போக்குவரத்து ஸ்தம்பித்தற்கு யார் காரணம்?

ஆர்.ஆறுமுகம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஏதோ தீடீரென்று அதிரடியாக நடத்தப்படவில்லை. பல நினைவூட்டல்கள்,வேண்டுகோள்கள், சிறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகள்..மற்றும் கடும் எச்சரிக்கை ஆகியவற்றை கடந்த நிலையில் தான் தவிர்க்க முடியாமல் செய்கிறோம். இதன் காரணமாக பல மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன!  பஸ்கள் இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதில் எங்களுக்கும் ஆழ்ந்த வருத்தம் இருக்கிறது, என்றாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. தொழிலாளர்களுக்குரிய 7,000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து தன்னிச்சையாக செலவு செய்த தமிழக அரசு, அந்தத் தொகையை மீண்டும் அவரவர் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19 மாத காலமாகப் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் 21 தடவை நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை! கொடுத்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

எனவே தான் ஏஐடியுசி, தொ.மு.ச, சிஐடியு, ஐஎன்டியுசி, எஸ்டிடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. “போக்குவரத்து ஊழியர்களுக்கு 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தித் தீர்வு காண வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியையும், ஓய்வூதிய காலப் பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கியமான நகரங்களுக்கு இடையேயும், கிராமப்புறங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 19 ஆயிரத்து 496 வழித்தடங்களில் சுமார் 17 ஆயிரம் பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.  பேருந்து இயக்குவதற்கு தேவையானஎரிபொருள் டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. உதிரி பாகங்கள் விலையும், புதிய பேருந்துகள் அடி சட்டம்,  டயர் டியூப் பிளாப் உள்ளிட்ட உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு 29 கோடி ரூபாய் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் பேருந்துகளை இயக்குவதற்கு ரூபாய் 40 தேவை. ரூபாய் 30 மட்டுமே வருவாய் வந்து கொண்டிருக்கிறதது.  ரூபாய் 10 பற்றாக்குறை. அரசின் சமூகநல நோக்கங்களை நிறைவேற்றுவதில் போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. மக்கள் நல அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக இதனை செயல்படுத்தி வருகின்றன. 10,000 பேருந்துகளுக்கு மேல் வருவாய் இழப்பில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கிராமப்புற பேருந்து சேவை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கான இலவச பயணம், மாற்றுத் திறனாளிகள், புற்றுநோயாளிகளின், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான இலவச பயண சலுகையும், சலுகை கட்டணத்தில் பயணமும் செய்திட பல்வேறு வகைகளில் சேவையாற்றி வருகின்றன.அரசின் கொள்கை முடிவுகளை அமல்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் விளம்பரம் மட்டும் ஆட்சியாளர்கள் அனுபவித்து கொள்கின்றனர். இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை அரசு ஈடு கட்டினால் வருவாய் இழப்பு ஏற்படாது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 5 லட்சம் கோடி தமிழக அரசு கடன் பெற்றுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வருவாயை அதிகரித்து செலவு செய்வதற்கு மாறாக கடன் வாங்கி செலவு செய்யும். தவறான நிதி மேலாண்மை கையாளப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்களிலும் இதுபோன்று நிலை மேற்கொண்டு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

இதர தனியார் போக்குவரத்தைப் போன்று மோட்டார் வாகன வரி, எரிபொருளுக்கான வரி, டோல்கேட் கட்டணம், பேருந்து நிலைய கட்டணம், நிதி ஒதுக்கீடு செய்யும் போது ஏற்படும் கடன் சுமைகளால் செலுத்த வேண்டிய வட்டி வீதங்கள், மத்திய மாநில அரசுகளுக்கு நமது போக்குவரத்து கழகங்களால் செலுத்தப்பட்டு வருகின்றன. இதிருந்து விதிவிலக்கு தர வேண்டும். ஏனெனில் இது மக்கள் நலனுக்கான பொது போக்குவரத்தாகும்!

வருவாய் இழப்பு ஏற்படும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு முன்வர மாட்டார்கள். லாபம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு தனியார் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. எனவே தான் பயணிகள் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது.

போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தம் 1-9 -2019 முதல் பதினெட்டு மாதங்களுக்கு முன்பாக உருவாக்கி அமல்படுத்தி இருக்க வேண்டும். அரசின் கீழ் செயல்படும் இதர துறைகளை விட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குறைவான சம்பளமே பெற்று வருகின்றனர். அதாவது மற்ற துறையில் உள்ள டிரைவர்கள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் 3,000 முதல் 6,000 வரை குறைவாக சம்பளம் பெறுகின்றனர். ஆனால், அதிக ரிஸ்க் எடுத்து வேலை செய்கின்றனர்! மேலும் நாங்கள் ஈட்டிய மாத வருமானம் முழுவதும் வழங்கப்படுவதில்லை. எங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி,  அஞ்சல் ஈட்டுறுதி நிதி (PLI), வாழ்நாள் ஈட்டுறுதி நிதி (LIC) ஆகியவற்றை கட்டாமல், தமிழ்நாடு அரசு தானே செலவழித்துவிட்டது. இந்த வகையில் தொழிலாளர்களின் சுமார் 7000 கோடி ரூபாய் எங்களுக்கு தரப்படாமல் உள்ளது.

பணிக்கொடை ஓய்வு பெற்ற 30 நாட்களில் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இருந்தாலும் அதனைக் கண்டு கொள்வதில்லை. இதனால் பல குடும்பங்களின் கல்யாணங்கள் தடைபட்டுள்ளது. குழந்தைகளின் மேற்படிப்பு தடைபட்டுள்ளது. தங்கள் ஓய்வூதியப்பணம் வரும் என்று நம்பி கடன் வாங்கிய பல குடும்பங்கள் கடனில் தவிக்கின்றன.

இந்நிலையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். தற்போது வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ரூபாய் 1000 இடைக்கால நிவாரணம்  அரசு அறிவித்துள்ளது.  தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே உள்ளது. எனவே அரசு செவிசாய்க்குமா..?  பாமர மக்கள் பயன்படுத்தும் பயணிகள் போக்குவரத்து நிலைத்து நிற்குமா..? பொது போக்குவரத்தின் அவசியம் உணரப்படுமா?.,

போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளுமே காரணமாகும்.  வரவு மற்றும் செலவினங்களை தீர்மானிப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானது. எந்த வழித்தடத்தில் எந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதும், எவ்வளவு பயணக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதும் இவர்களின்  முடிவாகும்.

தனியார் பேருந்துகள் பயணடையும் விதமாக பேருந்து புறப்படும் நேரம் விட்டுக்கொடுப்பார்கள்!  வழித்தடங்களை இயக்காமல் நிறுத்துவார்கள்!,  இப்படி தனியாருக்கு இசைவாக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நடந்து கொள்வதில்  பெரும் பணம் கை மாறுகிறது..

செலவைப் பொருத்தமட்டில், போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை என்று சொல்லிக் கொண்டாலும், அது இல்லை என்பதே உண்மை! வேண்டியவர் வேண்டாதவர் அடிப்படையில் டெண்டர் வழங்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள விலையைவிட கூடுதல் பணம் செலுத்தி அநியாய விலைக்கு பொருட்கள், உதிரி பாகங்கள்  கொள்முதல் செய்யப்படுகிறது.  கொள்முதல் குழு தலைவராக போக்குவரத்து துறை அமைச்சர் அரசு செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள் செயல்பட்டு வருகின்றனர். இயல்பாகவே இதன் மூலம் தவறான முறையில் தங்களது சொந்த தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்.

தங்கள் நியாயங்களை தமிழக அரசு அலட்சியம் செய்த காரணத்தினால் தொழிலாளர்கள் இன்றிலிருந்து (பிப்.25) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குச் சம்பள வெட்டு, துறை ரீதியான நடவடிக்கை எனக் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்நடவடிக்கை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கே வழிவகுக்கும்! நீதிமன்றம் தொழிலாளர்களை அழைத்து உண்மை நிலவரங்களை அறியாமல் கடுமையாக பேசுவது துரதிர்ஷ்டவசமானதாகும்!

கட்டுரையாளர்; ஆர்.ஆறுமுகம்

பொதுச் செயலாளர் – ஏ.ஐ.டியு.சி

தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகங்களின்

தொழிலாளர் சம்மேளனம்.

.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time