Is Love enough? Sir உன்னத படைப்பு!

- பீட்டர் துரைராஜ்

‘வீட்டுவேலை’  செய்யும் பெண்ணை  மையப்படுத்திய காதல்  கதை! ஒட்டிய தேகம்,ஒடுங்கிய முகம்,ஏழ்மையை பறை சாற்றும் தோற்றப் பொலிவு கொண்ட தன்மானமுள்ள ஒரு ஏழைப் பெண் எப்படி ஆசைக்கு இரையாகாமல், வாழ்க்கையை எதிர்கொள்கிறாள் என்ற கதையை ஒரு கவிதையைப் போல சொல்லி இருக்கிறார் இயக்குனர்! வாழ்க்கையையும்,சக மனிதர்களையும் சற்றே ஆழமாக புரிந்து கொண்டு மேம்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!

வீட்டுவேலை செய்யும் பெண்களை  எத்தனையோ திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில்  நாம் பார்த்திருப்போம். அதிகப் பிரசங்கியாக, கடன் கேட்பவளாக, உள் விவகாரங்களில் தலையிடுபவளாக, பாலியல் விழைவு கொள்பவளாக என பல சித்தரிப்புகளை நாம் பார்த்தி்ருப்போம்.  ‘Sir’ படத்தில் வரும் ரத்னாவும் வீட்டு வேலை செய்பவள்தான். ஆனால் அவள் கண்ணியம் மிக்கவள்; தன் எல்லையை உணர்ந்தவள்; எந்தச் சூழலிலும் வாழ்க்கையை எதிர் கொள்பவளாக இதில் வருகிறாள்.

மகாராஷ்டிராவின் ஏதோ ஒரு ஊரிலிருந்து மும்பைக்கு வருகிறாள் ரத்னா. இளவயதில் விதவையான அவளுக்கு தன் தங்கையை படிக்க வைக்க வேண்டும்; திருமணம் செய்துவைக்க வேண்டும். மும்பைக்கு வந்தால் கையில் வளையல்கள் போட்டுக்கொள்ளலாம்.ஊரில் போட்டுக் கொள்ள முடியாது(கண்ணாடி வளையல்தான்). இதற்கிடையே வாய்ப்பு இருந்தால் தையல் கற்றுக் கொள்ள வேண்டும். டிசைனராக வேண்டும்! திலோத்தமா ஷோம் (Tilotamma Some)  என்ற நடிகை ரத்னாவாக  மிக இயல்பாக நடித்துள்ளார். கதை முழுவதும் வீட்டு வேலை செய்பவளாகவே இருக்கிறாள். பொறுக்கி எடுத்த சொற்களையே பயன்படுத்துகிறாள்.

அந்த வீட்டின் உரிமையாளரான அஸ்வின் வசதியானவன். கட்டடக்கலை பொறியாளன். எழுத்தாளனும் கூட! அவனுடைய திருமணம் கடைசிநேரத்தில் நின்றுவிடுகிறது. மன உளைச்சலில் இருக்கிறான். அவனைப் பார்க்க வரும் அம்மா, நண்பர்கள் என பலரும் விதவிதமான ‘ஆலோசனைகள்’ தருகிறார்கள். அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவன் யதார்த்தமாக இருக்கிறான். வேலைக்காரியை ‘அதிகாரம்’ செய்யும் அலட்டல்கள் அவனுக்குத் தெரியாது. நாள் முழுக்க தனக்கு பணிவிடை செய்யும் ஒரு எளிய ஜீவன் மீது அவனுக்கு ஒரு அக்கறையும்,அன்பும் உருவாகிறது!

ரத்னா வேலை செய்யும் பிளாட்டிற்கு, பக்கத்து பிளாட்டில் வீட்டுவேலை செய்பவள்தான் இவளுக்கு பேச்சுத்துணை. மாடிப்பட்டுகளில் உட்கார்ந்துதான் இருவரும் தத்தமது  மன கிலேசங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.( வீட்டிலேயே தங்கி வேலை  செய்தாலும் வீட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருக்க முடியுமா ? ). தன் பிள்ளையைப் போல வளர்த்தாலும், அம்மா உரிமையை எடுத்துக்கொண்டு பிள்ளையை கண்டிக்கும்போது,  அவளுடைய  நிலை வேலைக்காரிதான் என்பதை உணர்ந்து அழும் தன் சக வேலைக்காரிக்கு ஆறுதல் சொல்லுகிறாள்  ரத்னா. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,  நாம் வீட்டின் உரிமையாளராக இருந்தால் என்ன செய்திருப்போம் அல்லது வேலைக்காரியாக  இருந்தால் எப்படி எதிர்கொண்டிருப்போம் என்ற எண்ண ஓட்டம் நமக்குள் வருகிறது. இதைவிட வெற்றி ஒரு படைப்புக்கு வேறென்ன வேண்டும் ?

பக்கத்து வீட்டில் வேலைசெய்பவளிடம் கூட,  தையல் வகுப்பிற்கு கடன் வாங்குவதை  விரும்பாதவள் ரத்னா. அவளால் எப்படி ‘சாரிடம்’  கடன் வாங்க முடியும்.  மதிய இடைவேளையில் தையல் கற்றுக்கொள்ள சார் அனுமதிக்கிறார். இலவசமாக சொல்லித்தரும் தையல்காரருக்கு இவளின் இரண்டு மணிநேர உழைப்புதான் ஒரு  வகையில் கட்டணம்.

தையல் கற்றுக்கொள்வதில்  இடர்பாடு ஏற்படுகையில் ரத்னா முகவாட்டம் அடைகிறாள். அதைப் பார்த்து  அஸ்வின் வியப்படைகிறான். அவளைப்பற்றி தெரிந்து கொள்கிறான். அவளை கைதூக்கி விடமுடியுமா என்று பார்க்கிறான். ஒருவகையில் அவனும் ஒரு கலைஞன்தான். தன் அப்பா நிர்வகிக்கும் சொந்த நிறுவனத்தில்  பணிபுரிபவன். திருமணம் நிற்பதற்கு முன்பு கதை எழுதியவன்.பாதியில் அது நிற்கிறது. திருமணம் தடையான  சோகத்தில் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவனும் ரத்னாவைப் போல எதையோ இழந்தவன்தான். ஆனாலும் உழைப்பாளியான ரத்னா, நான்கே மாதத்தில் கணவனை இழந்த நிலையில்,மிக கம்பீரமாக வாழ்வை எதிர்கொள்ளுகிறாள். இது  அவனுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

அஸ்வினுக்கு ரத்னாவின் இங்கிதத்தின் மீது, வாழ்க்கையை ரசிக்கும்தன்மை மீது  ஆச்சரியம் வருகிறது. அவளிடைய எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பின் மீது ஒரு மரியாதை வருகிறது. ரத்னாவைப் பார்த்து அவனும் வாழ்க்கையை எதிர் கொள்ளுகிறான்.

ஒரு கட்டத்தில் ரத்னாவால் ஈர்க்கப்படுகிறான். ஆனால், வேலைக்காரியான அவளை  மணந்துகொள்ள முடியுமா ? இதுதான் மையச் சரடு. வேலைக்காரர்கள்  சாப்பிடுவதை, சமையல் அறையில் சென்று பார்ப்பதையே கேலிக்குள்ளாக்கும் நாகரிகச் சூழல். இதில் இவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ?

அவனுடைய நண்பன், ’’ஒரு வேலைக்காரியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றால் என்ன சொல்லுவார்கள் யோசித்துப் பார்? என்கிறான் ? யதார்த்தம்  அவனை யோசிக்க வைத்தாலும் அவன் அவளோடு வாழ்வை பகிர்ந்து கொள்வதில் ஆசைப்பட்டாலும் சமூக யதார்த்தை ஆழமாக மனதில் வத்து அவள் அவனை நிராகரிக்கிறாள்..! அஸ்வின் அமெரிக்கா திரும்புகிறான். இப்படிப் போகும் இந்தக் கதையில்…,

இயக்குநரும், கதாசிரியருமான ரோகினா ஜெரா ஒரு நுட்பமான கிளைமேக்சை வைக்கிறார்! அவர் கதையை இப்படி முடிக்க துன்பவியலாகவோ, அன்பிற்கான தோல்வியாகவோ முடிக்க விரும்பவில்லை. அவர்கள் காதலுக்கு  முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்பவில்லை. அதே சமயம் மத்திய தர வர்க்கத்து பார்வையாளர்களும் ஏற்றுக்கொள்ளும் முடிவைச் சொல்ல வேண்டும். மிகைப்படுத்தப்பட்ட காட்சி அமைப்புகள்,வசனங்கள் இல்லாமல் அதைச் செய்திருக்கிறார். கதை வெற்றி பெற்றிருக்கிறது. கமர்சியலாக எதையும் மெனக்கிடவில்லை! இது அழகியலோடு வெளிப்பட்ட ஒரு சிறப்பான படைப்பு. நம் மனதிலுள்ள கரும்புள்ளிகளை நமக்கே காட்டுகிறது. வீட்டு வேலை செய்பவரை முழு நீள திரைப்படத்தில் கதாநாயகியாக காட்டுவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். இது போன்ற வாழ்வியலை யாரும் படம் பிடிப்பது இல்லை.

சுருக்கமான வசனங்களிலேயே  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். விவேக் கோம்பர் (Vivek Gomber) கதாநாயகன்; நன்றாக நடித்துள்ளார்.  பிசிறில்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை. ஏறக்குறைய இருவர் மட்டுமே படம் முழுவதும் வருகிறார்கள்.  ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ, தமிழில் தொலைக்காட்சி தொடருக்கு வக்கிரமாக வசனம் எழுதுபவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். ரோகனா ஜெரா (Rohena Gera )என்ற பெண் திரைக்கதை எழுதி, இயக்கி ,தயாரித்துமிருக்கிறார்! படம் 1 மணி 39 நிமிட நீளம். 2018 ல் வந்த படமானாலும் நெட்பிளிக்சில் இப்போதுதான் வெளிவந்துள்ளது; மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

வித்தியாசமான கதைக்களன். சாதி முரண்பாடுகளை வைத்து பல கதைகள் வந்துள்ளன. ஆனால் இதில் வருவது, வர்க்க முரண்பாடு். படம் முழுதும்  கதாநாயகிக்கான  கிளுகிளுப்பு ஒரு காட்சியில் கூட இல்லை.  திலோத்தமா அப்படியே பாத்திரமாக  இருக்கிறாள்.படம் முடிந்தவுடன் திலோத்தமா உண்மையில்  எப்படி இருப்பாள் என கூகுளில் தேடிப்பார்த்தேன். ஏனெனில், படம் முழுமையும் நமக்குத் தென்படுவது வீட்டுவேலை செய்யும் ரத்னாதான்.ஒரு கதாநாயகி அல்ல .

படத்தை ரசித்துப் பார்க்கலாம்.

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time