தமிழகத்தில் ராகுல் ஏற்றிய நம்பிக்கை ஒளி!

-சாவித்திரி கண்ணன்

மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் செய்த பிரச்சார சுற்றுப்பயணம் அவரைப் பற்றிய கூடுதல் புரிதல்களை நமக்குத் தந்துள்ளது!

அவரது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வேகம் இருந்தது!

அவரது ஒவ்வொரு சொல்லிலும் உண்மை இருந்தது! அது உதட்டிலிருந்தல்ல, உள்ளத்தில் இருந்து வந்தது என்பதை கேட்பவர்களால் உணர முடிந்தது!

எளிமை, சக கட்சிக்காரர்களுடன் இணக்கம்,பேசக்கூடிய விஷயங்களில் அவருக்கு இருந்த தெளிவு,கமிட்மெண்ட்..எல்லாமே..அவர் ஒரு ’’பீப்பிள் பிரண்டிலி லீடர்’’ என்ற உணர்வை தந்து கொண்டே இருந்தது! ஒரு இளம் ஜவஹர்லாலை பார்க்கக் கூடிய உணர்வை தந்தது என்று கூடச் சொல்வேன்!

நான் ராகுலின் அப்பா ராஜிவ் காந்தியின் பல பிரச்சாரங்களை அணுக்கமாக நியூஸ் கவரேஜ் செய்துள்ளேன். ஆனால், அப்பாவின் சாயலை விடவும் பாட்டானாரின் சாயலே ராகுலிடம் அதிகம் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது! ஜவகர்லால் நேருவின் அந்தக் கால கருப்பு,வெள்ளை செய்திப் படங்களை பார்த்திருந்த வகையில், அவரிடம் வெளிப்பட்ட ஒரு சில அம்சங்கள் இவருடைய பேச்சிலும்,செய்கையிலும் தெரிவதாக உணர்கிறேன்!

ராகுலுடைய மூன்று நாள் பயணமும்,பேச்சும், நடத்தையும் அவரை நம்மில் ஒருவராக உணர வைத்திருக்கிறது. இதற்காக அவர் பிரசாந்த் கிஷோரிடம் பாடம் கேட்கக் கூடிய நிலையில் இல்லை! எல்லாமே அவரது சுயத்தில் இருந்து இயல்பாக வெளிப்பட்டவை! மாட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டதாகட்டும், இடையில் தேனீர் கடையில் வண்டியை நிறுத்தச் சொல்லி, இயல்பாக சக கட்சிக்காரர்களிடம் பேசியபடி தேனீர் அருந்தியதாக இருக்கட்டும், எதிலும் ஒரு நாடகத் தனம் வெளிப்படவில்லை!

கருரில் ஜோதிமணி எம்.பி ஏற்பாட்டில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசிய விவசாய சட்டங்கள் தொடர்பான விளக்கங்களாகட்டும், பண மதிப்பிழப்பு தொடர்பாக பெண்கள் தங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன் எனக் கேட்டு நடத்திய உரையாடலாக இருக்கட்டும்….,அவர் எதையும் அரைகுறையாக பேசுபவரல்ல, தெளிவான புரிதல்களுடனே ஒவ்வொரு விஷயத்தையும் பேசுகிறார் என்பதை உணர்த்தியது!

முன்னதாக நிகழ்ச்சியை மாடரேட் செய்யவும், ராகுல் பேச்சை மொழி பெயர்க்கவும் அழைக்கப்பட்டிருந்த பேராசிரியர் ஜெயரஞ்சன் ராகுல் ஒரு வார்த்தை உதிர்த்தால் அதற்கு 90 வார்த்தைகளில் நீண்ட நெடிய வியாக்யாணம் செய்த போது..அங்குள்ள அனைவருமே பதட்டத்திற்கு உள்ளானார்கள். இடையில் பேச முயன்ற ராகுலைக் கூட பேச அனுமதிக்காமல் ஆர்வக் கோளாறில் ஜெயரஞ்சன் நடந்து கொண்டதைக் கண்டு ராகுல் எரிச்சலடையவில்லை! இதை அவரது சகிப்புத் தன்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்! அதன் பிறகு ஜோதிமணி வந்து சொன்னவுடன் தன்னை சரிப்படுத்திக் கொண்டு அழகாக மொழிபெயர்த்து எளிமையாக சொன்னார் பேராசிரியர்!

அதே போல ராகுல் காந்தி பேசியதை மிக உணர்ச்சிகரமாகவும், சரியாகவும் மொழிபெயர்த்தவர் பீட்டர் அல்போன்ஸ் தான்! சில சமயம் ஒரே வார்த்தை சொல்லிவிட்டு கூட நிறுத்தினார் ராகுல்! இது அவர் தன்னை பேச்சாளராகவல்ல, உணர்வாளராக வெளிப்படுத்திய தாகவே எனக்குத் தெரிந்தது! துப்பாக்கி தோடாவில் இருந்து வெளிப்படும் குண்டுகளைப் போல மோடி அரசின் மீதான குற்றச்சாட்டுகளை எளிய ஆங்கிலத்தில் பேசிய போது, ’’வாவ் என்ன ஒரு கிளாரிட்டி..சபாஷ்’’ என சொல்லத் தோன்றியது!

”நாக்பூரின் நிக்கர்வாலாக்கள் தமிழக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.’’என்று அவர் சொன்னதை அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என உணராமல், ’லிக்கர்’ வாலாக்கள் என்ற புரிதலில் ’சாராய வியாபாரிகள்’ என பீட்டர் மொழிபெயர்த்த ஒரு சிறு சறுக்கலை தவிர சிறப்பான மொழிபெயர்ப்பையே பீட்டர் செய்தார்!

புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு கார்த்திகை செல்வனுடனான அவருடைய உரையாடல் தமிழக அரசியல், தமிழக மக்கள்..குறித்த அவரது சரியான மதிப்பீடுகளை சொல்லியது.

”நீங்கள் தமிழகத்தில் மத்திய அரசை பற்றி அதிகம் பேசுகிறீர்கள்.ஆனால், மாநில அரசு பற்றி ஏன் பேசுவதில்லை..?’’

”மாநில அரசு மத்திய அரசின் ஒரு இணைப்பு தான்!. மாநில அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தான், நான் மாநில அரசு பற்றி அதிகம் பேசவில்லை. தமிழகத்தில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். தமிழக அரசை ஆர்.எஸ்.எஸ், நரேந்திரமோடி கூட்டணி இயக்கிக் கொண்டிருப்பது தெளிவு! இது குறித்து தமிழக மக்கள் மனதில்  எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றதோடு, திமுகவிற்கும் காங்கிரசுக்குமான சர்சைகளுக்கு முற்றுப்புள்ளியும் இந்த நேர்காணலில் வைத்தார்.

அறச்சலூரில் நெசவாளர்கள் மத்தியில் பேசிய போது, நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் இந்தியாவின் பலவீனமாக பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பலம் என்பது அதன் எளிய விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் தான்! இந்தியாவை பலர் பிரிட்டிஷாருக்கு விற்றனர். ஆனால், இந்தியாவை காப்பாற்றியவர்கள் நீங்கள் தான் என்றார்! விசைத்தறி,கைத்தறி ஆகிய தொழில்கள் தற்போது மிகவும் நலிந்து வருகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், சில குறிப்பிட்ட ரகங்கள் அவர்கள் மட்டுமே செய்வது போன்ற பழைய நிலைமை வேண்டும் என ஒருவர் கூறிய போது, ‘’ஆம், இது நல்ல யோசனை’’ என்றார்!

நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு வந்திருந்த நெசவாளர் பெண்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்! சாப்பிடுவதற்கு முன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்களிடம் சற்றே பேசி நலம் விசாரித்தார்! செல்பி எடுக்க விரும்பிய பெண்களுக்கு ஒத்துழைப்பு தந்தார்.

கோவையில் சிறு தொழில் முதலீட்டாளர்களிடையே பேசிய போது, சிறு தொழில் முதலீட்டாளர் அமைப்பை சேர்ந்த கே.இ.ரகுநாதன், ”இந்த ஆட்சியாளர்கள் ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இந்தியா, ஆத்ம நிர்பர் இந்தியா என்றெல்லாம் பேசி இறுதியில் தற்போது ‘பண்ட் இந்தியா’ என்கிறார்கள். இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பை தறுபவை எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு தொழில் முதலீட்டாளர்கள் தான்! மொத்தம் ஏழு கோடி சிறு முதலீட்டாளர்களில் தற்போது 30% த்தினர் முற்றாக அழிந்துவிட்டனர்!’’ என்றார்! அப்போது ராகுல்,  ”சிறு தொழில் முதலீட்டாளர்கள் இல்லாமல் இந்தியாவை வலுப்படுத்தவே முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு முக்கியம்! உங்கள் பிரச்சினையை நான் கவனத்தில் கொள்கிறேன்’’ என்றார்!

மொத்தத்தில் ஒரு நல்ல மக்கள் தலைவரை இந்தியா பெற்றுள்ளது என்ற நம்பிக்கையை ராகுல் காந்தி விதைத்து சென்றுள்ளார்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time