இசையில் ஜாலங்கள் நிகழ்த்திய பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி!

-சாவித்திரி கண்ணன்

தென்றலின் சுகத்தோடு மனதை மயக்கும் குளிர்ந்த குரலுக்குரியவர் ஜமுனா ராணி. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலோருக்கு இவரை தெரியாது. ஆனால், நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டியவரே ஜமுனா ராணி. ஜமுனா ராணியின் திறமையை அங்கீகரித்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார் கவிஞர் கண்ணதாசன்;

பழம் பெரும் பின்னணி பாடகி ஜமூனாராணி இன்று மறைந்தார். பி.சுசீலா, எஸ். ஜானகி காலகட்டத்தவர் என்றாலும், அவர்களுக்கும் முன்பே ஏழு வயதில் (1946) தியாகய்யா ( தெலுங்கு)படத்தில் பாடியது தொடங்கி இசை வாழ்வைத் தவிர வேறெதுவும் அறியாதவர், ஜமுனா!

சிவாஜி பராசக்தி படத்தில், ”சக்ஸஸ், சக்ஸஸ்”  என்று தான் அறிமுகமாவார்!

அதே போல ஜமுனா ராணி தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கல்யாணி’ படத்தில் ‘சக்ஸஸ் சக்ஸஸ்’ என்ற பாடலில் தான் அறிமுகமானார்.

‘ஓ தேவதாஸ்..’ என கண்டசாலாவுடன் இவர் இணைந்து பாடிய பாடல் மறக்கக் கூடியதா?

இதே போல அந்த காலகட்டத்தில் ஏ.எம்.ராஜா அவர்களுடனும் சில பாடல்கள் பாடியுள்ளார், ஜமுனாராணி.

மாடர்ன் தியேட்டர்சில் மட்டுமே பாடி வந்த ஜமுனாவை அதற்கு வெளியே முதல் முதலாக பாடும் வாய்ப்பை குலேபகாவலி படத்தில் ஏற்படுத்தித் தந்தார் கவிஞர் கண்ணதாசன். குலேபகாவலியில், ”ஆசையும், என் நேசமும்..” என மது குடித்து மயங்கி விக்கலுடன் ராஜசுலோச்சனா நடித்து வாயசைத்த பாடல் ஜமுனா பாடிய முதல் கிளர்ச்சிப் பாடலாகும்.

ஜமுனா ராணி, ”குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே” என்று சந்திரபாவுடன் சேர்ந்து பாடிய பாடலில் இளமையின் துள்ளலும், குறும்புத் தனமும் கொப்பளிக்கும்.

இந்தப் பாடல் குறித்து ஜமுனா ராணி பாடகர் மனோவுக்கு தந்த ஒரு நேர்காணலில், ”இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பாவம் வாயில்லா பூச்சி போன்றவர். சந்திரபாபு தான் மெட்டு,பாட்டு எல்லாம் அவர் ஆதிக்கம் தான். பாடலின் போது அங்கும்மிங்கும் ஓடி டான்ஸ் ஆடிக் கொண்டே பாடுவார் சந்திரபாபு. சேர்ந்து நின்று பாடினால் தான், தொடர்ச்சியாகப் பாட வரும். ஓடிய சந்திரபாபுவின் சட்டையை பின்புறமாக இழுத்து பக்கத்தில் நிற்க வைத்து, ’’போக்கிரி,போக்கிரி,போக்கிரி ராஜா, போதுமே, போதுமே,போதுமே தாஜா’’ என கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு நானாகப் பாடினேன்.

இது ஸ்கிரிப்டில் இல்லை. இசை அமைப்பாளரும் சொல்லவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த படத்தின் இயக்குனர் தொலைவில் இருந்து கொண்டே  ”பாடியது அப்படியே இருக்கட்டும்… நல்லா இருக்கு’’ என சைகையில் கூறவும், இசை அமைப்பாளரும் தொடர்ச்சியாக பாடவிட்டார் என்றார்.

ஜமுனா ராணி டி.எம்.செளந்திரராஜனுடன் பாடிய ”மாமா,மாமா,மாமா…’’ என்ற பாட்டும்  இளமையின் துள்ளலுக்கான ஒரு பாட்டு தான்.

அதே போல ”யாரடி நீ மோகினி” பாடலில்,டி.எம்.எஸ்சின் கம்பீரக் குரலுக்கு ஈடு கொடுத்து  ”தேன் வேண்டுமா?,  நான் வேண்டுமா? தீரா காதல் மோகமா…?’’ என ஜமுனா ராணி பாடும் போது கிறங்காதவர்கள் இருக்க முடியாது.

யாரடி நீ மோகினி – தேன் வேண்டுமா? நான் வேண்டுமா?

”காளை வயசு கட்டானா தினுசு, களங்கமில்லா மனசு” என்ற பாடலில் காம மயக்கத்தை பாடலில் கடத்தி இருப்பார்.

எனவே ஜமுனா ராணி என்றால், செக்ஸ் பாடல்களுக்கானவர் என்ற முத்திரை விழுந்துவிட்டதாம், அந்தக் காலத்தில்!

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான் இதை மாற்றி மகாதேவியில் சாவித்திரிக்கு பாட வேண்டிய காமுகர் நெஞ்சில் என்ற பாடலை விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களை மிகவும் வலியுறுத்தி வாய்ப்பு வாங்கித் தந்து, ஜமூனா ராணி வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனை ஏற்படுத்தினார். அத்துடன் ஜமுனாவின் சம்பளத்தை இரட்டிப்பாக்கவும் சிபாரிசு செய்தார்.  அதே போல தன் சொந்தப் படமான மாலையிட்ட மங்கையில் கண்ணதாசனின் புகழ் பெற்ற ”செந்தமிழ் தேன் மொழியால்” பாடலை டி.ஆர்.மகாலிங்கம் சுக ராகமாக பாடி அசத்தியிருப்பார். அதே பாடலை ஜமுனாராணி சோக ராகத்தில் அழகாக பாடியிருப்பார்.

கண்ணதாசனின் ”அத்திக்காய், காய்,காய் பாடல்…” ஜமுனாவின் பாடல்களில் குறிப்பிடத்தக்கது. கவிஞர் இந்தப் பாடலை தன் விருப்பப்படி எழுதி எடுத்து வந்து,  விஸ்வநாதனிடம் தந்து, ”டேய் விசு இந்த பாட்டுக்கு நீயே மெட்டு போட்டுக்கோ’’ என்றாராம். அதைப் பார்த்து விஸ்வநாதன்  ”என்னய்யா காய்,காய்ன்னு எழுதி வச்சுருக்க.. இதையெல்லாம் மெட்டு போட முடியாது’’ என மறுத்துள்ளார். ஆனால், படத்தின் இயக்குனர் பி.ஆர்பந்துலு அவர்கள் வலியுறுத்திய பிறகே, விஸ்வநாதன் சம்மதித்தாலும், பாடலை மிக அழகாக மெட்டுப் போட்டு தந்து காலத்தால் அழியாத பாடலாக்கினார். கவிஞ்சர் கண்ணதாசன் தான் சொந்தமாக தயாரித்த படங்கள் எல்லாவற்றிலும் ஜமுனா ரானிக்கு ஒரு பாடலேனும் பாடும் வாய்ப்பிஅ உறுதிபடுத்தினார். அதே போல திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் தன் படங்கள் பெரும்பாலானவற்றில் ஜமுனாராணிக்கு பாட வாய்ப்பளித்தார்.

ஜமுனா ராணியின் மாஸ்டர் பீஸ் பாடல் என்றால், செல்வம் படத்தில் தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து  பாடிய ”உனக்காகவா நான் எனக்காகவா..” என்ற காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் இசை ஜாலமாகும்!

1970-ல் வி.குமார் இசையில் வாலி எழுதிய ”புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக” என பி.சுசிலாவும், ஜமுனா ராணியும் பாடிய பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

1950 தொடங்கி 70 வரை படு பிஸியாக இருந்த ஜமுனா ராணிக்கு அதன் பிறகு 16 ஆண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லை. இவர் பாட வேண்டிய பல பாடல்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியை அழைத்தனர், இசை அமைப்பாளர்கள்! எல்.ஆர்.ஈஸ்வரியின் காலம் கொடிகட்டிப் பறந்த போது, வாணி ஜெயராம் வந்து அவரது வாய்ப்புகளையும், பி.சுசிலா வாய்ப்புகளையும் சேர்த்தே வாங்கிக் கொண்டார் என்பதெல்லாம் வரலாறு!

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜா ஜமுனா ராணிக்கு, ”நான் சிரித்தால் தீபாவளி” என நாயகன் படத்தில் பாட வாய்ப்பளித்தார். அது நன்றாக ‘வைரல்’ ஆன போதும் இவருக்கு பிறகு வாய்ப்பில்லை.

ஜமுனாராணியும், பி.சுசிலா அவர்களும் நல்ல தோழிகள். இருவரும் சேர்ந்து பல மேடைக் கச்சேரிகள் தந்துள்ளனர்.

அதே போல 1990 களில் ஜமுனா ராணி, ஜிக்கி, பி.லீலா ஆகிய மூவரும் முத்தேவதைகளாகத் தான் எந்த இசை நிகழ்ச்சிக்கும் செல்வார்கள். ஒருவரை ஒருவர் விட்டுதர மாட்டார்கள்! இவர்கள் பல நாடுகளுக்கு சென்றும் மேடை கச்சேரி தந்துள்ளனர். ஜமுனா ராணிக்கு பாட வாய்ப்பு கிடைத்தது 20 ஆண்டுகள் என்றால், பாடிய பாடல்களைக் கொண்டு, மேடைக் கச்சேரி செய்து மக்களை நேரடியாக மகிழ்வித்தது 35 ஆண்டுகள்!

பெண்கள் சினிமாவைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் – அதாவது, ‘சினிமா ஒழுக்கக் கேடானது’ என்ற கருத்து சமூகத் தளத்தில் வலுப்பட்டிருந்த காலத்தில், சினிமா பாடகியாக வலம் வந்த ஜமுனா ராணி கல்யாணமே செய்து கொள்ளவில்லை. சக பின்னணி பாடகிகள் சிலரின் மண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புணர்வுகளால் எச்சரிக்கையடைந்து ஜமுனா ராணி கல்யாணம் செய்வதையே முற்றிலும் தவிர்த்துவிட்டதாக திரை இசை அலைகள் என்ற நூலில் பத்திரிக்கையாளர் வாமனன் பேட்டி கண்டு எழுதியுள்ளார்.

கண்ணியமான, சுதந்திரமான இசை வாழ்க்கைக்கு, இல்லற வாழ்க்கை தடை என்று அந்த காலகட்டத்தில் ஜமுனா ராணி கருதியதால் தன் சகோதரர் குடும்பத்தையே தன் குடும்பமாக பாவித்து வாழ்ந்தார், ஜமுனா ராணி.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time