கிறிஸ்துவத்தை சுய பரிசீலனைக்கு ஆட்படுத்தும் படம்..!

-பீட்டர் துரைராஜ்

கிறிஸ்தவ மதத்தை உலகுக்களித்த இயேசுநாதர் ஒரு விடுதலைப் போராளி. அதனால்தான் ரோமானிய அரசனால் கொலை செய்யப்பட்டார். இயேசுவை பின்பற்றும்  கிறிஸ்தவர்கள் எளிய, வறிய நிலையில் இருப்பவர்கள்  பக்கம், நீதியின் பக்கம் இருக்கின்றார்களா  என்பதுதான் இந்த படம் எழுப்பும் ஆதாரக் கேள்வி! எந்த ஒரு மதமும்,  அல்லது நிறுவனமும் தன்னை கால ஓட்டத்திற்கேற்ப  சரி செய்து கொள்ளவில்லை  என்றால் வழக்கொழிந்துவிடும். இதற்கு கிறிஸ்தவ மதமும் விதிவிலக்கல்ல. கிறிஸ்தவ மதம் தன்னை சரிசெய்து கொள்ளுமா ? அதற்கான  ஆற்றல் அந்த மதத்திற்குள் இருக்கிறதா…? என்பதற்கு இந்த படம் விடை தேட முயற்சித்து இருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது கிறிஸ்தவ மதம். இயேசுநாதரின் சீடரான பீட்டர் இருந்த பதவி தான் போப் ஆண்டவர் பதவி. ஒரு போப் ஆண்டவர் இறந்துவிட, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கர்தினால்கள் (Cardinals) ஒன்று கூடி போப் ஆண்டவரை  தேர்ந்தெடுப்பதில் கதை தொடங்குகிறது.  ஆக, போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற புரிதல் கிடைப்பதால், எனக்கு இந்தக் காட்சி பிடித்திருந்தது.(இதை எப்படி கற்பனை செய்ய முடியும் ?)

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, போப் ஆண்டவர் பெனடிக்ட் –  ஐச் சந்திக்க கர்தினாலாக  இருக்கும் பெர்கோகிளியோ பெர்கோ (Bergoglio) அர்ஜென்டினாவில் இருந்து வருகிறார். வாடிகன் நகரில்  இவர்களுக்கிடையே  நடக்கும் உரையாடல்தான் இந்த படம். கதை உயிரோட்டமாக, நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில், கிறிஸ்தவ மதத்திற்குள் நடைபெறும் விவாதங்களையொட்டி நடைபெறுகிறது. இதில் தென்படும் மதக்கூறுகளும்,  நடைமுறைகளும்  வியப்பைத் தருகின்றன.படம் அழகியலோடு சித்தரிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர். அது ஒரு  முக்கியமான பதவி. அவர் வெளியிடும் கருத்துக்கள் உலகின் எண்ண ஓட்டத்தை மாற்றக் கூடியன. ஓரினச் சேர்க்கையாக இருக்கலாம்; அகதிகள் பிரச்சினையாக இருக்கலாம்; உலகமயமாக்கலாக இருக்கலாம்; கருக்கலைப்பாக இருக்கலாம்; விடுதலை இறையியலாக இருக்கலாம்.போப் ஆண்டவர் கருத்துச்  சொல்லுவதும் விவாதத்திற்கு உரியது; சொல்லாமல் இருப்பதும் விவாதத்திற்கு உரியது. 2019 ல் வெளிவந்திருக்கும் Two Popes (இரண்டு போப் ஆண்டவர்கள்) திரைப்படம் நெட்பிளிக்சில் ஓடுகிறது.

‘தி சிட்டி ஆப் காட்'( The city of God)  படத்தை இயக்கிய பெர்னாண்டோ மெரில்ஸ் (Fernando Meirelles ) இதனை இயக்கியுள்ளார். அருமையான இயக்கம். சற்றே பிசகி இருந்தாலும் படம் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்திருக்கும்!

அர்ஜென்டினாவில் இருந்து வந்திருக்கும் கர்தினால் உடல் நலிவின்  காரணமாக, தன்னைப் பணியில் இருந்து  விடுவிக்கும்படி போப் ஆண்டவரை கேட்டுக் கொள்கிறார். அவருக்கு கத்தோலிக்க மதத்தின் நிலை குறித்து விமர்சனம் இருக்கிறது. மக்களிடம் இருந்து கிறிஸ்தவம் விலகி விட்டது என்று நினைக்கிறார்.  ஆடம்பரமான வாழ்க்கையில் அவருக்கு விருப்பமில்லை. தனக்கு வழங்கப்பட்ட இருப்பிடத்தை விட்டு, எளிய வீட்டில் இருக்கிறார். இதனால் மற்றவர்களின்  ஆடம்பரம் கேள்விக்குள்ளாகிறது. இந்த நிலையில் 12 சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கிறிஸ்தவ துறவிகள் மீது புகார் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தமைக்காக  போப் ஆண்டவர் குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்.  போப்பாண்டவரின் உதவியாளரும் வத்திக்கான் நகர செய்திகளை வெளியிட்டமைக்காக கைது செய்யப்படுகிறார். இந்த நிலையில்  மதச்சபை குறித்து வித்தியாசமான கருத்து கொண்ட, ஆளுமை மிக்க  கர்தினால் ராஜினாமா செய்வதினால் கிறிஸ்துவ மதம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று போப்  சொல்லுகிறார்.

எழுபதுகளில், அர்ஜென்டினாவில் அவர் ராணுவ ஆட்சியோடு  சேர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, அமைதியாக வேடிக்கை  பார்த்ததினால்  ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் இருந்து  விடுபட ராஜினாமா செய்வதாக அவரிடம் விளக்குகிறார். ஆனால் போப் ஆண்டவர் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள மறுத்து, தான் விரைவில் போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் , அப்போது போப் ஆண்டவராக அர்ஜென்டினாவை சேர்ந்த அவரையே   தேர்ந்தெடுக்கப்படும்  வாய்ப்பிருக்கும் என சொல்லி அவரைத் திருப்பி அனுப்புகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் பாவ மன்னிப்பு  கோருகிறார்கள். குற்ற நிலையிலிருந்து விடுபடுகிறார்கள். இறுதியில் அவர் போப் ஆண்டவராக  வெற்றி பெற்றாரா ?  எத்தகைய மாற்றங்களைக்  கொண்டு வந்தார் ? உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள், தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய தனிமை உணர்வில் , குற்ற உணர்வில் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் காட்டுகிறது.

” இந்தப் படத்தை அரசியல் ரீதியாகவும்,  மதரீதியாகவும் குறை சொல்ல இயலாது. இரண்டு போப் என்பது வெறுமனே இரண்டு போப் ஆண்டவர்களை மட்டும் குறிப்பதில்லை. அது இரண்டு  உலகங்களைக் குறிக்கிறது. இரண்டு  தத்துவத்தைக் குறிக்கிறது”  என்கிறார் திரை  விமர்சகரான யமுனா ராஜேந்திரன்.

கதையில் வரும் இருவருமே வயதானவர்கள். வேகமாக ஓடியாடி நடிக்க முடியாது அனைத்து காட்சிகளுமே க்ளோசப்பில்தான் இருக்க முடியும் என்றபோதிலும், காட்சியமைப்பு  சிறப்பாக அமைந்துள்ளது. தனி நபர்களாக அவர்கள் கால்பந்து ஆட்டத்தை (ஜெர்மனி vs அர்ஜெண்டினா) ரசிப்பதாகட்டும்;  நடனமாடுவதாகட்டும் அல்லது ஒயினை குடிப்பதாகட்டும்; நன்றாக  சித்தரித்திருக்கிறார் பெர்னாண்டோ பெரிலஸ்.போப் வெளிப்படுத்தும் அதிகாரமும், கர்தினால் காட்டும் பணிவும் அப்பப்பா அருமையான உடல்மொழி…!

காரல் மார்க்ஸ், அந்தோனியோ கிராம்சி,  பிளாட்டோ, பெர்டோல்ட் பிரெக்ட்  போன்றவர்களைப்  பற்றிய குறிப்புகள்  வருகின்றன. உரையாடல்களை வெறுமனே வார்த்தைகள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொன்றும் விரிவான பொருளைத் தருவன. அந்தோணி அக்கார்டியன்( Anthony McCarten)  எழுதி இருக்கிறார். போப் ஆண்டவராக அந்தோணி ஹாப்கின்ஸ்- உம்  , ( Antony Hopkins), கர்தினாலாக ஜோனதான் பிரைசு- உம்   (Jonathan Pryce) போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  நிறைய விருதுகளுக்கு  வாய்ப்புள்ள படம் தான்!

இந்தப் படத்தை கம்யூனிஸ்டுகளோ, மார்க்சியர்களோ கூட அலட்சிப்படுத்த முடியாது, குறை சொல்ல முடியாது; கிறிஸ்தவர்களும் குறை சொல்ல இயலாது.  ஏனென்றால், படம், நடைமுறை வாழ்வியல் சார்ந்தும்,சமூகம் சார்ந்தும் மதத் தலைமையில் இருப்பவர்களின் உளவியல் கூறுகளை காட்சிப்படுத்துகிறது..! ஆகவே படம் மீண்டும், மீண்டும்  பார்க்கத் தூண்டுகிறது. பார்க்கும் ஒவ்வொரு முறையும்  புதுப்புதுச்  செய்திகளை தருகிறது!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time