அம்பானி,அதானிகளுக்கு இந்தியா விற்கப்பட்டுவிட்டதா…?

பெட்ரோல், டீசல்,கேஸ் விலைகள் சமீப காலமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டே உள்ளன! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த நிலையில் கூட இந்தியாவில் இவற்றின் விலை அதிகமாகத் தான் இருந்தன! இதற்கு இந்தியாவில் விதிக்கப்படும் கலால் வரி,ஜி.எஸ்.டி.வரி, மாநில அரசுகளின் வரி ஆகியவையே காரணம் என எல்லா ஊடகங்களும் விலாவாரியாக புள்ளிவிபரங்களுடன் எழுதினார்கள். ஆனால், இந்த விலை உயர்விற்கான உண்மையான காரணம் நான் தேடிய வரை எந்த மீடியாவிலும் வெளிவரவில்லை! ஆகவே, உண்மையான காரணம் இது தான் என நான் மட்டும் எழுதுவதால் அலட்சியப்படுத்தப்படலாம் என்றாலும், இது தான் யதார்த்தம்! மற்றவர்கள் யாரும் சொல்லாமல் நான் மட்டுமே ஒன்றை வெளிப்படுத்துவதால் அது பொய் என்பதாகிவிடாது. நீங்களும் நான் கூறியுள்ளதாலேயே அதை நம்ப வேண்டியதில்லை! யாரும் தகவல்களை சரி பார்த்து, ஆராய்ந்து தெளிவு பெறக்கூடிய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியைவிட்டு இறங்கும் 2014 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 107 டாலருக்கு விற்ற போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 71. 41 பைசா வாக இருந்தது. அதே கச்சா எண்ணெய் விலை கொரானா காலகட்டத்தில் பேரல் 30 டாலர் விலைக்கு விற்ற போது இங்கு லிட்டர் 88 ரூபாய் விற்கப்பட்டது! தற்போது பேரல் 59 டாலர் விற்கும் போது பெட்ரோல் விலை 92 ஆக உள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலையை பொறுத்து தான் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக சொல்வதெல்லாம் உண்மையல்ல.

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கின்றன! இந்தியாவில் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்,பாரத் பெட்ரோலியம் போன்றவை ஒரு காலத்தில் பெட்ரோல் விலையை நிர்ணயித்து வந்தன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நிலைமை மாறியது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து  முகேஷ் அம்பானி, கால் வைக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். எப்படி இந்திய நெட்வொர்க் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் களமிறங்கிய மூன்றே ஆண்டுகளில்  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்,ஏர்செல். வெர்ஜின். டொகோமோ. டாடா டெலிசர்வீஸ். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு ஜியோ முதலிடத்திற்கு வந்ததோ…, அதே போல ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனம் அனைத்து அரசு ஆயில் நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் பெரும் நிறுவனமாக வந்துவிட்டது.

அதாவது, பார்ச்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கான பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. அதே சமயம் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்துள்ளது.பாரத் பெட்ரோலியம் நிறுவனமோ மிகப் பின்தங்கிவிட்டது! அதாவது ஒட்டுமொத்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பேரல்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே இறக்குமதி ஆகிறது . நாள் ஒன்றுக்கு குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் 5,80,000 bpsd (barrels per stream day) உற்பத்தி செய்கிறது. இதனால், இந்தியன் ஆயில், ஷெல்,இந்துஸ்தான் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி , பாரத் பெட்ரோலியம் என அனைத்து நிறுவனங்களும் ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் தான் விலை நிர்ணயம் செய்ய முடியும் என்பதே கள நிலவரமாகும்!

இந்த நிலையில் இந்திய அரசின் பாரத் பெட்ரோலியத்தின் பெரும்பங்கை அம்பானியின் ரிலையன்ஸ்  நிறுவனம் வாங்கியதை நினைவுபடுதுகிறேன். இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்தின்படி 51% ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், மீதமுள்ள 49% தான் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கும் உரியதாகும்.அந்த பங்கையும் ரிலையன்ஸ் வாங்க கூடிய சூழலை மத்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ள நிலையில், இன்னும் ஒரிரு ஆண்டுகளில் பாரத் பெட்ரோலியம் முற்றிலும் பலம் குறைந்து அம்பானியின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் மட்டுமே இந்தியாவின் ஆயில் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏகபோக நிறுவனமாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது!

இதற்கு தோதாக ஆலோசனை வழங்க பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சர்தக் பெகுரியாவும் (Sarthak Behuria),  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சஞ்சிவ் சிங்கும் (Sanjiv Singh) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிட்டனர், மத்திய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப!

கடந்த 2019 ஜுலை 5ம் தேதி பட்ஜெட்டின் போது வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த மாதமே பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP Plc) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என இரு நிறுவனங்களுக்கும் இடையே நாடு முழுவதும் 5500 சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது கவனத்திற்குரியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விற்பனை விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம்  செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பெட்ரோலிய சந்தையின் தலைவராக உருவெடுத்துவிட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது!

அந்த வகையில் தான் செபியால் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி 40 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஆயில் நிறுவனம் இன்று பெட்ரோல்,டீசல்,எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் இந்திய சந்தையை தீர்மானிக்கும் ஒரே சக்தியாகத் திகழ்கிறது. இதை இந்திய அரசு ஒன்றும் செய்யமுடியாத கையாகாத நிலைக்கு தன்னைத் தானே தள்ளிவைத்துக் கொண்டது.

தமிழ்நாட்டின் காவிரிப் படுக்கையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்காமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் தாராளமாக கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற வாய்ப்பும் ரிலையன்ஸ் வசம் செல்கிறது.

இப்படியாக இந்தியாவின் அனைத்து அரசு துறைகளையும் பலவீனப்படுத்தி அம்பானி,அதானி ஆகியோரின் கைகளுக்கு சேர்க்கும் ஒரே நோக்கத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு பாஜக அரசு செயல்படுகிறது என்பதற்கு உதரணமாகத் தான் அனைத்தும் அரங்கேறிக் கொண்டுள்ளது!

இந்திய ரயில்வேயில் தனியார் பங்களிப்புடன் சேவை தொடரும் என ஏற்கனவே மத்திய அரசு கூறியதன் பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனம் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை! ஏற்கனவே இந்திய துறைமுகங்கள் விமான சேவைகள் ராணுவ தளவாட உற்பத்தி..உள்ளிட்ட பல காத்திரமான அம்சங்கள் அம்பானி,அதானி வசம் சென்றுவிட்டன. முன்பு ஈஸ்ட் இந்திய கம்பெனிகளின் அடிமைகளாக இந்தியர்களை கொண்டு சேர்த்த சிற்றரசர்களின் பாரம்பரியத்தில் வந்த பாஜக ஆட்சியாளர்கள் இந்தியாவை தற்போது அம்பானி, அதானி நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்லவே ஆட்சி செய்கின்றனர்! இந்த எளிய உண்மைகளை புரிந்து கொண்டால், இனி நடக்கப் போகும் அனைத்து விபரீதங்களுக்குமான விடை கிடைத்துவிடும்.

சாவித்திரி கண்ணன், அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time