அஸ்த்தமனத்தை நோக்கி தேமுதிக..!

-சாவித்திரி கண்ணன்

‘மூட நம்பிக்கைகளின் முழு வடிவம், குடும்ப ஆதிக்கம், குழப்பம், கோமாளித்தனம்..ஆகியவற்றின் மொத்தக் கலவையாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என 2005 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட போது நான் எழுதினேன்!

ஏனென்றால்,குனியமுத்தூர் சோதிடர் பாலசுப்பிரமணியம் தேதி குறித்துக் கொடுக்க, தன்னுடைய ஆன்மீக குரு சக்திபாபாஜியை சாட்சியாக வைத்துக் கொண்டு தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார்! அவர் ராசி எண் ஐந்து என்பதால் கட்சி ஆரம்பித்த நேரம்,கட்சிக் கொடியின் உயரம்,அப்போது பறக்கவிட்ட பறவைகளின் எண்ணிக்கை..என அனைத்தும் ஐந்தாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்!

ஒன்றுக்கொன்று முரண்பாடான தேசியம்,திராவிடம் இரண்டையுமே கட்சிப் பெயராக்கிய கோமாளித்தனம் போதாது என்று அதில் முற்போக்கு என்று தனக்கு முற்றிலும் பொருந்தாத வார்த்தையையும் கட்சிப் பெயரில் இணைத்தார்! அவர் கட்சி தொடங்கிய போது அவருக்கு வாழ்த்து சொன்ன ஒரே கட்சி பாஜக தான்!

”பரவாயில்லையே பாஜக விஜயகாந்தை சரியாக மோப்பம் பிடித்துவிட்டதே…!’’ என்றும் தோன்றியது!

அரசியல் குறித்த எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல், ஆங்கிலேயர்களால் தான் இந்தியாவில் சாதி,மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன..என்றெல்லாம் உளறிக் கொட்டிய போதும்..ஆரம்ப காலத்தில் அவரது வளர்ச்சி அபரிமிதமாகத் தான் இருந்தது!

சினிமா தந்த பிரபலம், அவர் செய்த தான தர்மங்கள்,அவருக்கேயுரிய அசாத்தியமான தைரிய குணம்,உற்ற நண்பர்களின் சேர்க்கை ஆகியவை அவரது அரசியல் வெற்றிகளுக்கு அடித்தளமாகின! மாணவ பருவத்திலேயே அவர் இந்தி போராட்டங்களில் கலந்து கொண்டவர், தமிழ் மீதான பற்றுள்ளவர்,பாமகவின் சாதி அரசியலை ஆரம்பம் முதலே எதிர்த்தவர்..என்ற தோற்றங்கள் அவருக்கு இருந்தன!

கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய துணிச்சலும்,கடும் பிரச்சாரங்களும் அவருக்கு 2006 தேர்தலில் 8% சதவிகித வாக்குகளை பெற்றுத் தந்தன! அடுத்து வந்த(2009) நாடாளுமன்ற தேர்தலோ 10.4% வாக்குகளை தந்தன!

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல எந்த அரசியல் தெளிவுமில்லாத நிலையில் தனக்கு யார் எதிரி? யார் நண்பன் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியாமல் அவர் பயணம் தொடர்ந்தது!

விஜயகாந்தின் வளர்ச்சியை ஏற்கமுடியாமல், அவரை அவ்வப்போது கிண்டலடித்து துக்ளக்கில் எழுதி வந்தார் சோ! ஆனால், 2011 தேர்தலில் ஜெயலலிதாவிற்கான வெற்றிவாய்ப்பு சந்தேகமாக இருந்ததை உணர்ந்த சோ எப்படியும் ஒரு வலுவான கூட்டணி இருந்தால் தான் திமுகவை வீழ்த்தி, அதிமுக வரமுடியும் என கணித்தார்! அதிமுகவிற்கு பலம் சேர்க்க அவர் தான் விஜயகாந்த் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார்!

சோ சொல்வது மனதிற்கு சரியாகப் பட்டாலும் ஜெயலலிதாவின் ஈகோ அதற்கு தடையாக இருந்தது. ஜெயலலிதா,விஜயகாந்த் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர நம்பிக்கையின்மையும் தடையாக இருந்தது! ஆகவே கம்பி மீது நடப்பது போல, அவர் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்தினார்! இடையில் முறிந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்த போதும் சற்றும் தளராமல் ஈகோவை தூக்கி எறிந்து இருவரிடமும் இறங்கி சென்று, அவர்களின் உளவியல்களை உணர்ந்து வார்த்தைகளைப் பேசி நம்பிக்கையை விதைத்து,கவனமாக இருவரையும் இணைத்தார்! இது தொடர்பாக தன் மீது விளம்பர வெளிச்சம் விழாதவாறும் பார்த்துக் கொண்டார் சோ!

இது எனக்கு தெரிய வந்த போது எனக்குத் தோன்றியது, ‘விஜயகாந்தின் வீழ்ச்சியை சோ தொடங்கி வைத்துவிட்டார்’ என்பது தான்!

கட்சி தொடங்கப்பட்ட ஆறே ஆண்டில் 29 எம்.எல்.ஏக்கள்,எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து என்பது உடனடி ஆதாயமானது. ஆனால், இவர் தான் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற வளர்ச்சி தடைபட்டதோடு, அவரது வாக்குவங்கியும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது!

அரசியல் அனுபவமின்மை, அதீத கோப உணர்ச்சி ஆகிவற்றொடு குடும்ப உறவுகள் தலையீடும் சேர்ந்ததால் தன் கட்சி எம்.எல்.ஏ.க்களான மு.அருண் சுப்பிரமணியன், செ.அருண்பாண்டியன், ஆர்.சாந்தி, ஆர்.சுந்தரராஜன், டி.சுரேஷ்குமார்,க.தமிழழகன், க.பாண்டியராஜன், சி.மைக்கேல் ராயப்பன் ஆகிய எட்டு பேரை அதிமுகவிடம் பறி கொடுத்தார்! அது போல மூத்த தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரனும் அவரிடமிருந்து விலகினார்!

2014 ல் அவர் பாஜக அணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்து பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பிரேமலதா மாறிப்போனார்! தேர்தல் என்றால், பெரிய தொகை கிடைக்கும் என்ற ஆசை வந்துவிட்டது! மோடியை பெரியாருக்கு இணையாக உருவகப்படுத்துமளவுக்கு விஜயகாந்தை பிரேமலதா மாற்றிவிட்டார்!

2016ல் தேமுதிகவானது திமுக அணிக்கு வந்திருந்தால் தேர்தல் முடிவுகளே மாறியிருக்கும்! அதிமுக-தேதிமுக கூட்டணிக்கு அமைந்தது போல ஒரு இணக்கமான இடைநிலை தரகர் அமையாமல் போனது! ஸ்டாலினுக்கு விஜயகாந்தை ஏற்க முடியவில்லை,விஜயகாந்துக்கு ஸ்டாலின் யதேச்சதிகாரியாகத் தெரிந்தார்! விளைவு ஜெயலலிதாவிற்கு ஜாக்பாட் ஆனது! அதாவது, விஜயகாந்த் தன்னை அழித்துக் தன் அரசியல் எதிரிக்கு கொண்டு இரு முறை முதல்வராகத் துணை போனார்! விஜயகாந்த் திமுக பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டதில் பாஜகவின் பங்கு மிக அதிகம்! அதற்குத் தான் ஸ்லீப்பர் செல்லாக பிரேமலதா இருக்கின்றாரே!

மக்கள் நலக் கூட்டணி என்ற வலையில் பாஜகவின் தூண்டுதலால் விஜயகாந்த் விழுந்த போது கட்சிக்குள் கொஞ்ச நஞ்சம் இருந்த வலுவான நிர்வாகிகளான சந்திரக்குமார், பார்த்தீபன்..உள்ளிட்ட பலரை இழந்தார்! அவரது வாக்கு வங்கி 2.4% சதவிகிதமானது! 2019லிலும் அது தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை கணிக்கும் திராணியில்லாத அளவுக்கு பாஜகவின் பாசவலையில் சிக்கியது! அது மேலும் வாக்கு வங்கியை சரித்துவிட்டது!

தேமுதிகவை பொறுத்த வரை அதற்கு திமுகவின் கதவு எப்போதோ சாத்தப்பட்டுவிட்டது! அதிமுகவைவிட்டால் நாதியில்லை! ஆனால், வாய்க் கொழுப்பும் அதிகமாகவுள்ளது. ஆசைகளும் அதிகமாக உள்ளது! எடப்பாடியை விமர்சிப்பது,சசிகலாவை வரவேற்றுப் பேசுவது…ஆகிய சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை செய்துவிட்டு, எங்களை கூட்டணி பேச்சுக்கு அழைக்கவில்லை என்ற புலம்பல் வேறு! திடீரென்று தனியாக 234 தொகுதிகளிலும் நிற்போம் என்ற அலப்பறை வேறு! 2016ல் மக்கள் நலக் கூட்டணி என்று அத்தனை கட்சிகளை சேர்த்துக் கொண்டு நின்ற போதே நின்ற 104 தொகுதிகளில் 103ல் டெபாசிட் பறிகொடுத்த கட்சி தேமுதிக! அதிமுக அரவணைக்கத் தவறினாலும், சசிகலாவோ, பாஜகவோ நம்மை கரை சேர்க்காமல் விடமாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பிரேமலதா அரசியல் செய்து கொண்டிருக்கிறார்! அனேகமாக இந்த தேர்தலுக்குப் பிறகு தேமுதிக கடந்தகால வரலாறாகிவிடக் கூடும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time