தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி..?

- சாவித்திரி கண்ணன்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு இறுக்கம் அதிமுகவிற்குள் நிலவுகிறது! பன்னீரின் வெளிப்படைத் தன்மை இல்லாத மறைமுகமான சசிகலா ஆதரவு போக்குகள் ஒருபுறம், சசிகலா தமிழகம் வந்தால் கட்சிக்குள் என்ன நடக்கப் போகிறது..யார் உறுதியுடன், கட்டுக் கோப்புடன் நிற்பார்கள் அல்லது போவார்கள் என்ற குழப்பமான சூழல்! எடப்பாடிக்கா? சசிகலாவிற்கா? யாருக்கு ஆதரவு தருவதன் மூலம் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த முடியும் என்ற கணக்கு அதன் மேலிடத்திற்கு…?

நான்கு வருடம் ஆட்சியை கவிழாமல் காப்பாற்றிவிட்டார் பழனிச்சாமி! ஒரு பக்கம் ஒ.பி.எஸ்சையும், மறுபக்கம் மத்திய ஆட்சியாளர்களையும், மற்றொரு பக்கம் தினகரனையும் சமாளித்தவாறு ஆட்சி நடத்திவிட்டார்!

நான்கு வருடம் தனித்து இயங்கிய தைரியத்தில்- உள்கட்சிக்குள்ளான அதிகார போட்டியையும் ஈடு கொடுத்து, கட்சியையும், ஆட்சியையும் ஒரளவு கட்டுக் கோப்புடன் கொண்டு செலுத்திய நம்பிக்கையில், இனியும் சசிகலா கூட்டத்திற்கு தாழ்பணிந்து,கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்ய வேண்டுமா…? ஜெயலலிதாவையே ஆட்டி வைத்த சசிகலாவிற்கு நாமெல்லாம் எம்மாத்திரம்? ஆகவே, இப்படியே இந்த சுதந்திரத்தை, நிம்மதியை தக்க வைத்துக் கொள்வோமே..’’ என்பது எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாகவுள்ளது!

மத்திய ஆட்சியாளர்களின் மனம் கோணாமல் ஒத்துழைத்து வந்தோமே..என்ற நம்பிக்கையில் டெல்லி சென்று தன் விருப்பத்தை பாஜக தலைவர்களான அமித்ஷாவிடமும், மோடியிடமும் வெளிப்படுத்திவிட்டு, சசிகலாவை இனி அதிமுகவிற்குள் சேர்ப்பதற்கே வாய்ப்பில்லை’’ என துணிவுடன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் தந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

அத்துடன் தன் முழு பலத்தையும் திரட்டி ஊர், ஊராகப் பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டார்! அவருக்கு நல்ல மக்கள் கூட்டமும் சேர்கிறது.

ஆனால், அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஒ.பி.எஸ் இது வரை இதில் தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தாமல் கமுக்கமாக இருந்து வருகிறார்!

”ஆம், என் சகாவான இ.பி.எஸ் சொல்வது சரி தான்! இனி நாங்கள் சசிகலா குடும்பத்திற்கு கொத்தடிமை சேவகம் செய்யத் தயாராயில்லை.ஒற்றுமையாய் இந்தப்படியே இருந்து கட்சியையும்,ஆட்சியையும் நடத்திச் செல்வோம்’’, என லட்சோப லட்சம் அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஒரு சில வார்த்தைகளை உதிர்க்க ஒ.பி.எஸ் தயாரில்லை!

முதலமைச்சருடன் அரசு நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒட்டிக் கொண்டே தன்னையும் முன்னிலை படுத்திக் கொள்ளும் ஒ.பி.எஸ் ஏன் இது வரை கட்சிபிரச்சாரத்திற்கே போகாமல் அமைதி காக்கிறார்…?

அவருக்கு பாஜக மேலிடத்தில் இருந்து சிக்னல் வரவில்லையோ என்னவோ…?

பழனிச்சாமி என்ன தான் பணிந்து போனாலும் தன் கட்சியான அதிமுகவின் தனித்தன்மையையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளார்! அதாவது பன்னீர்செல்வம் போல முழுமையாக தன்னை ஒப்புவித்துக் கொள்வதில் அவருக்கு ஒரு தயக்கம் இருக்கிறது.

பன்னீர் அப்படியல்ல! பணிவு என்றால் கேள்விக்கு இடமில்லாத பணிவு!

இந்த வகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதே பன்னீரை பக்குவமாக பாஜக கையில் எடுத்துக் கொண்டது! இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்து தான் சசிகலா பன்னீரை ஓரம் கட்ட ஆரம்பித்தார்! அவருக்கு மாற்றாக எடப்பாடியை நம்பிக்கைக்கு உரியவராக தேர்ந்தெடுத்தார். பாஜகவை நம்பியதால் சொந்த கட்சியிலேயே தனிமைப்பட வேண்டியதாயிற்று என்று பாஜகவிடம் பன்னீர் புலம்பினார்!

இந்தச் சுழலில் சசிகலாவே முதல்வராக முடிசூட்டிக் கொள்ள தயாராகிறார் என தெரிய வந்ததும், பாஜக பன்னீரைத் துண்டிவிட்டு கட்சியைபிளந்தது! இவர் உண்மையிலேயே தர்யுத்தம் நடத்துவதாக நினைத்து மக்கள் ஆதரவும் கன்னபின்னவென்று சேர்ந்தது! அந்த நேரம் தமிழக மக்களுக்கு சசிகலா ஜெயலலிதாவை மருத்துவமனையில் மர்மமாக கையாண்ட விதத்தில் ஒரு பெரும் கோபம் இருந்தது. சசிகலாவிற்கு எதிரான ஒரு அலை மக்கள் மனங்களில் இழையோடிய அந்த தருணத்தை பாஜக சரியாக அறுவடை செய்யும் வண்ணம் அவரை ஜெயிலுக்கு அனுப்பியது! இருக்கிற குறைந்தபட்ச தருணத்தில் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சித் தலைமையை ஒப்படைத்தார் சசிகலா!

எடப்பாடி இல்லாமல் ஒரு வேளை இந்த தலைமை பன்னீரிடம் இருந்திருந்தால் கட்சியை முழுமையாக பாஜகவிடம் அடகு வைத்திருக்க வாய்ப்புண்டு! தினகரனிடம் ஒப்படைத்திருந்தால் அவருடைய யதேச்சியதிகார மன நிலைக்கு கட்சியும், ஆட்சியும் காணாமல் போயிருக்கும்!

சசிகலா தானே எடப்பாடியை முதல்வராக முன்னிறுத்தினார்! இன்று சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கமாட்டேன் என்று  எடப்பாடி கூறுகிறார் என்றால், அது தான் அரசியலில் அதிகாரம் என்ற போதை ஆட்டுவிக்கும் ஆட்டம் என்றும் கொள்ளலாம்! மன்னார்குடி மாபியாவிடம் மண்டியிடத் தயாரில்லை. மற்றபடி, அவங்களோட மிடாஸ் ஆலைக்கு டாஸ்மாக் ஆர்டர்களை அதிகமாகத் தருவதிலோ,அவங்க கேட்கும் காரியங்களை செய்து கொடுப்[பதிலோ ஆட்சேபணை இல்லை..’’ என்பது தான் எடப்பாடியின் நிலைபாடாக இருக்கிறது என்பதே என் புரிதலாகும்!

ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் சசிகலாவும்,அந்த குடும்பத்தினரும் அரசாங்க விவகாரத்தில் அளவுக்கு மீறி தலையிடுவதாகக் கூறி சசிகலாவை வெளியில் அனுப்பினார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தனி மனுஷியாக வாழ்ந்த ஜெயலலிதா சசிகலாவையே நீண்ட காலம் சார்ந்து வாழ்ந்த நிலையில், அவர் இல்லாமல் இருப்பதை மேனேஜ் பண்ண முடியாமல் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று! தான் சம்பந்தபட்ட வழக்கில் தனக்கு எதிராக சசிகலா போய்விடக் கூடாது என்றும் ஜெயலலிதா பயந்திருப்பார். இந்த நிர்பந்தங்கள் எதுவும் எடப்பாடிக்கு இல்லை! ஆகவே,அவர் சசிகலாவை இணைப்பதன் மூலமாக வரும் ஆபத்தை விடவும் இணைக்க மறுப்பதன் மூலமான பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் என்று தான் தோன்றுகிறது!

ஆனால், அவர் கூடவே இருக்கும் பன்னீர் அப்படி எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்கத் தயாரில்லை என்பது மட்டுமல்ல, சசிகலா என்ற முக்குலத்து சக்தியை மீறி, தன்னை அந்த சமூகத்தில் அவர் நிலை ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை! அந்த எளிய முக்குலத்து சமூக மனிதர்கள் விசுவாசம் கொள்ளத் தக்க அளவுக்கு தன் அதிகாரத்தைக் கொண்டோ,பணபலத்தைக் கொண்டோ எதுவுமே தன் சமூக மக்களுக்கு கூடச் செய்யவில்லை! சசிகலா இல்லாத இந்த நான்காண்டுகளில் அவருக்கான வாய்ப்பை பன்னீர் உணரவில்லை என்பதோடு, மேன்மேலும் சொத்துபணம் சேர்ப்பதிலேயேயும், பாஜகவிற்கு அடியாள் வேலை செய்வதிலுமே தன்னை கரைத்துக் கொண்டார்! அதனால் பாஜக கட்டளை இட்டால் மீண்டும் சசிகலாவிற்கு தாழ் பணிந்து சேவை செய்ய தயார் நிலையில் தன்னை வைத்துள்ளார்!

அதன் வெளிப்பாடே ஒ.பி.எஸ் மகன் பிரதீப் சசிகலாவிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட செயலாகும்! இந்த செயல் பன்னீருக்கு அவமானகரமானதாகும். ஏனென்றால், ஒரிரு நாட்களுக்கு முன்பு தான் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நெல்லை சுப்பிரமணியத்தை அவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், தன் மகன் விஷயத்தில் அவர் அமைதி காக்கிறார்! ஆகவே, அப்பாவின் ஆதரவு தன் செயலுக்கு உண்டு என்ற நம்பிக்கையில் தான் பிரதீப் சசிகலாவிற்கு ஆதரவு காட்டியிருக்க முடியும்! அல்லது தான் காட்ட விரும்பியதை மகனைக் கொண்டு ஒ.பி.எஸ் செய்யவைத்தார் என்று தான் நாம் புரிந்து கொள்ள முடியும்! அதுவும், பன்னீர் மகன் எழுதி இருப்பதை கவனியுங்கள்; ’’அறம் சார்ந்த பணிகளில் சசிகலா கவனம் செலுத்தி, மன நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்’’ என்கிறார் பிரதீப்! ’அறம்’ என்ற வார்த்தை எவ்வளவு மதிப்பிழந்து மலினமாக்கப்படுகிறது…பாருங்கள்!

இவை ஒருபுறமிருக்க, பாஜக என்ன செய்யப் போகிறது என்பதில் தான் எடப்பாடியின் எதிர்காலம் உள்ளது! பாஜகவின் முதல் திட்டப்படி சசிகலாவை தவிர்த்த ஒரு ஆட்சியை பன்னீர் அல்ல, எடப்பாடி தான் சாதித்துக் காட்டினார்! ஆனால், அதற்காக எடப்பாடியை ஏற்க பாஜக தயாரில்லை என்பதே உண்மை! ஏனென்றால், இவர் கூட்டணி ஆட்சிக்கு உடன்பட மறுக்கிறார்! கே.பி.முனுசாமி போன்றவர்களைத் தூண்டிவிட்டு பாஜகவிற்கு எதிராகவும்,திராவிட அரசிலையும் பேச வைக்கிறார்! ஆகவே, அவரை பணிய வைக்க பாஜகவானது சசிகலாவின் ஆட்டத்தை அனுமதித்து வேடிக்கை பார்க்கலாம். அல்லது சசிகலாவை கட்சித் தலைவராக வைத்துக் கொள்ளுங்கள். பன்னீர் முதல்வராகவும், எடப்பாடி துணை முதல்வராகவும் இருந்தால் இன்னும் சவுகரியம் என்றும் நினைக்கலாம்! இதற்கு எடப்பாடி என்ன முடிவெடுப்பாரோ… தெரியவில்லை! பாஜக தமிழகத்தில் காலூன்ற அதிமுகவிற்குள் நடக்கும் அதிகார போட்டி அவர்களை பொறுத்த வரை ஒரு சிறந்த வாய்ப்பு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time