தென் இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளும் ஒரே பிரதேசமாக இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் காங்கிரசிடமிருந்து கபளிகரம் செய்யப்பட்டுவிட்டது! பாஜகவிற்கு ஒரே உறுத்தலாக இருந்த பாண்டிச்சேரி அதன் பகடை விளையாட்டிற்கு பலிகடா ஆகிவிட்டது! ஆள்பிடிப்பு அரசியலை அகில இந்தியாவெங்கும் அரங்கேற்றி வரும் பாஜக, புதுச்சேரியை மட்டும் விட்டுவைக்குமா என்ன? வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திலுமே காங்கிரஸில் இருந்து ஆள்பிடித்து ஆட்சி கவிழ்ப்பை அரங்கேற்றியே ஆட்சியை பிடித்தது பாஜக! பீகாரில் கூட்டணியில் இருந்தாலும் ஐக்கிய ஜனதாதளக் கட்சி எம்.எல்.ஏவை அடுத்த மாநிலத்தில் பேர அரசியலுக்கு விலை பேச தயங்கவில்லை பாஜக! பாண்டிச்சேரியில் பழுத்த காங்கிரஸ் முன்னோடிகளில் சிலரே பாஜகவிற்கு பலிகடாவாகிவிட்டனர்!
ஏற்கனவே கிரண்பேடி, தன் அத்துமீறிய அதிகாரத் தலையீடுகளால் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியின் ஜனநாயகச் செயல்பாடுகளை முடக்கி சண்டித்தனம் செய்து வந்தார்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் காட்டிலும், எங்கோ இருந்து வந்த துணை நிலை ஆளுனர் தான் சக்தி வாய்ந்தவர் என்ற பாஜகவின் செயல்திட்டத்தை கச்சிதமாக செய்து காட்டிவிட்டார். நாராயணசாமி எவ்வளவோ
உருண்டும், புரண்டும்,
அரண்டும், ஆர்பரித்தும்,
கதறியும்,கசிந்துருகியும் பார்த்த போதிலும் கிரண்பேடி மசியவில்லை!
நாராயணசாமியை நடுத்தெரு நாராயணனாக அலையவிட்டு, அழுங்குணித்தனம் செய்தார். இதனால், புதுவை மக்களுக்கே துணை நிலை ஆளுனர் மீது கடும் அதிருப்தி உண்டாகிவிட்டது. ஆகவே தான் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றும் போது கிரண்பேடி பதவியில் இருந்தால் அது பாஜக இமேஜை பாதிக்கும் என்பதால் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார். அதாவது, தன்னுடைய ஜனநாயகப் படுகொலை அஜந்தாவை அசால்டாக செய்து முடிக்க அரும்பாடுபட்ட கிரண்பேடியை எந்தவித முன்னறிவிப்போ, மரியாதையோ இல்லாமல் காரியம் முடிந்ததும் கிள்ளுக் கீரையாக பாஜக மேலிடம் தூக்கி எறிந்துவிட்டது! அவர் மீது அனுதாபப்படுவதற்கு கூட இன்று யாரும் இல்லாத நிலை!
இவையெல்லாம் இருந்தாலும் நாராயணசாமியே நடந்த எல்லா அநீதிகளுக்கும் அடித்தளமிட்டவர் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது!
# காங்கிரஸ் மேலிடத்திற்கு செல்லபிள்ளை என்ற ஒரே காரணத்தால் தேர்தலில் போட்டியிடாமலே அவர் முதலமைச்சராக ஆசைப்பட்டது முதல் தவறு!
# அப்படியான அவரது பொருந்தா ஆசையை சொந்த கட்சியின் உள்கட்சி ஜன நாயகத்தையே ஊனப்படுத்தி அரங்கேற்றிக் கொடுத்த காங்கிரஸ் மேலிடத்தின் அணுகுமுறை இரண்டாவது தவறு!
# அப்படி திணிக்கப்பட்ட நாராயணசாமி கடைசி வரை அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் இல்லாதவராக ஒன்மேன் ஷோவாகவே இயங்கியது ஜீரணிக்கவே முடியாத மூன்றாவது பெரும் தவறு.
பொதுவாக புதுச்சேரியில் நியமன உறுப்பினர் நியமனத்திற்கு முதலமைச்சர் தான் மூன்று பெயர்களை முன் மொழிவார்! ஆனால்,சொந்த கட்சியில் யாரையுமே நம்பமுடியாதவராக நாராயணசாமி நாட்களை கடத்திக் கொண்டே சென்றார். இதனால் இந்தச் சூழலை கிரண்பேடி பயன்படுத்திக் கொண்டு பாஜகவினரை நியமித்துவிட்டார்! நியமனத்திற்குப் பிறகு குய்யோ,முய்யோவனக் கதறினார் நாராயணசாமி! அப்போது சொந்த கட்சிகாரனே நாராயணசாமி கபடவேஷம் போடுவதாக சந்தேகப்பட்டான்! வாரியங்களுக்கான நியமனங்களைக் கூட அவர் செய்ய மருத்தார். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளாமல் தவிர்த்தார். சக அமைச்சர்களைக் கூட, சகஜமாக செயல்பட அனுமதிக்கவில்லை நாராயணசாமி. அதாவது தான் ஒருவர் மட்டுமே ஒற்றை அதிகார மையமாக செயல்பட்டார்! இவையாவும் காங்கிரஸ் கட்சி இமேஜை மிகக் கடுமையாக பாதித்தன! இப்படி நாராயண்சாமியால் அடுத்தடுத்து அரங்கேறின அவலங்கள்! இந்த அவலங்களின் அணிவகுப்பே நடந்த ஆட்சி கவிழ்ப்பு அலங்கோலத்திற்கு வழி கோலிவிட்டது. குறிப்பாக நாராயணசாமி நியமிக்காமல் கோட்டைவிட்ட மூன்று நியமன உறுப்பினர்களைக் கொண்டு தான் ஆட்சிகவிழ்ப்பையே அரங்கேற்றி முடித்துள்ளது பாஜக. இதில் உள்ள ஒரு முரண் என்னவென்றால், கிரண்பேடி கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய ஒரு சூழல் கனிந்து வந்த வேலையில், அதை தமிழிசையைக் கொண்டு அறுவடை செய்து கொண்டது பாஜக!
கிரண்பேடி என்ற அசுரத்தனமான அதிகாரமையத்தை எதிர்கொள்ள முதலில் கட்சிக்குள் ஒற்றுமையை கட்டமைத்து இருக்க வேண்டும் நாராயணசாமி. அதை அவரால் கடைசி வரை செய்ய இயலவில்லை, அல்லது அவரது இயல்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை! டெல்லியிலே பாஜக தலைமையும், டெல்லி துணை நிலை ஆளுனரும் தரும் குடைச்சல்களை எவ்வளவு வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டும், மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெற்று அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு நல்லாட்சி தருகிறார்! இதை ஒரு ஷணமேனும் காங்கிரஸ் தலைமை கவனத்தில் கொண்டிருந்தால் நாராயணசாமியை கண்ணை கட்டிக் கொண்டு தொடர்ந்து நம்பி இருக்காது. சமீபத்தில் ராகுல் காந்தி விசிட்டின் போதே கூட நாராயணசாமியின் கையாலாகத்தனைத்தை ஒரு மூதாட்டி மிக இயல்பாக ராகுலிடம் எடுத்துச் சொன்னார்!
தானும் மக்கள் தொண்டாற்றாமல், மற்றவனையும் செய்யவிடாமல் கட்சிக்குள்ளேயே அதிகமான அதிருப்தியை தேடிக் கொண்டார் நாராயணசாமி! இந்தச் சூழலே பாஜகவின் சதித்திட்டத்திற்கு ஆறு எம்.எல்.ஏக்கள் பலியாக காரணமாயிற்று! நமச்சிவாயம் நம்பிக்கை இழந்து அவசரப்பட்டுவிட்டார்! அவர் பொறுமை காத்திருந்தால் அடுத்த முதலமைச்சராக காங்கிரசில் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்! முதல்வருக்கு அணுக்கமாக பணியாற்றிய லட்சுமி நாராயணன் போன்றவர்களே நாராயணசாமியிடமிருந்து விலகியிருப்பதை கவனிக்க வேண்டும். மல்லாடி கிருஷணாராவ் போன்றவர்கள் மனம் தளர்ந்துவிட்டனர் பாவம்!
Also read
நாராயணசாமியை மட்டுமே நம்பிக்கைக்கு உரியவராகக் கருதி வரப்போகும் தேர்தலையும் காங்கிரஸ் தலைமை சந்திக்கும் என்றால், காங்கிரஸ் புதுச்சேரியில் காணாமல் போவதை அந்தக் கடவுளாலும் தடுக்க முடியாது என்று நான் ஏற்கனவே நமது அறம் இணைய இதழில் எழுதியிருந்தேன்!
மக்கள் நம்பிக்கையை பெற்ற தலைமையை அங்கீகரிக்கும் மனப்போக்கு டெல்லி தலைமைக்கு வர வேண்டும்! நமச்சிவாயத்தை போன்றவர்களை இழந்த வகையில் இன்றைக்கு புதுவை காங்கிரசிற்குள் இருக்கின்ற ஒரு நம்பிக்கை நட்சத்திரம் கமலக் கண்ணன். சிறந்த மக்கள் தொண்டராக அறியப்பட்ட இவரைப் போன்றவர்களை அங்கீகரித்தால் தான் காங்கிரஸ் புதுவையில் இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தமுடியும்! யார் தங்களுக்கு விசுவாசி என்ற அளவுகோலைவிடவும் யார் மக்கள் தொண்டுக்கு விசுவாசமானவர்கள் என்ற அளவுகோலை காங்கிரஸ் மேலிடம் கைகொள்ள வேண்டும். இதைச் செய்யாமல், ராகுல்காந்தி எத்தனை முறை இங்கே விசிட் அடித்தாலும் அது பலனின்றி போய்விடக்கூடும்!
-சாவித்திரி கண்ணன்
இன்றைய அரசியல் சீரழிவு கெல்லாம் அடிப்படைக் காரணம் காங்கிரஸ் தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இதை மாற்றாதவரை காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும்