பொதுத்துறை நிறுவனமெனும் விதைநெல்லை விற்கும் மாபாவிகள்!

-சாவித்திரி கண்ணன்

ஒட்டுமொத்த இந்தியாவையும் எடுத்து தனியார்களிடம் விற்றால் மட்டுமே எங்கள் லட்சியம் நிறைவேறும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாஜக அரசு!

1951 ல் இந்தியா குடியரசான போது வெறும் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன! ஆனால், ஜவகர்லால் நேரு தொடங்கி வைத்த லட்சிய பயணத்தில் காலப்போக்கில் அது 348 நிறுவனங்களாக வளர்ந்து கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும், தேசத்திற்கு மாபெரும் வருவாயையும் தந்தன என்பது மட்டுமல்ல, நாட்டிற்கு அவை ஒரு நிலையான பெரும் சொத்தாக நிலைபெற்றன!

இந்த மாபெரும் வளர்ச்சியை கண்டு வயிறு எறிந்த பெருமுதலாளிகள் அவற்றை அபகரிக்க நேரம் பார்த்துக் காத்திருந்தனர்! அவர்களுக்கு ஆபத்பாந்தனாக அரசியல் அரங்கில் உதித்த இயக்கம் தான் பாரதிய ஜனதா கட்சி! இந்த இயக்கம் அடிப்படையில் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரான மன்னர் மரபில் வந்தவர்களால் தோற்றுவிக்கப்பட்டது! பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு அடியாளாக கப்பம் கட்டி, மக்களை ஈவு இரக்கமின்றி சுரண்டி பிழைத்த, ஐநூற்று சொச்சம் சமஸ்தானத்து மன்னர்களின் வாரிசுகள் முன்பு ஜனசங்கம் என்றும் பின்பு பாரதிய ஜனதா என்று அரசியல் இயக்கமானர்கள்! அவர்களின் பிரதிநிதிகளாகத் தான் மோடியும், நிர்மலா சீதாராமனும் இயங்கிக் கொண்டுள்ளனர்!

இந்திய சமஸ்தான மன்னர்கள் பற்றி குறிப்பிடுகையில் மகாத்மா காந்தி, ’’அவர்கள் மனசாட்சியற்றவர்கள், அறத்திற்கு மதிப்பளிக்கும் மனோபாவமற்ற அராஜகவாதிகள்’’ எனக் கூறியுள்ளார். அதனால் தான் காந்தி இந்திய தேசிய காங்கிரஸுக்கு சமஸ்தான பகுதிகளில் கிளைகளை ஏற்படுத்தக் கூடாது! சமஸ்தான மன்னர்கள் விஷயத்தில் என்னாலோ,காங்கிரசாலோ எதையும் போராடி மக்களுக்கு உதவமுடியும் என்ற நம்பிக்கை அறவே கிடையாது! என்னுடைய போராட்டம் பிரிட்டிஷ் அரசிடமாவது இந்தளவு செல்லுபடியாகிறது. ஆனால்,அதுவே எந்த ஒரு சின்னஞ்சிறிய சமஸ்தானத்திலுமே கூட – எவ்வளவு ஆகப் பெரிய தியாகம் செய்து போராடினாலுமே கூட – வெற்றிபெற முடியாது’’ என்றார்!

அது தான் தற்போது விவசாயிகள் போராட்டம் தொடங்கி அனைத்து நிலைகளிலும் நாம் பார்ப்பது! இந்திய விவசாய வளத்தை எப்படி ஒரு சில தனி மனித முதலாளிகளிடம் ஒப்படைக்க சட்டம் போட்டார்களோ.. அதே போலத்தான் பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதற்கு என்றே ஆட்சி செய்கிறார்கள்!

1999- 2004 வரையிலான வாஜ்பாய் காலத்தில் ஆரம்பித்தது இந்த பொத்துத்துறை நிறுவனங்களை அழித்தொழிக்கும் ஆபரேஷன்! அதற்காக அருண்ஷோரி என்பவரைக் கொண்டு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது! பால்கோ, இந்துஸ்தான் ஜிங்க், இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் என்று ஆரம்பித்த பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சி இன்று விஸ்வரூபமெடுத்துள்ளது! தற்போது பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய நிறுவனங்கள், இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள்..என ஒவ்வொன்றாக கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன!

அதுவும் நரேந்திரமோடி பதவி ஏற்ற 2014 முதல் 2018 வரை மட்டுமே 1,94,646 கோடி ரூபாய் மதிப்புள்ள பொது நிறுவனங்களின் சொத்துகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது!

அதன் பிறகு 2019-20 ல் மட்டுமே 24 பொதுத்துறை நிறுவனங்களின் ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது!

தற்போதைய நிதியாண்டில் (2020-21) ஒரு லட்சத்து இருபாதாயிரம் கோடி விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மிகுந்த லாபம் தந்து கொண்டுள்ள ஓ.என்.ஜி.சி மற்றும் இந்துஸ்த்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனையும் கூட விட்டுவைக்கவில்லை!

பொதுத்துறை நிறுவனங்களே இந்தியாவின் கோயில்கள் என்றார் நேரு! 2017-18 நிலவரப்படி 331 பொதுத்துறை நிறுவனங்களை இந்தியா கொண்டிருந்தது! இதில் ஆண்டொன்றுக்கு ரூபாய் 2,500 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டித்தரும் பத்து பெரு நிறுவனங்களும் அடக்கம்! மொத்த நிறுவனங்களில் 170 க்கும் மேற்பட்டவை நல்ல லாபத்துடன் இயங்குகின்றன! நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 2019 ஆம் ஆண்டில் கிடைத்த லாபம் மட்டுமே 16.41 லட்சம் கோடி!

பொதுத்துறை நிறுவனங்களிலேயே மிக அதிக சொத்தை கொண்டது இந்திய ரயில்வே! இது தினசரி மூன்று கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்கிறது. நல்ல லாபத்துடன் இயங்குகிறது. ரயில்வேயிடம் மட்டுமே 10.65 லட்சம் ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன! இந்த ரயில்வேயும் தற்போது தனியாமயமாக்கப்பட்டு வருகிறது இனி ரயில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயரவுள்ளன!

45 கோடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் உலகின் மிகப் பெரும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளும் இனி விற்கப்படும்!

இந்த ஆண்டு மட்டுமே பஞ்சாப் நேஷனல் மற்றும் பாங்க் ஆப் பரோராடா ஆகியவற்றில் உள்ள அரசின் பிடி தளர்ந்து தனியார் கைகளுக்கு போகிறது!

பி.எஸ்.என்.எல் என்ற லட்சக்கணக்கானோருக்கு வேலை தந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை தர மறுக்கப்பட்டு, ரிலையன்ஸ்சின் ஜியோவை வளர்ப்பதற்காக திட்டமிட்டு அழிக்கப்பட்டது! 2ஜி ஊழலைவிட மிகக் கொடியதும், பிரம்மாண்டமானதும்,பல லட்சம் பேர் வேலை பறிபோக காரணமானதும் இது தான்! அந்த 2ஜி ஊழலை எழுதிய அளவில்,பேசிய அளவில் பத்தில் ஒரு பங்கைக் ஊடகங்கள் 4ஜி அலைக்கற்றை விவகாரத்தில் செய்யவில்லை! ஏன் அரசு நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை மறுக்கப்பட்டு, அம்பானிக்கு வழங்கப்பட்டது என வலுவான கேள்வி எழவில்லை!

ஒ.என்.ஜி.சியின் 30,000 கோடி மதிப்புள்ள எரிவாயுவை ரிலையன்ஸ் அம்பானி திருடியது கண்டுபிடிக்கப்பட்டது! ஆனால், அவர்களை தண்டிக்கவில்லை! கோர்டு, வழக்கு என்று அரசுக்கு மேலும் செலவானது தான் கண்ட பலன்! அம்பானி திருடவும், நாட்டின் வளங்களை அழிப்பதற்கும் துணை போகும் ஆட்சியாளர்களுக்கு ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற தோற்றம் வேறு கட்டமைக்கப்படுகிறது!

பொதுத்துறை நிறுவனங்கள் சிலவற்றில் ஊழல் நடக்கிறது! ஊழியர்கள், அதிகாரிகள் சரியாக வேலை செய்வதில்லை, ஊதாரித்தனமாக செலவழிக்கப்படுகிறது, ஆட்சியாளர்கள் தலையீடு உள்ளன..ஆகவே அவற்றை விற்பது குற்றமல்ல! அரசுக்கு சுமை குறையட்டும்’’ என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன! இவற்றை சரி செய்து நேர்மையான நிர்வாகத்தை உறுதிபடுத்தவே நாம் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்! அந்தஸ்தும்,மரியாதையும் கொடுக்கிறோம். நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டிய  பொறுப்பு அவர்களுடையது. அதை செய்ய துப்பில்லாமல் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை ஒரு சிறிதும் மன்னிக்க முடியாது! மீண்டும்,மீண்டும் பொதுத்துறை நிறுவனங்களை விற்ற பணத்தைக் கொண்டு தான் அரசு நிர்வாக செலவுகளை ஈடுகட்ட முடிகிறது என வாதாடுகிறார்கள்! அப்படி ஒவ்வொரு ஆண்டும் எல்லாவற்றையும் விற்று முடித்துவிட்ட பிறகு நிதி திரட்ட என்ன செய்வீர்கள்?

அரசுத்துறை தருவது போன்ற தன்னலமற்ற சேவையை தனியார்களால் ஒரு போதும் தரமுடியாது! கொரனா காலத்தில் அரசு மருத்துவமனைகளும்,அரசு மருத்துவர்களும் தான் களத்தில் இருந்தனர்.தனியார் மருத்துவமனைகள் முதல் மூன்று மாதத்திற்கு முடங்கிகிடந்தனர். பிறகு கொரானாவில் பணம் பார்க்கலாம் என தெரிய வந்ததும் தான் களத்திற்கே வந்தனர்! இதே போல கிராமங்களில் கூட சேவை செய்யும் அமைப்பாக அரசின் தபால்துறையும், அரசின் வங்கிகளுமே உள்ளன! அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கித் தந்தார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அதை அழித்து தின்கிறார்கள்! பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதன் மூலம் பல லட்சம் வேலை வாய்ப்புகளை காலிபண்ணிக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்களை எதிர்க்காவிட்டால் நாளை இட ஒதுக்கீடு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்! வேலை என்று இருந்தால் தானே இடஒதுக்கீடு என்று கேட்க முடியும்!

பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை விதை நெல்லைப் போன்றவை! எந்த ஒரு விவசாயியும் விதை நெல்லை அடுத்த விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுத்துவானேயன்றி விற்கவே மாட்டான். விதை நெல்லைப் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு அன்று விதை போட்டது என்பது விளைச்சலை பெருக்கி வளர்த்து செல்வதற்குத் தான்! ஆனால் அதை விளைச்சலுக்கு பயன்படுத்தாமல் விற்பனை செய்வது மாபெரும் குற்றம் மட்டுமல்ல, மாபாதகமான, மன்னிக்கவே முடியாத பாவச் செயலாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time