ஜெயிக்க போவது யார்..?

-சாவித்திரி கண்ணன்

சசிகலா வருகையை வேறெவரைக் காட்டிலும் ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்தி வருகின்றன! சசிகலாவைக் குறித்த பிரம்மாண்டமான மாயைகள் கட்டமைக்கப்படுகின்றன! நாளை அவர் வருகையை நேரடி ஒளிபரப்பாக்க தொலைகாட்சி ஊடகங்கள் பல மும்முரமாக திட்டமிட்டு வருகின்றன! இன்றைய காலகட்டத்தில் எந்த மோசமான அரசியல்வாதிகளைக் காட்டிலும், ஊடகங்களே மிக ஆபத்தானவையாக உள்ளன!

சசிகலா இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ தியாகம் செய்தோ,போராட்டம் நடத்தியோ சிறை சென்று திரும்பவில்லை! எனினும், அவரை மிகைப்படுத்தி சதா சர்வகாலமும் ஊடகங்கள் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் உள்ளன! நாட்டிற்கு தேவையான முக்கியமானவர்களை கவனப்படுத்துவதை விடவும் தீய சக்திகள் குறித்த பரபரப்பான செய்திகளையும்,பிம்பங்களையும் முக்கியத்துவப்படுத்தி  வருவது காலகாலமாக நடந்து வருகிறது!

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த போது எம்.ஜி.ஆர் குறித்த செய்திகளையும், அறிக்கைகளையும் அன்றைய தினசரிகள் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாகப் போட்டதையும், பெருந்தலைவர் காமராஜின் அறிக்கைகளை ஏதாவது ஒரு பக்கத்தில் எங்கோ ஒரு மூலையில் பிரசுரித்ததையும் மறந்துவிட முடியாது. இது பற்றி அன்று கவிஞர் கண்ணதாசன், ‘’இந்த தமிழ் நாட்டு அரசியலை காமராஜா? கருணாநிதியா? என்ற நிலையில் இருந்து கருணாநிதியா? நடிகர் எம்.ஜி.ஆரா? என்று பத்திரிகைகள் திசை திருப்புவது வேதனையளிக்கிறது’’ என்றார்!

சசிகலாவுக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பதவியையும் ஜெயலலிதா கடைசி வரை தரவில்லை. கடைசி வரை தன்னை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு செயல்படும்படி பார்த்துக் கொண்டார்! ஆனால் அதற்கே மிகப் பெரிய விலையை அவர் கொடுத்தார்! ஆனால்,ஏதாவது ஒரு பதவியை சசிகலாவிற்கு ஜெயலலிதா தந்திருந்தால்..அதன் பிறகு அவர் தன்னையே தொலைத்திருப்பார்! அதனால் தான் அந்த தவறை மட்டும் கடைசி வரை செய்யவில்லை!

எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் நல்ல ஆட்சி தந்துவிடவில்லை! இது ஒரு மோசமான ஆட்சி தான்! ஆனால், சசிகலா மட்டும் ஜெயிலுக்கு போகாமல் இருந்திருந்தால் இது படு மோசமான ஆட்சியாக இருந்திருக்கும்! தமிழ்நாட்டை சசிகலா குடும்பம் கேள்வி முறையில்லாமல் சூறையாடி இருக்கும்! இன்றைக்கு எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் இவ்வளவு சுதந்திரமாக செயல்பட்டிருக்க முடியாது. கைகட்டி,வாய் பொத்தி அந்த குடும்பத்திற்கு கப்பம் கட்டுவதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும்..!

எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஜெயலலிதாவை முன் நகர்த்தி, பலரையும் எம்.ஜி.ஆரிடமிருந்து பிரித்து கேம் செய்தவர்கள் நடராஜன் – சசிகலா தம்பதியினர்! கட்சியின் அதிகார மையத்தை எம்.ஜி.ஆரிடமிருந்து ஜெயலலிதாவிற்கு மெல்ல,மெல்ல, நகர்த்தி கொண்டு போக காரணமாயிருந்தது சசிகலா குடும்பம் என்பதும் யாவரும் அறிந்ததே!

அதன் பிறகு கட்சியின் மூத்த தலைவர்களான நெடுஞ்செழியன், ராஜாராம், பண்ருட்டி..தொடங்கி சேலம் கண்ணன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட எண்ணற்றோரை கட்சியில் அவமானப்படுத்தியும், வெளியேற்றியும் கேம் ஆடியவர் சசிகலா! கடைசியில் ஜெயலலிதாவை தன்னைத் தவிர யாரும் அணுக முடியாது என்று சிறைபடுத்தி அரசியல் செய்தவர் தான் சசிகலா!

ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்கு மிகப் பெரிய கெட்ட பெயர் வரக் காரணமாகும் அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் சொத்து வாங்கி குவித்தவர் தான் சசிகலா! கடைசியில் ஜெயலிதாவின் இறப்பையே ஒரு மர்மமாக்கி, விசாரணை கமிஷன் தேவைப்படும் நிலையை உருவாக்கியவரும் சசிகலாவே! தினகரனோ சசிகலாவைக் காட்டிலும் ஆபத்தானவர்! அவர் ஜெயலலிதா இருக்கும் போதே முதல்வர் கனவில் வலம் வந்தவர் தான்! அதனால் தான் ஜெயலலிதா கடைசி வரை தினகரனை பக்கத்தில் சேர்க்கவே இல்லை!

சசிகலா குடும்பத்தின் அராஜக அரசியல் தெரிந்து தான் பாஜகவானது சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியதோடு, தினகரனை எச்சரித்து அடக்கி வைத்தது. சசிகலா கண்ட்ரோலில் இருந்து ஒ.பி.எஸ்ஸை விடுவித்து, தர்மயுத்ததிற்கு தயார் செய்தது. ஆகவே பன்னீருக்கு வேறு யாரைக் காட்டிலும் சசிகலா குடும்பத்தின் அராஜகங்களும்,ஆபத்தும் நன்றாகவே தெரியும்! ஆனால், இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் மிக நிதானமாகவும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமலும் இருக்கிறார் என்று நினைக்கிறேன்!

எடப்பாடியையும்,அமைச்சர்களையும்பொறுத்த வரை கடந்த காலங்களில் சசிகலாவின் தளபதியாக அந்தம்மாவிற்கும், அந்த குடும்பத்திற்கும் கை,கட்டி,வாய் பொத்தி எவ்வளவோ கப்பம் கட்டி சலித்து போய்விட்டதாகத் தெரிகிறது. ஆனால், எடப்பாடி இன்னமும் சசிகலா குடும்பத்தை விரோதியாக நினைக்கவில்லை.மறைமுகமாக நிறைய உதவிகளை செய்து வருவதாகத் தெரிகிறது. மிடாஸ்க்கு பல ஆயிரம் கோடி டாஸ்மாக் ஆர்டர்களை கொடுத்தது தொடங்கி, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு எதிரிலேயே இன்னொரு பங்களாவை சசிகலா குடும்பம் கட்டுவதற்கு அரசாங்க ரீதியாக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கியது வரை அணுக்கமாகவே இருந்துவந்துள்ளார்! ஒரு இளைஞருக்கு ஆக்சிடெண்ட் ஏற்படுத்தி அவரது உடல் உறுப்புகளை நடராஜன் தனக்கு பொருத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இருந்து அந்த குடும்பத்தை பாதுகாத்தது தொடங்கி சகலவிதத்திலும் விசுவாசம் மாறாமல், நன்றி காட்டுவதாகவே தெரிகிறது! அவரை பொறுத்த வரை சசிகலா குடும்பம் அரசியலில் தலையிடாமல் இருந்தால் போதும் என நினைக்கிறார்.

ஆனால், சசிகலா இதற்கெல்லாம் திருப்திபட்டு ஒதுங்கி போய்விடுவார் என்று தெரியவில்லை! கடுமையான மோதல் போக்கை கையில் எடுப்பார் என்றே நம்புகிறேன்! குறிப்பிடத்தக்க எம்.எல்.ஏக்களையும், அமைச்சர்களையும் தன் பக்கம் இழுப்பார்! ஆட்சியை ஆட்டம் காண வைப்பார். குறைந்தபட்சம் தேர்தல் நேரத்தில் ஆட்சியில் அதிமுக இல்லாத அதிமுகவோடு மோத வேண்டும் என்று கணக்கு போட்டிருப்பார்! அதற்காக பல சட்ட சிக்கல்களையும் உருவாக்குவார்!

சசிகலா விவகாரத்தில் பாஜக தலைமை ஒரு ’பொலிடிகல் கேம்’ ஆடிப்பார்க்க காத்திருக்கிறது. இப்பவே எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் அவர் கை பலப்பட்டுவிடும். சசிகலா தொந்தரவு குடுத்து எடப்பாடி பலவீனப்பட்டால் தான் தனக்கு தொகுதி பேரத்தில் அதிக சீட் கேட்க வாய்ப்பாகும் என திட்டமிடுகிறார்கள் என்பதே என் மதிப்பீடாகும்!

முக்குலத்து சமூகம் முழுக்க சசிகலா பின்னால் அணிவகுத்து நிற்பது போல பலரும் மீடியாவில் பேசி வருகிறார்கள்! அது அந்த சமூகத்தையே இழிவுபடுத்துவதாகும்! சசிகலா குடும்பத்தால் பலனடைந்த ஒரு விசுவாசக் கூட்டம் அவர்களுக்கு இருக்கிறது என்பதை தவிர்த்து, அந்த சமூகத்திலும் சரி, அதிமுகவிலும் சரி..அடிமட்டம் தொடங்கி மேல்மட்டம் வரை சசிகலா குடும்ப தலையீடுகளற்ற கட்சியும், ஆட்சியுமே ஆரோக்கியமானது என்ற எண்ணத்தையே பரவலாக பார்க்கமுடிகிறது.

சசிகலா விவகாரத்தில் தமிழக டி.ஜி.பிடம் புகார் கொடுத்ததன் மூலம் இந்த ஆட்சியாளர்கள் தங்கள் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டனர்! ஒன்று அலட்சியப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது ரொம்ப ‘அலப்பல்’ செய்தால் நடவடிக்கை பாயும் என்பதை சொல்லாமல் சூசகமாக உணர்த்தி இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பி.ஹெச்.பாண்டியன் இல்லாமல் போனது ஒரு மிகப் பெரிய பின்னடைவாகும்! ஆட்சியில் இருப்பவர்களுக்கு தங்கள் பவர் என்ன என்று தெரியாவிட்டால் தன்னுடைய பவர் என்ன என்பதை சசிகலா காட்டிவிடுவார்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time