யாருக்கான பட்ஜெட்…?

செழியன்.ஜா

தேசத்தின்  வளர்ச்சி தான் முக்கியமாம்! அந்த தேசம் என்பதில் மக்கள் உள்ளடங்கியுள்ளார்களா? அல்லது பெருமுதலாளிகள் மட்டுமே கொண்டது தான் தேசமா? பெருமுதலாளிகளின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதாகக் கருதும் பாஜக அரசிடம் வேறு எப்படிப்பட்ட பட்ஜெட்டை நாம் எதிர்பார்க்கமுடியும்?

பெரும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அறிவிப்பு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, பெட்ரோலுக்கு கூடுதல்  புதிய  வரி விதிப்பு, சமானிய மக்களுக்கு வருமான வரி வரம்பு உயர்த்தப்படாது  போன்றவற்றை படிக்கும் பொழுது இது யாருடைய வளர்ச்சிக்கான பட்ஜெட் என்பதில் நமக்கு எந்தக் குழப்பமும் வராது!

பொதுவாக தனிநபர் வருமான வரிவரம்பு எந்த அளவு இந்த பட்ஜெட்டில் உய்ர்த்துவார்கள் என்பதை மட்டுமே கவனித்தில் கொண்டு நடுத்தர மக்கள் ஒவ்வொருவரும் பட்ஜெட்டையும் அணுகுவார்கள்.  அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு என்பது விலைவாசி உயர்வு மற்றும் பணவிக்கத்திற்கு ஏற்றார் போல வருமான வரிவரம்பும் உயருமா? என்பது தான்!. அவர்களுக்கு பட்ஜெட்டில் அதிகம் தெரிந்தது தனி நபர் வருமானவரிவிலக்கு. அவை மட்டுமே தங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதைவிட மறைமுக வரியில் பணம் செல்வதை கவனத்தில் கொள்வதில்லை.

பெட்ரோல் மீது புதியதாக விதித்துள்ள வரி, செல்போன் மீது வரி உயர்வு என நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களின் மீதும்வரி செலுத்தி வாங்குகிறோம். இப்படி மறைமுகமாக நிறைய பொருட்கள் மீது உள்ள வரிகளுக்கு நம் பணம்தான் செல்கிறது!

எதற்கு இந்த வரிவிலக்கு

 75 வயது மேலானவர்கள் அதுவும் பென்ஷன் மட்டும் வாங்கும் நபர்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு என்ற  அறிவிப்பு என்ன நன்மை கொண்டு வரும். இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களின் வீட்டில் 75 வயது பென்சன் வாங்கும் நபர்கள் உள்ளார்களா என்று யோசித்துபார்த்தால் மிக மிக குறைவானவர்களே இருப்பார்கள். அதைவிட மிகப் கொடுமையான இந்த கொரோனா காலத்தை கடந்த மக்களுக்கு தனிநபர் வருமான வரிவிலக்கு சிறிது அளித்து இருந்தால் மிகப் பெரிய உதவியாக இருந்து இருக்கும்.

பிரதமர், கொரோனா  மாதங்களில் பேசிய  உரையில் தனியார் முதலாளிகள் தங்கள் பணியாளர்களை  வேலையில் இருந்து நீக்காதீர்கள். அவர்கள் மீது பரிவு காட்டுங்கள் என்று ஒருநாளைக்கு 100 முறை தொலைக்காட்சி, வானொலியில் ஒளிபரப்பி கொண்டு இருந்தார்கள். பிரதமரின் வாசகத்தை நிதி அமைச்சர் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.

வேலை இழப்பு, தொழில் நலிந்து, ஒரு நாள் கூட பள்ளிக்கே செல்லாத குழந்தைகளுக்கு முழு கட்டணமும் செலுத்தச் சொல்லும் பள்ளிகள், சொந்த ஊரை சென்று சேர்ந்த மக்கள் இன்னும் நகரங்களை நோக்கி வர முடியாத சூழல் இவ்வளவு இருக்கும் ஒரு நாட்டில் சாமானியர்கள் எதிர்பார்ப்பது வருமானவரியில் சலுகை. ஆனால் அதைக் கூட நிறைவேற்ற மனமில்லாத ஆட்சியாக இது உள்ளது!

அதேபோலதான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அறிவித்துள்ள நிறைய திட்டங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டின்  வளர்ச்சி அனைத்து மாநிலங்களிலும் சீராக இருக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் திட்டங்கள், தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு குறைவான திட்டங்கள் என்றால், பட்ஜெட்டில் கூட வாக்கு வங்கி கண்ணோட்டமா? என்று சலிப்படைய வைக்கிறது! இந்த அரசு அனைத்து மாநிலங்குளும் வளர வேண்டும் என்று நினைக்கிறதா? அல்லது தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மட்டும் வளர்ந்தால் போதும் என்று அரசு  நினைக்கிறதோ என்னவோ?

இதைத்தான்  சிவசேனா கண்டித்துள்ளது. ’’ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு பட்ஜெட்டை பயன்படுத்துகிறார்கள்’’ என்று கூறியுள்ளது.

பெட்ரோல்- டீசல், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் இந்த பொருட்கள் விலை ஏறினால் மிக மிக அதிக பாதிப்புக்கு உள்ளாவது சாதாரண மக்களே. தினமும் ஏறி வரும் பெட்ரோல் விலையில் பட்ஜெட்டில் லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த புதிய வரிவிதிப்பு  எந்த பாதிப்பும் வராதபடி பெட்ரோல் மீது விதிக்கப்படும் கலால் வரி  குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, உன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் 100 ரூபாய் எடுத்து மீண்டும் வேறு 100 ரூபாய் வைத்துவிடுகிறேன். அதனால் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பது போல் இருக்கிறது.  எதற்கு கலால் வரி, சிறப்பு கலால் வரி குறைக்கப்பட்டு இந்த புதியவரியை விதிக்க வேண்டும். அதற்கு பதில் கலால் வரியில் உள்ள பணத்தையே பயன்படுத்தி கொள்ளலாமே?

இதனால் எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்படாது என்று எப்படி நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. ஏன் கலால் வரி குறைத்து புதிய வரியை போடுகிறீர்கள்?

விவசாயிகள் வருமானம் உயர்வா?

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் பல மாதங்களாக வேளாண் சட்டத்தை திரும்பப் பெற போராடிவருபவர்கள்  விவசாயிகள் என்பதை மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. தேர்தல் என்றால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மக்களை சந்திக்கும்  பிரதமர் அந்த மக்கள் (விவசாயிகள்) உங்கள் பகுதிக்கு(டெல்லி) வந்து உள்ளார்கள் அவர்களை சந்திக்க ஏன் மறுத்து வருகிறார்?

16.5 லட்சம் கோடி விவசாயிகளுக்கு கடன் ஒதுக்கீடு, கடல் பாசி பூங்கா, புதிய மண்டிகள் திறப்பு இவையெல்லாம் விவசாய வளர்ச்சிக்கு என்று பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளனர். அதைவிட மிக எளிமையாக விவசாயிகளுக்கு விரோதமாகப் போட்ட மூன்று சட்டங்களை வாபஸ் வாங்கி இருக்கலாம். எல்லா விவசாயிகளும் வாங்க வந்து கடனை வாங்கிட்டுப் போங்க! நல்லா விளைச்சலைப் பெருக்கி அம்பானி,அதானியிடம் கொடுங்க..” என்பதை சொல்லாமல் செய்துள்ளார் பிரதமர்!

பங்கு சந்தை ஏற்றம்

வங்கிகளுக்கு 20,000 கோடி ஒதுக்கீடு, காப்பிட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு 74% உயர்வு, 1 லட்சம் கோடியில் நீண்ட சாலைகள் அமைத்தல், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கீடு  போன்ற அறிவிப்பால் பங்குசந்தை நேற்று ஒரே நாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும் என்று நினைப்பதைவிட இதனால் பெரும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே உண்மை.  அதைத்தவிர பொது மக்கள் வளர்ச்சிக்கோ, குறுப்பாக இந்த நாட்டில் 90 சதவிகித வேலை வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு எதப் பிரயோஜனமும் இல்லை! அவர்களின் வளர்ச்சிக்கு இவை வழிவகை செய்யாது.  பங்குசந்தை உயர்வு அதில் முதலீடு செய்பவர்களான மிகச் சிறு கூட்டத்திற்கே பலனளிக்கும்!

புதிய வரி இல்லாதது நிம்மதியாக உள்ளது என்ற கருத்தை  பலர் சொல்லிவருகின்றனர். அந்த அளவு மக்கள் பயத்தில் இருப்பது தெரியவருகிறது.

நிறுவனங்கள் வளரட்டும், பெரும் தனியார் முதலாளிகள் வளரட்டும் ஆனால் விளிம்புநிலை மக்கள், நடுத்தரமக்கள் நிறைந்த நாடுதான் இந்தியா. இவர்களின் வாழ்க்கை தரம் உயர, பொருளாதாரம் உயர குறிப்பிட்டு சொல்லும்படி இந்தபட்ஜெட்டில் என்ன சொல்லியுள்ளனர் என்று ஆராய்ந்தால் அப்படி எதுவும் இல்லை என்றே குறிப்பிடவேண்டியுள்ளது.

பட்ஜெட்டை படித்து முடித்தால் சாமானியனை சாமானியனாகவே வைக்கும் நிலைதான் தெரிகிறது! ஆனால் நாட்டின் வளர்ச்சி சாமனியனைக் கொண்டு தான் சாத்தியப்படுகிறது!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time