போலித்தனமில்லாத நிஜக் கலைஞன் நிவாஸ்..!

- ரதன் சந்திரசேகர்

சமரசமற்ற ஒளிப்பதிவு மேதை, திரைக்கதையோட்டத்திற்கு அன்னியமாக ஒரு போதும் திசைமாறாத கேமரா அவருடையது! கதைக்கான மைண்ட் செட்டப்போடு, ஆத்மார்த்தமாக ஒளிப்பதிவு செய்பவர் என்ற வகையில் ஒரு இயக்குனரின் எண்ணத்தை காட்சி வடிவில் கொண்டு வந்து நிறுத்துவதில் தன்னிகரற்றவர்! அந்த வகையில் பாரதிராஜாவின் முதல் ஐந்து படங்களின் வெற்றியில் கேமரா நிபுணர் நிவாஸிற்கும் கணிசமான பங்கிருந்தது!

என் பள்ளிக்காலம்.

ஏதோ ஒரு வார இதழில்  கமலஹாசனிடம் இப்படி ஒரு கேள்வி :

‘ பாலுமகேந்திரா, அசோக்குமார், நிவாஸ். மூன்று ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?”

பாலுமகேந்திரா, அசோக்குமார் குறித்து தன் கருத்தை  சொன்ன  கமல், நிவாஸ் குறித்து,              ‘’நோ கமெண்ட்ஸ்’’ என்று பதில் சொல்லியிருந்தார்.

பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்று மட்டுமல்லாமல், அவர் பணியாற்றிய படங்களின் அருமையான ஒளிப்பதிவு அழகுக்காகவும் பேசப்பட்ட நிவாஸ் பாரதிராஜாவிடமிருந்து  விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட காலம் அது.

எனக்குப் புரியவில்லை. கமலுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனையா, அல்லது நிவாஸ்தான்  ஏதாவது ஏடாகூடமான  ஆளா?

இதை நான் நேரடியாக நிவாஸ் அவர்களிடமே கேட்கிற வாய்ப்பை காலம் எனக்கு வழங்கிற்று.  ஆமாம், சினிமா வாய்ப்புத்தேடி வந்த எனக்கு அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘செவ்வந்தி’ படத்தில்  உதவி இயக்குநராகப் பணிசெய்கிற வாய்ப்பு கிடைத்தது . கமல்ஹாசனின் கருத்துக்கு நிவாஸ் அவர்களின் ஒரு ட்ரேட்மார்க் குறும்புச் சிரிப்பு மட்டுந்தான் எனக்கு பதிலாகக் கிடைத்தது.

ஒரு பிரபல வாரப்பத்திரிகை நிருபர் ஒருவர் நிவாஸ் அவர்களை பேட்டி எடுக்கவேண்டுமென்று நடையாய் நடந்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில், வேண்டாவெறுப்பாக சம்மதித்தார் நிவாஸ்.  நேர்காணல் தொடங்கியது. எடுத்தவுடன் நிருபர் கேட்டார்

” நீங்கள் தமிழில் ஒளிப்பதிவு செய்த முதல் படம் எது?”.

நிவாஸுக்கு வந்ததே கோபம். கதை விவாத அறையில் அமர்ந்திருந்த என்னை உரத்த குரலில் கூப்பிட்டார்.  மற்றெந்த உதவியாளர்களையும் விட சில இன்ச்கள்  குருபக்தி அதிகமாயிருந்த நான் விழுந்தடித்துக் கொண்டு போய் அவர் முன்னால் நின்றேன். “ரதன்! நான் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் என்ன?” என்று கேட்டார்.  நான் ஏதும் புரியாதவனாய், அவரையும், அவர் எதிரே அமர்ந்திருந்த நிருபரையும் பார்த்தபடி,” பதினாறு வயதினிலே ஸார் !” என்றேன்.

“அடுத்த படம்?” என்றார்.

“கிழக்கே போகும் ரயில்” என்றேன். “அப்புறம்?” என்று கேட்டார்.

என்னை ஏதாவது சோதனை செய்கிறாரா? நான் குழப்பத்துடன், ” சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள். பிறகு கல்லுக்குள் ஈரம் படத்தை டைரக்ட் செய்து  ஒளிப்பதிவும் செய்திருந்தீர்கள் ஸார் !” என்றேன். என்னைக் கையமர்த்திவிட்டு, எதிரேயிருந்த நிருபரிடம் சொன்னார், “இவன்   சினிமா கத்துக்கணும்னு  இப்பதான் என்கிட்டே அசிஸ்டண்ட் டைரக்டரா சேர்ந்திருக்கிற பையன். எவ்ளோ விஷயம்  சொன்னான் கேட்டீங்களா?  ஒரு பெரிய வீக்லிலேர்ந்து ரிப்போர்ட்டரா வந்திருக்கிற ,ஆனா, பேட்டி நீங்க பேட்டி எடுக்க வந்திருப்பவர் யார்? என்ன செய்திருக்கிறார்..? என்ற அடிப்படைத் தகவல்கள் கூட அறியாமல் வந்து கேட்டுக்கிட்டிருக்கீங்க…   இதுக்கு தான் நான் முதல்லயே  சொன்னேன்,  இந்த  பேட்டிக்கீட்டியெல்லாம் எனக்கு ஒத்துவராதுன்னு! நீங்க கிளம்புங்க !” என்று எழுந்து போயே விட்டார் நிவாஸ்.

ஆமாம், எவ்வளவோ புகழ்பெற்ற படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்தபோதும்,  ஒரு பத்திரிகை  பேட்டிகூட கொடுக்க விரும்பாத, விளம்பர வெளிச்சம் தன்மேல் விழாமல் பார்த்துக்கொண்ட ஒரு புதிரான கலைஞர் அவர்.

கல்லுக்குள் ஈரம், எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள், செவ்வந்தி ஆகியவை அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படங்கள். கல்லுக்குள் ஈரத்தில் உண்மையான, இயல்பான பாரதிராஜாவை நமக்கு நிவாஸ் காட்டியிருப்பார்!

அவரிடம் பணியாற்றத் தொடங்கிய சிலகாலம் கழித்துதான், அவருக்கு தேசிய விருது பெற்றுத்  தந்த மலையாளபடமான ‘மோகினியாட்டம்’ என்ற கறுப்பு வெள்ளைப்படத்தை  நான் பார்க்க நேர்ந்தது.  பார்த்துவிட்டு அவரிடம் பேசும் போது சொன்னார்;

“இதைவிட நல்லபடங்களெல்லாம் பண்ணிருக்கேன். இவுங்க ஏன் இதுக்கு நேஷனல் அவார்ட்  குடுத்தாங்கன்னு  எனக்கு வெளங்கவே இல்லை” என்று ஒரு போடு போட்டார்.

அவரது ஒளிப்பதிவுத் திறமை குறித்தான என் நேரடி அனுபவமொன்று இருக்கிறது.

‘செவ்வந்தி’ படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், பத்திரிகை செய்திகளை வழங்கும்போது, ‘ஒளிப்பதிவின் போது பயன்படுத்த ஒரு டார்ச்லைட்டைக்கூட எடுத்துச் செல்லாமல் படமாக்கப்பட்ட படம்’ என்று குறிப்பிடலாமென்று நிவாஸ் அவர்களிடம் கேட்டேன். ஆனால், அதெல்லாம் தேவையில்லையென்று அவர் மறுத்துவிட்டார்.

உண்மையில், செவ்வந்தி படப்பிடிப்புக்காக ஒரு குளிர்காலத்தில் ஊட்டி சென்ற நாங்கள் ஒரு மினி ப்ரூட், மிகச்  சாதாரணமான  2 kv விளக்கு, ஒரு  ரிஃப்லெக்ட்டரைக்கூட எடுத்துச் சென்றிருக்கவில்லை. ஒருநாள் காலை எங்கள் படப்பிடிப்புக்குழு லொக்கேஷனுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே ஒரு பிரபல இயக்குனர் நடிகரின் படக்குழு வெளிச்சம் போதவில்லையென்று படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கைவசம் இருந்த விளக்குகள் கூட போதவில்லை என்று சொன்னார்கள். நாங்களோ ஒரு டார்ச்லைட் கூட இல்லாமல் போய் அன்றைய படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பினோம். ஓர் அடர்ந்த மூங்கில்காட்டுக்குள், விழி லென்ஸ்கூட ஃ போக்கஸ் செய்வதற்கு சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் இருண்மையினூடே எடுக்கப்பட்ட அன்றைய காட்சிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்போன்ற பளபளப்புடன் காண நேர்ந்தபோது நாங்களெல்லாம் உண்மையில் திகைத்துதான் போனோமென்று சொல்லவேண்டும்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும், ‘எண்ணத்தில் ஏதோ சில்லென்றது’ பாடலும், சலங்கை ஒளி படத்தின், ‘இது மௌனமான நேரம்’ பாடலும், சிகப்பு ரோஜாக்களில் வரும், ‘நினைவோ ஒரு பறவை’ பாடலும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன.

ஒரு மேடைப்  பாடல் காட்சியில். எந்தவொரு  படாடபமோ அலங்காரங்களோ இல்லாமல், வெறுமனே ஓர் வெண்திரைமுன்னே இசைக்கலைஞர்களையும் கமலஹாசனையும் வைத்து ‘என்னடி மீனாட்சி’ பாடலை இளமை ஊஞ்சலாடுகிறது படத்துக்காக நிவாஸ் ஒளிப்பதிவு ஆக்கியிருப்பார் பாருங்கள், எளிமையின் பேரழகு! சலங்கை ஒளியில் ‘தகிடத்ததிமி தந்தானா’ பாடல் காட்சி ரசிகர்களின் கைத்தட்டலில் அதிர்ந்த நினைவுகள் என்னுள் இப்போதும் அலைமோதுகின்றன. விட்டால் சொல்லிக்கொண்டே போவேன்

கடந்த வாரம், பிப்ரவரி இரண்டாம் தேதி கேரளமாநிலம்  கோழிக்கோடு  அரசு மருத்துவமனையில்  உடல்நலிவால் மரணமடைந்தார் நிவாஸ்.

அவரது மரணச்செய்தியை வெளியிட்ட முன்னணிப் பத்திரிகைகள், விக்கிப்பீடியா  உள்ளிட்ட  கேரள, தமிழக  ஊடகங்கள்  பெரும்பாலானவை அவரது புகைப்படத்துக்கு பதிலாக வேறு ஒருவருடைய புகைப்படத்தையே  பிரசுரித்திருந்தார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிரபல பத்திரிகையாளர்கள் கூட அவர் முகமறியாதிருந்தார்கள். அப்படித்தான் அவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார் என்பதா? அல்லது பத்திரிகைகளின் யோக்கியதை நினைத்து வேதனைப்படுவதா? தெரியவில்லை!

நிவாஸ் யார் என்பதை அவர் ஒளிப்பதிவு செய்த படங்கள் தான் சொல்ல வேண்டுமென்கிற பிடிவாதம் அவருக்கிருந்ததாகவே நான் உணருகிறேன். அதேபோல, தான் பணியாற்றிய படங்களில், திரையோட்டத்தைத் தாண்டி, ஒளிப்பதிவு என்கிற விஷயம் தனியே துருத்திக் கொண்டு தெரிந்து விடக்கூடாது  என்கிற கவனம் அவருக்கு இருந்தது என்பதை அவருடனான உரையாடல்களிலிருந்து அறிந்தேன்.

1945 செப்டெம்பர் 15 இல் கேரளத்தின் கோழிக்கோட்டில் பிறந்த நிவாஸ், அங்குள்ள புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று, பின்னர் சென்னை அடையாறு அரசு திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு கற்றவர்.

பாபு நந்தன் கோடு இயக்கிய  ‘சத்யத்தின்டே நிழலில்’ என்கிற மலையாளப் படத்தில் தான் அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து சில மலையாளப் படங்கள். 1976 இல் ‘மோகினியாட்டம்’  மலையாளப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவர் மீது வெளிச்சம்  பாய்ச்சியது. தெலுங்கில் சாகர சங்கமம் ஆந்திர அரசின் நந்திவிருதை பெற்றுத் தந்தது.

கருப்பு வெள்ளை சினிமாவிலிருந்து வண்ணபடங்களுக்கு இந்திய சினிமா நிறம் மாறிக் கொண்டிருந்த காலத்தில், சினிமா எடுக்க எவரும் தயங்கிய ‘ஆர்வோ’ எனும் வண்ணச் சுருளைப் பயன்படுத்தி அவர் ‘பதினாறு வயதினிலே’ படத்தை உருவாக்கத் துணிந்தது உண்மையிலேயே அக்காலத்தில் ஒரு பெரும் சோதனை முயற்சிஅந்தப்படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்தவர்கள் மூக்கின்மேல் விரலை வைத்துச் சிலாகித்தார்கள். விலை குறைவான ஆர்வோபிலிமும்  வர்த்தகச் சினிமாவுக்கு ஏற்றதுதான்  என்று அவர் நிறுவினார். அவரைக் கொண்டாடும் விதமாக, ஆர்வோ நிறுவனம் தன் படச்சுருள் பெட்டியின்மீது நிவாஸின் படத்தைப்பொறித்து கௌரவித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேலே குறிப்பிட்டதுபோக, அவர் ஒளிப்பதிவு செய்த மேலும்சில படங்களின்  பெயர்களை மட்டும் இங்கே குறிக்கிறேன், அவர் பெருமையை அறிந்திராதவர்கள் அறியக்கூடும் :

இளமை ஊஞ்சலாடுகிறது, தனிக்காட்டு ராஜா, சலங்கை ஒலி, எனக்காக காத்திரு, கோழி கூவுது, கொக்கரக்கோ, செண்பகமே செண்பகமே, மை டியர் லிஸா, பாஸ்மார்க், நிமாஜ்ஜனம் (தெலுகு), ஸங்கீர்த்தனா (தெலுகு), சங்குபுஷ்பம் (மலையாளம்), மான்ய மஹாஜனங்களே (மலையாளம்),  சர்ப்பம் (மலையாளம்), ஸோல்வா  ஸாவன் (ஹிந்தி),ரெட் ரோஸ் (ஹிந்தி),

சரி, நிவாஸ் குறித்து ‘நோ கமெண்ட்ஸ்’ என்று  கமலஹாசன் சொன்ன புதிர் என்னளவில் அவிழவே இல்லை.ஆனால்,கமல்ஹாசன்  நிவாஸின்மீது வைத்திருந்த அபிமானத்தின் காரணமாக  பின்னாளில் நடந்த ஒரு சம்பவம்  மற்றொரு  விடையாக எனக்குக் கிடைத்தது. ‘அவ்வை சண்முகி’ படத்தில் இடம்பெற்ற ‘காதலா காதலா, காதலால் தவிக்கிறேன்’ என்ற பாடலை, அப்படத்தின் ஒளிப்பதிவாளரல்லாத நிவாஸ்தான் படமாக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கமல்ஹாசன் வலியுறுத்தி யதன்பேரில், அந்தப் பாடலை ஹெலிகாப்டரில் பறந்தபடி படமாக்கித் தந்தார்  நிவாஸ்.

இந்திய சினிமாத் துறையின் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் நிவாஸ் அவர்களுக்குத் தனியிடம் உண்டு என்பதை தங்கள் இரங்கல் செய்தியில்  பிரபல ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராமும், சந்தோஷ் சிவனும் வெளிப்படுத்தினார்கள்.

என்றென்றுமாக  பதியப்பட்டிருக்கும் அவரது திறமைக்கு நமது வணக்கங்கள். மறைந்த அந்த  ஆளுமைக்கு நமது அஞ்சலிகள்.

கட்டுரையாளர்; ரதன் சந்திரசேகர்

பத்திரிகையாளர்

திரைப்பட இயக்குநர்

இடதுசாரி சிந்தனையாளர்

காந்தியப்பற்றாளர், எழுத்தாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time