யாரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை! கிராமங்களில் விவசாயிகள் மத்தியில் இது எந்தச் சலனத்தையும் மேற்படுத்தவில்லை! மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி என்ற அதிமுக அரசு எய்திய அஸ்த்திரத்தால் பலடைவது விவசாயிகளல்ல என்பது தான் இதிலுள்ள யதார்த்தம்! தரப்படுவதாகச் சொல்லப்படும் விவசாயக்கடன்களோ, அதன் தள்ளபடிகளோ விவசாயப் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பது மட்டுமல்ல, உண்மையில் கடன்களும், தள்ளுபடிகளுமே விவசாயிகளின் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றன! முதல்வர் பழனிச்சாமி குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பல வருடங்களாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்குவது மாபெரும் அநீதியாகும்!
12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பில் பலனடைபவர்களில் 90 சதமானவர்களுக்கும் மேலானவர்கள் அரசியல் கட்சிக்காரர்கள், செல்வாக்கானவர்கள், பயிர்க் கடனல்லாத வேறு காரணங்களுக்காக கடன் வாங்கியவர்கள் என்பதே யதார்த்தமாக இருக்கும் போது இதில் விவசாயிகள் எப்படி மகிழ்ச்சியடைவார்கள்?
அரசியல் காரணங்களால் தரப்படும் கடன் தள்ளுபடியால் விவசாயக் கூட்டுறவு வங்கிகள் மீள முடியாத அழிவுக்கு தள்ளப்படும் என்பது தான் யாராலும் மறுக்க முடியாத உண்மை! கடன் வாங்குகிற பெரும்பாலான சிறுகுறு விவசாயிகள் பெரும்பாலும் குறுகிய காலக் கடன்களை வாங்கி விளைச்சல் முடிந்தது அதை அடைத்து விடுவதுதான் இயல்பு! வாங்கிய கடனை முறையாக செலுத்த வேண்டும் என்ற தார்மீக உணர்வை தரைமட்டமாக்கி, நியாய உணர்வுள்ள விவசாயிகளையும் அறம் பிறழ வைக்கும் அநீதி தான் ஒட்டுமொத்த கடன் தள்ளுபடியாகும்!
அதிலும் பெரும்பாலான உண்மையான விவசாயிகளுக்கு சுலபத்தில் வங்கியில் கடன் கிடைப்பதில்லை! நிலத்தை யாருக்காவது குத்தகைவிட்டோ, அல்லது சும்மாவாகவோ வைத்திருந்து, வேறு தொழில்கள் செய்வதற்கு முதலீடு தேவைப்படுவர்களே நிலத்தை காட்டி அதிகமாக வங்கிக் கடன் பெறுகிறார்கள்! இவர்கள் தான் நீண்ட காலக் கடன் என்று வாங்கிக் கொண்டு தேர்தல் காலங்களில் எப்படியாவது ஓட்டுபொறுக்கி அரசியல்வாதிகள் தள்ளுபடி செய்யத்தானே போகிறார்கள்..என வங்கிக்கு வாய்தா சொல்லியே காலம் தள்ளியவர்கள்!
விவசாயிகளிடம் பேசினேன்; ’’என்ன சார் செய்யிறது தொடர்ந்து அக்குரமக்காரங்க காட்டுல தான் மழை பொழியுது… மழை,வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி வேண்டும் என்று எதிர்பார்பது விவசாயிகள் இயல்பு. ஆனால், தற்கொலைக்கு தள்ளப்படும் அந்த நேரத்துல பயிர்க் கடன் தரமாட்டோம் என்று கைவிரிப்பது தான் பெரும்பாலும் நடக்கிறது! ஆனால், இப்ப தேர்தலுக்கும் பயிர்க் கடனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு சொல்லுங்க’’ என்றனர்!
வாங்கிய கடனை செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்ட ஞானசேகரன் மாதிரியான எளிய விவசாயிகள் வங்கியின் அடியாட்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் மறக்க முடியாது!
கூட்டுறவு அமைப்பு என்பது கோயிலைப் போன்றது. அதற்கு முதலில் அரசாங்கத்தின் கடனும் வேண்டாம், தள்ளுபடியும் வேண்டாம். நேர்மையாளர்கள் கூட்டுறவு அமைப்புகளில் இயங்குவதற்கான சூழலை உருவாக்கி கொடுத்தாலே போதும்! கூட்டுறவு அமைப்பின் நோக்கங்களே என்னவென்று தெரியாத செல்லூர் ராஜி போன்ற ஊழல் பெருச்சாளியானவர் இதன் அமைச்சர் என்பது மிகப் பெரிய கொடுமையாகும்!
ஏனெனில், இந்தியாவிலேயே அரசாங்கத்திடம் காலணா கூட கடன் வாங்காமல் தழைத்தோங்கிய கூட்டுறவு அமைப்புகளை நடத்திய மாநிலம் தமிழகம் தான்! கூட்டுறவுத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நாம்! .
பிட்டி.தியாராய செட்டியார்,எல்.கே.துளசிராம், வ.உ.சிதம்பரனார், பி.டி.ராஜன், பி.எஸ். குமாரசாமி ராஜா, சுவாமிக் கன்னுபிள்ளை குமாரசாமி முதலியார், ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து முதலியார், சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே.ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ்.ராஜகோபால் நாயுடு, தஞ்சை நாடிமுத்துப் பிள்ளை, வேலூர் பக்தவச்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார்,ஏ.வேதாச்சல ஐயர் என பலரும் கூட்டுறவு இயக்கத்திற்கு தங்கள் ஊனையும், உயிரையும் உரமாகக் கொடுத்துள்ளனர்!
விவசாயக் கடன்களை தர தொடங்கியதே ஒரு சூது வளையத்திற்குள் அவர்களை சிக்கவைக்கத்தான்! ரசாயண உரங்களை விவசாயிகளிடம் திணிப்பதற்காக வங்கி கடன் வலிந்து தரப்பட்டது! இதற்கு தான் அன்றே கூட்டுறவு அமைப்புகளே இணைந்து இயற்கை முறையில் உரங்களை தயார் செய்ய வேண்டும் என்றார் டி.என்.பழனிச்சாமிக் கவுண்டர்! விவசாயிகளுக்கு மாடுகளும், இழை,தளைகளும் இருந்தால் போதும். ரசாயன்கடனும் வேண்டாம்,டிராக்டர் கடனும் வேண்டாம்! அப்படின்னா பெரு முதலாளிகள் எப்படி பிழைக்க முடியும்? ஆகவே அவனுக்கு கொடுக்கும் கடன் மூலமாக உரமுதலாளிகளையும், டிராக்டர் கம்பெனிகளையும் வாழவைக்க வேண்டி இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி கவனர்களும், பாரத ஸ்டேட் வங்கி தலைவர்களும், “இந்த மாதிரியான கடன்தள்ளுபடிகள் வங்கி கட்டமைப்புகளையே சீர்குலைத்துவிடும். கடனை திரும்பச் செலுத்தும் ஒழுங்குமுறையை சிதைத்துவிடும்”. என்று எதிர்ப்பு தெரிவித்தாலும் அரசியல்வாதிகள் இந்த தவறை மீண்டும்,மீண்டும் செய்கிறார்கள்! நபார்டு வங்கி இதனால் தான் தமிழக விவசாயத்திற்கு நிதி தரமாட்டேன் என மறுக்கிறது.
இதனால் தான் 2020 ஆம் ஆண்டு ஜீலை முதல் நகர கூட்டுறவு வங்களையும், மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி தன் கட்டுபாட்டில் எடுத்துக் கொண்டது!
2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வருவதற்காக விவசாயிகளின் 6,700 கோடி கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்ததில் இருந்து வீழ்ந்த விவசாய கூட்டுறவு வங்கள் இன்னும் கூட மீளவில்லை! ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாமல் திணறுகின்றன! காலிப் பணியடங்கள் நிரப்படாமல் உள்ளன! கடந்த பல ஆண்டுகளாக நிலவள வங்கிகள் சேட்டு கடைகளைப் போல நகைக் கடன்களை மட்டுமே வழங்கி வருகின்றன’’ என்கிறார் நிலவள கூட்டுறவு வங்கியின் முன்னாள் நிர்வாகி சந்திரசேகர்.
1981ல் தான் நபார்டு எனப்படும் தேசிய விவசாய கிரமப்புற மேம்பாட்டு வங்கி தொடங்கப்பட்டது. அதுவரை அப்படிப்பட்ட ஒரு வங்கியின் தேவையில்லாமலே விவசாயம் மிகச்செழிப்பாக இருந்தது.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்தே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்காண்டு விவசாய நிலப்பரப்புகள் சுருங்கி கொண்டே வருகின்றன. பலகோடி விவசாயிகள் தங்கள் நிலங்களை அடமானம் வைத்துள்ளனர். இதில் பலர் மீட்டெடுக்க முடியாமல் விற்றுவிட்டனர். இந்த நிலங்களெல்லாம் தற்போது எந்த ஆதிக்க சக்திகளின் வசம் உள்ளனவோ அவர்களே இந்த கடன்களிலும், கடன் தள்ளுபடிகளிலும் பிரதான பயன் அடைகின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகாரத்தை பிடிப்பதற்கான – அரசாங்க செலவிலான முதலீடாக – இன்று விவசாயக்கடன் தள்ளுபடிகள் அரசியல் கட்சிகளுக்கு அமைந்து விட்டன என்பது தான் யாதார்த்தம்.
இந்த நாட்டின் நிதி ஆதாரங்கள் ஆக்கபூர்வமான விவசாய அடிப்படை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுமானால் விவசாயிகளுக்கு கடனே தேவையில்லை.
அரசாங்கம் நீர்வள மேலாண்மைக்கான நிரந்தர கட்டுமானங்களை உருவாக்கி பராமரிக்க முடிந்திருந்தால் தமிழ்நாட்டில் 20 லட்சம் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை தோண்ட லட்சக்கணக்கில் கடன்பெற்று அழிந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிராதே!
கடன்களும், கடன்தள்ளுபடிகளும் பாதிக்கப்பட்ட அந்தந்த விவசாயியின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு அந்தரங்க சுத்தியோடு அணுகப்படவேண்டும். அதை அனைவருக்கும் பொதுவானதாக்கி விடலாகாது. அதுபோல் இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல் ஏற்படும் காலங்களில் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை அரவணைத்து பாதுகாக்க கடன்களும், தள்ளுபடிகளும் அவசியமாகலாம்.
Also read
ஒட்டுமொத்தமாக நாம் விவசாயக் கடன்களையோ, கடன்தள்ளுபடிகளையோ குறைசொல்ல வரவில்லை. ஆனால், இவை இந்த நாட்டில் ஆதிக்க சக்திகளும், அதிகார அடுக்குகளில் உள்ளவர்களும் பயன்பெறுவதற்கே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. பேராசை என்பது ஒரு பெரிய தொற்றுநோய். உழைக்காமல் கிடைக்கும் பெரும் பணம் என்பது தற்போது மேல்மட்டத்தில் பற்றியுள்ள தொற்றுநோய். அதை உடனே அழித்தொழிக்கவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து மட்டத்திலும் பரவி வியாபிக்கும். அது சர்வ நாசத்திற்கே வித்திடும்.
கடன்களே தேவையற்ற பாரம்பரியமான விவசாய சூழலை மீண்டும் மீட்டெடுப்பதே விவசாயப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியும்!
விவசாயக்கடன்களாலோ, கடன்களின் தள்ளுபடிகளாலோ விவசாயம் செழித்துவிடாது. விவசாயிகளை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். விவசாயிகளை காப்பாற்றுகிறோம். என்ற பெயரால் விவசாயத்தையே கபளிகரம் செய்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப திட்டம் போடுவதும், சட்டம் இயற்றுவதும் நிறுத்தப்பட்டாலே போதும். விவசாயமும், விவசாயிகளும் யாருடைய தயவுமின்றி இயற்கையின் பேராற்றல் கொண்டு தங்களை தாங்களே புதுப்பித்துகொள்வது நடந்தேறும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கடன் தள்ளுபடியால் காவுகொடுக்கப்படும் கூட்டுறவு வங்கிகள்!
-சாவித்திரி கண்ணன்