அகிம்சை போராட்டத்தை அசிங்கபடுத்தும் நரித்தனம்..!

-அறச்சலூர் செல்வம்

முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது காந்தி நினைக்கப்பட வேண்டியவராகிறார்.

விவசாயிகளை – மக்களை – அடிமைப்படுத்தும் மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கேட்டு நடக்கும் இந்தப் போராட்டம் காந்தியைக் கொண்டாடும் ஒன்றாகும்!

தில்லியின் எல்லையில் நடக்கும் போராட்டம் உலகம் கண்டிராத ஒன்றாக உள்ளது.

இது எந்த ஒற்றைத் தலைமையின் கீழும் நடக்கவில்லை!

போராட்டத்தில் சிறிதும் வன்முறை இல்லை.

ஜன 26 ல் நடந்த வன்முறை – போராட்டத்தின் உறுதி கண்டு பயந்த அரசு செய்வதறியாது – போராட்டத்தை வன்முறையாளர்களின் போராட்டம் என்று  மக்களிடம் சித்தரிக்க ஆட்சியாளர்களே நடத்தியதாகும்.

இது அரசாங்கத்தை எதிர்த்து நடக்கும் போராட்டம் என்றே நம் முன் சித்தரிக்கப்படுகிறது.

எந்த ஒரு இடத்திலாவது அப்படியான ஒரு வார்த்தை வெளிப்படவேயில்லை.

அரசாங்கம் கொண்டு வந்த மூன்று சட்டங்களை அரசே திரும்பப் பெற வேண்டும். கோரிக்கை இவ்வளவு தான். கூடுதலாக வைக்கப்பட்ட கோரிக்கை, தங்களின் வாழ்வு  மரியாதைக்குரிய ஒன்றாக இருக்க குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்ட பூர்வமானதாக்க வேண்டும் என்பதாகும்!

இந்த இரண்டே இரண்டு கோரிக்கைகள் தான் அரசின் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது.

அரசிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது தான் போராட்டமே ஒழிய அரசை வெல்ல வேண்டும் என்ற போராட்டமல்ல, இது!

ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிரானதாக நடத்திக் கொண்டிருப்பதாக அரசால் சித்தரிக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் ஆரம்பம் முதலே அரசை எதிர்த்தல்ல. அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களை ஏற்க முடியாது என்று தான் போராட்டம்.

யார், யாரை வெற்றிக் கொள்வது, தோற்கடிக்கச் செய்வது?

அரசை மக்களா?

மக்களை அரசா?

மக்களும் அரசும் வேறு வேறா என்ன?

நாம் தானே அரசு…

நான் தானே அரசின் பகுதி.

இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா.

இந்த இரு பக்கங்களும் ஒன்றையொன்று எப்போதும் பார்ப்பதில்லை. ஆனால் நாணயத்தின் பக்கவாட்டுப் பகுதி இரண்டோடும் உறவாடிக் கொண்டே இருக்கிறது.

ஜனநாயகத்தில் இந்த உறவாடல் தான் முக்கியமான ஒன்று. காந்தியம் இந்த உறவாடலை, உரையாடலை தொடர்ந்து இயக்கும் வகையாகவே எதிர் தரப்பின் மனசாட்சியைத் தொடும் வழியைக் கையாண்டது.

காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டங்களின் முறைகள் நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. இந்திய காந்தி புடம் போடப்பட்டது அங்கு தான். தமது சத்தியாகிரக வழிகளை செம்மைப்படுத்திக் கொண்டதும் அங்கு தான்.

தென்னாப்பிரிக்கவில் காந்தி தீவிரமாகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது இந்தியர்களையும் கருப்பினத்தவர்களையும் அடிமைகள் போல வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்டிருந்த தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்கும், போயர்களுக்கும் இடையே போர் வெடித்தது.

எங்களை அடிமையாக வைத்திருக்க ஆசைப்படும் இரு தரப்பும் மோதிக் கொள்கிறார்கள்..ஆகா மோதிக் கொள்ளட்டும் என்று காந்தி மகிழ்ந்திருக்கவில்லை. தனது போராட்டத்தை நிறுத்தி விட்டு தொண்டர்களை செவிலியர் அமைப்பாக மாற்றி போரில் அடிபட்ட இரு தரப்பு வீரர்களையும் மருத்துவ உதவிக்கு தூக்கிச் செல்லும் அணியாக மாற்றினார்!

எப்போதுமே அரசாங்கத்திற்கு தனது போராட்டத்தை மட்டுமல்ல, போராட்ட முறையையும், வழிகளையுமே கூட வெளிப்படையாக தெரிவித்தே நடத்தினார்,காந்தி!

அதற்கு முக்கிய காரணம் அரசும், நானும் வேறல்ல என்பது.

காந்தியைக் கொண்டாடும் நாம் காந்தியை சிறு சிறு துண்டுகளாகவே பார்க்கிறோம். இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளாக அரசரையே தனது சமூக நிர்வாகத்தின் தலைவராகக் கொண்டாடிய சமூகத்திற்கு முதன் முறையாக அரசியல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே காந்தி தான். இந்திய சமூகத்தை அரசியல் மயப்படுத்தியவர் காந்தி. அரசியல் மயப்பட்ட இந்திய சமூகமும்,இந்திய ஆட்சியாளர்களும் ஜனநாயகமயப்படவேயில்லை. இந்திய சமூகத்திற்கு ஜனநாயகம் மிகப் புதிய ஒன்று.

குடும்பம் தொடங்கி அரசு வரை நாம் ஜனநாயகமயப்படவே இல்லை. தன்னிடம் வேண்டுகோள் வைத்து போராடும் மக்களை,எளிய விவசாயிகளை அரசு எதிரியாக சித்தரிக்கப் பார்க்கிறது!

காந்தியின் பார்வையில், ‘நம்மை நாமே ஆளத் தெரிந்து கொள்வதே சுயராஜ்யம்….சுயராஜ்யம் என்பது ஒரு கனவைப் போன்றது என்று நினைக்க வேண்டாம். சும்மா உட்கார்ந்து இருப்பதால் அது வரும் என்பதல்ல. அதை அடைந்து விட்ட பிறகு மற்றவர்களும் அப்படியே செய்யும்படி நம் ஆயுள் இறுதிவரை பாடுபட வேண்டும் என்கிறார் காந்தி தனது இந்திய சுயராஜ்யம் நூலில்.

இந்திய சுயராஜ்யம் என்ற இந்தச் சிறு நூல் தான் காந்தி எத்தகைய மனிதர், எத்தகைய பார்வை வைத்திருந்தார் என்பதைக் காட்டும் நூல்.

அரசு என்பதே நம்மால் நிர்வகிப்பட வேண்டிய ஒன்று. அதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல், தகுதி படுத்திக் கொண்டவர்களை அடையாளம் கண்டு – அவர்களை அந்த நிர்வாகத்திற்கு அனுப்பாமல் – தவறு செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போது தில்லியில் நடக்கும் போராட்டத்தை உலகு கவனித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் போராட்டத்தின் முறை.குழந்தைகளும்,பெண்களும் கூட இந்த அகிம்சை களத்தில் உள்ளனர்!

காந்தியின் அணுகுமுறை அரசாங்கத்தை நடத்துபவர்களின் மனதில் புரிதலை, மாற்றத்தை ஏற்படுத்துவது. மனசாட்சி என்ற ஒன்று இல்லாத மனிதன் கிடையாது. அவனது மனசாட்சியைத் தட்டி எழுப்புவதும், உலுக்குவதும் தான் அவரது அணுகு முறை.

எதிராளிக்கு சிரமத்தைத் தராத, வலியைத் தராத போராட்டம் காந்தியுடையது.  தன்னிலும் அதிக பலம் பொருந்திய எதிராளியான இந்திய அரசை – ஆள்பவர்களை – எதிர் கொள்ள எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் மிக அற்பமான ஒன்று.

நாங்கள் உங்களது நிர்வாகத்தை எந்த விதத்திலும் தொந்திரவு செய்ய மாட்டோம். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கும் எதையும் செய்ய மாட்டோம். நாங்கள் இங்கேயே இப்படியே காத்திருக்கிறோம்.  நீங்கள் உங்களது முடிவை மாற்றி அமைக்கும் வரை காத்திருப்போம். இதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவே இல்லை.

எவ்வளவு குளிர், எவ்வளவு பனி இருந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு காத்திருக்கிறோம் என்று காத்திருக்கிறார்கள். எதிராளியின் மனசாட்சியை உலுக்கவே இத்தனை கொடும் சிரமங்களை ஏற்கிறார்கள். தன்னை வறுத்திக் கொள்கிறார்கள். இள வயதினர்கள் தன்னை வலிந்து வருத்திக் கொள்ளும் இத்தகைய போராட்டத்தை தங்களின் வாழ்நாளில் முதன்முதலாகவே சந்திக்கின்றனர். காந்தியின் போராட்ட முறையை முதன்முறையாக காண்கின்றனர்.

அங்கே இருக்கும் ஒவ்வொரு விவசாயியும், அவர்களுக்கு உதவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காந்தியாகவே அங்கே இருக்கின்றனர்.

நம் எல்லோருக்குள்ளும் ஒரு காந்தி இருந்து கொண்டே இருக்கிறார். காந்தி என்பவர் ஒரு மனிதாராக அல்ல. மனித தன்மைகளின் அடையாளமாக, மனித அறத்தின் அடையாளமாக இந்தக் காந்தி இருக்கிறார்.

தில்லியின் எல்லையில் இருக்கும் விவசாயிகளின் போராட்டம் முற்றாக காந்தியை உள்வாங்கிய போராட்டம்.

இங்கே தில்லி போராட்டத்தை வெகு தொலைவில் இருந்து வியப்போடு பார்க்கும் ஒவ்வொருவரும் தன்னையும் அந்தக் காந்தியர்களாக நினைத்துக் கொள்வது மிக அவசியம்.

இங்கிலாந்து அரசு இந்திய அரசாட்சியை விட்டு விட்டுச் சென்றதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் பல்லாயிரம் காந்திகள் உருவானதேயாகும். துரதிருஷ்டவசமாக சுதந்திரம் வாங்கியதும் ஒவ்வொருவரும் நமக்குள் இருந்த காந்தியை மனதின் அடி ஆழத்தில் பத்திரமாக புதைத்து வைத்து விட்டோம்.

நமக்குள் அடி ஆழத்தில் இருக்கும் காந்தியை வெளியே கொண்டு வரல் தான் தேவை.

நமக்குள் இருக்கும் காந்தியை தேடிப் பிடித்து நம் ஒவ்வொருவரையும் காந்தியாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்று உலகிற்குக் காட்டுகிறது தில்லி முற்றுகை.

காந்தி என்ற மனிதன் தான் மறைந்தார். ஆனால் காந்தி என்ற மனிதர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

சமூகம் நன்றாக இருக்க வேண்டும். சக மனிதன் துன்புறக்கூடாது என்று உணர்வு தான் காந்தியைப் புரிந்து கொள்வதற்கான தொடக்கம். நான் இந்தப் புரிதலின் மூலமே அறிந்து கொள்கிறேன் காந்தியை!

 

தன்னை வறுத்திக் கொள்வதை விட மிகப் பெரிய வீரம் ஏதுமில்லை. தங்களை வருத்திக் கொண்ட இந்த வீரமும் இந்திய அரசை நிர்வகிப்பவர்களை எதிர்க் கொண்டிருக்கும் விதத்தையும் தான் உலக மக்கள் வியப்போடு கவனிக்கிறார்கள். ஆனால்,அப்படிப்பட்ட அகிம்சை போராட்டத்தை நரித் தந்திரத்துடன் அசிங்கப்படுத்த காய் நகர்த்துகிறது பாஜக அரசு!

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் காந்தியை அடையாளம் கண்டு கொண்டது தான் இந்தப் போராட்டத்தின் மகத்தான மக்கள் ஆதரவுக்கு காரணம்! அதை சீர்குலைக்கும் வண்ணம் போலீசாரின் குடும்பத்தினரை தூண்டிவிட்டு அரசு போராட வைப்பதும்,போராட்டத்திற்கு பல வகையிலும் தொடர்ந்து உதவி வந்த மக்களை போராட்டக்கார்களுக்கு எதிராக திருப்பிவிட்டிருப்பதும் சிறுமையிலும்,சிறுமை! இது அகிம்சை மொழி தெரியாத அரசாங்கம் மட்டுமல்ல, போராடும் மக்களும் தம் குடிகளே என்பதை உணர மறுக்கும் அரசாகவும் உள்ளது என்பது தான் கவலையளிக்கிறது!

அன்று காந்தியைக் கொன்றார்கள்…!

இன்று காந்தியத்தை கொல்லத் துடிக்கிறார்கள்…முடியுமா..?

கட்டுரையாளர் ; அறச்சலூர் செல்வம்,

தமிழக இயற்கை விவசாய முன்னோடி,

நம்வாழ்வாரின் அணுக்க நண்பர்,

பொது நலன் சார்ந்த களப் பணியாளர் ,

காந்தியப் பற்றாளர்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time