தவெக ஆட்சிக் கவிழ்ப்பில் தீவிரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜியை விட்டு வைத்தால் தொடர்ந்து சதி திட்டங்களில் ஈடுபடுவார் என்பதால், அவர் மீதான ஊழல்களை தூசி தட்டி தூக்கி சிறையில் தள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டுவது ஒரு புறம் என்றால், மறுபுறம் பாஜக துணையுடன், நீதிமன்ற லாபி செய்து கண்கட்டி வித்தை காட்டும் செந்தில் பாலாஜி;
ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் ஊழல் ஆதாரங்களை அள்ளி எடுத்து காட்டியதும் வேறு வழியின்றி, சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவுப்படி செந்தில் பாலாஜி தினசரி சரியாக திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போட வரவில்லை. இன்று காலையும் வரவில்லை.
செந்தில் பாலாஜி முன் ஜாமீன் போட்டதும், லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்த உண்மைகளை பட்டியலிட்டு நீதிபதியிடம் தந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த நீதிபதி ஜாமீன் தர மறுத்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவிலேயே நாள் ஒன்றுக்கு ஆஜராக ஒரு கோடி கட்டணம் பெறும் வழக்கறிஞர்களான கபில் சிபல், முகுல் ரோஹத்கி மற்றும் மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் முன்னிலையில் ஆஜராகி, ”இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாய்மொழியாக தெரிவித்து, அவசர வழக்காக நாளையே விசாரிக்க கோரிக்கை வைத்தனர். நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு நாளை விசாரிக்க உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இதெல்லாம் மிகப் பெரிய அரசியல் செல்வாக்கின்றி சாத்தியமில்லை.
உண்மை என்னவெனில், செந்தில் பாலாஜி சிக்குவதற்கு காரணமே அவரால் பாதிக்கப்பட்ட திமுகவினர் தான்! அவர்கள் தான் அத்தனை தகவல்களையும் ஆதாரபூர்வமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தந்துள்ளார்கள்.
அதற்கு காரணம், திமுக ஆட்சியில் டாஸ்மாக் பார் டெண்டர் விடப்பட்ட போது திமுகவினர் அதை எடுத்து நடத்துவதற்கு செக் வைத்துவிட்டார், செந்தில் பாலாஜி. அவரவர் ஏரியாக்களில் டாஸ்மாக் பாரை எடுத்து செயல்பட்டு லாபம் பார்ப்பது தான் ஆளும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, வட்டாரத் தலைவர்களின் பிரதான வருமானமாக இருந்து வருகிறது. இந்த சம்பாத்தியத்தைக் கொண்டு தான் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள், தொண்டர்களுக்கான செலவுகள் போன்றவற்றை செய்வார்கள்!
ஆனால், அப்போது அந்த மதுபான விற்பனையில் கிடைக்கும் சில்லறை வருமானத்தைக் கூட திமுகவினர் அனுபவிக்க முடியாமல் செந்தில் பாலாஜியும், சபரீசனும் கைகோர்த்து அனைத்து பார்களிலும் கரூர் கம்பெனிகளின் பினாமிகள் எடுக்கும் சூழ்ச்சியை அரங்கேற்றினார்கள்.

கட்சித் தலைமையே மொத்த லாபத்தையும் கபளிகரம் செய்ய முனைகிறது என்பது தான் திமுகவிற்குள் அன்று எழுந்த புகைச்சல் புகைச்சல். அதனால் தான் திமுக வரலாற்றிலேயே முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, சொந்தக் கட்சியின் அமைச்சரைக் கண்டித்து அவரது வீட்டு முன்பு அந்த கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்றவற்றை செய்தனர்.
அன்றைய முதலமைச்சர் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்ட செந்தில் பாலாஜி முறைகேடு மற்றும் ஊழலுக்கு புது திட்டம் தீட்டி, போலி மதுபானம் விற்பனைக்கு ஒரு புது ரூட் போட்டார். ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் எப்படி கல்லா கட்டவேண்டும் என முடிவெடுத்து தமிழகம் முழுதும் ஒரு குடையின் கீழ் பார்களை கொண்டு வரும் வகையில், ஆட்சித் தலையின் பினாமி மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் என ஒரு மாஸ்டர் பிளானை அரங்கேற்றினார்.
வழக்கமாக ஒரு ஊரில் உள்ள பார் டெண்டர் என்றால், கடையின் அமைவிடம், விற்பனையின் சதவீதம் அடிப்படையில் அரசு நிர்ணையித்துள்ள வைப்பு தொகையை செலுத்தி டெண்டர் போடுவது வழக்கம். அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் சுமார் 20 பேர்கள் போட்டி போட்டு டெண்டரில் கலந்து கொள்வார்கள். ஆனால், அப்போது, புதிதாக யாரென்றே தெரியாத பலர், டெண்டர் போட்டனர். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்தே பல பெயர்களுக்கு டெண்டருக்கான தொகை செலுத்தினர்.
இதைத்தான் டெண்டர் விதிகள் மீறப்பட்டு, ஒரே வங்கியிலிருந்து தொடர்ச்சியான வரிசை எண்களுடன் கூடிய வரைவோலைகள் (DD) பெறப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன…என லஞ்ச ஒழிப்புத் துறை எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது.
பினாமி பெயர்களில் பார் நடத்தப்பட்டன என்பதை லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது;
எந்த நபருக்கு பார் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவர் அந்த பாரை நடத்தவில்லை . அது வேறு சில மூன்றாம் நபரால் நடத்தப்பட்டு வருகிறது.
வரைவோலைகளை (DD) பெற ‘X’ நபர் கணக்கில் பணம் செலுத்தப்படுவதும், இந்த DD-க்களைப் பயன்படுத்தி ‘Y’ நபர் பார் டெண்டர்களுக்கு விண்ணப்பிப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பார் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதும், அந்தப் பார் ‘Z’ நபரால் நடத்தப்படுகிறது.
அதாவது பாருக்கு விண்ணப்பித்தவர் ஒருவர்,காசோலைகள் தந்தது மற்றொருவர், பார் நடத்தியவர் முற்றிலும் வேறு ஒருவர்.
இது தவிர டெண்டர் எடுக்காமல் அரசுக்கு பணம் செலுத்தாமல் கள்ள மது விற்பது போல சில பார்கள் இயங்கின. அந்த பாருக்கு அன் அவிசியலாக டாஸ்மாக் சரக்குகள் தரப்பட்டு, அப்படி விற்பனையான மதுவுக்கு முறையாக உரிமம் புதுப்பிக்கப்படாத பார்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் கோயம்புத்தூர் வடக்கில் ரூ.17.27 கோடி, தெற்கில் ரூ.13.58 கோடி மற்றும் நீலகிரியில் ரூ.1.95 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது…என ஒரு சின்ன சாம்பிளை மட்டும் தந்துள்ளனர்.
அன் அவிசியல் வியாபாரம் அப்படி நடந்ததென்றால், சட்ட பூர்வ டாஸ்மாக்கில் எப்படி நடந்தது என்பதற்கு அன்றைய நிதி அமைச்சர் சட்ட சபையில் தெரிவித்ததே சாட்சி.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27, 2023 அன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி டாஸ்மாக் வருமானம் முழுமையாக அரசுக்கு வருகிறதா? என கேட்டதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன், ”முழுமையாக வருகிறதா..? என என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், கம்யூட்டர் சிஸ்டம் இல்லை, எல்லா கடைகளுக்கும் கம்யூட்டர் இருந்திருந்தால் – உற்பத்திக்கும், விற்பனைக்கும் இடையே ஒரு பாட்டில் காணாமல் போகாத அளவுக்கு கம்யூட்டர் சிஸ்டம் இருந்திருந்தால் – என்னால் பதில் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.
ஏன் நவீன மல்டி கம்யூட்டர் சிஸ்டம் மூலம் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினிமயப்படுத்தி கேஷ் கவுண்டர் – சேல்ஸ் கவுண்டர் என நிர்வாகத்தை முறைப்படுத்தி அனைத்து வாடிக்கையாளருக்கும் பார் கோடிங் பில்லிங் முறை நடைமுறைப்படுத்த திமுக அரசு விரும்பவில்லை? என்பதற்கான பதிலில் தான் வில்லங்கமே ஒளிந்துள்ளது.
உண்மையில் சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் கேளராவை போல கம்யூட்டர் சிஸ்டம் வேண்டுமென தொடர்ந்து கூறியும் பயனில்லை. சி.ஐ.டி.யூ அமைப்பினர் டி.ஜி.பி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனியின் நிர்பந்த வசூல் குறித்து புகார்கள் தந்தும் பயனில்லை. ஸ்டாலின் செந்தில் பாஜாஜி தொடர்பான எந்த புகாரையும் கடைசி வரை பொருட்படுத்தவில்லை.

மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில் ’தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபாட்டில்கள் மற்றும் வெளிப்புற அட்டைப் பெட்டிகள் மீது பார் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்’ எனச் சுட்டிக்காட்டியும் திமுக அரசு பொருட்படுத்தவில்லை.
காரணம், கணினி மயப்படுத்திவிட்டால், ‘கோல்மால்’ செய்ய முடியாது! பில் போடாம ‘அன்அபிசியல் சேல்ஸ்’ செய்து, அந்த வருமானத்தை மேலிடத்திற்கு தர முடியாது பெரும்பாலான பார்களுக்கு விநியோகம் செய்யப்படும் சரக்குகளுக்கு பில்லே தருவதில்லை. 100 ரூபாய்க்கான சரக்கு விற்பனையில் 83 ரூபாய் அரசுக்கு வரியாக போக வேண்டும். பில் இல்லாமல் சரக்கை தந்து விற்றால் அந்த 83 ரூபாய் அரசுக்கு போகாது. இந்த வகையில் ஒவ்வொரு நாளுமே சில கோடிகள் வரி ஏய்ப்பால் ஆதாயம் அடைந்தது திமுக ஆட்சி.
இது மட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மது பாட்டில்களுக்கு கூடுதல் பணமாக ரூ.10 முதல் 40 வரை வசூலித்துள்ளனர். இதுவே வெளி நாட்டு சரக்கென்றால் ரூ.500 வரை கூடுதல் பணம் வசூலித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் சிகரமாக இத்தனை வழிமுறைகளில் லாபம் பார்த்தும் அடங்காமல் போலி மதுவையும் பார்களுக்கு விநியோகம் செய்தார் செந்தில் பாலாஜி. இந்த போலி மதுவால் அரசின் மதுவை சாப்பிட்டு சென்ற ஆட்சியில் வெவ்வேறு காலகட்டங்களில் சுமார் 8 பேர் இறந்தனர். இந்தப் பாவம் இவர்களை சும்மா விடுமா?
இவர்கள் டாஸ்மாக் கிடங்குகளுக்கான போக்குவரத்துகளிலும் கூட முறைகேடுகளை விட்டுவைக்கவில்லை. டெண்டர் தராவிட்டால் வைப்பு தொகையை திருப்பி தருவதே முறை. ஆனால், வைப்பு தொகையே கட்டாத ஒருவருக்கு அதை திருப்பிவிட்டு, வைப்பு தொகை கட்டியவருக்கு ஆர்டரும் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் தில்லுமுல்லு செய்தனர் அதிகாரிகள்.
இவ்வளவு முறைகேடுகளையும் செந்தில் பாலாஜிக்கு சிறப்புற செய்து கொடுத்தவர் தான் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர், எஸ். விசாகன், ஐ.ஏ.எஸ். இவருக்கு ஒத்தாசை செய்த ஊழல் அதிகாரிகள் டி. ராமதுரை முருகன் மற்றும் டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் ஆர். பன்னீர் செல்வம்.

இவர்களைத் தவிர டாஸ்மாக்கில் பொறுப்பில் இல்லாத செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான பாஸ்கர், ரதேஷ் ராஜ் சண்முகவேல், எஸ். கார்த்திக் என்ற மூலனூர் கார்த்திக் ஆகியோருடன் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், உதயநிதியின் நண்பரான ரிதீஸ் ஆகியோரும் டாஸ்மாக் பணத்தில் விளையாடினர். இவர்கள் டாஸ்மாக் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணி நியமனங்களில் செல்வாக்கு செலுத்தினர்.
மேலும் இவர்கள் நம்பிக்கை மோசடி செய்தல், தவறான ஆவணங்களை உருவாக்குதல், ஏமாற்றுதல் மற்றும் முறைகேடு செய்தல் மூலம் டாஸ்மாக்கில் பெரிய அளவில் சட்டவிரோதப் பணத்தை முறைகேடாகப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
டாஸ்மாக்கின் மூத்த அதிகாரிகளுக்கும் அங்கீகரிக்கப்படாத அதிகாரத் தரகர்களுக்கும் இடையே உருவாக்கப்பட்ட கூட்டு நெட்வொர்க் மூலம், டாஸ்மாக்கின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்டு தேவையற்ற பலன்களைப் பெற்று அரசுக்குக் கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்கள் மதுபான ஆலைகள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பாட்டில் நிறுவனங்களிடமிருந்து ஆதாயம் அடைந்தனர். என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், அன்றைய பாஜக அரசின் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி எந்த எப்.ஐ.ஆரும் போடாமல் விட்டுவிட்டது.
ஆகாஷ் பாஸ்கரன் ரெய்டுக்கு பயந்து தலைமறைவாகி, பின்னர் நீதிமன்றம் சென்று தப்பித்தார். அதற்குள் மத்திய பாஜக அரசுடன் சமரசம் பேசிவிட்டது திமுக தலைமை. இதனால் தான் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இருந்த பராசக்தி உதய நிதியின் மகன் இன்ப நிதி பெயருக்கு மாற்றலாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரபடமாக தயாரித்து, மோடியின் பாராட்டை பெற்றனர். அவரும் படக் குழுவினரை டெல்லி வரவழைத்து வாழ்த்தினார்.
அப்படியெல்லாம் அன்று திமுக அரசை காப்பாற்றிய பாஜக அரசு தற்போதும் கூட காப்பாற்றலாம். அதையும் தாண்டி விஜய் இந்த விவகாரத்தில் வெற்றி பெறுவதில் தான் அவரது அரசியலே இருக்கிறது. அரசியலுக்கு புதியவரான விஜய் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட செந்தில் பாலாஜியை தண்டிப்பது என்பது மிகவும் கடினம். அதுவும் டாஸ்மாக் ஊழலில் திமுகவின் தலைமை குடும்பமும் பலன் பெற்று இருப்பதால் செந்தில் பாலாஜியை காப்பாற்ற மட்டுமல்ல, தங்களை தற்காப்பதற்கும் அவர்கள் எந்த எல்லை வரை சென்றாவது செந்தில் பாலாஜியை பாதுகாப்பார்கள்!
சாவித்திரி கண்ணன்























Leave a Reply