பொய்களால் பொழுதளக்கும் பிரதமர்- விவசாயிகள் கொந்தளிப்பு!

- மணிமாறன், பத்திரிகையாளர்

விவசாயிகளுக்கு எதையெல்லாம் நிறைவேற்றித் தருவோம் என பாஜக அரசு கூறியதோ…, அவை நிறைவேற்றாமலே, நிறைவேற்றியதாகப் பொய்களை பேசி வருகிறது. உண்மையில் விவசாயிகளுக்கு  ஒரளவுக்கேனும் இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் புதிய வேளாண் சட்டங்கள் பறித்துக் கொண்டன! முக்கியமான விவசாய விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி விட்டதாகவும், அது தொடரும் என்றும் பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய் என்பதே  போராடும் விவசாயிகளின் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். நடுங்கவைக்கும் குளிர், உறைபனி, மழை என எதற்கும் அசையாமல் 70 நாட்களுக்கும் மேலாக கொந்தளிக்கும் மனதுடன் போராட்டத்தை தொடர்கின்றனர்.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடுவண் அரசு நடத்திய 11 சுற்றுப் பேச்சும் தோல்வி அடைந்துவிட்டது. நடுவண் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “வேளாண் சட்டங்களின் ஒவ்வொரு பிரிவாக எடுத்து விவாதிக்கலாம் என்றால், யாரும் தயாராக இல்லை” என அங்கலாய்க்கிறார்.  “எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையையும்விட கூடுதலாக விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தியிருக்கிறோம்” என்றும் அவர் கூறுகிறார்.

“குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு (MSP) எந்தப் பாதிப்பும் இருக்காது” என பிரதமர் மோடியும் நடுவண் அரசும் மீண்டும் மீண்டும் உறுதி அளித்துக்கொண்டே உள்ளனர். அப்படியானால் விவசாயிகள் எதற்காகப் போராடுகிறார்கள்? அவர்களின் கோரிக்கைதான் என்ன?

2014 ஆம் ஆண்டில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பரப்புரையில் ஈடுபட்ட பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தவுடன் 12 மாதங்களில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்துவோம் என உறுதி அளித்தது. இதற்கும் மேலாக விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு அதைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயிப்போம் என்றது!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இந்தியாவின் ஆட்சி அதிகாரம் மோடியின் கைகளுக்குச் சென்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்துவிடும் என உழவர்கள் எதிர்பார்த்தனர். பதவியேற்றதற்கு அடுத்த ஆண்டு 2015 ல், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்த நடுவண் அரசு, ‘எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்தினால், சந்தை விலையை சிதைத்துவிடும்’ என தெரிவித்திருந்தது.

அதன் பிறகும், நடுவண் அரசின் வழக்குரைஞர் தானே சொன்னார். மோடி அரசு கண்டிப்பாக செயல்படுத்திவிடும் என விவசாயிகள் நம்பினர். அன்றைய நடுவண் வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங், “சுவாமிநாதன் குழுவின்  மோசமான பரிந்துரையை மறந்துவிடுங்கள்” என ஒரே போடாக போட்டுவிட்டார். “தயவுசெய்து மத்தியப்பிரதேசத்தைப் பாருங்கள், சிவ்ராஜ் சிங் சவுகானின் மாதிரி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையைவிட முன்னேறியது. உயர்வானது” என்றும் அவர் கூறினார்.

ராதாமோகன் சிங் இப்படிக் கூறிய அதே ஆண்டில்தான் மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டங்கள் வெடித்தன. மாண்டவுசர் என்ற இடத்தில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது பா.ஜ.க., அத்தோடு சிவ்ராஜ் சிங் சவுகான் மாதிரி என பா.ஜ.க.  பேசுவதும் நின்றுபோனது.

அடுத்து 2018 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அருண் ஜேட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, “எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டோம். இதன்படி ரஃபி சாகுபடியில் செயல்பாட்டுக்கும் கொண்டுவந்துவிட்டோம்” என்றும் அறிவித்தார். (பாரா 13, 14)

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில், “எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய ஒரே கட்சி நாங்கள்தான்” என பா.ஜ.க. அறிவித்தது. “எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை எப்பொழுதும் ஆதரிப்பது பா.ஜ.க. மட்டும்தான். குறைந்த பட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ததும் பா.ஜ.க. தான்” என்றும் அறிவித்தனர். அதைத்தான் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை என்ன சொல்கிறது?

உழவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு தானியங்களுக்கும் அதன் உற்பத்தி செலவுடன், 50 விழுக்காட்டை லாபம் சேர்த்து அவர்களுக்கு தர வேண்டும்  என்பதுதான் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் முக்கியப் பரிந்துரை. ஆனால் உற்பத்திச் செலவில், களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், குடும்பத்தினர் உழைத்தல் போன்றவை சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,சேர்க்கவில்லை! அப்படி பார்க்கும் போது எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையே விவசாயிகளுக்கு முழு நியாயத்தை பெற்றுத் தரவில்லை!

ஆனால்,அதன் அடிப்படையில் கூட இது வரை குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை என்பது தான் சோகத்திலும் சோகம்! புதிய வேளாண் சட்டங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்படியான நிர்பந்தங்களோ, அரசின் எழுத்து பூர்வமான உத்தரவாதமோ எதுவும் இல்லை.

ஆனால், “குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும்” பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி அது தொடரும் எனவும் பச்சையாக பொய்யுரைக்கிறார்! நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையிலும் இதே பொய்யை தெரிவித்துள்ளார். ஆனால், குறைந்த பட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில் இருந்த முந்தைய சட்டத்தை தான் புதிய வேளாண் சட்டங்கள் போட்டு  காலி செய்துவிட்டார் என்பதே விவசாயிகள் குற்றச்சாட்டு!

2014ல் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ 1,500 இருந்தது. தற்போது அது ரூ 1,888 என்பதாக உள்ளது! இந்த இடைபட்ட காலங்களில் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டால், மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை ஒரு சிறிதும் நிறைவேற்றவில்லை என்பது தான் யதார்த்தம்! மேலும் இந்த வேளாண் சட்டங்கள் அறிவிப்புக்கு பின்பு சந்தையில் குவிண்டால் நெல்லை 1,500 க்கு விற்பதே கடினம் என்றாகிவிட்டது.

1965-லிருந்து மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விவசாய செலவு மற்றும் விலைக் குழுவின் பரிந்துரையின் பேரில் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படுகிறது.  23 வகையான பொருட்களுக்கு மட்டும் மத்திய அரசின் கீழ் உள்ள வேளாண் செலவு மற்றும் விலைக்கான கமிசன் (Commission for Agricultural Costs and Prices (CACP), குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 7 தானிய வகைகள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், ராகி, கம்பு, பார்லி),  வகையான எண்ணெய் வித்துகள், 5 வகையான பயறு/பருப்பு வகைகள் மற்றும் 5 வகையான வணிகப் பயிர்கள் ( பருத்தி, கரும்பு, தேங்காய் மற்றும் சணல்). இவைகளுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதரவு விலை இருந்தது பல்வேறு காரணங்களால், சமீப காலங்களில் உற்பத்திச் செலவில் பெரிய உயர்வு ஏற்பட்டபோதும், அதை மட்டும் கணக்கில்கொண்டு விலை நிர்ணயம் செய்வது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், விலைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விலையைவிடக் குறைவான விலையை மத்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் அறிவித்து விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற போதிலும் அது ஒரளவு குறைந்தபட்ச பாதுகாப்பையாவது விவசாயிகளுக்கு வழங்கி வந்தது. தற்போதைய புதிய வேளாண் சட்டங்கள் அதற்கும் வேட்டு வைத்துவிட்டது என்பதே விவசாயிகளின் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாகும்!

விவசாயத்துறை வளர்ச்சி குறித்து அரசால் தரப்படும் புள்ளி விவரங்கள் எதுவும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமையை பிரதிபலிப்பதில்லை. உண்மையில், மிகப்பெரும் அதிருப்தியில் விவசாயிகள் சமூகம் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் மற்ற தொழில்துறையினரின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் எதுவும் விவசாயிகளிடம் எட்டிப்பார்க்கவில்லை.

1970 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் கோதுமையை ரூ.76 க்கு விற்பனை செய்தனர். 2015 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் கோதுமையை ரூ.1450 க்கு விற்பனை செய்தனர். இந்த அதிகரிப்பு 20 மடங்குகூட இல்லை. ஆனால், உரத்தின் விலை 50 மடங்கு உயர்ந்துள்ளது! இதே காலத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் 150 மடங்கு உயர்ந்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் 170 மடங்கு அதிகரித்துள்ளது. பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் 320 மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த 40 – 50 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் மிகக் குறைந்துள்ளது. இன்று 80 விழுக்காடு உழவர்கள் நட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். வேளாண்மை சார்ந்து வாழ முடியாது என்ற நிலையில், அவற்றில் இருந்து வெளியேறிவரும் பல லட்சம் பேர் வேலை தேடி நகரங்களைத் தேடி ஓடுகின்றனர். அங்கும் அமைப்புசாரா தொழிலாளர்களாக, புலம்பெயர் தொழிலாளர்களாக அவதிப்பட்டு, நாடு முழுவதும் குருதி சிந்த நடந்தே துயரத்தில் தவிக்கின்றனர்.

வேளாண் சமூகத்தின் இந்த பாதுகாப்பின்மையை நிரந்தரமாக உறுதிபடுத்திட மோடி அரசால் கொண்டு வரப்பட்டது தான் மூன்று வேளாண் சட்டங்கள். அதனை பொய்களால் நியாயப்படுத்திவிட முடியாது! இவற்றை முறியடிப்பதற்காக உழவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம், அவர்களின் வாழ்வா? சாவா? போராட்டம். இதில் மீண்டும்,மீண்டும் பொய்களைக் கூறிவருவதன் மூலம் விவசாயிகளின் கோபத்தை தான் பிரதமர் அதிகப்படுத்துகிறார்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time