சமாளிப்பார்களா..? சரிந்து வீழ்வார்களா…?

-சாவித்திரி கண்ணன்

அதிகாரம்,செல்வம்..ஆகியவற்றை மையபடுத்தி செயல்படும் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதற்கும், வேறுபட்டு பிரிவதற்கும் அதுவே காரணமாகிவிடுகிறது!

இ.பி.எஸ்ஸையும்-ஒபிஎஸ்ஸையும் ஒன்றுபடுத்தி இருப்பதற்கும் அதுவே காரணம்!

சசிகலாவிடம் இவர்கள் ஒன்றுபடமுடியாமல் போவதற்கும் அதுவே காரணம்!

எந்த ஒரு மனிதனுக்கும் எதிரி வெளியில் இல்லை! தனக்குள் பேராசை, சுயநலம் என்ற எதிரிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், வெளியில் இருக்கும் எதிரியை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்!

சசிகலாவை இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கமுடியாமல் தடுமாறிய போது தான் தெரிய வந்தது இவர்கள் ஆட்சி என்றால், அதிகாரபூர்வமாக பொதுச் சொத்தை அனுபவிப்பது என்பதற்கு மேலாக எதையும் அறிந்திராத கோழைகள் என்பதை!

சசிகலா விவகாரத்தில் இன்றைய அதிமுகவின் இரு தலைவர்களாலும் ஒன்றுபட்டு நின்று திட்டமிட்டு செயல்பட முடியவில்லை! பன்னீர் மீது எடப்பாடிக்கு தீராத சந்தேகம் உள்ளது! அந்த அவஸ்தையிலேயே அவரை வைத்திருப்பதில் பன்னீருக்கு ஒரு உள்ளூர மகிழ்ச்சி! ஏனெனில், எக் காரணத்தைக் கொண்டும் எடப்பாடி கட்சிக்குள் ஒற்றை அதிகாரமாக நிலைபெற்றுவிடக் கூடாது! அப்படி நடந்தால், தனக்கான முக்கியத்துவத்தை அவர் தரைமட்டமாக்கிவிடுவார் என பன்னீர் அஞ்சுகிறார்!

பன்னீருக்கு அதிகாரத்தை பகிர்ந்து தந்தால், அவருக்கான ஆதரவாளர்களை அணி திரட்டி எப்போது வேண்டுமானாலும் கட்சியை பிளந்து பாஜகவிடம் செல்வார் அல்லது சசிகலாவிடம் செல்வார்..ஆகவே அவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பது போலவும் வைத்திருக்க வேண்டும், அதே சமயம் உண்மையிலேயே அதிகாரம் இல்லாதவராகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என திட்டமிடுகிறார் எடப்பாடி!

எனவே இவர்களின் ஒற்றுமை இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குபிடிக்கும் எனத் தெரியவில்லை! ஆனால், ஒன்றுபடமுடியாவிட்டால் சசிகலாவின் அதிகாரத்திற்குள் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்பது ஒ.பி.எஸ்சுக்கு தெரியாததல்ல! சசிகலாவின் அதிகாரத்தின் கீழ் கட்சி சென்றுவிட்டால் அங்கு இப்போது தனக்கிருக்கும் அதிகாரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பெறமுடியாமல் கைகட்டி,வாய்பொத்தி கொத்தடிமை சேவகம் செய்ய வேண்டிய அவலம் நேரும் என்பதையும் பன்னீர் உணராமல் இல்லை! அதே சமயம் சசிகலாவை எதிர்த்துக் கொண்டு தென் மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது பெரும் சவால் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்!

இந்த இருவரும் போட்டி அரசியல் செய்வதில் காய் நகர்த்தாமல் ஆரம்பத்திலேயே ஒன்றுபட்டிருந்தால் சசிகலா வந்தால் என்ன பிரச்சினை வரலாம்? அதை எப்படி எதிர் கொள்ளலாம் என மனம்விட்டு பேசி அதற்கேற்ப நடவடிக்கை எடுத்திருக்கலாம்! உதாரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்னமே சசிகலாவின் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்திருக்கலாம்! ஜெயலலிதாவின் சட்டவிரோத சொத்துக்களையும் அரசு கருவூலத்தில் இணைத்து மக்கள் சொத்தாக்கி இருக்கலாம்! அப்படியானால் ஜெயலலிதாவை குற்றவாளி என ஏற்றுக் கொண்டதாக விமர்சனம் வருமே என்றால், நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டிய இடத்தில் உள்ளோம் என்பதே பதிலாக இருக்க முடியும்! மக்களுக்காகவே நான் என்று ஜெயலலிதா தான் சொன்னார்! ஆகவே, அவர் சொத்துகளை மக்களுக்கானதாக்குவது பொருத்தமானதே என்று சொல்லி சமாளித்திருக்கலாம்!

இன்றைய நிலவரப்படி, அதிமுகவின் அதிகாரபூர்வ முக்கியஸ்தர்கள் யாருமே சசிகலாவை சந்திக்க செல்லவில்லை! இதுவே மிகப் பெரிய முன்னேற்றம் தான்! சசிகலாவை சந்திப்பதன் மூலம் தங்கள் எதிர்காலத்தை தொலைத்துக் கொள்ள இன்றைய எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு விருப்பமில்லை! ஆனால், எப்படியாவது யாராவது சில முக்கியஸ்தர்களையாவது சசிகலா குடும்பம் ஆசைகாட்டி இழுக்காமல் ஓயாது!

மிக முக்கியமாக மக்கள் நலனுக்கான அரசியல் என்பதை இவர்கள் இருவருமே அறவே செய்யவில்லை! எனவே, தங்கள் சொந்த தொகுதிகளில் கூட இ.பி.எஸ்சுக்கும், ஒ.பி.எஸ்சுக்கும் நல்ல பெயர் இல்லை! ஆகவே தான், சகலதரப்பிலும் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியல் அணுகுமுறைகளை கைகொண்டு தாழ்ந்து நிற்கிறார்கள்!

பொதுவாக சசிகலா குடும்பம் குறித்து தமிழக மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. சசிகலா ஆட்சி செய்து தமிழகம் சுபிட்சமாகிவிடும் என்று நம்பும் அளவுக்கு முட்டாள்களாகவும் மக்களில்லை! மாறாக, இவர்களிடம் அதிகாரம் சென்றால் தமிழகத்தை சூறையாடிவிடுவார்கள் என்ற அச்சமே உள்ளது. சசிகலாவிற்கு கொடுக்கப்பட்ட ஆடம்பர வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இன்னும் கூடுதல் வெறுப்பையே பெற்றுத் தந்துள்ளது! அதுவும் அன்றைய தினம் சசிகலா வரும் வழியில் வெறும் கையசைப்பதற்காக நிறுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு தலைக்கு ஐநூறு மற்றும் ஆயிரம் இடத்திற்கேற்ப வழங்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அறுவெறுப்பையே தருகிறது! அதனால் சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் சேர்ப்பதன் மூலம் அமமுக கட்சிக்குள்ள நான்கு சதவிகித கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்ற சதவிகித கணக்கு சரிப்படாது. சசிகலாவிற்கு ஆதரவான ஓட்டுகள் நான்கு சதவிகிதம் என்றால், சசிகலா-தினகரனுக்கு எதிரான மக்களின் சதவிகிதம் என்பது அதைவிட பன்மடங்கு இருக்கக் கூடும்!

அதுவும் தினகரன் அரசியலை அதிமுகவின் உயர்மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை அறவே வெறுக்கிறார்கள்! அமமுகவின் விஸ்வாசிகளையே தினகரனால் தக்கவைக்க முடியவில்லை! கரூர் செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், பெங்களுர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் ஆகிய தளபதிகளே தினகரனின் அடாவடி அரசியல் கண்டு சலித்து வெளியேறிவிட்டனர்! வெற்றிவேல் என்ற சென்னை தளபதி தற்போது உயிருடன் இல்லை! கட்சி நிர்வாகிகளை சசிகலாவும்-தினகரனும் எப்படி கொத்தடிமையாக டிரீட் செய்வார்கள் என்ற கடந்த கால கசப்பான அனுபவம் அனைவருக்குமே உள்ளது. ஆகவே இவர்களை தவிர்ப்பது அதிமுகவிற்கு பலவீனமல்ல! இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், மு.க.அழகிரியை தவிர்ப்பது என்பது அவரது அராஜகத்தை உணர்ந்துள்ள மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் மத்தியில் திமுகவிற்கு எப்படி நல்ல இமேஜ் பெற்றுத் தருமோ..அது போல சசிகலா-தினகரன் தவிர்த்த அதிமுகவிற்கு ஒரளவு மரியாதையும்,வாய்ப்புகளும் வேண்டுமானால் சாத்தியப்படலாம்!

இன்றைய தினமணியில் அதிமுக, மற்றும் திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கவிருக்கும் இரு பெரும் சக்திகளாக சசிகலாவையும், முக.அழகிரியையும் உருவகப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருப்பதின் விஷமத்தனத்தை என்னென்பது? ஏதோ இந்த இருவர் இல்லாவிட்டால் இரு திராவிட இயக்கங்களும் பெரும் இழப்புகளை சந்திக்க நேரும் என்ற தொனியில் இவர்களுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் கொத்து,கொத்தாக திமுகவில் தினசரி சேர்ந்து வருகிறார்கள். இதனால் பாஜகவிற்கு தான் இழப்பு என்று எழுதமுடியாத தினமணி வைத்தியநாத ஐயர், எப்போது பார்த்தாலும் திராவிட இயக்கங்களுக்கு எதிராகவே பேனாவை சுழற்றுகிறார்.

இன்னும் தேர்தல் நெருங்க, நெருங்க திமுக, அதிமுகவில் சீட் கிடைக்காத சிலர் அழகிரி பக்கமோ, சசிகலா-தினகரன் பக்கமோ சென்றால் அதை பிரம்மாண்டமாக பூதாகரப்படுத்தி எழுதலாம்! இன்றைய நிலவரப்படி  திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் இயக்கங்கள் மட்டுமே தமிழகத்தின் பிரதான கட்சிகள்! அமமுகவினாலோ, அழகிரியாலோ இந்த இரு பெரும் இயக்கங்களும் சிதைந்துவிடும் என்று நம்ப இடமில்லை என்பதே யதார்த்தம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time