பிரிட்டிஷ் கொடியை இறக்கி இந்தியக் கொடியை ஏற்றிய பாஷ்யம் நேர்காணல்! நிருபராக தோழர் நல்லகண்ணுவும்,போட்டோகிராபராக நானும்!

காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்களில் நானும் ஒருவன்!
1980 களில் காந்தியப் பண்புகளைக் கொண்ட அரிய தலைவர்கள் சிலரை நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கண்டேன்!
தன் 5 ஆம் வயதிலேயே தன்னை கட்சிக்கு ஒப்புவித்து கொண்ட முது பெருந்தியாகி தோழர் எம். வி.சுந்தரம்,

தன் சொத்துகள் அனைத்தையும் கட்சிக்கு தாரை வார்த்து,எளிய வாழ்க்கை வாழ்ந்த தோழர்.கே.டி.கே.தங்கமணி,

தன் வாழ்னாளெல்லாம் கட்சி பிரசுரங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலேயே தன்னை அர்ப்பணித்த முதுபெரும் தோழர்.முருகேசன்,

மார்க்சிய பேரறிஞர் தோழர்.ஆர்.கே.கண்ணன்…,

போன்ற தலைவர்களிடம் பேசி,பழகிடும் வாய்ப்பு பெற்றவர்களில் நானும் ஒருவன்.

அந்த நாட்களில் தோழர். நல்லகண்ணு இன்றுள்ளதைப் போல இவ்வளவு முக்கியத்துவம் கொண்டவரல்ல.
.ஆனால்,துடிப்பானவர்,வாட்ட சாட்டமாக இருப்பார்.பேச்சில் கிண்டலும் , நையாண்டியும் தூக்கலாக வெளிப்படும்! மூத்த தோழர்களிடம் மரியாதையோடும்,பரிவோடும் பழகுவார்.என் போன்றவர்களிடம் அன்பு பாராட்டுவார்.

ஒரு நாள் என்னிடம்,” நாளைக்கு தியாகி ஒருவரை ஜனசக்திக்காக பேட்டி எடுக்க போகிறேன். நீ போட்டோ எடுக்க வந்திடு”என்றார்.
மறு நாள் பாண்டிச்சேரி மக்கள் தலைவர் சுப்பையாவை அழைத்து கொண்டு நாங்கள் மூவருமாக மயிலாப்பூர் விசாலாட்சி நகரில் இருந்த சுதந்திரப் போராட்ட தியாகியும்,பிரபல ஒவியருமான ஆர்யா எனப்படும் பாஷ்யம் அவர்களின் இல்லம் சென்றோம். எங்களை வரவேற்ற பாஷ்யம் அவர்கள்,என்னை சுட்டிக்காட்டி, சுப்பையாவிடம் “உன் மகனா? நல்லக்கண்ணு மகனா?” என்றார்.

‘’இல்லை,இவர் கட்சியின் இளந்தோழர்’’ என நல்லகண்ணு அவருக்கு விளக்கமளித்தார்.

பாஷ்யம் அவர்களுடனான நீண்ட நெடிய உரையாடல் எங்கள் முவருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது! பாஷ்யம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் தமிழக தளபதியாக இருந்தவர்.பாரதியாரை நேரில் பார்த்தவர்.இவர் வரைந்த பாரதி ஒவியத்தையே இந்திய அரசு அதிகார பூர்வமாக அங்கீகரித்திருந்தது!

சுதந்திரத்திற்கு முந்தியே இவர் சென் ஜார்ஜ் கோட்டையில் நடுராத்திரி நேரத்தில்,துப்பாக்கி ஏந்தி நின்ற காவலர்கள் கண்ணில் படாதவாறு வழு,வழுப்பான நீண்ட, நெடிய கொடிக் கம்பத்தில் துணிச்சலாக ஏறி,பிரிட்டிஸ் கொடியை கழற்றிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றியவர்.அடுத்த நாள் காலை கொடி மரத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கண்டு பிரிட்டிஸ் அரசு அதிர்ந்தது!

வயது முதிர்ந்த நிலையிலும் பாஷ்யம் அவர்களிடம் ஒரு நெருப்பு நெஞ்சில் கழன்று கொண்டே இருந்ததை நாங்கள் நன்கு உணர்ந்தோம்.சுதந்திர இந்தியாவின் பொய்மை,போலித்தனம்,ஊழல் ஆகியவற்றை கடுமையாகச் சாடினார்.அவரிடம் பேசிய நிகழ்வு ஒரு வித்தியாசமான அனுபவத்தை எங்களுக்கு தந்தது.

திரும்பி வரும் போது,பாஷ்யத்தை குறித்து மிகவும் சிலாகித்தவாறு இருவரும் பேசிக் கொண்டனர்.

ஏ ..ங்கப்பா, மெய் சிலிர்க்குது!” என்றார் நல்லகண்ணு.

இந்த சந்திப்புக்கு பின்பு,பாஷ்யம் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் நான் தொடந்து நட்போடு போய் பேசி வந்தேன். அந்த காலங்களில் நான் எழுதிய ஒரிரு ஆவேசக் கவிதைகளை அவரிடம் கொண்டு காட்டிய போது,’’ அடேய்,தம்பி,உன்னிடம் உண்மையான தேச பக்தி விளங்குகிறது.கவிதைகளில் நெருப்பு தகிக்கிறதே..”என்றார்.
அது வரை ஒருவரும் என்னை அவ்வாறு பாராட்டியது இல்லை.அந்த பாராட்டு எனக்கு இரண்டு விஷங்களில் தெளிவு தந்தது!
ஒன்று, நான் கவிதைகள் எழுத கூடியவன் தான்!
மற்றொன்று,எனக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது என்பதை இந்த மனிதரே அங்கீகரிக்கிறார்.
இது எனக்கு மிகுந்த சந்தோசத்தையும் ,பெருமிதத்தையும் தந்தது.
அவர் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தை நான் ரொம்ப நாளாக பாதுகாத்து வைத்திருந்தேன்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time