அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளரான தினேஷ் சீரங்கராஜின் டெல்லி மாணவர் போராட்ட கள அனுபவங்கள் அலாதியானது. காக்ரோச் ஜனதா கட்சி, காவல் துறையின் வன்முறை, இளைஞர்கள் அதை எதிர் கொண்ட விதம், பொது மக்களின் ஆதரவு, இடதுசாரிகள் பங்கேற்பு, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி சீர் குலைக்க முயன்றது, பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு போன்றவற்றை பேசுகிறார்;
தில்லியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகமான அஜாய் பவனில் போராட்டம் முடிந்த ஆசுவாசத்தில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது;
காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயர் எப்படி வந்தது?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த், வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சி ( cockroaches) என்று ஒரு வழக்கில் விமர்சிக்க, இதில் கோபமுற்ற அபீஜித் தீப்கே ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’ ( Cockroaches Janatha Party) என்பதை அமெரிக்காவில் இருந்து உருவாக்கினார். இதை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களில், பாஜக, காங்கிரஸ் கட்சி போன்ற கட்சியை விட அதிகமான பேர் பின் தொடர ஆரம்பித்தனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அறிவிக்கிறார். தேர்வு எழுதிய 23 இலட்சம் மாணவர்கள், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் என அபிஜித் தீப்கேவை இன்ஸ்டகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே அம்பது லட்சத்தை தாண்டியது.

இந்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு பரவலாக கிடைக்க காரணம் என்ன ?
இந்தப் போராட்டத்தை முக்கியமான ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சுயேச்சையான யூ டியூபர்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் செய்திகள் பரவின. சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உடல்நிலை மோசமான போது எல்லோரும் கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள். நடிகை சோனாக்ஷி ஆதரவு தெரிவித்து முதலில் காணொளி வெளியிட்டார். சோனம் வாங்சுக் வாழ்கையை வைத்து 3 idiots படமெடுத்த (தமிழில் விஜய் நடித்த நண்பன்) அமீர்கான் ஏன் ஆதரவளிக்கவில்லை என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ஜூலை 20 நாள் பாராளுமன்ற ஊர்வலம் அறிவித்த நிலையில், ஜூலை 18 ம் தேதி சோனம் வாங்சுக்கை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது மக்களின் கோபத்தை கிளறிவிட்டது.
பல்கலைக்கழக தேர்வு முடிந்து, விடுமுறை முடிந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி சாரை, சாரையாக வர ஆரம்பித்து விட்டார்கள். 18 ம் தேதி மதியம் இடத்தை காலி செய்தாலும், அன்று மாலையே மாணவர்கள் மீண்டும் வந்து விட்டார்கள். சாப்பாடு கிடைக்குமா, குளிக்க முடியுமா மற்ற வசதிகள் உள்ளனவா என்ற எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. யாரென்றே தெரியாத மக்கள் தானாக முன் வந்து உணவளித்தனர். டெல்லி வெப்பம், புழுக்கம் போன்ற தட்பவெப்ப நிலை மாணவர்களின் உடல் நிலையை பாதித்தது. உண்ணாவிரத மேடையில் தூங்கிய மாணவர்களுக்கு இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் விடாமல் விசிறிவிட்டவர்கள் உண்டு. இவையெல்லாம் உடலை வருத்திக் கொண்டு, பொது வேலைக்காக தியாகம் செய்தால், மக்கள் ஆதரவளிப்பார்கள் என்பதையே காட்டுகிறது.

எங்கள் மாணவர் பெருமன்ற தோழர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாக இருந்தனர். மாணவர் பெருமன்றம் ஜந்தர் மந்தரில் நடத்திய நூலகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாள் முழுவதும் நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்த வண்ணம் இருந்தன. தில்லி போராட்டம் ஒரு திருவிழா போல நடந்தது. ஜந்தர் மந்தரில் போராட்ட ம் நடந்த அதே வேளையில் நாடெங்கிலும் உள்ள நகரங்களில் தமிழ்நாடு, குஜராத் உட்பட போராட்டம் பரவ ஆரம்பித்தது.
தமிழ் நாட்டில் பாலன் இல்லத்தில் போராட்டம் நடந்தது பற்றி உங்களுக்குத் தெரியுமா ?
சமூக நீதிக் கொள்கை உள்ள மாநிலம், நாம் தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறோம். இத்தகைய பாரம்பரியம் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. ஆனால் ஜூலை 20 ம் தேதி பாராளுமன்ற ஊர்வலம் நடந்த நாள் முதல், பாலன் இல்லத்தில் மக்கள் போராடினார்கள். ‘தமிழ்நாட்டின் ஜந்தர் மந்தர்’ என்று பாலன் இல்லத்தை குறிப்பிட்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
கரப்பான் பூச்சி கட்சியின் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள் ?
அவர்களுக்கு அடிதளம் என்பது கிடையாது. ஆனால் அவர் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜூன் 6 ம் நாள் அன்றே AISF, SFI, AISA, Collective, Diksha, KYS (kranthi Yuva Sanga) போன்ற மாணவர் அமைப்புகள் களத்தில் நின்றன. அன்று 4,000 பேர் கலந்துகொண்டனர். அதன் பிறகு அபிஜித் தீப்கே அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்காபாத், லக்னோ, ஜெய்பூர், பெங்களூர், நாக்பூர் போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன்பிறகுதான் ஜூன் 20 முதல் போராட்டம் ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடைபெற்றது. து.ராஜா, எம்.ஏ.பேபி, திபங்கர் பட்சாரியா போன்ற இடதுசாரி தலைவர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தனர்.

காங்கிரஸ் கட்சியும், அதன் மாணவர் அமைப்பான NSUI யும் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தனியாக போராட்டம் நடத்தினார்கள். ராகுல் காந்தி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினார். அதில் இந்தியா கூட்டணியின் மற்ற கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தில்லி பல்கலைக்கழகம், ஜமாலியா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இங்கு உள்ளன. ஆனால் தில்லியில் உள்ள சாதாரண மாணவர்கள் இதில் சேர முடியாது. CUTE போன்ற போட்டித் தேர்வுகளுக்காக அவர்களால் செலவழிக்க முடியாது.
எனவே திறந்தவெளி கல்லூரிகளில் படிக்கிறார்கள். பாஜக அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையானது நீட், கியூட் (CUET) போன்ற போட்டித் தேர்வுகளை நடத்த வழிவகை செய்கிறது. ஏறக்குறைய 60,000 கோடி ரூபாய் புழங்கும் வியாபாரமாக இது உருவெடுத்துள்ளது. ‘எங்கள் நிறுவனத்தில் படித்த மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்’ என்ற விளம்பரப்டுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பினால் தான் கேள்வித் தாள் கசிகிறது. எனவே தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்த்து 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். WTO, GATT ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட்டதன் விளைவு இது.
மாணவர்களின் இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஓரணியில் ஒன்று சேர்த்து விட்டது. வெல்ல முடியாத ஒரு அரசு என்ற எண்ணத்தை இந்தப் போராட்டம் அடித்து நொறுக்கி விட்டது. நமது வரலாற்றில் இது முக்கியமான போராட்டம் என்றே கருதுகிறேன்.

போராட்டம் முடிவுபெற்ற பிறகு பழிவாங்கும் முறையில் கைதுகள் நடைபெறுவதாக செய்தி வருகிறதே?
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்று அரசு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை குறி வைப்பதாக தெரிய வருகிறது. சில கல்லூரி விடுதிகளுக்கு சென்று மாணவர்களை தூக்கிச் செல்கிறது போலீஸ். இது பழிவாங்கும் போக்காக உள்ளது.பாஜக ஆட்சி செய்யும் அசாம், பீகார் மாநில அரசுகள் போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுவதாக தெரிவித்துள்ளன. போட்டித் தேர்வுகள் தந்த மன அழுத்தத்தால் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு தருவதாக அரசு வாக்கு கொடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் குற்றவாளிகள், இருந்தார்கள் என்று காவல்துறை கூறுகிறதே ?
ஜீன் மாதம் 6ம் தேதி அபிஜித் தீப்கே தில்லியில் முதல் நாள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆர்எஸ்எஸ் – ஐ சேர்ந்தவர்கள் ஊடுருவி இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி மாணவர் அமைப்புகளும் கலந்து கொண்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான முழக்கத்தை நாங்கள் போட்ட போது, எங்களுக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தான் ஆர்எஸ்எஸ் ஆட்கள் உள்ளே வந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். நடந்த போராட்டத்தில், ஆர்எஸ்எஸ் ஆட்கள் சீருடை அணிந்தும், அணியாமலும் மாணவர்களை தாக்கினார்கள்.
ஜூன் மாதம் 20 ம் நாள் தொடங்கி, ஜூலை 25 ல் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை பல்லாயிரக்கணக்கானவர் வருவதும் போவதுமாக இருந்தனர். இதில் குற்றவாளி என்று யாரைச் சொல்வீர்கள்?
மகாராஷ்டிராவில் பொதுப் பள்ளிகளை மூடியதைக் கண்டித்து சட்டமன்ற முற்றுகை டோராட்டம் நடத்திய வைபவ் , பிரயூஷா (பெண்) இவர்களை குறி வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் இரண்டு மணி நேரம் தாக்கினார்கள். இவையெல்லாம் என்ன?

காவல்துறையின் நடவடிக்கை பற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா ?
காவல்துறையின் தாக்குதலை மாணவர்கள் எதிர் கொண்ட விதம் போற்றத் தகுந்தது. ஆணிகளைப் பதித்த தடிகளைக் கொண்டு மாணவர்களைத் தாக்கினார்கள். பெல்லட் குண்டுகளை சாதாரண மக்களை மீது பயன்படுத்தக் கூடாது என்பது சட்டம். மேடையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை தாக்கினார்கள். மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்த நிலையில் அவர்களால் ஓடக்கூட முடியாது. துப்பாக்கியால் சுடுவேன் என்ற போது அச்சமின்றி நெஞ்சைக் காட்டி ‘சுடு’ என்றனர். அடித்த அதே காவலர்களை மறுநாள் சந்தித்து, உங்கள் மகன்/மகள் போல உள்ள எங்களை அடிக்கிறீர்களே என்று அவர்களிடமே நியாயம் கேட்டார்கள்.
நையாண்டி காணொளி போட்டா்கள். பாராளுமன்ற ஊர்வலத்தின் போது இலட்சக்கணக்கில் திரளுவார்கள் என்று அரசு நினைக்கவில்லை. ஒருவேளை முன்னமே தெரிந்திருந்தால் எல்லைகளை அடைத்திருக்கலாம். அப்போது 6,000 காவலர்களே இருத்தனர். இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு விட்டனர். தொலைபேசி வசதி கிடையாது. இணைய வசதி துண்டிக்கப்பட்டு விட்டது.
இப்படி ஒரு எழுச்சியை யாரும் பார்த்ததில்லை. இரண்டு பக்கமும் காவல் வாகனங்களை நிறுத்தி வழியை குறுக்கி விட்டனர். அது ஒரு குறுகலான இடம். ஒருவேளை கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு நடந்திருந்தால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். பாராளுமன்றத்தில் இருந்த பிரதமர், அமைச்சர்களை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்திவிட்டனர். மாணவர்கள் பாராளுமன்ற வாயிற் கதவு வரை சென்று விட்டனர். வாயிற் கதவுகளை மீறி உள்ளே வந்தால், சுடும் நிலையில் படையினர் இருந்தனர். நல்ல வேளையாக அப்படி ஓர் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. சுதந்திர இந்தியாவில் இது போல்பாராளுமன்ற வாயிற் கதவுகளை மூடியதாக வரலாறு இல்லை. இந்தப் போராட்டத்தினால் தான் VBSA (விக்ஷித் பாரத் ஷிக்ஷா அபிஸ்தான்) என்ற UGC, AICTE, NCERT ஆகியவைகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரும் பிற்போக்கான ஒரு சட்டத்தை இந்த பாராளுமன்ற தொடரில் அறிமுகப்படுத்த இருந்ததை தள்ளி வைத்துள்ளனர்.
நேர் காணல்; பீட்டர் துரைராஜ்























மோடி வீழ்த்த முடியாத நபர்.என்றும் காரணம் அவருக்கு எதிராக உள்ள கட்சிகள் பலவீனம் அடைந்து விட்டது என்று கருதிக் கொண்டு இருக்கும் போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் இளைஞர்களைப் பற்றி கூறிய ” காக்ரோச், ” ,என்ற ஒரே ஒரு வார்த்தை தான் இளைஞர்களை வீறுகொண்டு எழ வைத்து 56 இஞ்ச் மார்பளவு கொண்ட வாழும் நீரோ மோடியை வீழ்த்தியது..
தொடரட்டும் மாணவர் – இளைஞர்களின் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்.
எல்லா போராட்டங்களிலும் சமுகவிரோதிகள் பங்கேற்பது உண்மை. ஆர்எஸ்எஸ் சமூகவிரோதி அல்ல. சிஜேபி போராட்டம் வெல்லும் என தெரிந்தபின் தானே அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. எதிர்கட்சிகள் முன்னெடுக்கத் தவறியதால் சிஜேபி உருவானது. சிஜேபி தேர்தல் களத்துக்கு தயாராகவில்லை