழியில் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சிக்கவும் முன்வரவும்வேண்டும்”

– இதன்படி பார்த்தால், உடனடியாக தடை செய்ய வேண்டியது டாஸ்மாக் மதுபானங்கள் தான்.  கள் ஊட்டச் சத்தைக் கொடுக்கிறது. உடல்நலத்தை  மேம்படுத்துகிறது தாய்ப்பாலில் உள்ள உயரிய  “லோரிக் அமிலம்” கள்ளிலும்  உள்ளது.

சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் மருந்தாக இதைப் பயன்படுத்துகிறார்கள் இயற்கை விவசாயத்திற்கு மூலப்பொருளாகவும் உள்ளது .எனவே, கள்ளுக்கு விலக்கு அளிக்க வேண்டியது அரசின் கடமை.இதை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

1987-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அரசு கள்ளுக்கடைக்குக்கு தடை விதித்தது.  அப்பாவி தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது . அவர்கள் மரங்கள் பக்கம் போகவே அஞ்சி நடுங்கினர் .

இதன் விளைவாக பனை மரங்கள் ஏராளமாக அழிந்தன.

பனை வளத்தை படுகுழிக்கு தள்ளியவர் எம்.ஜி.ஆர் தான்! – நல்லசாமி

தேர்தல் சமயங்களில் முக்கியத் தலைவர்கள் கள்ளுக்கு அனுமதி அளிப்பதுபோல  பேசினாலும் அதன் பிறகு கண்டுகொள்வதில்லை. இதற்குக் காரணம் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை முதலாளிகள் அரசை கவனிப்பதுதான்.எம்.ஜி.ஆர் செய்த தவறை அடுத்து வந்த ஆட்சியாளார்களும் சரி செய்யாமல் ஆதாயமே அடைந்தனர்!

ஆனால், ஆட்சியாளர்கள் மக்கள் நலனுக்கு உரியமுக்கியம் அளித்திருக்க வேண்டும். செய்யவில்லை.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்கள், பூச்சி மருந்து என்று பயன்படுத்தப்பட்டு, நிலம் நஞ்சாகிவிட்டது. தாய்ப்பால் வரை விஷம் பரவியுள்ள  கொடுமை நிகழ்கிறது.

நல்லவேளையாக பனை மரங்களுக்கு விவசாயிகள் இதுவரை பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவில்லை. ரசாயன உரம்  போட்டதில்லை. இதை கவனத்திற் கொண்டாவது ஆட்சியாளர்கள் உரிய முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்.

கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது! அதேநேரத்தில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மது பானங்களுக்கு? தடையில்லை..!ஆனால், டாஸ்மாக் மது விரைவில் கொல்லும் தன்மை கொண்டது.அதனால் தமிழ் நாட்டில் விதவைகள் பெருகிவருகின்றனர்! டாஸ்மாக் மது வேண்டாம் என்று மக்கள் தமிழகம் முழுக்க கடுமையான போராட்டங்களை நடத்திவிட்டனர்!

 

கொள்கை முடிவா? கொள்ளை முடிவா…?

நாம் நியாயம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தால், இது அரசின் கொள்கை முடிவு என்று அரசு தெரிவிக்கிறது. இதையடுத்து மனு தள்ளுபடி ஆகிறது. உச்சநீதிமன்றமும் இதையே பின்பற்றுகிறது.

கொள்கை முடிவு என்றால் என்ன? மதுவிலக்கு என்றல்லவா இருக்க வேண்டும்! மது என்ற நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு வந்து விட்டது ,பிறகு ஏன்  கள்ளுக்கு மட்டும் தடை!?. ஆகவே,இது கொள்கை முடிவல்ல! கொள்ளை முடிவு! அயல் நாட்டு மதுவிற்னையால் அடையும் ஆதாயமே கள்ளைத் தடை செய்ய வைத்துள்ளது

இதுபற்றி கேட்டால் கள்ளில் ஏற்கனவே நடந்த கலப்படத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவில் சந்தைப்படுத்தும் பாலில் 69% கலப்படம் இருப்பதாக அரசே ஒத்துக் கொள்கிறது‌. அதற்காக கறவை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தடை விதிக்க முடியுமா?

தற்போது வெளியாகும் புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டில் டாஸ்மாக்  பானங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உள்ளங்கை நெல்லிக்கனி போல  காட்டுகின்றன . இவற்றை குடிப்பதால் கல்லீரலில் அசிட்டால்டிஹைடு என்ற நஞ்சு படிவதாகவும் இதனால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி, கெட்டுப் போகும் அபாயம் இருப்பதாகவும்    பாதிக்கப்பட்டவர் விரைவில் இறந்து போவதாகவும் தெரிகிறது இந்த நோய்க்கு ஆளானவர்கள் தொடர்ந்து  கள் பருகி வந்தால் இந்த நஞ்சு  படிப்படியாக வெளியேறிவிடும். நாளடைவில் அவர் குணம் அடைந்து விடுவார்.

கள் உடல் நலத்திற்கு கேடு என்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ10 கோடி பரிசாக வழங்குவதாக அறிவித்து கடந்த நான்கு வருடங்களாக அசுவமேத யாக குதிரை ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மாபெரும் வேலை வாய்ப்பு!

இன்று தமிழ்நாட்டில் மட்டும் 85 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கான தீர்வு அல்லது அதற்கான முயற்சி அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் உள்ள பனை, தென்னை மரங்களை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் செய்யலாம் .இதற்கு பெரிய அளவிலான கட்டமைப்பு முதலீடு தேவையில்லை நம்பிக்கையும். நாணயமும் இருந்தால் போதும் .இந்த தொழிலுக்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில் அதோடு  சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும். பனை தென்னை மரங்களிலிருந்து நீராகவோ கள்ளாகவோ  இறக்கலாம்.மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி கொள்ளவும்  முடியும். இவற்றை தாராளமாக ஏராளமாக உள்நாட்டிலும் உலக அளவிலும் சந்தைப்படுத்தும் வாய்ப்புள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் 100% தீங்கானவை .இது ஊரறிந்த  உலகறிந்த உண்மை . கள் உடலுக்கும் சமூகத்திற்கும்  நன்மை தருவதை    முழு ஆதாரத்துடன்  விளக்குகியுள்ளோம்.

இனி, தமிழக மக்கள் ஒருமித்து  களம் கண்டால் மட்டுமே நம்முடைய மண்ணின் அடையாளமான பனை மரங்களை பாதுகாக்க முடியும். இதை  தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அந்த அடிப்படையில் கள்ளுக்கான ஆதரவுக் குரலை  ஓங்கி  வலுவாக எழுப்பவேண்டும்.

இப்பிரச்சனையில் சமூக அக்கறை காட்டாமல்  இனியும் வேடிக்கை பார்த்து  ஒதுங்கி நிற்போரின் செயற்பாட்டை கோழைத்தின் வெளிப்பாடு” என்று தான் வேதனையுடன் சொல்லவேண்டியுள்ளது.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time