ஆசைகாட்டி சினிமா கலைஞர்களை ஏமாற்றும் பாஜக…!

-சாவித்திரி கண்ணன்

ஆளும் கட்சியாக இருப்பதால் நம் பண கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம்! நாம் பிரச்சாரம் செய்வதன் மூலம், ஏதோ ஒருவித பங்களிப்பை செலுத்துவதன் மூலம் இங்கே கிடைக்கும் பணத்தைக் கொண்டு நம் கடனை அடைத்துவிடலாம் என் பாஜகவில் அணிஅணியாக சேர்ந்து வருகிறார்கள் சினிமாகாரர்கள்! ஆனால், அப்படி சேர்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதற்கு பிரத்தியட்ச சாட்சியாகிறார் இயக்குனர் கஸ்தூரிராஜா! ராதாரவி இதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்திவிட்டார்..!

சமீபத்தில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் அதிக கடன் சுமை தாளாமல் அவர் கொடுத்த செக்கெல்லாம் பவுன்ஸ் ஆன நிலையில் பாஜகவில் அடைக்கலமானார்.

சினிமா என்பது நிரந்தர வருமானமில்லாதது! மார்கெட் இருக்கும் போது மட்டுமே அங்கு மதிப்பும், மரியாதையும், பண வரவும் கிடைக்கும். அப்போது கிடைக்கும் பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்து எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்கிறவர்கள் மார்கெட் இல்லாவிட்டாலும் சமாளித்து விடுகிறார்கள். அதேசமயம் படத் தயாரிப்புகளில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் எதிர்பாராவிதமாக ஏற்படும் நஷ்டத்தால் படுகுழிக்குள் வீழ்கிறார்கள். அப்படி வீழ்பவர்களாகப் பார்த்து வலைவீசி தங்கள் கட்சியில் சேர்த்து பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பாஜக. மக்கள் விரும்பாத பல திட்டங்கள்,சட்டங்களை கொண்டு வருவதால் தங்கள் மீது மக்களுக்கு ஏற்படும் கோபங்களைத் தணிக்க சினிமாகாரர்களின் பிரச்சாரம் துணை செய்யும் என்று பாஜக நம்புவதாகத் தெரிகிறது.

அந்த வகையில் நடிகர் நெப்போலியன் சேர்ந்தார். பாஜகவால் பயன்பெற முடியாது என அமைதியாக வெளிநாடு சென்றுவிட்டார்! கங்கை அமரன் சென்றார். அவருக்கும் எதுவும் பலனில்லை. அதே சமயம் ஆர்.கே நகர் தொகுதியில் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் போது கட்சித் தலைமையிடமிருந்து கணிசமாகப் சில கோடிகள் பணம் தரப்படுவதாகத் தெரிகிறது. அந்த வகையில் அப்போது கங்கை அமரன் கொஞ்சம் பலனடைந்தாராம்! அதற்குப் பிறகு பிரச்சாரத்திற்காக அவரை கட்சி போதுமான அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

காய்த்திரி ரகுராமுக்கும் இந்த வருத்தம் பெரிதாக இருந்தது. இதைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக தனது டிவிட்டரில் இவ்வாறு காய்த்திரி எழுதினார்..! ”சினிமாவைவிட, அரசியலில் நடிகர்கள்  அதிகம் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன்.’’ என எழுதினார். பிறகு அவர் சமாதானம் செய்யப்பட்டாராம்! ‘சரி,உங்களுக்கு சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் தயாராக இருங்கள்’ என உத்திரவாதம் தரப்பட்டதால், அதை நோக்கி இயங்கி கொண்டுள்ளார் காய்த்திரி.

கணவர் சுந்தர்.சியின் பொருளாதார இக்கட்டை சரி செய்ய காங்கிரசில் இருந்து பாஜக வந்தவர் குஷ்பு. அவருக்கும் சொல்லப்பட்டது மாதிரி பிரச்சார வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு கூட பாஜக பயன்படுத்தவில்லை என குஷ்பு முணுமுணுக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் குஷ்புவுக்கு துறைமுகம் அல்லது சேப்பாக்கம் இரண்டில் ஒரு தொகுதி தரப்படும் என உத்திரவாதம் தரப்பட்டதாகவும், அதை நம்பி அவரும் களம் கண்டு இயங்க ஆரம்பித்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள்! அதனால் தான் துறைமுகம் பகுதியில் நடந்த சிங்காரவேலரின் நிகழ்வுக்கு அழையா விருந்தாளியாக சென்றுள்ளார். இதை கேள்விப்பட்ட அதிமுகவினர் மிகவும் தர்மசங்கடம் அடைந்ததார்களாம்!

சமீபத்தில் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார். அந்த இணைப்பை தன் சொந்த செலவில் ஒரு பெரும் விழாவாகவே அவர் திருவான்மியூரில் நடத்தினார். அப்போது நடந்த விழாவில் நடிகர் ராதாரவி தன் ஏமாற்றத்தை பலர் அறிய பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ராதாரவி ஒரு பிரச்சார கூட்டதிற்கு அதிமுக, திமுகவில் ஒரு லட்சம் வரை பெற்று வந்தாராம்! ஆனால், பாஜக வந்தால் இரண்டு லட்சம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்த அவரை பாஜக சுத்தமாக டீலில் விட்டுவிட்டதாம்! இதைத் தான் அன்றைய கூட்டத்தில் ராதாரவி பேசும் போது, ”நான் கராத்தே தியாகராஜன் அழைத்ததால் மட்டுமே இங்கு வந்துள்ளேன். எனக்குத் தான் அல்வா கொடுத்துட்டீங்க, இவரையாவது நல்லா பயன்படுத்திக்கோங்க..’’என்ற வகையில் பேசினார்.

இது குறித்து கட்சியின் நீண்டகால விசுவாசியான ஒரு நடிகரிடம் பேசிய போது, கலகலவென்று சிரித்தார். பேட்டியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால், இங்கு சேர்ந்தால் பொருளாதாரம் வளமாகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதெல்லாம் ஒரு மாயை! அவனெல்லாம் சேர்ந்துட்டானே..இவளெல்லாம் சேர்ந்துட்டாலே… நமக்கு அதைவிட சிறப்பாக பிரச்சாரம் செய்ய வருமே.. அத்தோட நம்ம பொருளாதாரப் பிரச்சினையும் தீருமேன்னு பல கலைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் ஒரு வகையில் எலிபொறியில் சிக்கியவர்களே! எல்லா சினிமாகாரர்களுமே முதலில் தாங்களாகவே ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். முன்னாடி சேர்ந்துள்ளவர்களிடம் விசாரிப்பதுமில்லை. கேட்டால் நம்பகமான பதில் கிடைக்காது என்பதும்,பொறாமை தான் மிஞ்சும் என்பதும் காரணமாயிருக்கலாம்! அப்புறம் தான் எதுவும் கிடைப்பதில்லை..என தெரிய வந்து அதிர்ச்சிகுள்ளாகி, அமைதியாகிவிடுகிறார்கள். இதை வெளியில் சொல்லவும் முடியாது.

அதேசமயம் அதிருப்தி தெரியக் கூடாது என்பதற்காக செயற்குழு உறுப்பினர் என்று ஏதோ ஒரு பதவியை தந்துவிடுகிறார்கள்! மதுவந்தி, நமிதா, கெளதமி, ராதாரவி, கஸ்தூரி ராஜா,கங்கை அமரன் ஆகியோருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி தந்துவிட்டார்கள். இது ஏதோ ஒரு வகையில் கவுரவமாவது கிடைத்ததே என அவர்கள் சமாதானமடைய உதவுகிறது. மற்றபடி தமிழக கட்சித் தலைமை எதுவும் செய்வதில்லை. ஆனால், மேலிடத்தில் இருந்து நடிகர், நடிகைகள், கலைஞர்களை பயன்படுத்த ஏதோ ஒரு தொகை தரப்பட்டிருக்கலாம். அதை இங்குள்ளவர்கள் சரியாக பட்டுவாடா செய்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும்’’ என்றார்.

கஸ்தூரிராஜா விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அவர் ரஜீனியின் சம்மந்தி என்பது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்! அவர் கடன்காரனிடமே நான் பணம் தராவிட்டால் என் சம்பந்தி ரஜினி தருவார் என எழுதி தந்தவர். கஸ்தூரிராஜா வந்து சேர்வதை ரஜினி வந்து சேர்வதற்கான முன்னோட்டமாகக் கருதித் தான் அமித்ஷா முன்னிலையில் கஸ்தூரி ராஜா கட்சியில் சேரும் நிகழ்வு அரங்கேறியது. பாஜகவில் சேர்ந்து அவர் மோடியை கர்மவீரர் காமராஜருக்கு இணையானவர் என பேசி புகழ்ந்தார்! ஆயினும், அவரது பொருளாதார பிரச்சினைக்கு விடிவு கிடைக்கவில்லை. தற்போது நீதிமன்றம் அவருக்கு கெடு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது! தன் சம்பந்தி ரஜினியும் கைகொடுக்கவில்லை. தன் மகன் தனுஷும் கைகொடுக்கவில்லை பாஜகவாவது கை கொடுக்கும் என ஒரே நம்பிக்கையில் கடந்த ஆறாண்டுகளாக கஸ்தூரிராஜா உழன்றும் அவரை கட்சி கவனிக்கவில்லையாம். தேர்தல் காலத்தில் கொஞ்சம் சில்லறைகள் கிடைத்ததோடு சரியாம்!

பொருளாதார கஷ்டம் தீர பரிகாரக் கோயில்கள் என்பதாக… அந்த கோயிலுக்கு போனால் கஷ்டம் தீரும், இந்த சாமியை கும்பிட்டால் கஷ்டம் தீரும் என்று உழலும் மக்கள் திரள்போல, பாஜகவிற்கு வரும் சினிமாகாரர்கள் நிலைமை உள்ளது. கடவுளிடாமாவது அருள் கிடைக்கலாம். கட்சிகளிடம் கரன்சி கிடைக்குமா என்பதற்கு உத்திரவாதமில்லை. பாஜகவை சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்களுக்கான புகழிடமாக கருதும் மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது! ஒருவர் தான் விரும்பும் கொள்கைக்காக, லட்சியங்களுக்காக பிரச்சாரம் செய்வது அவரது சமூக கடமை என்ற நிலை மாறி, அதை பிழைப்புவாத பித்தலாட்டமாக்கிவிட்டன அரசியல் கட்சிகள்! கட்சிகளில் தங்களுக்கு தரப்படும் பணம் என்பது ஊழல் செய்து, ஊரையடித்து உலையில் போட்டு கிடைக்கும் பணம் தான்! அதில் பங்கு கேட்பது பாவகரமானது என்ற புரிதல் இல்லாத சினிமாகாரர்கள் அந்த மாயவலையில் சிக்கி அழியட்டும், அல்லது பணம் பெற்று பாவங்களை தாங்களும் சேர்ந்து சுமக்கட்டும்! நமக்கென்ன வந்தது.? ஊதிடும் சங்கை ஊதிவைத்தேன்.கரன்சி அரசியல் புறம் தள்ளப்பட்டு, கண்ணிய அரசியல் முன்னெடுக்கப்படட்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time