இது வெற்றிமாறனுக்கு தோல்வியே- யமுனா ராஜேந்திரன்

- பீட்டர் துரைராஜ்

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து “பாவக் கதைகள்” என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. சாதி கெளரத்திற்காக கொடுர கொலைகளை செய்வதாக காட்சிப்படுத்தப்படும் கதைகளை படமாக்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப்படம் நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது! ஆனால்,  அவ்வாறு கொலை செய்வதை காட்சிப்படுத்தப்படும் அணுகுமுறையில் இவ்வித பாவச் செயலை செய்வதை நியாயப்படுத்துகிறார்களா? அல்லது குற்றமென ரசிகர்களை உணர வைக்கிறார்களா…? இந்தக் கதைகள் சமூகத்தில் ஏற்படுத்த விரும்பிய தாக்கம் என்ன..? என்பது குறித்து திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன், பீட்டர் துரைராஜிடம் பேசியவை;

 ‘பாவக் கதைகள்படம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

திரைப்படத்துறை சார்ந்த வியாபார நிறுவனங்கள் சமகால பிரச்சினைகளை மையப்படுத்தி படம் எடுப்பதன் மூலம்  இதனை வியாபார ரீதியில் சந்தைப்படுத்தவும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு கச்சாப்பொருள். படத்தை எடுப்பவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி பெரும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

கொரானா காலத்தில் நிலவும் தனிமை உணர்வு, சிதையும் உறவுகள், யாரையும் நம்பாமை, சுயநலம் போன்ற உணர்வுகள் எழுகின்றன. இதனை மையமாக வைத்து அமேசானில் வெளிவந்துள்ள ‘ Un pause’ படம் சிறப்பாக வந்திருக்கிறது. நெருக்கடியிலும் நழுவாத மனித நேயத்தை காட்டுகிறது.

அதேபோல இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடந்து வரும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து பாவக் கதைகள் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பில் நான்கு இயக்குனர்களின் கதைகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘அசுரன்’ படத்தில் தலித் பிரச்சினையை மையப்படுத்தி வெற்றிமாறன் படம் எடுத்துள்ளார். எனவே அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல ‘சூரரை போற்று’ என்ற கார்ப்பரேட் படத்தை எடுத்தாலும், அதிலும் விளிம்பு நிலை மக்கள் போராடி முன்னுக்கு வருவதை, திராவிட அரசியல் பேசுவதை நல்லவிதமாக சுதா கங்குரா சித்தரித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ மேனனும், விக்னேஷ் சிவனும் இப்படிப்பட்ட படைப்புகள் எதையும் தந்ததில்லை.

 ‘வான்மகள்என்ற கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியுள்ள படம் குறித்து என்ன சொல்கிறீர்கள்

கல்லூரி மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்கிறார். அவமானம் தாங்க முடியாமல் அவரது அம்மா( சிம்ரன் அம்மாவாக நடித்துள்ளார்; கௌதம் வாசுதேவ மேனன் அப்பாவாக நடித்துள்ளார்), தன் மகளை மலையிலிருந்து தள்ளிவிட எத்தனிக்கிறார் என்பது கதை. அதை காட்சிப்படுத்தியும் உள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் முன் காலங்களில் சிறந்த படங்கள் எதையும் எடுத்ததில்லை. எனவே எனக்கு அவர் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இந்த தொகுப்பில்  உள்ள மோசமான கதை இதுதான். கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பாலியல் வல்லுறவு குறித்து எந்தவிதமான புரிதலும் இல்லை என்பதை இந்தப் படத்தை பார்த்தால் தெரியும்.

அதில் ஒருவன் ‘வல்லுறவுககு உள்ளாக்கப்படும் பெண் சிறுமியாக இல்லாமல் பெரிய பெண்ணாக இருந்தால் கூட பரவாயில்லை’ என்று சொல்லுவான். வல்லுறவின் உளவியல் குறித்த இந்தப் புரிதல் கூட இல்லாமல்தான் இந்த படத்தை கொடுத்துள்ளார்.

விக்னேஷ் சிவன்  இயக்கியுள்ளலவ் பண்ணா உட்றனும்”  படம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்

லெஸ்பியன் உறவு குறித்து வேடிக்கையாக, நக்கலாக விக்னேஷ் சிவன் இதில் சித்தரித்துள்ளார். தன் மகள் சாதி மாறி காதலித்தாள் என்பதற்காக கொடூரமாக கொலை செய்வார் ஒரு கிராமத்து பண்ணையார். இரண்டாவது மகளும் காதலுக்காக அப்பாவிடம் இருந்து தப்பித்து நகரத்திற்கு வந்துவிடுவார். இறுதியில்  அப்பா மனம் மாறி, தன் மகளோடு பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிடுவார் இது கதை.( மகளாக அஞ்சலி நடித்துள்ளார்).

நிலப்பிரபுத்துவச் சிந்தனை கொண்ட அப்பா திடீரென்று மனம் மாறுவது நம்பமுடியாதது. லெஸ்பியன் உறவு குறித்தும் இந்த படம் ஒரு காத்திரமான சித்தரிப்பை கொடுக்கவில்லை.

சுதா கொங்கரா இயக்கியதங்கம்படம் எப்படி இருக்கிறது

இந்த படம் குறித்து சமீபத்தில் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டேன். அதில் பேசிய எழுத்தாளர் பிரசாந்தி சேகரம் இந்த படத்தில் உள்ள திருநங்கை பாத்திரத்தில்,  உண்மையான திருநங்கையை நடிக்க வைத்திருக்க வேண்டும் என்றார். திருநங்கையை மையப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கூட ஒரு திருநங்கை கிடைக்கவில்லையா என்று கேட்டார். அதை நான் வழிமொழிகிறேன்.. திருநங்கை குறித்த விழிப்புணர்வு உருவாகி வரும் சமயத்தில், அதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தில், நடிக்கத் தயாராக பல திருநங்கைகள் இருக்கும்போது திருநங்கையாக இருக்கும் ஒருவரையே நடிக்க வைத்திருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். இந்தப்படத்தில் திருநங்கையாக நடித்திருப்பவர் (காளிதாஸ் ஜெயராம்) அதீத நாடகத்தன்மையோடு நடிக்க வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். அதேபோல அவர் கொல்லப்பட்ட முறையும் அதீத வன்முறையோடு உள்ளது. ஆனாலும் கிராமத்தில் இந்து – முஸ்லீம் குடும்பங்களுக்கிடையே வரும் காதலைச்  சொல்ல இந்தப் படம் முற்பட்டிருக்கிறது. திருநங்கைகளின் வாழ்வு பற்றி இந்த படம் பேசுகிறது. அந்த வகையில் இது ஓரளவு நல்ல படம்.

வெற்றிமாறன் இயக்கியஓர் இரவுபடம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்

சாதி மாறி திருமணம் செய்து, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மகளுக்கு (சாய் பல்லவி) சடங்கு செய்வதாக வீட்டிற்கு அழைத்து, அவளுக்கு விஷ மருந்து கொடுத்து கொலை செய்வதாக முடியும் கதை. எந்த ஒரு படத்திலும் வன்முறை யார் பார்வையில் சொல்லப்படுகிறது என்பது முக்கியம். தன் மகள் சாவதை பக்கத்து அறையில் இருந்து பார்க்கும் அம்மாவின் பார்வையில் கதையை வெற்றிமாறன் சொல்லி இருக்கலாம்; கணவன் பார்வையில் சொல்லியிருக்கலாம்; சாய் பல்லவியின் சகோதரி பார்வையில் சொல்லி இருக்கலாம் அல்லது கருவில் இருக்கும் சிசுவின் பார்வை மூலமாகக் கூட ஒரு மேஜிகல் ரியாலிசமாக இந்தப் படத்தை எடுத்திருந்தால், வெற்றிமாறன் ஒரு கலைஞனாக வெற்றி பெற்றிருக்கக்கூடும். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யும் கொலைகாரனான பிரகாஷ் ராஜ் பார்வையில் இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது. இதில் கொலைக்காரவிஷன்,  நியாயம்தான் வெளிப்படுகிறது.

சாதாரணமாக ஒரு ஆணவ கொலை நடந்தால் பத்திரிகைகளும், ஊடகங்களும் சாதிப் பெருமையைத்தான் பேசும்; உணர்ச்சிபூர்வமாக எழுதும். அதே வேலையைத்தான் வெற்றிமாறனும் செய்துள்ளார். சாதி மாறி கல்யாணம் ஆனதால், அவளது தங்கைகள் கல்லூரி போக முடியவில்லை என்ற அனுதாபத்தை காட்டியிருப்பார். மகள் இறந்த பிறகு சோகத்தோடு திண்ணையில் உட்கார்ந்து இருப்பதாக பிரகாஷ்ராஜின் சித்தரிப்பு இருக்கும். அப்போது ஒரு துயர இசை பின்னணியில் ஒலிக்கும். உடனடியாக நோகாமல்இறக்காமல் கஷ்டப்பட்டு இறக்கிறாளே என்று வருந்தும் தந்தையை காட்டியிருப்பார். இவையெல்லாம் கொலைக்கு ஆதரவான அம்சங்கள். எனவே கலைஞன் என்ற வகையில் வெற்றிமாறன் ஓர் இரவில் தோல்வி அடைந்துள்ளார்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time