டெல்லி வன்முறையில் அம்பலமானது அரசின் சதி!

-சாவித்திரி கண்ணன்

எது நடக்க வேண்டும் என்று இந்த அரசு காத்திருந்ததோ..,அது இன்று நடந்தேறிவிட்டது!

தேசபக்தி என்பது குடியரசு தின நிகழ்ச்சிகளில் ஆடும் ஆட்டம்,பாட்டம், காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்திகளில் மட்டும் தான் வெளிப்பட வேண்டும் என்பதல்ல!

ஆட்சியாளர்கள் மேற்பார்வையில் அவர்களுக்கு கட்டுப்பட்டு வெளிப்படுவதல்ல, தேசபக்தி!

விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பு அரசாங்க அணிவகுப்பைவிட பிரம்மாண்டமானதாக – 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததையும் –  சுமார் 3000 தன்னார்வலர்கள் அதை ஒழுங்குபடுத்தி வந்ததையும் – அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை…! பெண்களும் டிராக்டர்களை ஓட்டி வந்தனர் என்றால், இந்த எழுச்சியை அரசால் எப்படி சகித்துக் கொள்ளமுடியும்?

இன்றைய தினம் விவசாயிகள் டிராக்டர்களில் தேசியக் கொடியைக் கட்டிக் கொண்டும், தங்களுக்கான விவசாயச் சங்கக் கொடியைக் கட்டிக் கொண்டும் புறப்பட்டது அரசாங்கத்தின் பார்வையில் – போலீசாரின் பார்வையில் – தேசத் துரோகம்!

அமைதியான நிகழ்வு மற்றும் அணிவகுப்பை உறுதி செய்வதற்காக சன்யுக்ட் ஏக்தா மோர்ச்சா அறிவித்த வழிகாட்டுதல்கள் அபாரம்!  மொத்தம் சுமார் 540 கி.மீ தூரத்தில் பாதை வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன…என்பதில் இருந்து இந்த டிராக்டர் பேரணிக்கு எவ்வளவு மெனக்கிடல்கள் நடந்தன..என்பதை புரிந்து கொள்ளலாம். இது சிறப்பாக நடைபெற்று இருந்தால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி வைத்து நடந்த நிகழ்வை மிஞ்சி பேசப்பட்டுவிடும் என பாஜக அரசு பயந்தது என்பதே உண்மை!வரலாறு காணாத இந்த மாபெரும் விவசாயிகளின் டிராக்டர் எழுச்சிப் பேரணியை கவரேஜ் செய்ய உலக நாடுகளின் ஊடகங்கள் அணிவகுத்து வந்திருந்தது மத்திய அரசின் கோபத்திற்கு காரணம்!

இன்றைக்கு தீடிரென்று இணையதள சேவையை அரசு துண்டித்தன் பின்னணியில் எத்தனை கெடு நோக்கம் இருந்துள்ளது என்று சிந்திக்கும் போதே குலை நடுங்குகிறது! விவசாய சங்கத் தலைவர்கள் தங்கள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதில் இருந்து தடுக்கும் சதி தான் இது! கள நிலவத்தின் உண்மைத் தன்மையை மக்களுக்கு எட்டாமல் செய்யும் துர்நோக்கம் அரசுக்கு வருவானேன்?

AIKSCC என்ற அனைத்துவிவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு போராட்டத்திற்குள் அரசாங்கம் சமூகவிரோத சக்திகளை அனுப்பியது என குற்றம் சாட்டியுள்ளது! முதல் முதலாக டிராக்டர் ஓட்டி வந்த விவசாயின் மீது குண்டு பாய்ந்து உயிர் இழந்ததும்,போலீசார் விசேசமாக சில மேம்பாலங்களின் மீதிருந்து குண்டு மழை பொழிந்ததும் வெளியாகியுள்ள விஷுவல்களில் தெரியவருகிறது! இவை அரசு திட்டமிட்ட சதி செய்துள்ளது என்பதற்கான ஆதாரங்களாகும்!

பி.பி.சியில் வெளியாகியுள்ள ஒரு சில செய்திகளை இங்கே கவனப்படுத்துகிறேன்;

பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திக்காயத், “எங்களது போராட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்பவர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். அரசியல் கட்சிகளை சேர்ந்த அவர்கள் போராட்டத்தை திசைதிருப்பி அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர்” என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்வோம்.

விவசாயப் போராட்டங்கள் பெருமளவில் நடக்கும் சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இருந்துதான் விவசாயிகளின் டிராக்டர்கள் டெல்லிக்குள் வரவேண்டும். ஆனால், இந்த எல்லைப் பகுதிகளில் போலீசார் பெரிய தடுப்பரண்களை உருவாக்கி வைத்தனர். சாலையின் நடுவில் வைக்கும் காங்கிரீட் பிளாக்குகளையும், மண் ஏற்றிய டாராஸ் போன்ற லாரிகளையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தனர். ஜேசிபி போன்ற மண் வாரி இயந்திரங்களும், பல வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன..’’என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளதை பார்க்கும் போது விவசாயிகளுக்கு பல தடைகளை உருவாக்கி ஆத்திரம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டது தெள்ளதெளிவாகத் தெரிய வருகிறது.

செங்கோட்டையில் ஏறி கொடியை ஏற்றியது ஒரு பாஜககாரன் என்பதும் தற்போது அம்பலப்பட்டுவிட்டது!

கலவரச் சூழலில் தன்னந்தனியாக சிக்கிய ஒரு போலீசை விவசாயிகள் பாதுகாப்புடன் அரவணைத்து, மற்ற போலீசார் இருக்கும் பகுதி சென்றுவிட்ட சம்பவம் ஒன்று போதும்! விவசாயிகளின் கண்ணியத்தை பறைசாற்ற..!

தமிழகம் முழுக்க இன்று தன் எழுச்சியாய் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் சொல்லும் செய்தி என்னவென்றால், விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள் என்பதே!

இரண்டு மாதங்களாக கட்டுக் கோப்புடன் பனியில் நனைந்து,பாதுகாப்பற்ற வெட்ட வெளியில் உறுதி குலையாமல் போராடியவர்களை – நூற்றுக்கு மேற்பட்ட உயிர்களை போராட்ட களத்தில் இழந்தும் உறுதி குலையாதவர்களை – பேச்சுவார்த்தை என்ற பெயரில் 11 முறை கூப்பிட்டு, ’’நான் சொன்னதைக் கேள்’’ என்ற பல்லவியை மீண்டும்,மீண்டும் பாடியபோதிலும் கட்டுக்கோப்புடன் நின்றவர்களை அடக்க –  போராட்டம் வன்முறை பாதையில் பயணிப்பதை அனுமதிக்க முடியாது – என்ற காரணத்திற்காக காத்திருந்தவர்கள் சும்மாவா இருப்பார்கள்!

எத்தனை புல்லுருவிகளை உள்ளுக்குள் அனுப்பி பார்த்தார்கள்…!

எத்தனையெத்தனை அவதூறுகளைக் கிளப்பிவிட்டார்கள்..!

எவ்வளவு பிரித்தாளும் சூழ்ச்சிகளை செய்து பார்த்தார்கள்..!

எவ்வளவு ஆசைகாட்டியும், அதிகாரம் செலுத்தியும் போராட்டத்தை சீர்குலைக்க பார்த்தார்கள்..!

ஆனால், இன்று தானாகவே சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது! போராடும் விவசாயிகளுடன் கருங்காலிகளும் வந்து சேர்ந்துவிட்டனர்!

ஆகவே இந்தக் காரணத்தைக் காட்டி விவசாய சட்டங்களை நியாயப்படுத்த முடியாது!

நீங்கள் அம்பானியையும்,அதானியையும் இன்னபிற முதலாளிகளையும் மேலும் கொழுக்கவைக்க புதுப்புது சட்டங்கள் போடுவீர்கள்! அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என நிர்பந்திக்க முடியாது!

யாருக்காக இந்த அரசாங்கம் நடைபெறுகிறது? எதற்காக அந்த விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட்டது…? ஏன் விவசாயிகள் ஒரளவு நிம்மதியாக வாழ்வதைக் கூட அரசுக்கு பொறுக்க முடியவில்லை…?

இரசாயன உரங்களைத் திணித்தீர்கள்…அந்த நிறுவனங்கள் தான் வாழ்கின்றன..!

பூச்சிக் கொல்லி மருந்துகளைத் திணித்தீர்கள்..அவை லட்சக்ணக்கான விவசாயிகளின் தற்கொலைக்குத் தான் உதவியது!

கடனை வலிந்து திணித்தீர்கள்..அது விவசாயி கழுத்தில் சுருக்கு கயிறானது…!

இப்போது கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக சட்டம் போட்டு விசாயிகளை நிலமற்ற கொத்தடிமையாக்க பார்க்கிறீர்கள்…!

அது ஒரு போதும் நடக்காது! இந்த ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளைத் துறந்து அம்பானி, அதானி நிறுவனங்களில் வேலை செய்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் யாதொரு பிரச்சினையும் இல்லை!

இந்த குடியரசு நாளில் உரத்து சொல்வோம்! மக்களுக்காகத் தான் ஆட்சி! ஆட்சிக்காக மக்கள் கிடையாது!

இந்த மண்ணையும்,மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஆட்சியாளர்கள் தான் மக்களின் தேவை!

அம்பானிக்கும், அதானிக்கும் ஆலவட்டம் சுற்றும் ஆட்சியாளர்கள் தேவையில்லை!

டெல்லி வன்முறைகளுக்கு ஆட்சியாளர்களே முழுக் காரணம்! உடனே விவசாய விரோத சட்டங்களை வாபஸ் பெறுவது தான் தீர்வு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time