தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையின்மை!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டின் உயிர் நாடியான காவிரி நீர் பிரச்சினையிலும் அரசியல் செய்வது, பகைமை காட்டுவது, குற்றத்தை பாதிக்கப்பட்டவன் மீதே சுமத்துவது ஆகியவற்றின் மூலம் பாதிப்பு ஏற்படுத்துபவன் பக்கம் சென்று நிற்கலாமா?  மற்ற மாநிலத்தவர் போல  தமிழ்நாட்டு நலன் சார்ந்த பிரச்சினைகளில் தமிழக கட்சிகளால் ஏன் ஓரணியில் நிற்க முடியவில்லை? 

உலகத்திலேயே வேறந்த இனத்திற்கும் இல்லாத தனி குணம் தமிழ் இனத்திற்குண்டு.

ஒற்றுமையின்மை…!

அதாவது, தமிழ்நாட்டிற்கு பேரழிவு ஏற்பட்டாலும் ஒன்றுபட முடியாமை!

காவிரிக்காக கர்நாடகத்தில் கட்சி வித்தியாசம் இன்றி அனைவரும் ஒருமித்து செயல்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் குற்றம் கூறுவதில்லை.

முல்லை பெரியாருக்காக கேரளாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் எதிரிகள் கூட எதிர்ரெதிர் நிலை எடுப்பதில்லை, ஒரு போதும்!

மேகதாது விவகாரத்தில் மத்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை முற்றிலுமாக கைகழுவி விட்டனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாகுறையால் தவிக்கும் தமிழகம் மேகதாது கட்டப்பட்டால் பாலைவனமாகிவிடும். இந்தியாவில் தமிழகமும் ஒரு அங்கம் தானே! ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு அநீதி இழைப்பதை தடுத்து, நியாயத்தை நிலை நாட்ட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் அணுகுறையை அனைவரும் சேர்ந்து  ஒன்றாக கேள்வி கேட்கும் சூழல் மட்டும் தமிழ்நாட்டில் சாத்தியமே இல்லாமல் போகிறதே ஏன்?

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைத்து மத்திய அரசு ஏகபோக அதிகாரத்துடன் உள்ள நிலையில், யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த சட்ட வரம்பிற்குள் இருந்து தான் மத்திய அரசை அணுக முடிகிறது.

இலங்கை பிரச்சினையின் போது இந்திய ராணுவம் அங்குள்ள தமிழ் போராளிகளை ஒடுக்கிய போது, இதை நீங்கள் தடுக்கக் கூடாதா? என கேள்வி எழுப்பப்பட்ட போது, நானே இங்கு அடிமை ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எவ்வாறு உதவ முடியும் என்றார், அன்றைய முதல்வர் கருணாநிதி.

ஆகச் சிறந்த அரசியல் ஆளுமையாக அறியப்பட்ட கருணாநிதிக்கே இது தான் நிலைமை எனில், அரசியலுக்கே புதியவரான விஜய்யின் நிலைமை அதைவிட மேம்பட்டு இருக்க வாய்ப்பில்லை.

அதே சமயம் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் எழுதி உள்ள கடிதத்தில்,

“காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு கட்டமைப்பை அமைக்க  கீழ்மடைப் பகுதி மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் கட்டாயம் பெற வேண்டும் என 2018 பிப்ரவரி 16-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்கும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான ‘ஜல் சக்தி’ துறை இணையமைச்சரின் இந்த பதில் ஏமாற்றமளிக்கிறது. மேகதாது திட்டம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முற்றிலும் உடன்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு எந்தவொரு ஒப்புதலும் வழங்ககூடாது’’ என வலியுறுத்தி உள்ளார்.

ஆட்சியில் இருக்கும் முதல்வர் இப்படி பொறுப்பாகத் தான் சுட்டிக் காட்டி பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்க முடியும். திமுக எதிர்பார்ப்பது போல அதிரடி ஆவேச அறிக்கை விட்டு பகைமை உணர்வை வளர்ப்பது சரியல்ல.

அதுவும் இங்கே திமுக, அதிமுக இரண்டுமே பாஜகவின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் நிலையில் புதியவரான விஜய் மத்திய ஆட்சியாளர்களை வீராப்பாக பேசி பகைமையை சம்பாதித்துக் கொண்டால், அவரது ஆட்சியை கவிழ்ப்பது நமக்கு சுலபமாகிவிடும் என நினைத்தே ஒவ்வொரு விவகாரத்தையும் அணுகுகிறார்கள்.

தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி, தனது எக்ஸ் பதிவில், “மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.மேகதாது விவகாரத்தில் பட வசூல் பாதிக்கும் என்ற பயமா?’’ எனக் கேட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யை நீங்கள் என்ன வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கு இது நேரமல்ல,  நமது உயிர் நாடியான ஒரு பிரச்சினையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் அந்த ஒன்றிய அமைச்சருக்கோ, பிரதமர் மோடிக்கோ ஒரு வார்த்தையேனும் நியாயமாக நடக்க வலியுறுத்துவதன் வாயிலாக, ”நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையை ஏற்கமாட்டோம்’’ என்பதை உணர்த்தி இருக்கலாமே.

தமிழர்கள் ஒன்றுபடவே மாட்டார்கள். ஒருவரை கவிழ்க்க மற்றொருவர் நம்மிடம் மண்டியிட்டு கிடப்பர் என நம்மை பற்றிய மத்திய அரசின் மதிப்பீடு தானே தமிழகத்தை இப்படி வஞ்சிக்க காரணம்!

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time