ஒரு காந்தியவாதியாய் இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் உண்மையான மாற்றத்திற்கு அவரை விட்டால் வேறு வழியில்லை. உண்மையில் அவர் ஒரு ஆன்மீக வாதி, இறை நாட்டம் அதிகம் கொண்டவர். ஆனால் இறை காட்சி வேண்டி எந்த கோவில் குளங்களுக்கும், தீர்த்த யாத்திரைக்கும் சென்றவர் அல்ல . இறைவனைத் தேடி இமயம் சென்றவரல்ல, தான் வாழும் மக்களிடையே அவர் இறைவனைக் கண்டார்! அநீதிகளற்ற அனைவருக்குமான பொதுநலனில் இறைவன் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பினார் காந்தி!
அவர் நம்மிடம் கேட்டதெல்லாம் எத்தகைய மாற்றத்தை நாம் வெளியில் காண விரும்புகிறோமோ அதை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்பது தான். அவரை நெருங்கி உள் வாங்குவோர் எல்லோரிடமும் மனசாட்சியாக இருந்து தொந்தரவு செய்வார்.
“மாறு, மாறு; செயல் புரி”
என்ற அவரது குரலை, உண்மையான அக்கறையுடன் அவரை வாசிக்கும் அனைவரும் கேட்கத் தவறி இருக்க மாட்டோம். அதனாலேயே அவரை தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தியவர்கள் கூட சிலர் உண்டு.
மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களிடம் கற்றும், கற்பித்தும் அவர்களுக்காக வாழ்வதே அவரது வேள்வி. மக்கள் வாழும் சமூகமே அவரது வேள்விச் சாலை! அதில் தன்னையே ஆகுதியாக அவர் அர்ப்பணித்தார். அனைத்து மதங்களின் புனித நூல்களையும் அவர் நன்கு கற்றார் அவற்றின் வழி காட்டுதல்களை தன் வாழ்வில் நடைமுறைப் படுத்துவதில் பெரும் வெற்றியும் கண்டார். ஆனால், எந்த புனித நூலுக்கோ, மதத்திற்கோ தன் பகுத்தறிவை அவர் விலையாக கொடுத்தது இல்லை.
எல்லோரும் தங்கள் தரப்பு வணங்கும் இறைவன் மட்டுமே உண்மையான இறைவன் என்றும் அவரை அடைய தங்களுடைய மதம் கூறும் மார்க்கமே உண்மையான மார்க்கம் என்றும் ஒருவரை ஒருவர் சண்டை இடும் போது, “கடவுளே உண்மை” என்ற கூற்றிற்கு பதிலாக “உண்மையே கடவுள்” அனைத்திற்கும் உண்மையை உரைகல்லாக ஆக்கி ஒரு ஆன்மீக புரட்சியையே காந்தியடிகள் ஏற்படுத்தினார்.
மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரபல கன்னட எழுத்தாளர் கெளரி லங்கேஷ் அவர்களின் பிறந்த தினம் நேற்று (29.01.2021). அவரை படுகொலை செய்த அந்த படு பாதக செயலை நினைக்கும் போது, அத்தகைய கொடிய செயலை செய்தவர்கள் அரசியல் வீரியம் பெற்று அந்த அச்சுறுத்தலை இன்னும் கொஞ்சமும் அச்சம் இல்லாமல் பரப்புகின்ற இந்த நேரத்தில் “மாற்றுத் தரப்பு என்பது எதிரி தரப்பு அல்ல, நம்முடன் கருத்து மாறுபாடு கொண்ட நட்பே அது” என்ற காந்தியின் கருத்தை, அவரது வழி முறையை எவ்வளவு ஆழமாக இன்னும் வீரியத்துடன்
எல்லோரும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று உணர முடிகிறது.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஆரம்ப கால வருடங்களில் சாமானிய இந்திய மக்களிடம் அவரை கொண்டு சென்ற போராட்டங்கள் இரண்டு. அதில் ஒன்று அகமதாபாத் மில் தொழிலாளிகள் கூலி உயர்வுக்காக 1917 ஆம் ஆண்டு அவர் நடத்திய போராட்டமும், பீகாரில் சம்பாரண் பகுதியில் “தீன் கதியா” என்ற இண்டிகா பயிரிடும் ஒப்பந்த பண்ணை முறையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அந்த ஒப்பந்த பண்ணை முறை கொடுமையில் இருந்து மீட்க 1917 ஆம் ஆண்டு அவர் நடத்திய சம்பாரண் சத்தியாகிரகப் போராட்டமும் தான்.
இன்றும், சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பறிக்கப்பட்டு அதற்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழலில் அப்போராட்டங்களை வழி நடத்தும் உண்மையான உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருந்து அவர் தன் தேவையை நமக்கு நன்கு உணர்த்தி வருகிறார்.
விடுதலைக்குப் பின்னரும் இந்தியாவில் ஒடுக்கு முறைகளும், சுரண்டல்களும் நிச்சயம் இருக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். சுதந்திர இந்தியாவில் பூரண மது விலக்கை கொண்டு வருவதும், உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்பதை சட்டப்படியாக உறுதி செய்வதையும், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்கள் அதிகாரத்தின் உச்சத்திற்கு வருவதை உறுதி செய்வதையும், அதிகார பரவலையும் அதன் மூலம் நிஜமான கிராம சுய ராஜ்ஜியத்தையும் நோக்கி சுதந்திர இந்தியாவை நகர்த்துவதை அவர் தன் பணியாக திட்டமிட்டிருந்தார். அவரது அக்கனவுகள் இன்னமும் நிறைவேறாதவையாகவே உள்ளன என்பதை நாம் அறிவோம்.
Also read
அனைத்து விதமான அடிப்படை வாதங்களும் வலுப்பெற்று வெறுப்பும் வன்முறையும் அச்சுறுத்தும் இவ்வேளையில், அவரது செயல் திட்டங்களை நம் திட்டங்களாக அவரவர் துறையில் சிரம் மேற்கொண்டு செயல் புரிவதே நாம் அவருக்கு செய்யும் கைம்மாறு மட்டும் அல்ல நம் எதிர்கால வாழ்விற்கான வழியாகும்.
Leave a Reply