கடையெழு வள்ளல் எழுவர், கன்னிகா ஸ்திரி கடவுளர் எழுவர் என்பது போல தமிழ் சமூகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ராஜிவ் காந்தி கொலை சம்பந்தப்பட்ட கைதிகள் எழுவர் விவகாரம் விவாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது.
திறந்த மனதுடன் – முன் கூட்டிய அனுமானங்கள் எதுவுமின்றி – இந்த விவகாரத்தை நாம் பார்ப்போம்!
தமிழக வரலாற்றோடு மட்டுமல்ல, இந்திய வரலாற்றோடுப் பிண்ணிப் பிணைந்துள்ள இந்த விவகாரத்தில் என்னையுமறியாமல் நானும் சம்பந்தப்பட்டுள்ளேன்! என்னை பின் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இவை ஓரளவு தெரியும்!
ராஜிவ்காந்தியின் ஒவ்வொரு தமிழக வருகையின் போதும் தொடர்ந்து அவரை அணுக்கமாக ஏராளமான போட்டோக்கள் எடுத்தவன் என்ற வகையில் அவரை அவதானிக்கும் வாய்ப்பை பெற்று இருந்தேன். மென்மையும்,கூச்ச சுபாவமும் கொண்ட இனிய மனிதராக அவரை புரிந்து வைத்திருந்தேன். சம்பந்தப்பட்ட நாளன்று சென்னையில் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுவின் பிரச்சாரத்தை போட்டோ கவரேஜ் செய்து தர வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டதற்கேற்ப நான் அன்றைய ராஜிவ் பிரச்சாரத்திற்கு உடன் செல்வது தவறிப்போனது.
ஆனால், அன்றைய தினம் என்னிடம் போட்டோகிராபி பயின்றவனும், நண்பனுமான ஹரிபாபு வருங்கால பிரதமரை பல குளோசப் படம் எடுக்கப் போகிறேன் எனச் சொல்லி புறப்பட்ட போது, அவனிடம் நீண்ட நேரம் பேசி வழி அனுப்பி வைத்தேன்! தனக்கு போட்டோ எடுக்க அழைத்த எல்.டி.டியினர் ராஜீவ் காந்திக்குப் போட சந்தன மாலை வாங்கி வரச் சொன்னார்கள், எங்கே வாங்குவது எனக் கேட்ட போது, ஒரு கணம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ’’மவுண்ட் ரோடு காதிபவனில் வாங்கிட்டுப் போடா..’’ என்றேன்.
அவன் இறந்த நிலையில் அந்த கேமரா பேக்கில் காதிபவனின் ரசீதும் இருந்தது! அவன் எடுத்த போட்டோ தான் ராஜிவ் கொலைக்கு சாட்சியானது! தனுவுடன் மிக நெருக்கமாக நின்று அவள் சந்தன மாலை போடும் போது போட்டோ எடுக்க அவன் நின்ற சமயத்திலாவது அந்தப் படுபாவி சிவராஜன் ’’தம்பி நீ சற்றுத் தொலைவில் இருந்து போட்டோ எடு’’ என்று சொல்லி இருந்தால் கூட அவன் பிழைத்திருப்பானே…!
‘’ஏன்,எதற்கு’’ என்று அவனுக்கு கேட்கக் கூடத் தெரிந்திருக்காது! சொன்னதைச் செய்யும் அப்பாவி என்று நன்கு தெரிந்திருந்தும் அவன் உயிரையும் சேர்த்து அல்லவா எடுத்துவிட்டனர்!
அவன் இறப்பே நான் சொல்லித் தான் அவர்கள் வீட்டுக்குத் தெரியும்! அவன் ஒரு பெண்ணோடு மிகத் தீவிரமான காதலில் இருந்தான்! அவன் சாவால் அந்தப் பெண்ணும் கடுமையாக பாதிக்கப்பட்டாள்! அவன் சடலத்தை தேடி வாங்கி இறுதி சடங்கு செய்வது வரை அவனது குடும்பத்திற்கு துணை இருந்தேன்!
சில நாட்கள் கழித்து தான் நான் நெருக்கமாகப் பழகி வந்த நண்பன் பாக்கியநாதன்,அவன் சகோதரி நளினி, அவன் அம்மா பத்மா ஆகியோர் அடுத்தடுத்து கைதானது அறிய வந்த போது அதிர்ந்தேன்! துடுக்கான இளம் வாலிபனாக என்னோடு ‘இன்னோசண்டாக’ பழகி வந்த பேரறிவாளனும் கைதான போது..என்ன தான் நடந்தது..? நடக்கிறது..? என புரியாமல் தவித்தேன்!
நான் அன்றைய தினம் சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி ஆகியோரால் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டேன். எந்த தயக்கமோ,குழப்பமோ,பயமோ..இன்றி வெளிப்படையாகவும், நேர்மையாகவும் அவர்கள் விசாரணையை எதிர்கொண்டேன்!
செங்கல்பட்டு சிறையிலும், புழல் சிறையிலும்..இவர்கள் அடைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இயல்பாகச் சென்று சந்தித்து வந்துள்ளேன்!
முதலில் இந்த வழக்கில் 26 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது! அந்தச் சமயத்தில் புலனாய்வுக்குழுத் தலைவர் கார்த்திகேயன் ஒரு பிரஸ் மீட் வைத்தார்! அந்த பிரஸ் மீட் முடிந்ததும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்!
” போட்டோ ஜர்னலிஸ்ட் கண்ணன் தானே, உங்களைத் தான் தெரியுமே சொல்லுங்கள்’’ என்றார்!
” சார், சம்பந்தப்பட்ட முக்கியமான தனு,சிவராஜன், சுபா மூவரும் இன்றில்லை. இறந்துவிட்டனர். ஒரு மிக முக்கியமான கொலை திட்டத்தில் அந்த மூவரைத் தவிர்த்து இன்னும் இவ்வளவு பேர் எப்படி சம்பந்தப்பட முடியும்! இவ்வளவு பேர் சம்பந்தப்பட்டிருந்தாலே அது ஏதோ ஒரு வகையில் வெளியே ‘லிக்கேஜ்’ ஆகி இருக்குமே..லாஜிக்காக பார்க்கும் போது 26 பேருக்கும் சம்பந்தம் இருக்கமுடியும்னு நம்ப முடியலையே..’’ என்றேன்!
“கண்ணன் தனிப்பட்ட முறையில் கேட்கிறீங்களா..அல்லது ரிப்போர்ட்டிங்கிற்காக கேட்கிறீங்களா..’’என்றார்.
‘’இல்லை, பெர்சனலாகத் தான் கேட்கிறேன்’’ என்றேன்.
” நீங்க கேட்கிறது சரி தான்! பட் என்னன்னா இப்பவும் இங்க எல்.டி.டிக்கு ஆதரவாக பிரச்சாரம் போய்க்கிட்டு இருக்கு..அதனால இந்த விஷயத்தை கொஞ்சம் சீரியசா சென்ட்ரல் கவர்மெண்ட் பார்க்கிறாங்க..! அதனால அதை மட்டுப்படுத்துவதற்கான ‘ஷாக் டிரீட்மெண்ட்’ தான் இந்த 26 பேருக்குமான மரண தண்டனை! இப்ப எப்படியும் இவங்க மேல் முறையீடு போவாங்க..அப்ப இதுல கணிசமானவங்க ரிலீஸ் ஆயிடுவாங்கங்கிறது எனது கணிப்பு! அப்ப மிகச் சிலர் தான் தண்டிக்கப்படுவாங்க..’’என்றார்!
அப்ப எனக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. அவர் சொன்னபடியே.. நடந்தது! அந்த 26 பேருக்கான மேல் முறையீட்டில் எட்டாண்டு தண்டனைக்குப் பிறகு 19 பேர் விடுதலையானார்கள்!
மீதமுள்ள ஏழு பேரில் நளினி,முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு தூக்கு தண்டனை! மற்ற மூவருக்கு ஆயுள் என தீர்ப்பானதில், பிறகு மேல் முறையீட்டில் நளினி தூக்கில் இருந்து ஆயுளுக்கு மாற்றமானார்! இதில் ஆயுள் தண்டனைக்கு ஆளான நளினியும், அருப்புக் கோட்டை ரவிச்சந்திரனும் எப்போதோ விடுதலையாகி இருக்க வேண்டியவர்கள்!
இதில் எனக்கு நன்கு பழக்கமானவர் என்ற வகையில் நளினியை நான் அடிக்கடி சென்று சிறையில் பார்த்துள்ளேன்! அவர் பிரியங்காவிற்கு உருகி, உருகி கடிதங்கள் எழுதினார். உங்கள் அன்புத் தந்தையின் சாவுக்கு நான் துளியும் காரணமல்ல, வீட்டில் தனிமையில் இருந்த என்னை, ’’ராஜிவ்காந்தி பிரச்சாரத்திற்கு செல்கிறோம் வா..’’ என்றழைத்த போது அவரை பார்க்கும் ஆசையில் தான் உடன் சென்றேன்… என்றெல்லாம் எழுதினார்.
அதனால், இவ்வளவு அன்பான ஒரு ஆன்மா எதற்கு என் தந்தையைக் கொல்ல வேண்டும். நேரில் விலாவாரியாக கேட்டுத் தெளிவு பெற்றால் தான் தனக்கும் மனம் அடங்கும் என்று ஒரு நாள் பிரியங்கா புறப்பட்டு வந்து நளினியை நேரில் பார்த்து பேசிச் சென்றார்! பிரியங்காவிடம் அனைத்தையும் மனம் விட்டு சொன்னபிறகு தான் நளினிக்கும் பாரம் குறைந்தது! தன்னிடம் பிரியங்கா கனிவோடும்,பரிவுடனும் பேசிச் சென்றதை மிகுந்த நன்றி உணர்வுடன் நளினி என்னிடம் கூறினார்! வழக்கின் சட்டபூர்வமான அணுகுமுறைக்கு இந்த சந்திப்பால் பிரச்சினை வரக் கூடாது என பரஸ்பரம் இருவருக்குமே ஒரு புரிதல் இருந்தது! அதே புரிதலில் தான் நானும் இது வரை இந்த செய்தியை எங்குமே எழுதவில்லை!
நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொலையில் கைதான கோபால் கோட்சே, விஷ்ணு கோட்சே,மதன்லால் பாவா போன்றவர்கள் 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியானார்கள்! ஆனால், இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பிறகும் இன்னும் நாம் இவர்கள் விடுதலையை எதிர்ப்பது ஒரு நாகரீக சமூகத்திற்கு அடையாளமல்ல!
நான் அறிந்த வரை விடுதலை புலிகள் எதையும் கமுக்கமாகவே செய்வார்கள்! தங்கள் காரியத்திற்கு பலரையும் பயன்படுத்திச் செல்வார்கள் – எந்த விபரங்களையும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்! ரகசிய இயக்கங்களின் இயல்பே அது தான்! வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால் அது இயக்கமாகட்டும்,தனி நபர்களாகட்டும் நான் சற்றே விலகி எச்சரிக்கையுடன் பழகுவதே வாடிக்கை! அந்த வகையில் தான் நான் ஒரு ஜர்னலிஸ்ட் என்ற அளவோடு என் பழக்கங்களை வைத்துக் கொண்டேன்!
இதில் கைதாகி தண்டிக்கப்பட்ட பலரும் அன்றைய தினம் ஈழ விடுதலைப் போராளிகள் மீதிருந்த அபிமானம் கருதியே அவர்களிடம் பழகியும், உதவியும் வந்தார்கள்! அவர்களின் நோக்கம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதற்காக மிகப் பெரிய விலையை பலரும் கொடுக்க நேர்ந்தது.
இப்போது சிறையில் இருக்கும் எழுவருமே கூட கிட்டதட்ட இந்த வகையில் வருபவர்களே! இவர்கள் கொலைகாரர்களோடு தொடர்பில் இருந்தவர்களேயன்றி, இவர்களே கொலைகாரர்கள் அல்ல! இந்தப் புரிதல் மிக,மிக முக்கியமானது! அந்த தொடர்புக்குத் தான் தேவைக்கும் மிக அதிகமாகவே தண்டிக்கப்பட்டுவிட்டனர்! இதை தமிழகத்தில் உள்ள மக்களும், மாநில கட்சிகள் அனைத்துமே நன்கு உணர்ந்த நிலையில் தான் இவர்கள் விடுதலைக்கு தற்போது ஒருமித்து குரல் கொடுக்கின்றனர்! அதீத தண்டனைக்குப் பிறகான இவர்களின் விடுதலையைக் வேண்டுவது என்பது ராஜிவ் கொலைக்கோ, அவரோடு அங்கு இறந்தவர்கள் சாவுக்கோ எதிரானதல்ல!அதாவது இந்த எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர்களை ராஜிவ்காந்தி கொலையை ஆதரிப்பவர்களாகப் புரிந்து கொள்வது பிழையாகும்!
அந்த மாபெரும் அநீதியை தமிழக மக்களும், தமிழக கட்சிகளும் என்றுமே ஏற்கமாட்டார்கள்! அப்படி ஏற்காதவர்கள் தான் இன்று இவர்கள் விடுதலைக்கும் குரல் கொடுக்கிறார்கள்! ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் எனத் தமிழக அமைச்சரவை 9.9.2018-ல் செய்த பரிந்துரை என்பது சாதரணமானதல்ல!
Also read
மக்கள் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தற்போது உடனடியாக முடிவெடுக்கச் சொல்லி ஆளுநருக்கு அறிவுறுத்தியுள்ளது.அதாவது இவர்களை விடுதலை செய்ய எந்த சட்டத் தடையும் இனி இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது!
இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு மேல் அனுபவித்துவிட்ட இவர்களை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு மேல் அனுபவித்துவிட்ட பின்னரும் அவர்கள் விடுவிக்கப்படாமல் இருப்பது இந்திய நீதித்துறை மீதான தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் என இம்மாதம் 21 ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மத்திய அரசே சொல்லியபடி அந்த காலக்கெடுவும் கடந்துவிட்டது!
இந்த எழுவர் விடுதலையை ஆதரித்தோ, எதிர்த்தோ யாரும் அரசியலாக்க வேண்டாம்! சட்டப்படியே இவர்கள் விடுதலையாவதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது! தாங்கள் தொலைத்த வாழ்க்கையை – இன்னும் எஞ்சியுள்ள குறைந்தபட்ச தங்களின் வாழ்நாளை – அவர்கள் அமைதியாக வாழ்ந்துவிட்டுப் போக வழிவிடுவோம்!
-சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
நண்பர் சாவித்திரி கண்ணனின் பதிவு சிறப்பானது