காவல்துறையை காமத்துறையாக்கும் கறுப்பு ஆடுகள்..!

-சாவித்திரி கண்ணன்

விசாரணை குழுவாம்! ஆறுபேர் கமிட்டியாம்! எதற்காக..? பிரச்சினையை ஆறப்போடவா..? அதுவும் இந்த விசாரணை அறிவிப்பே சும்மா வரவில்லை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் கொந்தளிக்க தொடங்கியதும் தான் இந்த அறிவிப்பு! தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை தரும் ஒரு சாதாரண மனிதன் பிடிபட்டால் லாக்கப் டெத், எண்கெளண்டர், கை,காலை உடைத்து கட்டுப்போட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நீதிபதியிடமே பொய் வாக்குமூலம்..என்னென்ன நாடகங்கள் அரங்கேறும்! மக்களும் ஏதோ நீதி நிலை நாட்டபட்டால் சரி தான் என விசில் அடித்து,கைதட்டி ஆரவார வரவேற்பு தருவார்கள்! பலமுறை பாலியல் புகாருக்கு ஆளானவர் ராஜேஷ்தாஸ்! ஆனால், இன்று வேலியே பயிரை மேய்வது தெரிந்தும் மழுப்பலா…?

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்புள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கோடிக்கணக்கான பணத்தை அள்ளி இறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் செய்கிறார். ஆனால், தன் பாதுகாப்பிற்காக வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கே இன்று நீதி வழங்க தயங்குகிறார்! காரணம் இந்த பாலியல் புகாரில் சிக்கியுள்ளவர் ஆளும் அரசின் ஏகபோக எடுபிடியாக அறியப்பட்டவர். சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸை வரம்பு மீறி ஆளும்கட்சி விசுவாசத்தை அங்கீகரிக்கும் விதமாக சட்டம்,ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு தந்தனர்! சட்டம், ஒழுங்கை அவர் நிர்வகிக்கும் விதத்தை தான் இன்று நாடே பார்க்கிறது…! ஆளைப் பார்த்தாலே பீப்பாய் உருண்டை மாதிரி ஒரு உடம்பு…! இவர்தான்  காவல்துறைக்கு தலைமையாம்!

தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் செய்த போது முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் , சென்னை திரும்பும் முன்னதாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம், முக்கியமான விஷயமாக பேச வேண்டும் என்பதாக காரில் ஏறும்படி கூறியுள்ளார். பெண் அதிகாரி காரில் ஏறியதும், தனது கார் டிரைவரைப் பார்த்து ராஜேஷ்தாஸ் முறைத்துள்ளார். டிரைவர் இறங்கியதும், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம்  பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விட்டு காரை விட்டு பெண் அதிகாரி இறங்க முயன்றபோது, வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்து, டிரைவரை அழைத்து காரை எடுக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த பெண் அதிகாரியிடம், ”கள்ளக்குறிச்சியில் எனக்கு தெரிந்தவரின் சொகுசு விடுதி உள்ளது. அங்கு இருவரும் செல்லலாம்’’ என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு உடனடியாகவும்,உறுதியாகவும் மறுப்பு தெரிவித்த அந்த பெண் அதிகாரி, ”உங்கள் மகள் வயதில் உள்ள என்னிடம் நீங்கள் இப்படி நடக்கலாமா’’ என்று கேட்டும் பொருட்படுத்தாமல், காரிலேயே பெண் அதிகாரியை பலவந்தப்படுத்த முயன்றுள்ளார். பின்னர் ’’காரை நிறுத்தாவிட்டால் குதித்து விடுவேன்.என் உயிர் போவது பற்றி எனக்கு அச்சமில்லை.ஆனால்,அதற்கு பிறகான விபரீதங்களை நீங்கள் சந்திக்க வேண்டும்’’  என்ற அளவுக்கு சென்று எச்சரித்துள்ளார். இதன் பின்னர் காரில் இருந்து பெண் அதிகாரியை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் பெண் ஐபிஎஸ் ரேங்கில் உள்ளவர் என்பதால், இவ்வளவு துணிச்சலை வெளிப்படுத்த முடிந்தது, இதுவே சாதாரண பெண் போலீஸாகவோ, பெண் இன்ஸ்பெக்டராகவோ இருந்திருந்தால் இவர் மீது புகார் கொடுக்கவே முடிந்திருக்காது. அப்படி புகார் கொடுக்கும் முன்பாக அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை பாய்ந்திருக்கும். வேலையே கூட பறிபோய்விடும். ஆகவே, இப்படிப்பட்ட அதிகாரிகளின் கீழ் உள்ள பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கமுடியும் என யோசிக்க வேண்டும்!

கோபமாக அந்த பெண் அதிகாரி காரில் சென்னை புறப்படுவதைப் பார்த்து, தன் மீது அவர் புகார் தெரிவிக்கலாம் என உஷாராகி, அந்த பெண் அதிகாரியை தனி பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் மூலம் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அது, வெற்றிபெறாத நிலையில் அந்த பெண் அதிகாரியின் காரை மடக்கி அவரை தன்னிடம் பேச வைக்க கள்ளக்குறிச்சி எஸ்.பியின் உதவியை நாடியுள்ளார். அவர் மறுத்துள்ளார். பிறகு விழுப்புரம் எஸ்.பியின் உதவியை நாடியுள்ளார். அவரும் மறுத்துள்ளார்.அதன் பிறகு செங்கல்பட்டு எஸ்.பி ஏதோ ஒரு குற்றவாளியை மடக்கி பிடிப்பது போல பெண் எஸ்.பியை வழிமறித்துள்ளார். பெண் எஸ்.பி எவ்வளவோ சொல்லியும் கேளாமல், தன்னுடைய செல்போனில் ராஜேஷ்தாஸிடம் பேசுமாறு நிர்பந்தித்துள்ளார். காவல்துறை கண்ணியத்தை மீறி கிட்டதட்ட ஒரு அடியாள் போல தன் மேலதிகாரிக்காக ஒரு எஸ்பியானவர் நடந்து கொண்டுள்ளார்! சம்பந்தப்பட்டவர் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று தெரிந்துமே இப்படி நடக்கிறார் என்றால், இந்த எஸ்.பியால் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்? ஒரு மேலதிகாரி தவறானவராக இருக்கும் போது அவர் எப்படி தனக்கு கீழ் உள்ளவர்களையும் குற்றத்திற்கு தூண்டுகிறார் என்பது மேற்படி சம்பவத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது!  நாய்கள் தாம் நடுரோட்டில் மற்றொரு பெண் நாயுடன் வலிந்து புணரும். ஆனால், ஆறறிவு கொண்ட மனிதன், தமிழகத்தின் சட்டம்,ஒழுங்கையையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் ஒருவர் பொதுவெளியில் காரில் வைத்து தன் துறையை  சேர்ந்த பெண்ணிடமே இவ்வாறு நடந்துள்ளதானது காவல்துறையின் கண்ணியத்திற்கே இழுக்கானதாகும்!

இவர் 2002ம் ஆண்டு எஸ்பியாக திருவள்ளூரில் பணியாற்றியபோது காவலர் ஒருவரை பெல்டால் அடித்ததற்காக மனித உரிமை ஆணையத்தால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்தில், பெண் டிஎஸ்பி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கொடுக்கப்பட்டதால் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டும் இவர் திருந்தவில்லை என்பதும், காவல்துறையிலேயே இவர் மீது இன்னும் பல பெண்கள் புகார் சொல்லமுடியாமல் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிகிறது. அதாவது, இவர் தொடர்ச்சியாகவே கண்ணியம் காக்க வேண்டிய காவல்துறையை காமத்துறையாக்க முயற்சித்துள்ளார் என்பது தான் வேதனை! இவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது காவல்துறைக்கே கரும்புள்ளியாகிவிடும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீதும்,இவர் மனைவி பீலா ராஜேஷ் மீதும் ஏற்கனவே புகார் உள்ளது. தமிழக காவல்துறையின் உச்சபட்ச பொறுப்பில் உள்ளவரே பட்டவர்த்தனமாக பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபவராக இருந்தால் அவருக்கு கீழ் இருக்கும் மற்ற பலருக்கு அது ஒரு பாசிடிவ் சிக்னலாக மாறிவிடும்!

பொதுவாக இன்றைய தினம் அழகான பெண் போலீசோ,இன்ஸ்பெக்டரோ சந்திக்கும் துறை ரீதியான பாலியல் சீண்டல்கள், துன்பங்கள் கணக்கில் அடங்காது! உடன் பணியாற்றும் பெண்களை எப்படி கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதற்கு ஆண்களுக்கு நல்ல பயிற்சிகளும், கறாரான விதிமுறைகளும் தரப்பட வேண்டும். அவை மீறப்படும் போது நடவடிக்கைகள் பாயும் என்பதை விசாகா கமிட்டியின் மூலம் உறுதிபடுத்த வேண்டும். வெளிப்பட்டுவிட்ட இந்த சம்பவத்தின் மூலம் இனியாவது இத்தகைய விரும்பத்தாகாத செயல்களுக்கு ஸ்டாராங்கான முற்றுபுள்ளி விழ வேண்டும் என்பதே காவல்துறையில் உள்ள அனைத்து பெண்களின் ஆழ்மன விருப்பமாகும்!

இந்த பாலியல் சீண்டல் புகாருக்கு போதுமான முகாந்திரம் இருக்கிறது என்பது தெரிய வந்த நிலையில் முதலாவதாக ராஜேஷ்தாஸை சஸ்பெண்ட் செய்துவிட்டு தான் விசாரணையையே ஆரம்பித்திருக்க வேண்டும். இந்நிலையில் ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதானது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே அனைவராலும் உணரப்படுகிறது.

இந்தக் குழுவுக்கு விசாரணைக்கான காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். பாலியல் சீண்டல், வன்மங்கள் என்பவை ஒரு சில நிமிடங்களில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால்.அவை தொடர்பான விசாரணைகள் வருடக்கணக்கில் இழுக்கப்படுகின்றன என்பதே கடந்த கால கசப்பான அனுபவமாகும். அப்படி இல்லாமல் ஒரு வாரத்தில் அல்லது அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் விசாரணை முடிந்து தீர்ப்பும் அமலாக வேண்டும்! தமிழகத்தில் காவல்துறையில் உயர்பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கே நீதி கிடைக்காவிட்டால் சாதாரண சராசரி நிலையில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட நீதியை அரசால் உத்திரவாதப்படுத்த முடியும்! ராஜேஷ்தாஸுக்கு வழங்கப்படும் உடனடி தண்டனை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். தப்பு செய்தால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்ற உணர்வை ஆழமாக ஏற்படுத்துவது தான் ஒரு நல்ல அரசாங்கத்திற்கு இலக்கணமாகும்.

தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் விசுவாசத்தை வேண்டித்தான்  சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு ராஜேஷ்தாசுக்கு தரப்பட்டது. ஆகவே, அவரை மீண்டும் விரைவில் பணிக்கு கொண்டு வரும் நோக்கில் ஏதாவது தில்லுமுல்லாக விசாரணையின் போக்கு செல்லுமானால், அது மிகப் பெரிய கெட்டபெயரையே அரசுக்கு ஏற்படுத்தும். ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதாக சவாடால்விடுவது இருக்கட்டும், முதலில் காவல்துறையில் வேலைபார்க்கும் நம் சகோதரிகளின் கண்ணியத்தை உத்திரவாதப்படுத்துங்கள்! இந்த விவகாரத்தில் உடனடியாக நல்ல தீர்ப்பு வெளிப்படவில்லையென்றால், மக்கள் தேர்தலில் இந்த அரசுக்கு நல்ல தீர்ப்பை தந்துவிடுவார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time