காதலின் ஊடாக அரசியல் பேசும் அபூர்வ படைப்பு!

-பீட்டர் துரைராஜ்

காவ்ரே பாய்ரே ஆஜ் – காதலின் ஊடாக சமகால அரசியலைப் பேசுகிறது! (Ghavre Baire aaj -வீடும் உலகமும் இன்று). இது ஒரு முக்கோணக் காதல் கதை. மனித நேய விழுமியங்களுடன் பெண்ணிய உணர்வுகளை சொல்லும்  அபர்ணா சென்னின் இந்த அற்புத படைப்பானது கண்ணியமான காதல் எது? கபட வேஷம் தரித்த காதல் எது என்ற புரிதலை நுட்பமாக காட்சிப்படுத்துகிறது! இந்தியாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் வலதுசாரி இந்துத்துவ அரசியலை, அதன் அணுகுமுறைகளை நேர் கொண்ட பார்வையுடன் எதிர்கொள்ளும் அந்த பத்திரிகையாளன் கதாபாத்திரம் பிரமிப்பூட்டுகிறது. இந்த படத்தை அனைவரும் ரசித்துப் பார்க்கலாம். பார்வையாளர்களின் புரிதலுக்கு ஏற்ப இந்த படம் விரிந்த பொருளைத் தரக்கூடும்.

காத்திரமான அரசியலை மையப்படுத்தி  திரைப்படங்களை இயக்கி வருபவர் அபர்ணா சென். வங்காள  இலக்கியவாதியான   ரவீந்திரநாத் தாகூர்,  காவ்ரே பாய்ரே ( வீடும் உலகமும்- Ghawre Bairey ) என்ற நாவலை 1916ஆம் ஆண்டு எழுதினார். ஒரு மேல்தட்டு இந்துக் குடும்பத்தில்  திருமணம் செய்திருக்கும் இளவயது பெண்ணுக்கு, அந்த வீட்டிற்கு வரும் புரட்சிகர எண்ணம் கொண்ட இளைஞன் வருகையால் புது உலகம் தென்படுகிறது. இதுதான்  தாகூர் கதையின் சாரம். இந்த நாவலைத் தழுவி,  சத்யஜித்ரே 1984 ம் ஆண்டு இதே பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படம் வெளிவந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு,  காவ்ரே பாய்ரே ஆஜ் (Ghawre Baire Aaj – வீடும் உலகமும் இன்று)   என்ற தலைப்பில் அபர்ணா சென் படத்தை இயக்கியுள்ளார். தாகூரின் நாவலும், சத்யே ஜித் ரேயின்  திரைப்படமும் இன்றைய சமூக அரசியல் தளத்தில் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை அவதானித்து, அபர்ணா சென் படத்தை எடுத்துள்ளதாக நாம்  கருதலாம். இரண்டு மேதைகள் கையாண்ட இந்தக் கதையை  வெற்றிகரமாக  படமாக்கியுள்ளார். 2019 நவம்பரில் வெளி வந்த இந்த வங்கப் ( Bengali) படத்தை   பிரைம் – இல் பார்த்தேன்.

பீகாரில் ஒரு  நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தினால்,  பெற்றோரை பறிகொடுத்த சிறுமி பிருந்தாவை பிராமண குடும்பம் தில்லியில் வளர்க்கிறது.  படித்து வேலை செய்யும் பிருந்தாவை, இங்கிலாந்தில் படித்த அதே குடும்பத்தைச்  சார்ந்த நிகில், (சற்று வயதில் மூத்தவன்)   திருமணம் செய்து கொள்கிறான். இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். நிகில் ஒரு பத்திரிகை ஆசிரியராக பணிபுரிகிறான். தீவிர அரசியல் சிந்தனை கொண்ட நிகிலுக்கு  வனப் பகுதியான பஸ்தரில் பழங்குடிகளுக்கான ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும்  என்பதற்காக தொடர்ந்து கட்டுரை எழுதி போராடி வருகிறான். எழுதுவது, பிரச்சாரம் செய்வது, நிபுணர் கருத்துகளைப் பிரசுரிப்பது என்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஸ்வேதா தேவி, சென் (பெயர்களை  நாம் சம கால ஆளுமைகளோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்) போன்றவர்களோடு தொடர்பு கொண்டு பணியாற்றுவது என்ற பணிகளில் முனைப்பாக இருக்கிறான். தன் மனைவி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் இயல்பாக இருக்கிறான்.

இந்த நிலையில் அவனோடு பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்த,  சந்தீப் தில்லிக்கு ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய வருகிறான். அவனை தனது வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான்.  விருந்தினரான சந்தீப்பிற்கும்,  நிகிலின் மனைவி பிருந்தாவிற்கும் நெருங்கிய பழக்கம் ஏற்படுகிறது. வனப்பகுதிக்கு களப்பணியாக நிகில் சென்று இருக்கையில், பிருந்தா கர்ப்பம் அடைகிறாள்.

இப்போது இந்தக் குழந்தை யாருடைய குழந்தை !  சந்தீப் வலதுசாரி அரசியலின் பிரதிநிதியாக இருக்கிறான். அவன் கட்சியில் உறுப்பினராக இல்லை. ஆனாலும், அந்த அரசியலுக்காக பிரச்சாரம் செய்கிறான். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது முன்னேற்றத்திற்கு பிருந்தாவின் கர்ப்பம் தடையாக இருக்கும் என்பதால் அதைக்  கலைக்கச் சொல்கிறான். தன்னை அழைத்துக் கொண்டு பீகாருக்கு சென்றுவிடுங்கள் என்று பிருந்தா சொல்லுவதை ஏற்க மறுக்கிறான். அவனுக்கு தன்னுடைய முன்னேற்றம், பாராளுமன்ற உறுப்பினர் பதவி முக்கியம். அவளொரு தலித் என்பதும் அவனுக்கு தெரியும். கதையின் ஊடாக அரசியல் பேசப்பட்டாலும் கதையின் ஓட்டம் இயல்பாகச்  செல்கிறது.

இப்போது கேள்வி என்னவென்றால் சுதந்திர சிந்தனை கொண்ட நிகில் எந்த அளவுக்கு தன் மனைவியை ஏற்றுக் கொள்வான். ஏமாற்றப்பட்ட தன் மனைவியை அவன் என்ன செய்கிறான்..? என்பதை சொன்ன விதத்தில் தான் இந்தப் படம் உன்னதமான படைப்பாகிறது. அபர்ணா சென் என்ற ஆகச் சிறந்த படைப்பாளியின் ஆளுமை இங்கு தான் வெளிப்படுகிறது.

தனது உயிருக்கு அபாயம் உள்ள நிலையிலும், மதச் சார்பற்ற இந்தியாவை காப்பாற்ற முனைகிறான். தன் மனைவியை, தான் அனுபவிக்க உரிமையுள்ள ஒரு பொருளாக பார்க்கும் எண்ணம்  அவனுக்கு இல்லை. அவன் தன்னுடைய வாதங்களை தர்க்கரீதியாக வைக்கிறான். உணர்ச்சி அரசியலில் அவனுக்கு  நம்பிக்கை இல்லை. மாட்டுக்கறி வைத்திருப்பதால் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞனுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துகிறான். இவனது செயலைக் கண்ட வலதுசாரி  மாணவனின் சிந்தனை ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வலதுசாரி மாணவனுக்கு  அரசியலுக்காக தன்னுடைய  இஸ்லாமிய நண்பன் கொல்லப்படுவதிலோ, பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்படுவதிலோ விருப்பமில்லை. அவன் பேராசிரியர் சந்தீப்பின் மாணவனாக இருந்தாலும், பேசுவது மதவெறி அரசியலாக இருந்தாலும், கொலையில் அவனுக்கு சம்மதமில்லை.

வலதுசாரி அரசியலைப் பேசும்      சந்தீப்  ஜா உணர்ச்சிபூர்வமாக உரையாற்றுகிறான். அவன் பேசுவதை கண்டு பிருந்தாவுக்கு ராமர்- சீதை மீது அபிமானம் வருகிறது. அவனோடு கோவிலுக்கு செல்கிறாள். அவனைப் போல நிகில் உணர்ச்சிப்பூர்வமாக பேசவில்லை என்பதை ஒப்பிட்டு பார்க்கிறாள். சந்தீப் தனது அரசியல் முன்னேற்றத்திற்காக எதையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கிறான். சூதாக பேசி, பிருந்தாவை ஏமாற்றுகிறான்.

இந்தப் படத்தை யமுனா ராஜேந்திரன் மிகவும் சிலாகித்து பியூர் சினிமா நிகழ்ச்சியில் பேசினார். எனவே இந்தப் படத்தை பார்த்தேன்.

இன்றைய இந்தியாவின் பிரச்சினை எது ? சத்துக்குறைவா ?  கர்ப்பிணி மரணமா ? மருத்துவமனையா ?  அல்லது பெரும்பான்மை முடிவு  என்ற பெயரில் நடக்கும் கொலைகளா ? என்பதுதான் கேள்வி. இதில் அரசு இயந்திரம் எப்படி இருக்கிறது ? ( சந்தீப்பால் காவல்துறை ஆணையாளரோடு , செல்பேசியில் இரவு நேரத்திலும் பேச முடிகிறது).அரசு யாருக்கு ஆதரவாக இருக்கிறது ?  நடந்த கொலையை யாரோ நக்சல்கள் செய்தார்கள் என்று பேட்டி கொடுத்து உண்மையை அவனால் மாற்ற முடியும்.

பிருந்தாவாக நடித்திருக்கும் டுகினா தாஸ் (Tuhina Das)  முதற்பகுதியில் கடைக்குப் போகும், ஓட்டலுக்குப் போகும், கோவிலுக்குப் போகும்  ஒரு பெண்ணாக வருகிறாள். ஆனால் அதே பிருந்தா இரண்டாம் பாதியில் குழப்பம், சோகம், கையறு நிலை  என பல்வேறு பாவங்களை  உள்ளடக்கி அமைதியாக  வீட்டில் இருந்து  நடித்திருக்கிறாள். இறுதியில்  தீரமான முடிவை எடுக்கிறாள்.

சந்தீப்பாக நடித்திருக்கும் ஜிசு செங்குப்தா (Joshua Sengupta)  லாவகமாக தனது காய்களை நகர்த்துவதிலும்,  தான் நினைப்பது போல அடுத்த கட்டத்திற்கு காட்சியை எடுத்து செல்வதிலும்  வெற்றி பெற்றிருக்கிறான். நன்றாக நடித்துள்ளார். கொள்கைக்காக வாழும் நிகில், தனது சொந்த  வாழ்விலும் அதேபோல இருந்து காட்டுகிறான். நிகில் பாத்திரத்தில் ஆர்பாட்டமில்லாமல் அனிர்பான் பட்டாச்சாரியா (Anirbhan Bhattacharya) ஒரு வாழும் மனிதனாக நடித்துள்ளார். நிகில், சந்தீப் கதாபாத்திரங்களின் ஊடாக மனித நேய அரசியல், மத வெறி அரசியல் என்ற தற்கால அரசியலை அழகாக பதிவு செய்துள்ளார் அபர்ணா சென்.

தாகூர், சத்யே ஜித் ரே கையாண்ட கதையை சமகால அரசியல் பொருத்தப்பாட்டுடன் பொறுப்போடு அணுகியுள்ளார் அபர்ணா சென். ஏன், இது போல தமிழில் சினிமா முயற்சிகள் செய்யப்படுவதில்லை என்ற ஏக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time