33 ஆண்டுகால முடிவிலா சிறைவாசம்…!

-பீட்டர் துரைராஜ்

சட்டம் நீதி என்பவையெல்லாம் செல்வாக்கானவர்களுக்கு ஒன்றாகவும், செல்லாக் காசாக புறந்தள்ளப்பட்ட எளிய மக்களுக்கு ஒருவிதமாகவும் தான் இருக்கிறது என்பதற்கு 75 வயதை கடந்து 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஆண்டியப்பன்,பெருமாள், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகிய ஐவரே உதாரணமாகும்!

ராஜிவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எழுவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து கவனப்படுத்தவாவது தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் லாபி இருக்கிறது. இவர்களுக்கோ அதுவும் இல்லை…!

தவறு செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால், தண்டணையானது கால அளவு அளவில்லாமல் ஒரு புறம் தொடர்வதும், மறுபுறம் தொழில் முறையிலான கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் ஒரு சில ஆண்டுகளில் விடுதலையாவதுமாக மீண்டும், மீண்டும் சிறைச்சாலைக்கு ஒரு டூரிஸம் போல விசிட் அடித்து வெளியே வருவதையும் நாம் பார்க்கிறோம்!

அதே போல மனித நேயம் என்பதும் ஒரே அளவில் பாரபட்சமில்லாமல் வெளிப்பட வேண்டும். பேரறிவாளன், நளினி போன்றோர்களுக்கு  காட்டும் அனுதாபத்தை நாம் மாதையன், ஆண்டியப்பன் உள்ளிட்டோருக்கும் காட்ட வேண்டும்..!

கடந்த 1990 காலக்கட்டங்களில் சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்புடைய வழக்கில் வீரப்பன் வசித்த பகுதி, கிராமத்தவர் ,வீரப்பன் உறவினர்கள் என பலரும்  பல்வேறு வழக்குகளில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் கடுமையான சித்திரவதையுடன் கூடிய, நெடிய சிறைவாசத்தை எதிர் கொண்டனர். இவர்களின் குடும்பங்களே சிதைந்தது.

அது போன்ற ஒரு சூழலில்  வீரப்பனின் அண்ணன் கூச.மாதையன்ஆண்டியப்பன்,  பெருமாள் ஆகியோர் கர்நாடக வனத்துறை யால்  கைது செய்து சிறைபடுத்தப் பட்டனர். மாதையன் 1987 முதல் சிறையில் இருக்கிறார். இவருடைய மனைவி மாரியம்மாள் கூற்றுப்படி மாதையன் இந்த கொலையில் துளியும் சம்பந்தமில்லாதவர், சம்பவம் நடந்த அன்று வெளியூரில் இருந்தார். வீரப்பனின் அண்ணன் என்பதற்காக குற்றவாளியாக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்றதைத் தொடர்ந்து மகனும் செத்துவிட்டான்! அதாவது 33 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சிறைவாசம் தொடர்கிறது. கர்நாடக மாநிலத்தில் நடந்த வழக்கு விசாரணை முடிந்த பிறகு விடுதலையாக வேண்டிய நிலையில், அவரை தமிழ்நாடு வனத்துறை ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்த்துவிட்டனர்.  நான்காண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு  கர்நாடக சிறையிலிருந்து 1994 ஆண்டு  கோவை சிறைக்கு மாற்றப்பட்டனர். அது தொடங்கி ஆயுள் தண்டனைவாசிகளாக மாதையன், ஆண்டியப்பன் பெருமாள்,ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுவெளியில் வலுவாக எழவில்லை.

அதே போல மீசை மாதையனும், ஞானப்பிரகாசமும் கர்நாடகா சிறையில் சுமார் 30 ஆண்டுகளாக உள்ளனர். மாதையனின் தம்பியும்,மகனும் வீரப்பனோடு தொடர்பில் இருந்த காரணத்திற்காக இவர் கைதானார்! அவர்கள் இருவரும் இறந்துவிட்ட நிலையிலும், இவரது சிறைவாசம் தொடர்கிறது. இவரது மனைவி ஒரு கூலி தொழிலாளி, இவர் சிறைக்கு சென்றதையடுத்து பிள்ளைகளின் படிப்பு நின்று, குடும்பமே சின்னா பின்னமாகிவிட்டது. ஞானப்பிரகாசம் சர்ச்சில் வேலை பார்த்த ஒரு எளிய ஊழியர்.சந்தேகத்தின் பெயரில் கைதான அவரது கைது இன்னும் தொடர்கிறது.

வீரப்பனை 1993 ஆம் ஆண்டு முதன் முதலில் சந்தித்து  பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர்  பெ.சிவசுப்பிரமணியன்.  கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, அரசு சார்பில் அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர். இவர் “வீரப்பன் – வாழ்ந்ததும் வீழ்ந்ததும் ” என்ற தலைப்பில் மூன்று  நூல்களை எழுதியுள்ளார். கோவை சிறையில் உள்ள மாதையன், பெருமாள், ஆண்டியப்பன் மற்றும் கர் நடக சிறையில் உள்ள மீசை மாதையன், ஞானப்பிரகாசம் ஆகியோர்களை  விடுதலை செய்வதில் உள்ள தடை என்ன என்று அவரிடம் கேட்டோம்.

” சாதாரணமாக கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுகிறார்கள்.  பல நேரங்களில் தண்டனை தளர்வு,  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அண்ணா பிறந்த நாள் விழா என்பது போன்ற   காரணங்களுக்காக  பத்தாண்டுகளில் கூட விடுதலையாகி விடுவார்கள். இது வழக்கமாக நடந்து வருவதுதான். தருமபுரி அரசுப் பேருந்தை  எரித்து கல்லூரி மாணவிகளை கொலை செய்தவர்களை, தண்டனைக் காலம் முடியும் முன்பே தமிழக அரசு  விடுதலை செய்துள்ளதே ! ஆனால்,இவர்கள் எந்த செல்வாகுமற்ற ஏழை,பாளைகளாகும்!

இவர்கள் வனத்துறை அதிகாரி சிதம்பரத்தை கொலை செய்து , அவரது உடமைகளை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் தான் கைதாயினர். எனவே, கொலை  வழக்கோடு  வழிப்பறியும் சேர்ந்த வழக்காக பார்க்கிறார்கள். அதோடு பெண்கள் மீதான வன்முறை, போதை மருந்து, சாதிக் கண்ணோட்டத்தோடு நடந்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு முன்விடுதலை இல்லை என்ற ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. இவர்கள் மீது  ஆயுதச்  சட்டப் பிரிவுகளில் (arms act ) வழக்கு உள்ளதால், இவர்களை விடுதலை செய்ய இயலாது என ஜால்ஜாப்பு சொல்லி, விடுதலைக்கு அதிகாரிகள் மறுக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு  நினைத்தால் அவர்களை விடுதலை செய்து விட முடியும். இவர்கள் அனைவருமே 60 முதல் 70 வயதைக் கடந்தவர்கள். 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள்.பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள்.இவர்களின் குடும்பத்தினடின் துயரங்கள் சொல்லிமாளாது.

அதே போல கர்நாடகா  சிறையில் ஞானப் பிரகாசம், மீசை மாதையன் 1993 முதல் சிறையில் இருக்கிறார்கள். இவர்களோடு  சிறையில் இருந்த  பிலவேந்திரன், சைமன் என்ற  இருவரும்  சிறையிலேயே  உடல் நலம் குன்றி இறந்து விட்டனர். இவர்கள் பாலாற்று குண்டு வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.தடா சட்டத்தில் எப்படி கைது செய்யலாம் என்பதற்கான விதிகள் இருந்தன. ஆனால் எப்படி விடுதலை செய்யலாம் என்பதற்கான விதிகள் இல்லை என்று சொல்லி மத்திய, மாநில அரசுகள் தங்களுக்குள் கோப்புக்களை அலைகழித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால்,இது உண்மையான காரணமல்ல, தடா வழக்கில் கைதான பலர் எப்போதோ விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். என்கிறார் பெ.சிவசுப்பிரமணியன். இவர் தனது   நூலின் நான்காவது பாகத்தை  தற்போது  எழுதி வருகிறார்.

தண்டனை அமலாக்கத்தில் மூன்று அம்சங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

திருத்துவது ( Reformation),

வஞ்சம் தீர்ப்பது (Retribution),

தாமதப்படுத்துவது (Deterrence) என்ற மூன்று கோட்பாடுகள் உள்ளன.

அறுபது,எழுவது வயதுக்கு மேல் ஆன வயோதிகர்களைத்  திருத்துவதற்காக அரசு  சிறையில் வைத்து இருக்கிறதா ?

32 ஆண்டுகள் சிறையில் வைத்து வஞ்சம் தீர்த்தது போதாதா ?

இவர்களை வெளியில் விடாமல் தாமதப்படுத்துவதால் என்ன சாதிக்கப் போகிறார்களோ…!

அவர்களின் விடுதலையால் இன்னொரு குற்றம் நிகழப்போகிறதா ? நமது சிறைத்துறை எப்படி யாந்தரிகமாக விதிகளை பார்க்கிறது என்று  பாருங்கள். கைதிகளின் வயோதிகம், குடும்பச் சூழல், உடல்நிலை போன்றவைகளை கருதி அவர்களின் முன் விடுதலை குறித்து  முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.

பத்திரிகைகள் இது குறித்து பேசுவதில்லை. அரசைக் கேள்வி கேட்க வேண்டிய கட்சிகளும் கண்டு கொள்வதில்லை.தமிழ் நாடு பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமை கழகம் ஆகியவை தான் இதற்காக குரல் கொடுக்கின்றன!

வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையினரின் பழங்குடி பெண்களை படுமோசமாக பாலியல் சித்திரவதை செய்தனர். இந்த அத்துமீறலை குறித்து விசாரிக்க  சதாசிவம் குழு அமைக்கப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான எவ்வளவோ தகவல்கள் வெளி வந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை தரப்பட்டது..?

இவர்களின் விடுதலை தொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் தமிழ்நாடு பழங்குடியினர் சங்க தலைவரான வி.பி.குணசேகரன். இவர்களின்  விடுதலைக்கு குரல் எழுப்பக் கோரி மு.க.ஸ்டாலின்(திமுக), இரா.முத்தரசன்(சிபிஐ), கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட்), பேரா.ஜவாஹிருல்லா போன்ற அரசியல்வாதிகளிடம் கடந்த மாதம் மதுரையில் நடந்த இந்தியக்  கம்யூனிஸ்ட் டு கட்சியினர் நடத்திய மாநாட்டின்போது சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.ஆயினும் தேர்தல் நேர பரபரப்பில் அரசியல்கட்சிகள் இந்த எளியவர்கள் விவகாரத்தில் எவ்வளவு அக்கரை காட்டுவார்கள் என தெரியவில்லை.

இது குறித்து வி.பி்.குணசேகரனிடம் பேசிய போது, ‘’ வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு படையைச் சார்ந்த  அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு அரசு  நிவாரணம் வழங்கியது. ஆனால் அப்படி குற்றம் இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சதாசிவம் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அதனை இந்த அரசு செய்யவில்லை. அவர்களுக்கு ஒரு நீதி, இவர்களுக்கு ஒரு நீதியா?  முதுமை காலத்தில் தங்கள் குடும்பத்தினரோடு இவர்கள் சேர்ந்து வாழட்டும். அரசு மனிதாபிமனத்தோடு இதனை அணுக வேண்டும் ” என்றார்

வழக்கறிஞரும்,சமூக செயல்பாட்டாளருமான சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, ”ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருப்பது என்று சட்டப்படி சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதில்லை. குற்றவாளிகளின் செல்வாக்கைப் பொறுத்து அவை மாறுபடுகிறது. கொலை குற்றவாளிகள் அனைவரையும் சிறையில் ஆயுள் முழுக்க நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்றால், இன்றைக்கு உள்ள சிறைச்சாலைகள் போதவே போதாது. அரசியல் அணுகுறை கொண்ட வழக்குகளில் நீதி வழங்கல் பாரபட்சப்படுகிறது என்பதற்கு ராஜிவ் கொலை குற்றவாளிகளைப் போல இந்த குற்றவாளிகள் நிலையும் ஒரு உதாரணமாகும்! இவர்களை விடுவிக்க இந்திய மற்றும் ,சர்வதேச அளவில் மனித ஆணையங்களின் உதவியை நாட வேண்டும்’’ என்றார்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time