மூட அரசியலின் முதலீடுகளே சமாதிகள்,கோயில்கள்!

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவில் வேறெங்கும் இது போன்ற சமாதி அரசியல் மற்றும் நிகழ்கால தலைவர்களுக்கு கோயில் கட்டும் அரசியல் முன்னெடுக்கப்பட்டதாக முன் உதாரணம் இல்லை! ஓட்டு அரசியல் எவ்வளவு பித்தலாட்டத்துடன் மக்களை மூடத் திசையில் கொண்டு செலுத்துக்கிறது என்பதற்கு தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகளே சாட்சி! மறைந்த தலைவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக – தெய்வத்திற்கு இணையாக – கட்டமைக்கும் ஓட்டுப் பொறுக்கி  அரசியலுக்கு மக்களின் வரிப்பணமும், ஊழல் செய்து சேர்த்து வைத்த கருப்புப் பணமும் முதலீடாக்கப்படுகின்றன…!

அதிகாரமும், பணமும், இருப்பதால் வலுத்தவர் செய்வதெல்லாம் நியாயமாகிவிடாது..!

கண்ணதாசன் ஒரு கவிதையில் சொன்னது போல, உள்ளவன் சொல்வதெல்லாம் வேதமாகிவிடுகிறது இந்த மூட மண்ணிலே!

கன்று தான் சிங்கம் என்பான்!

கரடி தான் கலைமான் என்பான்!

பன்றி தான் யானை என்பான்!

பருந்து தான் மஞ்ஞை என்பான்!

அன்றிலே காக்கை என்பான்

‘ஆம்’ என்பார் சபையில் உள்ளோர்!

கல்வி,அறிவு வளராத காலகட்டங்களில், தகவல் தொழில் நுட்பம் மக்கள் வசம் இல்லாத காலட்டங்களில் இப்படியெல்லாம் கோயில்கள், கட்டியிருந்தால் கூட ஒரளவு நாம் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்! ஆனால்,இப்போதும் எப்படி இவை சாத்தியப்படுகின்றன!

எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் எப்படிப்பட்டவர்கள் என்பது மக்களுக்கு தெரியாததல்ல! சராசரி மனிதனுக்குரிய எல்லாவிதமான பலம்,பலவீனத்துடன் நம் காலத்தில் வாழ்ந்தவர்களே! அப்படிப்பட்டவர்களை பொதுமக்களின் வழிபாட்டுக்குரியவர்களாக கட்டமைப்பது,கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

அதுவும் கல்வி அறிவற்ற ஏதோ ஒரு பாமரன் தன் அளவுக்கு ஏதோ செய்தான் என்ற அளவில் இது இல்லை! ஒரு அமைச்சரே முன்னின்று இந்தக் கோயில் கட்டுகிறார்! அதை முதல்வரும்,துணை முதல்வரும் சென்று திறக்கிறார்கள்! கையில் வேல் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள்! நாளை முளைப்பாறி எடுப்பது,காவடி தூக்குவது எல்லாம் நடக்குமோ தெரியவில்லை! நாட்டு மக்களை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்க இப்படியும் ஒரு வழியா?

ஆனானப்பட்ட மகாத்மா காந்தி என்ற புனிதருக்கே கோயில்கள் இல்லை! காந்தி, தான் உயிரோடு இருந்த காலத்திலேயே தன்னை கடவுளை போல வணங்கக் கூடாது! நான் சாதாரண மனிதப் பிறவி தான் என தெளிவுபடுத்திவிட்டார்!

ஏகப்பட்ட கடவுள் வேசம் போட்டு தன்னை ராம அவதாரமாகவும்,கிருஷண அவதாரமாகவும் மக்களை வணங்க வைத்த நடிகர் ராமாராவும் ஆந்திர முதலமைச்சராக இருந்தவர் தான்.அவருக்கு ஆந்திராவில் கோவில் கட்டிவிடவில்லை!

இதைக் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டிய ஊடகங்கள் ஊமையாகிப் போயின! அரசு அள்ளித் தரும் விளம்பரப் பணம் அவர்கள் கைகளையும்,வாயையும் கட்டிப் போட்டுவிடுகிறது!

எவ்வளவோ விஷயங்களில் அதிமுக அரசை தன் இஷ்டத்திற்கு இணங்க வைக்கும் மத்திய பாஜக அரசு, இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது! ஒரு வேளை அவர்கள் விரும்பிய ஆன்மீக அரசியல் இது தானோ..? ஜெயலலிதா சமாதியில் ஒ.பி.எஸ்சை தியானம் செய்ய அனுப்பி வைத்தது பாஜக தானே!

ஜெயலலிதா நினைவு இல்லத்தில், மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளனவாம். அதில், 8,376 புத்தகங்கள், 394 நினைவு பொருட்கள், 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகள், 601 கிலோ 424 கிராம் கொண்ட 867 வெள்ளிப் பொருட்கள், 11 டி.வி., 10 பிரிட்ஜ், 38 ஏ.சி. எந்திரங்கள், 556 மேஜை, நாற்காலி போன்ற தளவாடங்கள், 6,514 சமையல் பொருட்கள், 12 சமையல் ரேக்குகள் மற்றும் தளவாடங்கள், 1,055 காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களாம்!

15 பூஜை உபகரணங்கள், 10 ஆயிரத்து 438 உடைகள், துண்டு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, செருப்புகள். 29 போன்கள் மற்றும் செல்போன்கள், 221 சமையலறை எலக்ட்ரானிக் சாதனங்கள், 251 எலக்ட்ரானிக் பொருட்கள், 653 கோர்ட்டு ஆவணம், உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், 65 சூட்கேஸ், 108 அழகுசாதன பொருட்கள், 6 கடிகாரங்கள் போன்றவையாம்! இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து ஆகப் போவதென்ன..?

இத்துடன் ஜெயலலிதா வீட்டில் முன்பு ரெய்டு நடத்திய போது ஆயிரக்கணகான பட்டுச் சேலைகள், பிரமிக்கதக்க அளவில் தங்க மற்றும் வைர நகைகள் நூற்றுக்கணக்கான செருப்புகள் உள்ளிட்டவை மோசடி செய்து சேர்க்கபட்டவை என்று எடுக்கப்பட்டதே…அதையும் காட்சிக்கு வைப்பார்களா..?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்கள் ஒரு மர்ம மாளிகையாகத் தான் ஜெயலலிதா வீட்டை உணர்ந்துள்ளனர்! அது ஜெயலலிதா வீடாக மட்டுமல்ல, மன்னார்குடி மாபியா கும்பலின் புகலிடமாக அறியப்பட்ட இடமும் கூட!

இப்படிப்பட்ட இடத்தை நினைவு இல்லமாக்கியதன் மூலம் தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் சொல்லும் செய்தி தான் என்ன?

ஏற்கனவே ஜெயலலிதா அடித்த கொள்ளைகள் போதாது என்று அந்த வீட்டை அரசு 62 கோடி கொடுத்து வாங்கியுள்ளது! ஜெயலலிதா கட்டாமல் விட்ட வரிபாக்கி 36.9 கோடி அரசால் செலுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஜெயலலிதாவின் வாரிசுகள் கைகளில் அந்த வீடு சென்றால்,அதை சிறையில் இருந்து வரும் சசிகலா எப்படியாவது பேரம் பேசி வாங்கிவிடுவார்! அதன் மூலம் தானே ஜெயலலிதாவின் தொடர்ச்சி என நிலை நிறுத்திக் கொள்வார் என்ற பயம் தான்!

ஊரையடித்து உலையில் போட்டு ஊழல் செய்த ஜெயலலிதாவிற்கு 80 கோடி செலவில் நினைவு மண்டபமாம்! இன்னும் சில வருடங்கள் கழித்து சசிகலாவிற்கும் பக்கத்தில் ஒரு மண்டபம் எழுப்புவார்களோ..என்னவோ…?

இந்த நாட்டின் மாபெரும் தியாகி, உத்தமத் தலைவர் வ.உ.சிதம்பரனாருக்கு கூட இப்படி பிரம்மாண்ட நினைவு மண்டபம் கிடையாது!

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், கருணாநிதி யாருமே வரலாற்று நாயகர்கள் அல்ல! வெறும் ஆட்சியாளர்கள் அவ்வளவே! இவர்கள் யாரையுமே பின்பற்றத்தக்க ஒரு அரசியலுக்கு முன் உதாரணமாக காட்ட முடியாது!

பகுத்தறிவு அரசியல் வழிவந்த இயக்கங்கள்,பாதை மாறி பயணிக்கின்றன! எதற்கு இப்படி சமாதி அரசியல் செய்கிறீர்கள்? மக்கள் கூட்டம் சாரி,சாரியாக இந்த சமாதிகளுக்கு வந்து செல்வது ஒரு கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது ! காலப் போக்கில் இவை எந்த மாதிரி பரிணாம வளர்ச்சி பெற்று எப்படி வழிபாட்டுத் தளங்களாக மாறுமோ…? நினைத்தாலே திகிலாக உள்ளது!

கருணாநிதி சமாதி தினசரி பூமாலை அலங்கரிக்கப்பட்டு, அங்கு முரசொலி பத்திரிக்கை கொண்டு வந்து வைக்கப்படுகிறது! இது என்ன மாதிரியான முன் உதாரணம்? இன்னும் சில நாட்களில் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைக்கும் சடங்குகளும் நடக்குமா..?

கருணாநிதியை கண்ணியமான வகையில் அவர் கூறிச் சென்ற கருத்துக்களின் வழியே நினவு கூர்வதே பகுத்தறிவுக்குரியதாக இருக்க முடியும்!

திராவிட இயக்கத்தின் வரலாற்று நாயகர்கள் என்றால், அது இருவருக்கு மட்டுமே பொருந்தும்!

ஒருவர் பெரியார், மற்றொருவர் அறிஞர் அண்ணா!

பெரியார் மாபெரும் சமூக புரட்சியாளர்! பல நூற்றாண்டுகளுக்கு நன்றியோடு நினைவு கூரப்படுவார்!

அண்ணா சாமானிய மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதற்கான பாதை சமைத்தவர்! உண்மையான ஜனநாயக அரசியலை கட்டமைத்து காட்டியவர் அவர் தான்!

இவர்களையும் கூட காட்சிப் பொருளாக மாற்றும் அரசியல் அவலத்திற்குரியது! இவர்களை அவர்களின் செயல்கள்,கருத்துகள் வாயிலாக நினைவு கூர்வதும் பின்பற்றுவதுமே செய்ய வேண்டியதாகும்!

இந்த மாதிரி பாமர்களை ஏமாற்றும் உணர்ச்சி அரசியலுக்கு, அற்பத்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! முளையிலேயே இதை கிள்ளி எறியாவிட்டால், ஊருக்கு, ஊர் சமாதி அரசியலும்,கோயில் கட்டும் அரசியலும் தலை தூக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time