வியக்க வைக்கிறார் விஜய்சேதுபதி!

-சாவித்திரி கண்ணன்

தகுதிக்கு மீறிய வகையில் தன் பிம்பங்களை கட்டமைத்து வித்தை காட்டும் சினிமா ஹீரோக்கள் மத்தியில் கதாபாத்திரத்திற்குள் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்வதற்கு மேலாக எதையும் மிகையாக முயற்சிக்கமாட்டார்! கதாநாயகனுக்குரிய அனைத்து மாயைகளையும் கட்டுடைத்த இயல்பான மனிதன்! இந்த வகையில் தான் விஜய் சேதுபதி மக்களின் விருப்பத்திற்குரிய ஒரு கலைஞனாக வலம் வருகிறார் என்று தோன்றுகிறது!

பொதுவாக சினிமா என்ற மீடியாவால் பொய்யானவர்கள் நல்லவர்களாகவும், அயோக்கியர்கள் உத்தமர்களாகவும் தோற்றம் பெற்று விடுகின்றனர்! இப்படி அவர்கள் தோற்றம் பெற பத்திரிகைக்காரர்களும் தங்கள் பங்கிற்கு துணை போவார்கள்! அப்படி கட்டமைக்கப்படும் மாயையைக் கொண்டு அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவும் நடிகர்கள் தைரியம் பெற்றுவிடுகின்றனர்!

விஜய் சேதுபதியிடம் எனக்கு பிடித்த விஷயம் அவர் எந்த மாயைக்குள்ளும் மக்களை ஆழ்த்த விரும்பாதவர் மட்டுமல்ல, தானும் அப்படி ஒரு கற்பனை செய்து சிக்கி கொள்ளவதில்லை! தான் எப்படியோ அப்படியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்! தன் தகுதிக்கு மீறிய எந்த புகழ்ச்சியையும் அவர் மனதிற்குள் போட்டுக் கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, ’’ஐயோ.. நீங்க நினைக்கிறாப்புல நான் இல்ல, அந்த தகுதி எல்லாம் எனக்கு கிடையாது’’ என்றும் பேசிவிடுகிறார்! திரைப்படத்துறையில் தன்னை ஒரு இமேஜிற்குள் நுழைத்துக் கொண்டு மீள முடியாமல் அழிந்து போனவர்கள் அதிகம்! மிகப் பெரிய திறமைசாலிகள் எல்லாம் கூட இந்த இமேஜ் வளையத்தை உருவாக்கிக் கொண்டு, அழிந்து போயுள்ளார்கள்!

எது உண்மையோ அதை நேர்பட பார்க்க முடிந்தாலே போதும் வாழ்க்கையில் பல துன்பங்கள், அழிவுகளில் இருந்து இயல்பாக நாம் மேலேழுந்து வந்துவிடலாம்! அப்படிப்பட்ட ஒரு பெர்சனால்டிக்கு உதராணமாக விஜய் சேதுபதி இருப்பதன் காரணமாகத் தான் அவரை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தன்னிச்சையாக ஏற்ப்பட்டது!

எனக்கு நேரடி பழக்கமில்லை, நேரில் பார்த்ததுமில்லை..! அவருடைய திரைப்படங்கள், பேட்டிகள், உரைகள்..ஆகியவற்றை அவதானித்த வகையில் தான் இந்த மதிப்பீட்டிற்கு வந்தேன்!

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராஜபாளையம் என்ற ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்து, சினிமாவிற்குள் வர வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு அக்கவுண்டண்ட்டாக இருந்தவர், கல்யாணத்திற்குப் பிறகு முயற்சித்து, நூற்றுக்கணக்கான துணை நடிகர்களில் தானும் ஒருவனாகத் தலைகாட்டி வெறும் 250 ரூபாய் சம்பளம் பெற்ற விஜய் சேதுபதி, ஆறேழு வருட போராட்டத்திற்கு பிறகு தான் தென் மேற்கு பருவகாற்றில் கதாநாயகன் ஆனார்! இன்று இந்தியாவின் பல மொழி மக்களாலும் விரும்படுகிற ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வளர்ந்ததற்கு அடித்தளமிட்டது அவருடைய திறமை மட்டுமல்ல, குணமும் தான் காரணம்!

நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்ற பிடிவாதமில்லை! எந்த கேரக்டரில் வேண்டுமென்றாலும் தயங்காமல் ஒத்துக் கொள்கிறார்! கேரக்டர் பிடித்துவிட்டால் சம்பளத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் தன்மையும் இருப்பதாக தெரியவருகிறது! யாரோடு இணைந்து நடித்தாலும் அவருக்கு ஈகோ பிரச்சினை இல்லை! எல்லோரோடும் ஒரு நல்லுறைவை அவரால் பேண முடிகிறது!

நடுவுல சில பக்கத்தை காணோம் என்ற படம் வந்த போதே என் எட்டு வயது மகன் சிவா அவருடைய ரசிகனாகிவிட்டான்! சூது கவ்வும், இதற்காகத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, பீட்சா, வெண்ணிலா கபடிக் குழு..என ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான பெர்பாமன்ஸ்! செக்கச் சிவந்த வானத்தில் அனைத்து திறமையான நடிகர்களுக்கு மத்தியிலும் தனக்கான கதாபாத்திரத்தை பிரமாதப்படுத்தி இருப்பார்! சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தின் வலியை துல்லியமாக பிரதிபலித்திருந்தார்! 96 படத்தில் அசத்திவிட்டார்! அதற்கு மேல் அதை யாரும் மெருகேற்றிவிட முடியுமா தெரியவில்லை!

தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல் நல்ல திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்து வருகிறார்! துளியும் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையிலும் மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை உருவாக்க தோழர்.லெனினுக்கு துணை நின்றார்!

தோழர்.எஸ்.பி.ஜனநாதனுக்காக புறம்போக்கு என்ற படம்! தற்போது மீண்டும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விவசாயத்தின் பிரச்சினைகளை சொல்லும் லாபம் படம் வெளிவர உள்ளதாகத் தெரிகிறது. ஜீங்கா, ஆரஞ்சு மிட்டாய், சென்னை-பழனி மார்ஸ் போன்ற  படங்களை தயாரித்து முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்! அதாவது, அதில் லாபமோ, நஷ்டமோ பொருட்படுத்தாமல் செய்கிறார்! ஆரோக்கியமான திரை முயற்சிகளுக்கு, மக்கள் நலம் சார்ந்த திரைப்படைப்புகளுக்கு, அந்த தன்மையுள்ள கலைஞர்களுக்கு தன்னுடைய பங்களிப்பை இடையறாது செய்து வருகிறார்! ஒரு முற்போக்காளராக இயல்பாக வெளிப்படுகிறார்! ஆகவே, அவருக்கு ’மக்கள் செல்வன்’ என்ற பெயர் சரியாகவே பொருந்துகிறது!

கதை,வசனம், தயாரிப்பு, பாடல்ஆசிரியர், பாடகர் என எல்லா முயற்சிகளையும் உண்மையான ஈடுபாட்டுடன் விஜய் சேதுபதி மேற்கொள்கிறார்! ரஜினியோடு பேட்ட படத்தில் நடித்த போது அந்த மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருக்கு இணையாக ரசிகர்கள் இவர் தோன்றும் காட்சிகளிலும் ஆரவாரம் செய்தனர்! மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்! அதே போல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்மா, உபேண்டிரா என இரு படங்கள்! தெலுங்கில் சிரஞ்சீவி ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறார் என்பதை விட சிரஞ்சீவியாலேயே கொண்டாடப்படுகிறார்!

மனிதாபிமானம், எளிமை, உண்மை, நேர்மை, திறமை அனைத்தையும் ஒருங்கே பெறுவது என்பது அபூர்வத்திலும் அபூர்வம்! தகுதியானவர்களை அடையாளப்படுத்தி அங்கீகரிக்காமல் போவதும் ஒருவித அநீதியாகிவிடும்! விஜய் சேதுபதி உண்மையிலேயே ஒரு மக்கள் கலைஞரே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time