கோவிட் தடுப்பூசியை வலியுறுத்தி அரசு எடுக்கும் முயற்சிகளை அரசு மருத்துவர்களே எதிர்த்து முறியடிக்கும் ஒரு வித்தியாசமான சூழல் சுகாதாரத்துறையில் நிலவுகிறது!
இது வரை அரசு மருத்துவர்களில் அதிகபட்சம் 25 சதவிகிதமானவர்களே கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்! சுமார் 75 சதவிகிதமானோர் கோவிட் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை! ஆனால், சுகாதாரத்துறையின் உயர் நிர்வாகப் பணியில் இருக்கும் CMO, DDHS ,JDHSHOD, Dean, HS ஆகியோர் அரசு நிணயித்த டார்கெட்டை அடைய அரசு மருத்துவர்களே தடையாக இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்!
அதே சமயம் அரசு மருத்துவர்களை ஒரளவுக்கு மேல் இந்த தலைமை நிர்வாகிகளால் நிர்பந்திக்கவும் முடியவில்லை! அப்படி நிர்பந்திக்கும் போது மருத்துவர்களிடமிருந்து வெளிப்படும் எதிர்வினைகளைக் கண்டு விதுவிதிர்த்து போகின்றனர்!
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் இடையே அதிருப்தியும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது!
அரசு மருத்துவர்கள் சிலரிடம் இது குறித்து பேசிய போது பொங்கி தீர்த்துவிட்டனர்.
’’சார், இது தேர்தலுக்காக நடத்தப்படும் பம்மாத்து! சுகாதாரதுறையை தான் சூறையாடிக் கொழுக்கும் துறையாக கருதி செயல்பட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களையும், சுகாதாரத்துறை ஊழியர்களின் நலன்களையும் எப்போதும் அலட்சியம் செய்பவராவார்!
ஆனால், தற்போது தற்பொழுது தமிழகம் முழுவதும் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வைத்து பண்ணத் துடிக்கிறார்! ஆனால் இதில் காட்டும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது காட்டவில்லை! அப்போது உயிரை துச்சமாக மதித்து சேவையாற்றிய மருத்துவர்கள,முன் களப் பணியாளர்களை கடுகளவும் பொருட்படுத்தவில்லை.
இதன் காரண்மாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புராஜக்டில் தமிழ் நாடானது இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. அதாவது, இந்திய மாநிலங்களில் கடைசி இடத்தில் மணிப்பூர் மாநிலத்திற்கு ஒரு படி மேலே உள்ளது.
சுகாதாரக் குறியீடுகளில், குழந்தைகளுக்கு மற்ற தடுப்பூசிகளைப் போடுவதில் இந்திய அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற தமிழ்நாடு என்ற மாநிலம் ஏன் கொரோனா தடுப்பூசி போடுவதில் கடைசி இடத்தில் இருக்கிறது என்றால், அது முழுக்க,முழுக்க, சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியும், நம்பிக்கையின்மையும் தான் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
கொரானா பெருந் தொற்றுக் உச்சத்தில் இருந்த காலத்தில் தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து சிறப்பாக பணியாற்றிய நிலையில் – அவர்களிடமிருந்து மேன்மேலும் உழைப்பையும்,ஒத்துழைப்பையும் பெரும்விதமாக – அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு பந்தாவாக அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும்! ஆனால், பொதுமக்களிடம் அரசு மருத்துவர்களையும், முன்களப் பணியாளர்களை மிகவும் மதிப்பதாக பாவனை காட்டுவதற்காக செய்யப்பட்ட அறிவிப்பு தான் அது! ஆனால்,வழங்கவேயில்லை.
கொரோனா மருத்துவப் பணியில் இருக்கும் போது தொற்றிக் கொண்டால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்றார்கள். அதுவே உயிரிழப்பு ஏற்பட்டால் 50 லட்சம் தரப்படும் என்றார்கள். ஆனால்,அப்படி இறந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு எதுவுமே வழங்கப்படவில்லை.
இது வரை அரசு மருத்துவர்கள்,சுகாராத்துறை ஊழியர்கள் விஷயத்தில் தமிழக அரசு, தான் சொன்ன வாக்குறுதி எதையுமே காப்பாற்றவில்லை.
கொரானா தடுப்பூசி போலவே தேர்தல் நேர ஆதாயத்திற்காக 2,000 அம்மா மினி கிளினிக்காம்! இந்த அநியாயத்தை எங்கே சொல்வது..? ஏற்கனவே இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருந்து,மாத்திரைகள் பற்றாகுரை நிலவுகிறது! பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படாத நிலையில் வெறும் கட்டிடங்களாக உள்ளன! அதை ஒழுங்கு பண்ண அக்கரையில்லாத தமிழக அரசு இருக்கும் பணிச்சுமை போதாது என்று மருத்துவர்களை இவர்களின் அம்மா கிளினிக் ஷோவின் காட்சிப் பொருளாக மாற்றுகிறது.
அரசு மருத்துவர்களுக்கு முறையான பணியிட மாறுதல் நான்கு ஆண்டுகளாக கலந்தாய்வு நடைபெறவில்லை. ஏனெனில், அப்போது தானே பணியிட மாறுதலுக்கு பணம் பறிக்க முடியும்..? அதனால், கலந்தாய்வு இடமாறுதல் நடைபெறவில்லை. கலந்தாய்வு இல்லாமல் இடமாறுதல் இடை தரகர்கள் மூலம் தடம் மாறிய காரணத்தினால் 10 லட்சம் முதல் 15 லஞ்சம் வாங்கப்படுகிறது. மருத்துவத்துறை பேராசிரியர்களுக்கு இன்னும் 20 லட்சம் வரை வாங்குகிறார்கள்!
அரசு மருத்துவர்களுக்கு முறையான பதவி உயர்வு பத்து ஆண்டுகளாக கொடுக்கப்படவில்லை. முறையான பதவி உயர்வுக்கே கையூட்டு எதிர்பார்க்கும் ஆட்சியாளர்கள் இருந்தால் விளங்குமா, சுகாதாரத்துறை?
இந்த வகையில் பல ஆண்டுகளாக CCS பதவி உயர்வும் வழங்கப் படவில்லை.
அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகிற மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் (ஊதியப் பட்டை 4 ) 12 ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதில் கேட்கவேயில்லை.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்து பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு, வட்ட அரசு மருத்துவமனையில் பணி புரியும் சிறப்பு மருத்துவர்கள் அங்கேயே கிடக்க, non service pg க்களுக்கு மருத்துவக் கல்லூரியில் நல்ல வசதியான இடத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
காரணம் என்ன? கல்லா நிரம்புகிறது சிலருக்கு.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை இருந்தால் தான் நல்ல சிகிச்சை வழங்க முடியும்? ஆனால்,அது பற்றியெல்லாம் யோசிப்பதற்கே அமைச்சருக்கு நேரமில்லை! எல்லாவற்றுக்கும் லஞ்சம்,கமிஷன்..கல்லா கட்ட வேண்டும்..!
கலந்தாய்வு இல்லாமல் இடமாறுதல் இடை தரகர்கள் மூலம் தடம் மாறிய காரணத்தினால் 10 லட்சம் முதல் 15 லஞ்சம் வாங்கப்படுகிறது. மருத்துவத்துறை பேராசிரியர்களுக்கு இன்னும் 20 லட்சம் வரை வாங்குகிறார்கள்!
இதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்கள் அரசு மருத்துவர்கள் மீது பொய் வழக்குகள்,பழி வாங்கல்கள், டிரான்ஸ்பர்கள், அலை கழிப்புகள்..!
போராடிய அரசு மருத்துவர்களை பெண் மருத்துவர்களை கூட விட்டுவைக்கவில்லை!
அரசு மருத்துவர்களுக்கோ செவிலியர்களுக்கோ மற்ற ஊழியர்களுக்கோ ஏதாவது ஒரு உருப்படியான நன்மையை செய்தது உண்டா இந்த அரசு..?
தங்கள் கைக்கூலி புரோக்கர் சங்கங்களை வைத்துக் கொண்டு, அரசு மருத்துவர்கள் மற்றுமுள்ள சுகாதார துறை ஊழியர்கள் வயிற்றில் அடித்தது தவிர வேறு என்ன செய்தார்கள்?
ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் வருவோர் போவோர் எல்லாம் ரேகிங் செய்ததை தவிர வேறு ஒன்றும் நடக்கவேயில்லை.
டெல்லிக்கு சென்று விருதுகளும், பட்டங்களும் பாராட்டுக்களும் வெற்றிக் கோப்பைகளும் சுகாதார துறை சார்பாக வாங்கி வந்த அமைச்சர் அதிகாரிகள் அதிகார வர்க்கத்தினர் அந்த வெற்றிக்கு காரணமாக உழைத்தவர்களை எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. நன்றி காட்டியதில்லை!
குறைந்த பட்ச வாக்குறுதிகளைக் கூட, நிறைவேற்றுவேன் என்று சொல்லி விட்டு, நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு ஏமாற்ற நினைக்கும் இவர்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்…?
இவர்கள் சொல்லி, இவர்களை நம்பி எப்படி தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது?
இந்தக் கேள்வி ,இந்த அச்சம்,இந்த அவநம்பிக்கை தான் நாங்கள் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் கோஆபரேஷன் மறுப்பதற்கான முழு முதல் காரணமாகும்.
மத்திய அரசு நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில் மாநில அரசு மூக்குடை பட்டு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்!
Also read
காசு, பணம்,துட்டு மணி,மணி… என ஆலாய் பறக்கும் தமிழக அமைச்சருக்கு கிடைக்கவிருக்கும் அவமானம் குறித்து களத்தில் உழைக்கும் களப் பணியாளர்க்கு கவலை இல்லை. un willingness letter கேக்குறாங்க … எல்லாம் சரிதான், மருத்துவர்களை துன்புறுத்தி தங்கள் பொறுப்புக்கு ஆபத்து வராதவாறு நிர்வாகம் பண்ணும் சூழ்ச்சியை முறியடிப்போம்!
இந்த அமைச்சர் தமிழக சுகாதாரக் கட்டமைப்பை படுமோசமாக்கி, வீணாக்கி,சிதைத்துவிட்டார்! விரைவில் ஒரு மாற்றம், விடிவு சுகாதாரத்துறைக்கு ஏற்பட வேண்டும்.
தடுப்பூசி போட்டு எங்கள் முன்கள வீரர்களை பாதுகாக்க போகிறோம் என்று கூறுவது கூட அரசின் சுயநலம் தான் என்பதே எங்கள் நிலைப்பாடு!
இவர்கள் ஆட்சி மற்றும் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள ஏன் நாங்கள் உதவ வேண்டும்?’’
இவ்வாறு அரசு மருத்துவர்கள் கூறினார்கள்!
Hey cool blog! Guy saree. Superb. Amazing. I will save your blog site in addition to use the for also? I’m thankful to locate a great deal of very helpful facts in this article in the upload, we’d like produce excess approaches with this consider, thank you discussing.