அரசுகளின் பேராசையால் அற்பமானது மீனவர் உயிர்கள்!

-சாவித்திரி கண்ணன்

தீரா கொடுந்துயராக, முடிவுரா பிரச்சினையாக தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்வதற்கான காரணங்கள் என்ன? இந்த எளிய மனிதர்களின் உயிரை இந்திய அரசாங்கம் ஒரு பொருட்டாக மதிக்கத் தயாரில்லையா…? புதுக்கோட்டை கோட்டைபட்டிணம் மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கையின் கடற்படை கப்பல் கொண்டு மோதி உயிரிழக்க வைத்த கொடூரத்தை நேரில் பார்த்த மீனவர்கள் சொல்லக் கேட்கும் போது இதயம் அதிர்கிறது!

இலங்கை வைக்கும் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் எங்கள் எல்லைக்குள் வந்து எங்கள் கடல் வளத்தை கொள்ளையிட்டு செல்கின்றனர்! இதனால் எங்கள் பகுதி மீனவர்களின் வாழ்வதாரம் பறிபோகிறது! இலங்கையின் கடற் பொருளாதாரமே சீர்குலைகிறது. நாங்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் இந்த அத்துமீறலைத் தொடர்ந்து நிகழ்த்துகின்றனர்! இதனால் எங்கள் பகுதியில் உள்ள – குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மன்னார், கிளிநொச்சி பகுதி மீனவர்கள் சுமார் 50,000 குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்! நாங்கள் இது தொடர்பாக இந்திய அரசுக்கு புகார் கொடுத்தும் அவர்களும் இதை தடுக்க முனையவில்லை..! என்கிறது இலங்கை.

இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? என்பதறிந்து கொள்ள இந்திய-இலங்கை கடல் பகுதி குறித்த ஒரு புரிதல் நமக்கு அவசியம்!

இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எல்லை தாண்டுவதற்கு முக்கிய காரணம் குறுகிய கடல் பரப்பு. குறிப்பாக, ராமேஸ்வரத்தில் இருந்து 16 நாட்டிக்கல் தூரத்தில் இந்திய இலங்கை எல்லை உள்ளது!  இந்தியாவிற்கும், இலங்கைக்குமான இடைவெளி 16 கி.மீ இருந்து 45 கீமீ தான்! அதாவது இது இடத்திற்கு இடம் மாறுபடும்.

இதில் மூன்று பகுதிகளில் மீன்பிடிப்பு நடைபெறுகிறது.

# பாக் நீரிணை என்ற மன்னார் வளைகுடா

# வங்காள விரிகுடாவின் வட பகுதி

# இந்தியாவின் தென் பகுதியான இந்திய கடற்பகுதி

இவற்றில் நீண்ட நெடுங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் இயல்பாக மீன் பிடித்து அவரவர் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்!

அதேபோல் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இரு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவு கடல் பகுதியை பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கச்ச தீவு கொடுக்கப்பட்ட காலத்தில் இரு நாட்டு மீனவர்களுக்குமான பிரச்சினை எதுவுமில்லை!இன்று யோசித்துப் பார்க்கும் போது கச்சதீவை கொடுத்தது தொலை நோக்கு பார்வையில்லாத ஒரு முட்டாள்த்தன நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை!

நீலப் புரட்சியால் ஏற்பட்ட நிம்மதியின்மை!

விவசாயத்தில் பசுமை புரட்சியைக் கொண்டு வந்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று திட்டமிட்ட சர்வதேசப் பெரு முதலாளிகள் வளம் கொழிக்கும் கடல்பகுதியை சுரண்ட போட்ட திட்டம் தான் நீலப் புரட்சி! இது 1960 களின் இறுதியில் தோன்றியது! 1970 களில் மெல்ல,மெல்ல வளரத் தொடங்கி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்த 1980 களில் இருந்து தான் மீன்பிடிப்பில் பிரச்சினைகள் வெடித்தன!

மிக பிரம்மாண்ட மீன்பிடிக் கப்பல்களைக் கொண்டு, கிலோமீட்டர் கணக்கில் வலைவிரித்து கடலின் மீன்வளத்தை சுரண்ட  மீனவர்களில்லாத பெருமுதலாளிகள் உள்ளே நுழைந்தனர். இவர்கள் கடற்பாசியில் இருந்து பிறந்த மீன்குஞ்சுகள் வரை சுரண்டிச் செல்வதை என்பது ஒரு கடற்கொள்ளை என்றே சொல்ல வேண்டும்! இவர்கள் அள்ளிச் சென்றது போகத்தான் சாதாரண படகு வைத்திருக்கும் மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ள வேண்டும்! பூமித் தாயும் சரி,கடல் தாயும் சரி பசித்த எல்லா ஜீவன்களுக்கும் பசியாற்ற எல்லையற்ற வளத்தை தன்னகத்தே கொண்டவர்கள் தான்! ஆனால், பெருமுதலாளிகளின் பேராசைகளை எந்தக் கடவுள் நேரில் தோன்றினாலும் கூட நிறைவேற்ற முடியாது.

தற்போது இந்தக் கடலானது 80,000 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னியச் செலவாணியைப் பெற்றுத் தருகிறது இந்திய அரசுக்கு! கடலில் எப்போது ஏற்றுமதி வணிக பொருளாதாரத்தை முன்னிறுத்தி சுரண்டத் தொடங்கினார்களோ.., அப்போது முதல் தான் பற்றாக்குறை ஆரம்பித்தது. இலங்கை அரசும் இந்த போக்கிலேயே சென்று, இன்று ஆசியாவின் இரண்டாவது பெரிய மீன் ஏற்றுமதி செய்யும் நாடாகவுள்ளது! ஆக, யாரோ வெளி நாட்டு பணக்காரனுக்கு மீனைப் பிடித்து அனுப்பி பணம் ஈட்ட சொந்த நாட்டு மீனவர்களின் வாழ்க்கையை பற்றி கவலைபடாமல் போய்விட்டன இரு அரசுகளும்!

இரு நாட்டு மீனவர்களும் அண்ணன் தம்பியாய் வாழ்ந்த காலத்தை அன்னியச் செலவாணி பொருளீட்டல் விரோதியாய் மாற்றிவிட்டது! இலங்கை மீனவர்கள் அடிக்கடி அங்கு இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்துவதும், இலங்கை கடற்படை இது வரை 800 க்கு மேற்பட்ட மீனவர்களை கொன்று தீர்த்திருப்பதற்கும் பின்னணியில் இந்த பேராசை தான் இருக்கிறது!

இந்தியக் கடல்பகுதியை நம்பி வாழும் தமிழக மீனவர்கள் சுமார் ஏழு லட்சம் குடும்பங்கள் இன்று வாழ்வா? சாவா? என்று நிம்மதி இழந்து உள்ளனர். இது வரை ஆயிரக்கணகான மீனவர்கள் இலங்கை கடற்படையால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையில் சித்திரவதையால் கை,கால் முடமானவர்கள், பல் உடைந்தவர்கள்,உடல் நலிந்து நடமாட முடியாமல் போனவர்கள் கணக்கில் அடங்காது! இது மட்டுமின்றி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் கொஞ்ச, நஞ்சமல்ல! சிதைக்கப்பட்ட படகுகள் கணக்கில் அடங்காது! இதனால் நொடித்துப் போய் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களும் உண்டு. ஒரு காலத்தில் மீன்பிடிப்பு என்பது மிகச் சிறிய முதலீடும் உடல் உழைப்பு மட்டும் தேவைப்பட்ட தொழிலாக  நிம்மதியாகத் தான் போய் கொண்டிருந்தது! அதில் புதிய தொழில் நுட்பங்கள், அதி நவீன ஆபத்தான மீன்பிடிப்பு நடைமுறைகள் தோன்றியது முதல் தான் துன்பத்திற்கு மேல் துன்பத்தை எளிய மீனவர்கள் சந்திக்க நேர்ந்தது!

இரண்டு நாட்டு அரசுகளும் பிரச்சினையை தீர்க்கும் அம்சங்களை தெரிந்தும் அதை செய்யமாட்டார்கள்! குறைந்தபட்சம் இரு அரசுகளும் கூட்டு ரோந்து முறையை அமல்படுத்தினாலே கூட பெருமளவு பிரச்சினைகள் தீர்ந்துவிடும்! நம்முடைய புழல் சிறையிலும் ஒரளவு இலங்கை மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்! சிறைபிடிக்கப்பட வேண்டிய தங்க கடத்தல்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை கடத்தல்கள்காரகளைக் கூட பிடிக்காமல் அலட்சியல் காட்டும் கடற்படையினர் எளிய மீனவர்களிடம் தான் தங்கள் வீரதீரத்தை காட்டி வருகிறார்கள்! பெருமுதலாளிகளின் பேராசையும்,அவர்களை அண்டி வாழும் அரசுகளின் அடிவருடித்தனமும் உள்ளவரை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை! மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளுமே தங்கள் மனசாட்சியைத் தொட்டு யோசிக்க வேண்டும்! அது இருந்தால் யோசிக்கமாட்டார்களா..அதைத் தான் தொலைத்துவிட்டார்களே…!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time