கரன்சியைக் காட்டி கலைஞர்களை இழுக்கும் பாஜக!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டில் இருக்கிற சினிமா நடிகர். நடிகைகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர்களை வலைவீசி பிடித்து பாஜகவில் இணைப்பதே ஒரு பெரிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளார்கள் என தெரிய வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் பாஜகவில் இணைந்த நடிகர்,நடிகைகள் பட்டாளத்தை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது! ஏன் சினிமாகாரர்களுக்கு மட்டும் பாஜக மீது ஒரு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது! இவர்கள் யாருமே பணம் தராமல் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள்! சினிமாவில் சம்பாதிப்பதை அரசியலில் பிரச்சாரம் செய்தோ அல்லது ஏதாவது பதவி, செல்வாக்கு பெற்றோ அடையலாம் என்று தான் வருகிறார்கள்!

கெளதமி, நமீதா, குட்டி பத்மினி, காய்த்திரி ரகுராம், தீனா, பேரரசு, குஷ்பு, ராதாரவி, கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், விஜயகுமார், கங்கை அமரன்…என்ற வரிசையில் தற்போது சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைஞனின் மகன் ராம்குமார் தன் மகன் துஷ்யந்த்தோடு சேர்ந்திருக்கிறார்! கடந்த ஒரு சில வருடங்களாக பொருளாதார கஷ்டத்தில் உழன்று கொண்டிருந்தார் ராம்குமார்! எந்த வியாபாரத்தில் இறங்கினாலும் நஷ்டம் தான் அவருக்கு கிடைத்தது. பல இடங்களில் வாங்கியுள்ள கடனை சமாளிக்க முடியாமல் ரொம்ப கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது! இந்த நிலையில் தான் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்!

மேலும் இவர்கள் இருப்பதைக் கொண்டு எளிய வாழ்க்கையை வாழ முடியாதவர்கள்! சினிமா என்பது தகுதிக்கு மீறி செல்வம் தரும் ஒரு துறை என்று கண்ணதாசன் அடிக்கடி சொல்வார்! அதிர்ஷ்டவசத்தால் அதீத செல்வத்தில் திளைப்பவர்கள் அப்படி செல்வம் வரும் வழி தடைபட்டதும் மேற்கொண்டு எப்படி வாழ்வது என திகைத்து போய்விடுகின்றனர்! இந்த நேரத்தில் தான் முன்பு தொண்டாக அறியப்பட்டிருந்த அரசியல் தற்போது பணம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது அவர்கள் கவனத்திற்கு வருகிறது. இன்றைய அரசியலுக்கு அனுபவமோ, பயிற்சியோ, சமூக அக்கரையோ அவசியமில்லை என்றாகிவிட்டது.

சிவாஜி கணேசன் திமுகவில் இருந்த போதும் சரி, காங்கிரசில் இருந்த போதும் சரி, உணர்வு பூர்வமாகவே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்! பெரியார், அண்ணா மீது அவருக்கு விவாதத்திற்கே இடமற்ற வகையில் ஒரு விசுவாசம் இருந்தது! அந்த நாளில் திராவிட இயக்கம் சமூக தளத்தில் சமான்ய மனிதனுக்கு பெற்றுத் தந்த சமூக விடுதலையை கண்கூடாகப் பார்த்து, உணர்வு ரீதியாக உள்வாங்கியவர் அவர்! பத்துப் பன்னிரெண்டு வயதாயிருக்கும் போதே எம்.ஆர்.ராதாவின் குழுவில் பால நடிகராக விளங்கிய காலத்தில் இருந்து அவருக்கு பெரியார்,அண்ணா மீது அளப்பரிய ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே சிவாஜி திமுகவில் இருந்தது என்பது ஆதாயம் கருதியல்ல! ஆழமான பற்றுதலோடு தான்!

ஆனால் ஒரு இயக்கத்தில் ஒருவர் நிலைப்பதற்கு பற்றுதல் ஒன்று மட்டும் போதாது. உள்கட்சி அரசியலை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கட்சிக்குள் சிவாஜிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சிதைத்து, தான் முன்னேற நினைத்தார் எம்.ஜி.ஆர்! ஆகவே, சந்தர்ப்பம் பார்த்து சிவாஜியை விரக்தியடைய செய்து வெளியே தள்ளிவிட்டார்!

தரையில் வீழ்ந்த மீன் போல துடித்த சிவாஜுயை காங்கிரசும், காமராஜரும் அரவணைத்தனர். சிவாஜியின் அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் இயல்பாகவே அவரது ரத்தத்தில் தேசப்பற்று இழைந்தோடியது! அந்த தேசப்பற்றை விதைக்கும் படங்களிலும் அவர் நடித்து தேசிய உணர்வை ஊட்டினார்! இந்திராகாந்தி அவருக்கு தற்காலிக எம்.பி பதவி ஒன்றை தந்தார்! அது ஆதாயம் தரும் பதவி என்பதை அவர் அறிந்திருக்கவில்லை! அன்றைய திருபாய் அம்பானி காங்கிரசிற்குள் சில காரியங்களை சாதிக்க பலமுறை சிவாஜியை தேடி வந்து பேசினார்! சிவாஜி அதற்கு இடம் தரவில்லை! ஒரு முறை அப்படி அம்பானி வந்த போது வாழப்பாடி ராமமூர்த்தியை அம்பானிக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்! அதன் பிறகு அம்பானிக்கும், வாழப்பாடியாருக்கும் ஏற்பட்ட நெருக்கம் அனைவரும் அறிந்த ஒன்று தான்!

ராம்குமாரை பொருத்தவரை இது வரை அவருக்கு எப்படிப்பட்ட அரசியல் பார்வை இருந்தது என்பது யாருக்குமே தெரியாது. அரசியலே தேவை இல்லை என்ற சராசரி மனிதனாகவே அவர் வாழ்ந்தார்! அரசியலுக்கு போனால் பொருளாதார கஷடங்கள் தீரும் என்று யாரோ சிலர் அவருக்கு சொல்லி இருக்கக் கூடும்! அவருடைய பொருளாதார கஷ்டங்கள் பாஜகவில் சேர்ந்தால் தீர்த்துவைக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக தெரிய வருகிறது! தான் மட்டும் நுழைந்தால் செல்வாக்கு இருக்காது என இளம் நடிகனாக உள்ள மகன் துஷ்யந்தையும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்! அவர் வீட்டில் இருந்து பாஜகவின் தலைமையகம் வெறும் 150 மீட்டர் தொலைவு தான்! அதாவது ஐந்து நிமிட நடைதூரமே! இத்தனை நாள் அதை ஏறெடுத்தும் பார்க்காத அவருக்கு பொருளாதார கஷ்டம் வந்ததும் தான் தெரிய வந்திருக்கிறது! சிவாஜி மகன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன தனித் தகுதி அவருக்கு உள்ளது. அப்பன் பேரை காப்பாற்ற துப்பில்லாவிட்டாலும், கெடுக்காமலாவது இருந்திருக்கலாம்! இந்த வகையில் பிரபு ஒதுங்கி கொண்டதைப் பாராட்டத்தான் வேண்டும்!

தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திராவில் விஜயசாந்தி, கவிதா, மாதவி லதா…என ஒரு பெரிய பட்டியல் நீளுகிறது!

அது போல பாலிவுட்டிலும், பெங்காலியிலும், பஞ்சாபிலிலும் நிறைய நடிகர், நடிகைகள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்! இத்தனை நடிகர், நடிகைகள், கலைஞர்கள் பட்டாளத்திற்கு தீனி போட எத்தனை கோடிகள் தேவைப்படும்! நடிகர், நடிகைகள் பட்டாளத்திற்கு தீனி போடுவது என்பது பெரும் யானைப் பட்டாளத்திற்கு தீனி போடுவதற்கு சமமாகும்! இப்படி தேவையில்லாமல் ஊதாரித்தனமாக பணத்தை விரயம் செய்வதற்கு இந்த மத்திய பாஜக ஆட்சியாளர்கள் எவ்வளவு பொதுப் பணத்தை சூறையாடி ஊழல் செய்திருக்க வேண்டும் என்றும் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை!

ஆனால் ஒன்று, ஒரு ஆட்சி எவ்வளவு தான் நடிகர், நடிகைகள்,பிரபலங்களைக் கொண்டு பேச வைத்தாலும், மக்கள் தங்கள் அனுபவத்தில் மோசம் என்று உணரும் மதிப்பீட்டை மாற்றிவிட முடியாது. இப்படி கொட்டி பாழாக்குவதைவிட்டு மக்கள் விரோத, இயற்கைக்கு விரோத சட்டங்களை போடுவதை நிறுத்திக் கொண்டாலே போதுமே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time