காங்கிரசின் தடுமாற்றமும், திமுகவின் திசைமாற்றமும்!

சாவித்திரி கண்ணன்

சரியான தலைமையை அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம்,கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர்களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! நிர்வாகத் திறமையோ, நாணயமோ, பொது நலன் சார்ந்த அக்கரையோ இல்லாமல் மேலிடத்து லாபி மூலம் அதிரடியாக புதுச்சேரி அரசியலில் பிரவேசித்து, நமச்சிவாயத்திற்கு அல்லது வைத்தியலிங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய முதல்வர் பதவியை அடைந்தார்!

இதனால் சொந்தக் கட்சிக்குள் இன்று வரை நம்பிக்கையானவர்கள் அவருக்கு அமையவில்லை! சதா சர்வகாலமும் தன் தலைமை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஆட்சியில் அதிகாரப் பரவலையும் அவர் முறையாக செய்யவில்லை! இதனால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளாமல் தவிர்த்தார்! வாரியங்களுக்கான தலைவர்களை நியமிப்பதை தவிர்த்தார்! தன்னுடைய நிர்வாகப் போதாமையை மூடி மறைக்க கிரண்பேடியின் அதிகார அராஜகத்தை பற்றி பிரஸ்தாபித்து, கவனத்தை திசை திருப்பி எத்தனை நாள் தான் சமாளிக்க முடியும்?

டெல்லி துணை நிலை ஆளுனர் விவகாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் சந்திக்காத சவாலையா நாராயணசாமி சந்தித்துவிடப் போகிறார்? இத்தனைக்கும் பாஜகவின் கோட்டையாக டெல்லி இருக்கிறது என்பது மட்டுமல்ல, டெல்லியின் காவல்துறை அதிகாரம் கூட கேஜ்ரிவால் அரசுக்கு கிடையாது! அத்தனை சிரமங்களையும் எதிர்கொண்டு தான் அருமையான, ஊழலற்ற ஆட்சியை கட்டமைத்துள்ளார் கேஜ்ரிவால்!

நாராயணசாமியை மட்டுமே நம்பிக்கைக்கு உரியவராகக் கருதி வரப்போகும் தேர்தலையும் காங்கிரஸ் தலைமை சந்திக்கும் என்றால், காங்கிரஸ் புச்சேரியில் காணாமல் போவதை அந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது! மக்கள் நம்பிக்கையை பெற்ற தலைமையை அங்கீகரிக்கும் மனப்போக்கு டெல்லி தலைமைக்கு வர வேண்டும்! அந்த மனப்போக்கு இல்லாமல் ராகுல்காந்தி எத்தனை முறை இங்கே விசிட் அடித்தாலும் அது பலனின்றி போய்விடக்கூடும்!

இது ஒருபுறமிருக்க, காங்கிரசின் தடுமாற்றத்தை, அதை முற்றாக தவிர்ப்பதற்கான வாய்ப்பாக திமுக கருதுவதில் நியாயமில்லை! இன்னும் கூட புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பலமான கட்சி! அதன் பலத்தில் பாதி கூட திமுக இல்லை! கடந்த தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது காங்கிரஸ்! ஆனால், பத்து இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது திமுக!

ஜெகத்ரட்சகன் என்பவர் யார்? மதுபான ஆலைகளை, கல்விச் சுரண்டல் கொண்ட நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு பெருமுதலாளி! தன் வியாபார நலன்களுக்காக திமுகவில் மத்திய அமைச்சர் பதவிகளை அடைந்தவர்! பாண்டிச்சேரி மக்களின் பொது நலனுக்காக துரும்பைக் கூட எடுத்துப் போட்டவரல்ல அவர்! முக்கியமாக அந்த மண்ணின் மைந்தரல்ல! அதீதமாக சொத்து சேர்த்துள்ளவர் என்ற வகையில் பாஜகவிடம் பணிவு அரசியலை காட்டி வருபவர்!

பாண்டிச்சேரியில் ஜெகத்ரட்சகனை திணிப்பதன் மூலம் சாதிய அரசியலை முன்னெடுக்க விரும்புகிறதா திமுக? ஜெகத்ரட்சகன் அள்ளி வீசப்போகும் பணத்தால் பாண்டிச்சேரி மக்களை விலைபேசி அதிகாரத்தை அடையலாம் என நினைக்கிறதா திமுக? அனைத்துக்கும் மேலாக பாஜகவின் அழுத்ததிற்கு பணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா திமுக?

இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக எம்.பிக்களை காங்கிரசுக்கு கொடுத்த மாநிலம் தமிழகம்! தென் இந்தியாவில் அதன் வேர் விடுபடாமல் இருக்கும் பிரதேசம் புதுச்சேரி! இந்த இரண்டும் திமுகவின் தோழமையால் தான் காங்கிரசுக்கு சாத்தியமாகியுள்ளது! ஆகவே,காங்கிரஸை இந்த இரண்டு இடங்களில் இருந்துக் காணாமல் அடிக்க திமுகை தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது பாஜக! இதற்கு சற்றும் இணங்காமல் உறுதி காட்டுவதன் மூலம் தான், திமுக ஒரு வரலாற்று கடமையை இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் செய்ய முடியும்!

ஆனால், மதவாத அரசியலை, மக்கள் விரோத அரசியலை வேகமாக முன்னெடுத்து, இந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக ஆக்கப் போவாதாக அறைகூவல் விடுத்திருக்கும் பாஜகவிற்கு, நேர்மை அரசியலில் பலவீனமான மாநில கட்சிகளை மிரட்டிப் பணியவைக்கும் உத்தி புதிதல்ல! காஷ்மீரில் அதைத் தான் செய்தது! வடகிழக்கு மகாணங்கள் பலவற்றில் அதைத் தான் செய்தது! உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் ஒன்று சேரவிடாமல் அதைத் தான் செய்து கொண்டுள்ளது! அந்த பிரித்தாளும் அரசியலையே தமிழகத்திலும் செய்கிறது!

இந்த வகையில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளையுமே பாஜக ஒரேவிதமாகத் தான் நடத்துகிறது! அதிமுக பணிந்து போவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. திமுக பணிவது வெளியே தெரியவில்லை அவ்வளவு தான்!

காங்கிரசை கை கழுவுவதோ அல்லது குறைந்த தொகுதிகள் கொடுப்பதன் மூலம் பலவீனப்படுத்துவதற்கு துணை போவதோ…திமுகவிற்கு மதவாத எதிர்ப்பில் உறுதிபாடில்லை என்பதாகவே புரிந்து கொள்ளப்படும்!  ’’ஊழல் தலைவர்களின் சொத்துகளை பாதுகாப்பது தான் முக்கியம்! அத்துடன் பணபலம் மட்டுமே தேர்தல் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கிறது…ஆகவே மறைமுகமாக சோரம் போவதை யாரும் அறிந்து கொள்ளமுடியாது…’’ என்றெல்லாம் திமுக தலைமை நம்புமானால்.., அது தனக்குத் தானே தீமை செய்து கொள்கிறது என்று தான் அர்த்தமாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time