வகுப்புவாத அரசியலால் வன்முறைக் களமாகும் மேற்குவங்கம்…!

-சாவித்திரி கண்ணன்

தேர்தல் போட்டி என்பதைக் கடந்து ஒரு யுத்தமாக மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது! எல்லா நியாய அநியாயங்களையும் புறந்தள்ளி அழுத்தொழிப்பு அரசியலாக அது பரிமாணம் பெற்று வருவதை ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்துடன் பார்க்கிறது!

தேர்தல் போட்டி என்பது ஜனநாயகத்தில் சகஜமான ஒன்று! ஆனால், அது வங்கத்தை பொறுத்தவரை வக்கிரமான வடிவம் கொண்டு உக்கிரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது! வகுப்புவாத, மதவாத அரசியல் தழைத்தோங்கும் மாநிலமாக தினம், தினம் ரத்தம் சிந்தும் பூமியாக அது நிறம் மாறிவருகிறது! ஒரு மிகப் பெரிய பாரதப் போர் நிகழ்வதற்கான முஸ்தீபுகள் அங்கு அரங்கேறிக் கொண்டுள்ளன! ஒருவேளை பாஜக ஓட்டுமெஷின் மற்றும் பூத் கேப்சரின் தில்லுமுல்லுகள் மூலம் வெற்றி பெறுமானால், வங்கம் வரலாறு காணாத வன்முறைக் களமாகும் என மம்தா எச்சரித்துள்ளார்!

இந்தியாவின் கலாச்சார பூமி! ராஜாராம் மோகன்ராய் தொடங்கி ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், ராமகிருஷ்ணர்,விவேனாந்தர், ரவீந்திரநாத் தாகூர்,சுபாஷ் சந்திரபோஸ், சரத்சந்திரர்,சத்தியஜித் ராய், அன்னை தெரசா,பண்டிட் ரவிசங்கர் தொடங்கி இன்றைய அமர்த்திய சென் வரை வங்கம் இந்தியாவின் அறிவார்ந்த தளத்தில்,தத்துவார்த்த தளத்தில்,கலாச்சார தளத்தில் இந்தியாவின் முக்கிய ஆளுமைகளை தந்த மண்! ஆகவே, இடைபட்ட காலத்தில் எழுந்த மத துவேஷங்களை களைந்து, வெற்றி கொண்டு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் சம ஆதிக்கம் செலுத்தும் மண்ணாக வங்க மண் இருந்தது. வகுப்புவாத சக்திகள் இந்த மண்ணை எப்படியாவது தங்கள் வசப்படுத்த முயன்றும் வங்க மக்கள் அதற்கு இடம் தரமறுத்ததாகவே இது நாள் வரை இருந்தது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளிடம் தனக்குள்ள அரசியல் துவேஷத்திற்கு கணக்கு தீர்க்க 2009 ல் பாஜகவை அந்த மண்ணில் காலூன்ற வாய்ப்பளித்தார் மம்தா பானர்ஜி! தன்னால் அழிக்க வாய்ப்பில்லாத கம்யூனிஸ்டு கட்சியை, மண்ணின் மகளான மம்தாவை பயன்படுத்தி, பலமிழக்க வைத்த பாஜகவானது தன் அஜந்தாவை மம்தா நிறைவேற்றி முடித்ததும், அவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த சகல வழிமுறைகளையும் கையாள்கிறது.

வர இருக்கும் தேர்தலைஎதிர்கொள்ளும் அந்த வங்க மண் இன்று கலவரபூமியாக, வன்முறைக் களமாக வடிவம் கண்டுவருகிறது! பாஜக தலைமை தன்முழு சக்தியையும், அதிகாரத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி சாம, தான, பேத, தண்டங்களை கையாண்டு தற்போது முழு அழித்தொழிப்பில் இறங்கியுள்ளது. மம்தாவும் வீரா ஆவேசத்துடன் இதில் மோதுகிறார்! அசாத்திய துணிச்சலுடன் போராடுகிறார் என்றாலும், பாஜகவின் அதே ரீதியான மதவாத, வகுப்புவாத, அதிகார அழித்தொழிப்பு முறைகளையே அவரும் கையாள்கிறார்.

தனக்கு ஆதரவு சக்தியாக அவர் உணர வேண்டிய காங்கிரசையும், கம்யூனிஸ்டுகளயும் நட்பு சக்தியாக மாற்றிக்கொள்ளாமல், களத்தை தனக்கும், பாஜகவிற்குமானதாக அவர் மாற்றிக் கொண்டது தான் அவரது மிகப் பெரிய பலவீனமாகும். இது தொடர்பாக நமது அறம் இதழில் ஏற்கனவே ”திவாலாகும் திரிணமுள், தீயாய் வளரும் பாஜக என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்’’ என்ற கட்டுரையை எழுதியுள்ளேன்! அதாவது பாஜகவிற்கு மாற்று என இல்லாமல், மற்றொரு வங்க மண்ணுக்கான உண்மையான பாஜக நான் தான் என அவர் தன்னை அடையாளப்படுத்துகிறார்!

பாஜக ஜெய் ஸ்ரீராம் என்றால், இவர் ஜெய் ஸ்ரீகாளி என்கிறார்! அவர்கள் சாதி அரசியலை கையில் எடுத்து வேலை பார்த்தால் இவரும் சாதி அரசியலை கையில் எடுக்கிறார்! ஆட்சியில் இருப்பதால் சம்பந்தப்பட்ட சாதிகளுக்கு சலுகைகளை அள்ளி இறைக்கிறார்..! வர்க்க அரசியலை பார்த்த வங்கம் இன்று இந்த வக்கிர அரசியலையும் பார்க்கிறது..!

கம்யூனிஸ்டுகள் நிலப்பகிர்வு என்ற மிகப் பெரிய சீர்திருத்தத்தை வங்கத்தில் சாத்தியப்படுத்தினார்கள். இது கிராமபுற,பொருளாதார சம நிலையை ஒரளவு பேண உதவியது. ஆண்டான்-அடிமை முறையை பெருமளவு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால் தான் இன்றுவரை தலித்துகளுக்கான வன்கொடுமைகள் மிகக் குறைவாக காணப்படும் மாநிலமாக வங்கம் இருக்கிறது! ஆனால், கம்யூனிஸ்டுகள் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த தவறியது மற்றும் 34 வருட தொடர் ஆட்சியினால் உண்டான அதிகாரமிதப்பு ஆகியவற்றால் ஆட்சியை இழந்தனர்!

மேட்டுக்குடி மனோபாவமே மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளை வீழ்த்தியது

ஆனால், அதற்குப் பிறகு கம்யூனிஸ்டுகளையே அங்கே காலி செய்யும் மூர்க்கத்தனமான அரசியலை கையில் எடுத்தார் மம்தா! அந்த கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தை இன்று பாஜக கையில் எடுத்துக் கொண்டது. மம்தாவின் மூர்க்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள கம்யூனிஸ்டுகட்சியில் உயர்பதவிகள் வகித்து அதிகாரத்தை பல ஆண்டுகளாக சுவைத்த மேல்சாதி இந்துக்கள் தற்போது கூண்டோடு பாஜக முகாமில் அடைக்கலமாகிவிட்டனர்! அடித்தட்டு மக்களுக்கு அதிகார பகிர்வை அன்று கம்யூனிஸ்டுகள் உறுதிபடுத்தி இருந்தால், அவர்கள் இன்றைக்கு வன்முறைகளை களத்தில் துணிச்சலாக எதிர் கொண்டு இருப்பார்கள்..!

யாராலும் அரவணைக்கபடாமல் இருந்த மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களை ஆரம்பத்தில் அரவணைத்த மம்தா பிறகு தானும் வங்க மண்ணின் அரசியலுக்கே உரித்தான மேல்சாதி அதிகாரவர்க்க அரசியலையே நடைமுறைப்படுத்தினார்! இந்தச் சூழலை நன்கு ஆராய்ந்த பாஜக வங்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான உத்தர் தினாஜ்பூர், தக்‌ஷின் தினாஜ்பூர், பாங்குரா,முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் நிறைந்திருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்கள் மத்தியில் பல கள வேலைகளை பத்தாண்டுகளாக செய்து ஒரளவு பலம் பெற்றுவிட்டது. குறிப்பாக மாதுவா, பாஉரி,பாக்தி, தாபாஷிலி, கூர்காஸ்,லெப்சாஸ், துலே, ராஜ்பங்ஷி, ஜெலி, குமாரி ஆகிய சமூகங்கள் மத்தியில் இறங்கி அவர்கள் சாதி உண்ர்வை வளர்த்து எடுத்துவிட்டது.

இதை மிக காலதமதமாக உணர்ந்த மம்தா வேகவேகமாக தலித் மக்களுக்கான சலுகைகளை, திட்டங்களை அமல்படுத்தி அக்கரை காட்டுவதாக பாவனை காட்டி வருகிறார். 91.8 லட்சம் எஸ்.சி,எஸ்.டி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், 12 லட்சம் தாழ்த்தப்பட்ட முதியவர்களுக்கு உதவித் தொகை என பணத்தை வாரி இறைக்கிறார். ’’இது நாள் வரை மம்தாவிற்கு இல்லாத அக்கரை எங்களால் தான் உருவாகி இருக்கிறது’’ என பாஜக பிரச்சாரம் செய்கிறது. உடனே மம்தா யோசித்தார், பாஜக தன்னுடைய கட்சி மற்றும் கட்சி சார்ந்த அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் செய்வது போல நாமும் செய்ய வேண்டும் என உணர்ந்து எஸ்.சி,எஸ்.டிக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ரஜிப்பானர்ஜி என்ற பிராமணரை தூக்கிவிட்டு, அந்த துறைக்கு தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவரான ராஜ்பாங்கிஷி தலைவர் பினாய் கிருஷ்ணபர்மனை நியமித்தார்! அது போல மிகவும் பிற்பட்ட சாதி மக்கள் அதிகமாக வசிக்கும் வங்கத்தின் மேற்கு பகுதி அமைச்சராக ஒ.பி.சி வகுப்பை சேர்ந்த சாந்திராம் மகோடாவை நியமித்தார். ஜாதி சான்றிதழுக்கு வருடக்கணக்கில் காத்திருந்த – காத்திருக்க வைக்கப்பட்ட – பத்து லட்சம் பழங்குடியினருக்கு உடனே சாதி சான்றிதழ் வழங்கினார்!

ஆனால், கவர்னரைக் கொண்டு பாஜக எவ்வளவுக்கு எவ்வளவு குடைச்சல் தரமுடியுமோ அவ்வளவையும் தருகிறது! கவர்னர் தற்போது வங்க மக்களின் எதிரியாகிவிட்டார்! அந்த அளவுக்கு டார்ச்சர்! அவர் கூட்டிய துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு எந்த துணை வேந்தரும் கலந்து கொள்ளவில்லை! மத்திய அரசுதுறைகள் மூலம் மேற்குவங்கத்தில் தானே நேரடியாக களம் காண மத்திய அரசு செய்யும் முயற்சிகளை மம்தா தைரியத்துடன் எதிர்த்து, ’’நீ ஒழுங்காக நிதி கொடுத்து ஒதுங்கிவிடு, மற்றதை மாநில அரசு தான் செய்யும்’’ என உறுதிகாட்டுகிறார்! மேற்கு வங்கத்தின் தனித்த அடையாளங்களை அழித்து, அதை இந்தி தேசியத்துடன் கலக்கவைக்கும் அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. அதற்கு மாறக வங்க மண் சார்ந்த அரசியலை மம்தா முன்னெடுத்துள்ளார்! மாநில உரிமைகளுக்காக இன்று இந்தியாவில் குரல் கொடுக்கும் ஒரே முதல்வராக அவர் திகழ்கிறார், எனினும் தன் கட்சியையே அவர் ஜனநாயக ரீதியாக கட்டமைத்து அதிகார பகிர்வு செய்யத் தவறியதால், பல முன்னணி தலைவர்களை பாஜகவிற்கு பறிகொடுக்கிறார்!

15க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 40 க்கு மேற்பட்ட திரிணமுள் காங்கிரசின் தூணாகத் திகழ்ந்தவர்களை அவர் பாஜவிடம் இழந்துவிட்டார். நாளும்,பொழுதும் கட்சி மாறிச் செல்பவர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன! தன்னுடைய நெருங்கிய உறவினர் அபிசேக் பானர்ஜிக்கு மம்தாபானர்ஜி அதிக முக்கியத்துவம் தருகிறார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. போதாக்குறைக்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவன அதீத தலையீடுகளால் கட்சி சின்னபின்னமாகி வருகிறது! நாளும்,பொழுதும் துப்பாக்கி சூடுகள், கத்திகுத்துகள், கொலைகள்..என அரசியல் களம் வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது. மிக சூட்சுமமாக பாஜகவினர் மம்தாவின் ஆத்திரத்தை கிளறிவிட்டு அவர் கட்சியை வன்முறைக்கு தூண்டுகிறது. அதற்கு திரிணமுள்ளும் பலிகடாவாகிவருகிறது! பாஜகவும் வன்முறையை கையில் எடுக்கும் தொழில்முறை ரவுடிகளையே வைத்துக் கொண்டு களம் காண்கிறது!

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல, வங்கம் என்பது இந்தியாவின் அறிவு மற்றும் பண்பாட்டு அடையாளமாக திகழ்ந்த மண்! அதை பாஜகவிடம் பறிகொடுத்துவிடும் வரலாற்று தவறை தன்னுடைய மிதமிஞ்சிய மூர்க்க அரசியலால் மம்தா செய்துவிடுவாரோ என்ற அச்சமே இன்று இந்தியாவின் அனைத்து மதச்சார்பற்ற சக்திகள் மனதிலும் இழையோடுகிறது. ஆகவே, வங்கத்தில் பாஜக என்ற ஆபத்தை எதிர்கொள்ள மம்தா தன் பழைய சகாவும் தன் தாய்வீடுமான காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ஒரு ஆரோக்கியாமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time