எல்ஐசியை ஏப்பம்விடத் துடிக்கிறது பாஜக அரசு!

-மாயோன்

40 கோடி மக்களின் சேமிப்பை உள்ளடக்கிய மாபெரும் அரசு நிறுவனம் எல்.ஐ.சி! அபார லாபம், அனைத்து தரப்பின் நம்பிக்கை, அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பங்களிப்பு..என ஆல் போல தழைத்தோங்கி நிற்கும் எல்.ஐ.சியை பலவீனப்படுத்தி, சீர்குலைத்து, இந்தியாவை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வேட்டைக் காடாக்க மாற்ற முயற்சிக்கிறது பாஜக அரசு..!

எல்.ஐ.சி.கைவிட்டுப் போவதை அனுமதித்தால் என்னென்ன கெடு விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்குகிறது இந்தக் கட்டுரை!

எல்.ஐ.சி.என நாட்டு மக்களால் அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ,நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதோடு, பல்வேறு அரசு நிறுவனங்களையும் வங்கிகளையும்  காப்பாற்றிக் கரைசேர்த்துக் கொண்டிருக்கிறது. காப்பீட்டுத்துறையில் மிகச்சிறந்த சேவையை மக்களுக்கு  வழங்கிக்கொண்டு அமோக லாபமும் ஈட்டுகிறது‌.

போட்டிக்கு வந்து சந்தைக்களத்தில் நிற்கும் அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு கம்பீரமாக நிற்கிறது.

இந்த  மகத்தான  மாபெரும் அரசு நிறுவனத்தை பங்குவிற்பனைக்கு கொண்டு செல்லும் மிக மோசமான முடிவை மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு எடுத்துள்ளது.

இந்த நிலைப்பாடு எத்தகைய ஆபத்தான நிலைக்கு அந்த நிறுவனத்தை இட்டுச் செல்லும்  என்று தெரியவில்லை. கடைக்காலையே அசைக்கிறார்கள். அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் மெய்ப் பொருளை அறிய முடியாமல் இருப்பதுதான் வேதனையான அம்சம்.

1956 ஆம் ஆண்டில் ரூ 5 கோடி மூலதனத்தில் மத்திய அரசால்  தொடங்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் சொத்து  இன்றைய சந்தை மதிப்புப்படி சுமார் 36 லட்சம் கோடியாகும். தற்போது இந்நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாலிசிதாரர்கள் எண்ணிக்கை 40 கோடி.

அரசு பத்திரங்களிலும், பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி. நிறுவனம் வருடந்தோறும் செய்யும் முதலீடு சுமார் 60 கோடி. அப்படி என்றால் எல்.ஐ.சி. எவ்வளவு லாபம் ஈட்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்து 21 ஆண்டுகள் ஆகின்றன. 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க தவம் கிடக்கின்றன. அப்படி இருந்தும் காப்பீட்டு சந்தையில் 30 விழுக்காடு அளவிற்கு கூட இவ்வளவு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்தும் வெற்றி பெறமுடியவில்லை.

இத்தகைய போட்டி நிறைந்த  வணிகச் சூழலில்  காப்பீட்டுச் சந்தையில் 70 விழுக்காடு வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு இந்த மாபெரும் அரசுக் காப்பீட்டு நிறுவனம் செயல்படுகிறது என்றால் எந்த அளவுக்கு இதன் சேவை இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரிவரை மேற்கே அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கிழக்கே குஜராத்  வரை நூறு பேர் வாழும் குக்கிராமத்தில் கூட எல்.ஐ.சி. பாலிசிதாரர் இருப்பார்.

லட்சத்திற்கு மேற்பட்ட  ஊழியர்கள், அதிகாரிகள்,  11 லட்சம் முகவர்கள் ஆகியோரின் கெளரவமான வாழ்க்கைக்கு ஆதாரமாகத் திகழும் உலகப் பெரும் பொதுத்துறை நிறுவனமென்றால் அது எல்.ஐ.சி மட்டுமே! இன்றைக்கு இந்தியா முழுமையிலும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள், முகவர்கள் மத்திய பாஜக அரசின் கெடு நோக்கத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்! ஆனால், இது அவர்கள் மட்டும் போராட வேண்டிய போராட்டமல்ல!

வாடிக்கையாளர்களின் பாலிசி முதிர்வு பெற்றதும் அவர்களேகூட மறந்து போனாலும் அவர்களுடைய முதிர்ச்சி தொகையை கூப்பிட்டு கொடுக்கும்  ஒரே  நிறுவனம்  எல்.ஐ.சி.யாகத்தான் இருக்கும். அதற்கென உள்ள எல்.ஐ.சி அதிகாரிகள் முதிர்ச்சி பெற்ற பாலிசிதாரர் ஏன் பணம் வாங்க வரவில்லை? என்று தொலைபேசி மூலமாகவோ கடிதம் மூலமாகவோ நினைவூட்டல் செய்கிறார்கள். அல்லது தெருவுக்குத் தெரு இருக்கும் எல்ஐசி முகவர்கள் மூலமாக அவர்கள் வீட்டு கதவை தட்ட வைத்து வாடிக்கையாளர் பணத்தை பட்டுவாடா செய்கிறார்கள்.

அதனால்தான் 24 தனியார் நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பட்டியலில் முதலிடத்தில் இந்நிறுவனம் உள்ளது.

சேவை அளிப்பதில் அரசு நிறுவனத்தைவிட  தனியார் நிறுவனமே சிறந்தது என்ற  தவறான கருத்து மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. இது தப்பானது மட்டும் அல்ல ஆபத்தானதும்கூட என்பதற்கு 2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரை பாதித்த பெருவெள்ள சம்பவமே சான்று.

ராஜீவ்காந்தி நெடுஞ்சாலை எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்தது. பெருவெள்ளம் விளைவாக கழுத்தளவு ஆழத்தில் அந்த சாலை மூழ்கிக் கிடந்தது. அங்கு இயங்கிக் கொண்டிருந்த ஓலா, ஊபர் உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களும் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. அரசு போக்குவரத்து நிறுவனம் மட்டுமே தங்கள் பேருந்துகளை அந்த சாலையில் இயக்கி, தத்தளித்துக் கொண்டிருந்த பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் சேர்த்தது.

தனியார் நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். அரசு நிறுவனங்களுக்கு அதையும் தாண்டி மக்களுக்கு சேவை அளிக்க வேண்டிய கடமை உண்டு என்பது கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் நிரூபித்தன! இதை ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மனதில் ஆழமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீட்டுத் துறை அரசிடம் இருந்த காரணத்தால் மட்டுமே இன்றைக்கு குக்கிராம ஏழை பாளைகளுக்கும் காப்பீட்டு சேவை போய்ச் சேர்ந்துள்ளது.தனியார்கள்  வணிக வாய்ப்பு உள்ள பெரிய நகரங்களை மட்டுமே குறி வைப்பார்கள். சிறிய  நகரங்களைக்கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். காரணம் அவர்கள் எதில் இறங்கினாலும் லாபம் கிடைக்குமா? என்றுதான் யோசிப்பார்கள்.

தனியார்மயம் இன்றைக்கு ஏற்பட்டதல்ல. 1956 ஆம் ஆண்டுக்கு முன்பும் தனியார்  நிறுவனங்கள் இருந்தன .அன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் மட்டும்  ஏறத்தாழ 245 இருந்தன .

அவற்றில் கணிசமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கவில்லை .ஒரு சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி செயலிலும் ஈடுபட்டன. எனவேதான்,காப்பீட்டுத் துறையில் தனியார்மயம் ஒழிக்கப்பட்டு அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன.

1956 ல், காப்பீட்டுத் துறை முழுக்க முழுக்க அரசுடைமை ஆனபோதிலும் மற்ற அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு எல்.ஐ.சி.க்கு மட்டும் உண்டு .

இந்திய பாராளுமன்றம் எல்.ஐ‌.சி. க்காக தனி சட்டம் ஒன்றை  இயற்றியது. அந்த சட்டப்பிரிவு 37ன் படி  எல்.ஐ‌.சி.உறுதி அளிக்கும் மக்களின் காப்பீட்டுத் தொகை மற்றும் ஊக்கத்தொகைக்கு மத்திய அரசு பொறுப்பேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மக்களுக்கு சேர வேண்டிய காப்பீட்டு தொகையை செலுத்த இந்நிறுவனம் தவறினால் அதை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும். அந்த உத்தரவாதத்தை இந்தச் சட்டம் நாட்டு மக்களுக்கு அளித்திருந்தது.அயினும் அப்படி ஒரு சூழலுக்கு அவசியமே இது வரை ஏற்படவில்லை! மேலும், எல்.ஐ.சி.நிறுவனம், தான் ஈட்டும் லாபத்தில் 95 விழுக்காடு பாலிசு தாரர்களுக்கும் 5 விழுக்காடு அரசுக்கும் கொடுக்கிறது‌.

அதாவது, இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்திய மக்கள்தான். பங்கு விற்பனைக்கு இது உட்படுத்தப் பட்டால் இந்த மக்கள் நலனுக்கான பொன்னான இந்த சட்ட விதிகள் காணாமல் போகக்கூடும்.

இந்திய மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்காக, தங்களுடைய முதுமை கால பாதுகாப்புக்காக  எல்.ஐ.சி.யை முழுமையாக நம்பி பணத்தை போட்டு வைத்திருப்பதற்கு  இந்த சட்டமும் விதிகளும் முக்கியமான காரணமாகும்.

அம்பானியின் ஜியோவை வளர்த்துதெடுத்து நிலை நிறுத்துவதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியை திட்டமிட்டு தடுத்து அதனை சரிவுக்கு கொண்டு சென்ற ஆட்சியாளர்கள், அதைப் போலவே தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் மீதும் கை வைக்க மத்திய ஆட்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்!.

எல்.ஐ.சியின் பங்குகளில் எத்தனை சதவீதம் தனியாருக்கு விற்கப் போகிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த நிதியாண்டில், 70 ஆயிரம் கோடி ரூபாயை குறிப்பிட்ட அளவு பங்கு விற்பனை மூலம் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விற்பனை செய்யப்படும் எல்.ஐ.சி யின் பங்குகள் சுமார் 5%  என்ற அளவுக்கு தான் இருக்கும், அதனால் அந்த நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது  என்கிறது மத்திய அரசு. இப்படிச் சொல்லி  நாட்டு மக்களின் காதுகளில் பூ  சுற்றுகிறார்கள்.

காப்பீட்டுத் துறையில் முதலில் 49 விழுக்காட்டுக்குதான்  அந்நிய முதலீடு என்றார்கள். இப்போது அந்த அளவை 74 சதவீதமாக உயர்த்தி உள்ளார்கள்.

நாடு நல்லா இருக்கும் வரைக்கும்தான் அந்நியர்கள் தங்கள் முதலீட்டை இங்கு  விட்டு வைத்திருப்பார்கள். நல்லா இல்லாதபட்சத்தில் அயல்நாட்டவர்  தங்கள் முதலீட்டை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் சோமாலயா , வெனிசூலா போன்ற நாடுகள்  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

தொடக்கத்தில் சுமார்  5% அளவிற்கு பங்குகளை விற்பார்கள். படிப்படியாக அதிக பங்குகளை தனியாருக்கு விற்றுவிடுவது தான் இவர்களின் திட்டம்!

எல்லாம் முடிந்த பிறகு  குய்யோ முய்யோ என்று நாம் கதறி அழுது புரண்டு பயனில்லை .

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு எல்.ஐ.சி  குறைந்த வட்டியில் கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் நலத்திற்கான எண்ணிலடங்கா  திட்டங்களுக்கு  எல்.ஐ..சி அளித்திருக்கும் பங்கு மகத்தானது.   மத்திய அரசின் நிறுவனமான  ஓ.என்.ஜி.சி.பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது அந்த முயற்சி தோல்வி அடைய இருந்தது. எல்.ஐ.சி தான்  அதிக அளவு வாங்கி அந்த முயற்சியை வெற்றியாக்கிக் கொடுத்தது. நஷ்டத்தில் தத்தளித்து கொண்டிருந்த ஐ.டி.பி.ஐ  வங்கியை பெருந்தொகை கொடுத்து கரை சேர்த்தது. தனியார் உள்ளே வந்துவிட்டால், இது போல முழுக்க முழுக்க நாட்டுக்காகவும் பொதுமக்கள் நலனுக்காகவும் பணியாற்ற முடியுமா?

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியாளர்கள் தாங்கள் சொன்னதை  செய்தவர்களாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டுவருவோம் என்றார்கள், செய்யவில்லை .ரூபாய் நோட்டு செல்லாது என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு கருப்புப் பண முதலைகளிடமிருந்து பெரும் பணத்தை மீட்கப் போவதாகச் சொன்னார்கள், அதுவும் தோல்வியில் முடிந்தது. ஜிஎஸ்டி அமலாக்கம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

பிடுங்கக்கூடாத ஆணிகளை பிடுங்கி, அடிக்கக் கூடாத இடங்களில் அடித்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.அரசு.

“செயத்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்”.(குறள் 466)

பொருள்: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான் ;

செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

இது அரசுக்கும் பொருந்தும்.

பொருளாதார சீர்கேட்டை சரி செய்ய, முதலில் செய்ய வேண்டியது ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தான்.  லோக் பால், லோக் ஆயுக்தா பற்றி ஆட்சிக்கு வரும் முன்பு வாய் கிழிய பேசினார்கள். ஆனால், அதை  செயல்பாட்டுக்கு  கொண்டுவர ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடித்த பெரும் மோசடி முதலாளிகளை தடுக்கவும், தப்பிச்சென்ற அவர்களை கைது செய்து கொண்டு வரவும் உறுதியான அணுகுமுறையை காட்டவில்லை.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து தற்போது, மனிதனைக் கடிக்கும் விதமாக 40 கோடி மக்களின் சேமிப்பு பணம் உள்ள எல்ஐசி மீது கை வைக்க உள்ளார்கள்.

இந்த மகத்தான நிறுவனத்தை பங்கு விற்பனை ஒன்றும் செய்து விடாது என்று ஜால்ஜாப்பு கூறுகிறார்கள். கடந்தகால இவர்களுடைய செயல்பாடுகளே இவர்கள் மீது பெருத்த ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டின் “கற்பகத்தரு” வாக “அட்சய பாத்திரமாக “உள்ள  எல்.ஐ.சி.நிறுவனம்  இன்னும் கையை  விட்டுப் போகவில்லை.

இதன் பொருட்டு  அகில இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்களும், எல்.ஐ.சி., ஊழியர்களும்  தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் குரல் கொடுக்க வேண்டும். அனைவரும் ஒன்று பட்டுப் போராட வேண்டும்.

எல்.ஐ.சி.யை பாதுகாக்கும் கடமை 40 கோடி  பாலிசிதாரர்களுக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களுக்கும் உள்ளது.

எல்‌ஐ.சி.யைக் காப்பாற்றும் நம்பகரமான ஒரே ஆயுதம் நாட்டு மக்களின் ஒருமித்த உஷ்ணக்காற்று மட்டுமே.!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time