35 அல்லது நாற்பது தொகுதிகள் என்றெல்லாம் பேசப்பட்ட பாமகவுக்கு 23 தொகுதியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது! ஜெயலலிதாவிடமே 27 தொகுதிகள் வாங்கிய கட்சி பாமக. திமுகவிடம் 31 தொகுதிகள் பெற்ற கட்சி பாமக! ஆனால், தற்போது வெறும் 23 தொகுதிகளில் அது திருப்திபட வேண்டிய காரணம் என்ன..?
மாற்றம்,முன்னேற்றம் அன்புமணி என்று தமிழக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் சுமார் பத்து சதவிகித இடத்தை பவ்வியமாக வாங்கிக் கொண்டது எப்படி? 23 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அன்புமணியிடம் ஒரு பத்திரிகையாளர் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி இப்போதும் உள்ளதா..? என்ற போது, அவரால் பதில் பேச முடியவில்லை.
காரணம், பாமக குறித்த துல்லியமான சர்வே ஒன்றை ஆர்.எஸ்.எஸ் எடுத்து பாஜக தலைமைக்கு தந்ததாம்! அதன்படி கடந்த பத்து ஆண்டுகளில் பாமகவின் வாக்கு வங்கி படிப்படியாக குறைந்து வந்துள்ளதும், வன்னிய மக்களிடையே அந்த கட்சிக்கு முன்பு இருந்த செல்வாக்கு தற்போது இல்லாத நிலையும், தற்போது அதிக இடம் பெற்றாலும் கூட மிகக் குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்புள்ளதும் கண்டறியப்பட்டதாம். ஆகவே, பாமகவிற்கு இந்த அளவு தொகுதிகள் தந்தால் போதுமானது என்று பாஜக மேலிடமே தெரிவித்துவிட்டதாம். பாமகவிற்கு தொகுதிகளை குறைப்பதன் மூலம் பாஜக அதிக தொகுதிகளை பெற முடியும் என்பதும் மற்றொரு காரணம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அன்புமணி கைக்கு பாமக அதிகாரம் சென்றதில் இருந்து கட்சியின் வளர்ச்சி படிப்படியாக குறைந்துவிட்டது என்பது கண்கூடாகவே தெரிகிறது. டாக்டர் ராமதாசைப் போல கட்சிக்காரர்களை அரவணைத்து செல்ல முடியாதவர் என்பதோடு, கட்சியினரோடு அதிக இடைவெளியை பேணி வருகிறார் அன்புமணி! பொதுவாகவே மக்களுக்கும் கட்சிக்கும் உள்ள இடைவெளி சமீப காலமாக அதிகரித்து விட்டது. கொரானா காலகட்டம் முழுவதும் டாக்டர் ராமதாஸ் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தார். வயதானவர் என்பதால் அதை அனைவராலும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அன்புமணியும் அவ்வாறு முடங்கியது தான் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின்,எடப்பாடி போன்றவர்களெல்லாம் சுற்றிச் சுழன்று வருவதை அறிந்தும் கட்சி அறிவித்த போராட்டங்களுக்கு கூட தலைமை தாங்க அன்புமணி வரவில்லை. ஆகவே, பாராளுமன்ற தேர்தலுக்கு வாங்கியதை போல அதிக தொகுதிகளை வலியுறுத்தி வாங்கிவிட்டு, குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால் அசிங்கம் என்பதாலும் கிடைத்த வகையில் போதும் என்று முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
இவை ஒரு புறமிருக்க, இந்த 10.5% ஒதுக்கீடு என்னவோ எதிர்பார்த்த உற்சாகத்தை வன்னிய மக்களிடையே ஏற்படுத்தவில்லை. ஆனால், பாமகவினரிடம் இது ஒரு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த ஒதுக்கீடு பெற்றுத் தந்தது உதவலாம் என கட்சிக்காரகள் நம்புகின்றனர்.அதே சமயம் இன்று தமிழகத்தின் மத்திய அரசுப் பணி வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு இல்லாமல் முழுக்க வட இந்தியர்களுக்கே கடந்த நான்காண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ள பொதுத்துறையை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. மாநில அரசோ பெரும்பாலான பணிகளை ஓப்பந்ததாரர் வாயிலாகவே செய்கிறது! கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்பு என்பதே மிகவும் அருகிவிட்டது. இந்த சூழல்களை கவனத்தில் எடுத்து இதற்கு எதிராக மாபெரும் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டிய பாமக வெறும் கண்டண அறிக்கைகளோடு நிறுத்திக் கொண்டதையும் மக்கள் பார்த்துவிட்டனர். பாஜகவின் சகவாசத்தால் பாமக தன் போராட்ட குணத்தை இழந்துவிட்டது என்பது தேர்தலில் பிரதிபலிக்காமல் போகாது! அத்துடன் எட்டுவழிச்சாலை விவகாரமும் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை விட்டுவைக்காது.
இந்தச் சூழலில் இந்த இட ஒதுக்கீடாவது பாமகவை கரை சேர்க்குமா என்றால் அதுவும் சந்தேகமாகவே உள்ளது ஏனெனில், இந்த ஒதுக்கீட்டால் மற்ற சமூகத்தினரிடம் இது வரையில் இருந்த நல்லுறவு பாமகவிற்கு தற்போது இல்லாமல் போய்விட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக மற்ற சமூகங்கள் ஒன்றிணைந்து பாமகவிற்கு எதிராக ஒன்றிணையும் வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகிறது! அப்படி நடக்கும் பட்சத்தில் அது பாமகவின் தோல்வியை உறுதிபடுத்திவிடும். ஆகவே, இந்த ஒதுக்கீடு மூலமாக பெறக் கூடிய ஆதாயங்களைக் காட்டிலும் பாதகங்களே, அதிகமாக இருக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
Also read
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்ற போராட்டத்திற்கு அச் சமூகத்தின் பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். குறிப்பாக ராமசாமி படையாட்சி,ஏ.கோவிந்தசாமி, ஏ.கே.நடராஜன் உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு அதிகம்! இடஒதுக்கிட்டிற்கான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். கோர்டு,வழக்கு என்று ஆயிரக்கணக்கானவர்கள் நிம்மதி இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். ஆனால், இந்த ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் என்ற ஒற்றை மனிதர் தான் காரணம் என்று அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதை எத்தனை வன்னியர்கள் ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
தங்கள் சாதியின் பெயரை வன்னிய குல சத்திரியர் என் அரசு ஆவணங்களில் பதிவு செய்து இருக்கும்போது இவர்கள் உயர் சாதியினர் தானே பின்னர் எதற்கு இட ஒதுக்கீடு?