ஆன்மீகவியாபாரிகளை ஆசிர்வதிக்கும் பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

தனிப்பட்ட வகையில் இறை நம்பிக்கையும்,பிரார்த்தனையும் எளிய மனிதர்கள் வாழ்க்கைக்கு மாபெரும் தன்நம்பிக்கை தருகின்றன! ஆனால், அதுவே மதபோதகர்கள்,சாமியார்களுக்கு ஏமாற்றி பணம் ஈட்டும் வழிமுறையாகிவிடுகின்றன! டிஜிஎஸ் தினகரன் குடும்பத்தை பொறுத்தவரை பாஜகவின் தலைவர்களோடு,குறிப்பாக அத்வானி,மோடியுடனேயே நேரடி தொடர்பு கொண்டு தங்கள் மோசடி ஆன்மீக வியாபாரத்திற்கு தடையில்லாமல் அனுசரணையோடு தான் இருந்து வந்தனர்! அதையும் மீறி சமீபத்தில் ரெய்டு நடந்திருக்கிறதென்றால்…அதன் பின்னணிகளை பார்க்க வேண்டும்!

டி.ஜி.எஸ்.தினகரன் குடும்பத்தினர் கடந்த சுமார் அரை நூற்றாண்டாக கோடானுகோடி மக்களின் துன்பங்களையும்,துயரங்களையும்,தீரா வலிகளையும் மேடைதோறும் கூவிக் கூவி விற்றனர்! துன்பத்திற்கு ஆளானவர்களையே இலக்காக்கி, அவர்களை இரக்கமின்றி சுரண்டி கொழுத்தனர்! ஜெபக் கூட்டம், பிரார்த்தனை என்ற எளிய வடிவங்களை பெருவியாபார வணிகமாக்கினர்!

திருநெல்வேலியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் 1962 தன் வங்கிப் பணியைவிட்டு விலகி இறைப்பணியில் இறங்கிய ஆரம்ப காலங்களில் உண்மையானவராகவும், நேர்மையானவராகவும் தான் இருந்துள்ளார் என பலதரப்பிலும் சொல்கிறார்கள்! ஆனால்,அவர் கூட்டத்திற்கு சேர்ந்த பிரம்மாண்ட மக்கள் வெள்ளத்தையும், கண்மூடித்தனமாக மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையையும் காலபோக்கில் துஷ்பிரயோகம் செய்து பணத்தை மூட்டை,மூட்டையாக சேர்த்தது போல, பாவத்தையும் சேர்த்துக் கொண்டார்!

”இவர் இறைவனோடு பேசும் ஆற்றல் கொண்டவர்! இவர் நமக்காக பிரார்த்தனை செய்த்தால் இறைவன் உடனே இரக்கப்பட்டு நம் துயரங்களைத் துடைத்து சுகமளிப்பார்..’’ என்ற ஆழமான நம்பிக்கையை கோடானுகோடி ஏழை,எளிய மக்களிடம் உருவாக்கினார்!  ஒட்டிய வயிறும்,ஒடுங்கிய கன்னங்களும், குழிவிழுந்த கண்களும்,பரட்டைத் தலையுமாக இருந்த ஏழை,எளிய கிறிஸ்த்துவர்களின் உள்ளங்களை கொள்ளையிட்டு,உங்களுக்கு தேவனிடம் பாவமன்னிப்பு பெற்றுத் தருகிறேன் எனக் கூறி காணிக்கை பெற்றார்! அவரவர்களும் தங்கள் சோகக் கதைகளை இவருக்கு விலாவாரியாக கடிதம் எழுதி பணமும் அனுப்புவார்கள்! கடிதம் குப்பைக் கூடைக்கு போகும்! பணம் கஜானாவில் சேரும்! ஒவ்வொரு நாளும் அப்படி வரக்கூடிய பணத்தை மூட்டையில் தான் கட்டி வைக்கமுடியும் என்ற அளவுக்கு குவிந்தது!

1983ல் கோவையில் ( 750 ஏக்கர்) ஆரம்பித்த காருண்யா கல்வி நிறுவனம் ஏழைகளுக்கு கல்வி கொடுக்கவே என மேடைக்கு மேடை பேசி நன்கொடை பெற்றார்! ஆனால், அது தற்போது அதிக பணம் வசூலிக்கும் கல்வி நிறுவனமாக தான் எழுந்து நிற்கிறது! அப்போது, மேலும் பணம் திரட்ட தங்கச் சாவி திட்டத்தை அறிவித்தார்! அதன்படி அந்த காலத்திலேயே கிறிஸ்துவ தொழில் அதிபர்களைக் குறிவைத்து ரூபாய் மூன்று லட்சம் தந்து தன்னிடம் தங்கச்சாவி பெற்றுக் கொண்டால், அந்த தங்க சாவியை உங்கள் நிறுவனத்தில் அல்லது கடையில் மாட்டினால் இந்த சாவி பரலோகத்தில் உள்ள பணபொக்கிஷப் பெட்டியை திறந்து அதிலிருந்து பொக்கிஷத்தை எடுத்து உங்கள் வியாபாரத்தில் பணமாக கொட்டும். என்றார்!. அதற்கும் வரிசை கட்டி அவரிடம் பணம் கொடுத்தவர்கள் பரலோகத்திற்கும்,பணப் பெட்டிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என யோசிக்கவே இல்லை!

தன் கல்வி நிறுவன அங்கீகாரத்தில் பிரச்சினை வந்த போது, நடிகர் எஸ்.வி.சேகரை அழைத்துக் கொண்டு காஞ்சி சங்கராசாரியாரை சந்தித்து காலில் விழுந்து ஆசிபெற்று பூஜை பொருட்கள் அடங்கிய வெள்ளிப் பெட்டியை பரிசளித்து காரியம் சாதித்துக் கொண்டார்!

காலப் போக்கில் அவர் தன் மகன் பால் தினகரன்,பேரன் சாமுவேல் ஆகியோரையும் களத்தில் இறக்கி பக்தியை குடும்ப வியாபாரமாக நிலை நிறுத்திவிட்டார்! அப்பன் எட்டடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்வான் என்பது போல மகனும் பொய், பித்தாலாட்ட வழிமுறைகளில் இளம் பங்காளர் திட்டம், திருமணத்திட்டம், டிவிகிளப் திட்டம் என செல்வம் திரட்டும் திட்டங்களை அறிவித்து சொத்துக்களை பன்மடங்கு பெருக்கினார்! ஏகப்பட்ட வெளி நாடுகளிலும் பிரசங்கம் நிதி என்று குவிந்தது! தமிழகத்தில் ஏராளமான இடங்களில் நிலங்கள்,சொத்துகள் வாங்கி போட்டதோடு இலங்கை, அமெரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர், மலேசியா..ஆகிய நாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்தனர்! இஸ்ரேலில் நட்சத்திர ஒட்டல் வாங்குமளவுக்கு செல்வம் குவிந்தது!

”குருடர்களை பார்க்க வைப்பேன், செவிடர்களை கேட்க வைப்பேன்,எய்ட்ஸ்சை குணப்படுத்துவேன்..தீர்க்கமுடியாத வியாதி எதுவுமில்லை..’’ என்று மக்களிடம் பேசிப்,பேசி பணம் பார்த்தார்.அந்த காலத்திலேயே அவர் தொட்டு ஆசிர்வதித்தால் ஆயிரம் ரூபாய் வசூலித்தார்! ஆனால், 1985ல் அவரது சிறு நீரகம் பழுதுபட்டது! சொந்த நாட்டில் ஆஸ்பிட்டலில் சிகிச்சை பெற்றால் விவாதமாகும் என்பதால் அமெரிக்காவின் புருக்கிளின் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்தார்! தன் மகளை விபத்தில் பறி கொடுத்தார்!

இலங்கை அதிபர் ராஜபக்சே மிகக் கொடுமையான ஆட்சி நடத்திக் கொண்டிருந்த நேரம் இலங்கை சென்ற தினகரன், ‘’இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்!  இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை’’ என்று புகழ்ந்து பேசி வந்தார்!

அவர் பேசி வந்ததைத் தொடர்ந்து தான் அங்கு மாபெரும் மனித பேரழிவு அரங்கேறியது!

அவரைப் போலவே அவரது மகன் பால் தினகரனும் 2013ல் மோடியை சந்தித்து வந்தபிறகு இவ்வாறு எழுதினார்:

அந்த 15 நிமிட சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்ததுஅவர் என்னை வரவேற்ற விதம் மிகவும் அபரீதமாக இருந்ததுநான் அவரது காரியங்களுக்காகவும்நமது நாட்டிற்காகவும் வேண்டிக்கொண்டேன்அவரது வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மற்ற எல்லா மாநிலங்களிலும் எடுத்துச் செல்லப்படவேண்டும்நான் எந்த ஒரு பிரிவினையும் சேர்ந்தவன் இல்லைமோடியிடம் எனக்கு எந்த வெறுப்பும் இல்லைநாம் நமது தேசிய தலைவர்களை ஆதரிக்க வேண்டும்வாழ்க்கையில் எனக்கான குறிக்கோள் பிரார்த்தனையாகும்பொதுவாக நான் நமது தலைவர்களுக்காக பிராத்தனை செய்வேன்……….இப்பொழுது மோடி தேசிய தேர்தலின் பலிபீடத்தின் அருகில் உள்ளார்ஆகையால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும் சொல்லியிருக்கிறேன்

அதன் பிறகும் மோடியை சந்தித்து பேசி தொடர்ச்சியாக நல்லுறவைப் பேணி வந்தார்! மேலும் சில பாஜக தலைவர்களுடனும் அவருக்கு நல் உறவு இருந்தது! ஆகவே, இந்த ரெய்டு ஏதோ ஒரு பெரிய பேரத்திற்காகவோ,எச்சரிக்கைக்காகவோ இருக்கலாம் என்று தான் நம்பப்படுகிறது!

ஊரையடித்து உலையில் போட்டு ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த மாதிரி ஆன்மீக வியாபாரியை தெரிந்தே தான் பாஜக அரசு இவ்வளவு நாள் விட்டுவைத்தது.கிறிஸ்த்துவர் என்றாலும் பால்தினகரன்  பெரும் கோடீஸ்வரர் அல்லவா? படியளக்கும் கோடீஸ்வர்களை ஆட்சியாளர்களும் அவ்வளவு சுலபத்தில் தண்டித்துவிட மாட்டார்கள்! இது நாள் வரை பால் தினகரன் நிறுவனம் குறித்து ,குறிப்பாக கோவை காருண்யா பல்கலைக் கழக முறைகேடுகள், அது யானைகளின் வழித்தடத்தில் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான புகார்கள் மத்திய அரசின் கவனத்திற்கு போயுள்ளன! அவற்றுக்கெல்லாம் இன்று வரை நடவடிக்கைகள் இல்லை! இப்போதும் கூட வரி ஏய்ப்பு தொடர்பாகத் தான் ரெய்டு நடந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்! இந்த ஆன்மீக வியாபாரிக்கு பல்லாயிரம் கோடியில் பிடிபட்ட சுமார் 180 கோடியும் ஐந்து கிலோ தங்கமும் ஒரு பெரிய இழப்பல்ல! ஆனால் மாட்டிக் கொண்ட ஆவணங்களால் எவ்வளவு இன்னும் கூடுதலாக படியளக்க வேண்டியிருக்கும் என்பதே இவர்களின் கவலையாக இருக்கும்! பால் தினகரன் சேர்த்து வைத்த பெரும் செல்வமும், மாபெரும் செல்வாக்கும் அவர் சார்ந்த சமூதாயத்தின் ஏழை,எளிய மக்களுக்கு பயன்படாமல் அந்த சமுதாயத்தை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு பயன்படுவதை என்னென்பது?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time