காந்தி தேசத்தை கைது தேசமாக்கும் பாஜக அரசு..!

-சாவித்திரி கண்ணன்

பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேச விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதற்குப் பெயர் தான் பயங்கரவாதம்! ஏற்கனவே உபா சட்டத்தின் கீழ் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்களை- பாஜக ஆட்சியின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற காரணத்திற்காக கைது செய்து வரும் அரசு தற்போது அதை தமிழகத்தில் தமிழ் தேசிய அமைப்புகள்..டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண்கள்..என சகலரையும் காவு கேட்கிறது..!

தமிழகத்தில் வரும் தேர்தலில் பாசிஸ பாஜகவை வீழ்த்துவோம்.அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர்களின் மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம் என்ற பொது திட்டத்தின் கீழ் தமிழ் அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன! இந்தப் பின்னணியில் தான் தற்போது எடப்பாடி அரசு பாஜகவினரை சந்தோசப்படுத்த அப்படிப்பட்ட ஏராளமான பாஜக எதிர்ப்பாளர்களை கைது செய்தவண்ணம் உள்ளது!

இந்த வகையில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர்  பாலன், அவ்வமைப்பை சேர்ந்த கோ. சீனிவாசன், செல்வராஜ் உள்ளிட்ட சில பேர் கடந்த 2021 பிப்ரவரி 7ஆம் நாள் அதிகாலை சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி  போலீசால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சித்தானந்தன் என்ற முதியவரும் கைதாகியுள்ளார்.(முகப்பில் உள்ளவர்கள்)

இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு – கேரள அதிரடிப்படையினரால் என்கெளண்டர் என்ற பெயரில் போலித்தனமாக  கொலை செய்யப்பட்டவரான  மணிவாசகம் என்பவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தானாம்! இறந்த ஒரு நண்பனின் இறுதி நிகழ்வில் பங்கேற்றதைக் கூட குற்றச் செயலாக்குகிறது  மோடி அடிமை மோகத்தில் திளைக்கும் எடப்பாடி அரசு.

மோடி ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் அனைவருமே “நகர்ப்புற நக்சல்பாரிகள்” என்றும், பயங்கரவாதிகள் என்றும் குற்றம்சாட்டப்பட்டு ஏதோவொரு காவல் நிலையத்தில் புனையப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுக் கொண்டே வரும் நிகழ்வுகள் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் நடக்கும் நிகழ்வாகவே உள்ளது.

தற்போது தீக்‌ஷா ரவி என்ற 21 வயதேயான இளம் பெண், அதுவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்  விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதள செயல்பாட்டில் இறங்கியதற்காக கைதாகியுள்ளார்! இவர் ஸ்விடிஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலரான கிரிட்டா துன்பர்க் என்ற இளம்பெண் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல தகவல்களை திரட்டி எழுதியதை மேலும் சமூக வலைதளங்களில் தீயாக பரப்புயுள்ளார்! தீக்‌ஷா ரவி டெல்லி போலீசாரால் அவரது பெங்களுர் இல்லத்தில் கைதாகியுள்ளதை ராகுல்காந்தி, பிரியங்கா, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கடுமையாக கண்டித்துள்ளனர். ’’ இது ஜன நாயகத்தின் மீதான கடுமையான தாக்குதல்’’ என பல பிரபல தலைவர்களே கண்டித்துள்ளனர். தீக்‌ஷாவைத் தொடர்ந்து அவரது தோழிகள் நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் ஆகியோரையும் காவல்துறை கைது செய்ய தேடி வருகிறது. தேசவிரோதிகள் யாராயிருந்தாலும் துடைதெறியப்படுவார்கள் என ஹரியாணாவின் பாஜக அமைச்சர் அனில்விஜி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிவாசகம், அஜிதா,கண்ணன், உட்பட  நான்கு  இளைஞர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த 2019 அக்டோபர் -28 இல் “தண்டர்போல்ட்” என்ற கேரள சிறப்பு அதிரடிப்படையினரால் என்கெளண்டர் என்பதாக  கொல்லப்பட்டனர். இந்த என்கெளண்டர் செய்த மார்சிஸ்ட் அரசின் போலீசை அங்குள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியே கடுமையாக கண்டித்துள்ளது. இவர்களின் உடலை இறுதி சடங்கிற்காக கூட தர மறுத்தது தமிழக போலீஸ். அந்த அளவுக்கு மோடி அரசுக்கு ராஜவிசுவாசம் காட்டியது தமிழக அரசு. இதன் பிறகு நீதிமன்றம் சென்று போராடிதான் இவர்களில் மணிவாசகத்தின் உடலை மட்டும் தான் பெற முடிந்தது- அதுவும் 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு!

2019 நவம்பர் 14ஆம் நாள் நள்ளிரவில், சேலம் மாவட்டம் – ஓமலூர் அருகிலுள்ள அவரது சொந்த ஊரான கணவாய்புதூரில் மணிவாசகம் உடல் எரியூட்டப்பட்டது. அப்போதும் கூட அந்த குடும்பத்திடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரியூட்டியுள்ளனர்.  மணிவாசகத்தின் மனைவி கலா,, தங்கைகள் சந்திரா,லஷ்மி ..உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் உபா என்ற பயங்கரவாத சட்டத்தில் கைது செய்துள்ளது எடப்பாடியின் ஆட்சி!

அந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்  என்பது தான் தோழர் பாலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது. அதாவது, எப்போதோ நடந்த ஒரு சாதாரண நிகழ்வை தற்போது தூசு தட்டி, ’’பாசிஸ பாஜகவை வீழ்த்துவாயோ..?’’ என கேட்கின்றன மத்திய,மாநில அரசுகள்!

இவர்கள் யாரும் ரகசிய இயக்கம் நடத்தியவர்களல்ல, பாசிஸ பாஜக வை இந்த தேர்தலில் மக்கள் வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் மட்டுமே செய்தனர்! ஆனால், இவர்கள் மீது சதிக்குற்றம் (120B), அரசைக் கவிழ்க்க சதி (124A), தடை செய்யப்பட்ட சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராய் இருத்தல் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் – UAPA – ஊபா பிரிவு 10), சட்ட விரோத நடவடிக்கைகள் (பிரிவு 19), பயங்கரவாதச் செயல் (பிரிவு 15), பயங்கரவாத சதி (பிரிவு 18) உள்ளிட்ட கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதானது எளிய எதிர்ப்பாளர்களைக் கூட ஜன நாயகத்தில் எதிர் கொள்ள முடியாமல் பாஜக அரசு உள்ளது என்பதும்,அவர்களின் விசுவாசமிக்க கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது என்பதும் தெளிவாகிறது. உபா சட்டத்தில் இந்திய அளவில் கைதாகியுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து ஏற்கனவே நமது அறம் இணைய இதழில்,            உபா சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்கவா? வளர்க்கவா? என எழுதியுள்ளோம்.

ஊபா சட்டத்தின்படி, ஒரு டி.எஸ்.பி.யின் முன்னால் ஒருவர் அளிக்கும் வாக்குமூலமே வேறு எவரையும் கைது செய்வதற்கு போதுமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.  தங்கள் விருப்பத்திற்கு யாரை வேண்டுமானாலும் கைது செய்து தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு, போலியாக குற்றச்சாட்டுகள் புனைந்து குற்றப் பட்டியலில் இணைத்துக் கொள்வ காவல்துறையினருக்கு இது வழி ஏற்படுத்துகிறது.

ஊபா சட்டத்தின்கீழ் பயங்கரவாதச் செயல் அல்லது பயங்கரவாதச் சதி என ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட உடனேயே அதுகுறித்த குற்றவழக்கு அதிகாரத்தை மாநிலக் காவல்துறையிடமிருந்து இந்திய அரசின் “தேசிய விசாரணை முகமை” (என்.ஐ.ஏ.) எடுத்துக் கொள்கிறது. ஆனால், இந்த வழக்கை தமிழக காவல்துறை என்.ஐ.ஏவின் அணுகுமுறைகளோடு நடத்துகிறது.

பாஜகவைக் கூட நேர்பட எதிர்த்து போராடிவிடலாம் போல! ஆனால்,பாஜகவின் ராஜவிசுவாசிகளை சமாளிப்பது தான் அதிக துன்பமாகவுள்ளது. இவர்களின் அடிமை மோகத்தின் விளைவால் கூடுதலாக தண்டித்து நல்ல பெயர் வாங்க துடிக்கின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்! அகிம்ஸை தேசம் அராஜக அரசியல்வாதிகளின் அதிகாரத்தில் சிக்கித் திணறுகிறது..!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time