கரப்பான் பூச்சி இளைஞர் போராட்டத்திற்கான வரவேற்பு தற்செயலானதோ, திடீர் சம்பவமோ, ஒரு வினாத்தாள் கசிவிற்கு வெகுண்டெழுந்த போராட்டமோ அல்ல. கடந்த 12 ஆண்டுகளாக கல்வித் துறையில், ஆர் எஸ் எஸ் சூழ்ச்சிகளால் உருவான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி உள்ளிட்ட இந்துத்துவ தனியார் ஏஜென்ஸிகளின் சகிக்க இயலாத தகிடுதத்தங்களின் விளைவுகளே;
புது தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களை பெல்லட் குண்டுகளால் சுட்டும், தடியடி நடத்தியும் சமாளிக்க முடியாமல் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலுக்கு செவி சாய்த்தது மோடி அரசு. இது மாணவர்களுக்கும், கரப்பான்பூச்சி ஜனதாவுக்கு மட்டுமான வெற்றியல்ல. ஜனநாயகத்தில் பற்றுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த புது தெம்பாகும்.
கல்வித் துறையில் தனியார் மயமும், ஒருமுகப்படுத்துதலும்!
மக்களின் முன்னேற்றத்திற்கு வழியைத் திறந்து விடுவது கல்வியறிவு தான். கல்வியறிவு பெறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மட்டுமின்றி, ஒரு நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் உயரும். இந்தியாவில் உயர்கல்வி துறையில், பட்ட மேற்படிப்பில் 2010 -க்கு பிறகு மாணவர்களின் வருகை பெருமளவிற்கு உயர்ந்தது. இந்த வருகையை பாஜக அரசு விரும்பவில்லை.
இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2014 வரை மொத்த உற்பத்தியில் 4.5% அளவில் இருந்தது. பாஜக ஆட்சியில் தற்போது 2.4 சதவிகிதமாக குறைந்துவிட்டது. கல்வித் துறையில் தனியார் மயத்தை (privatisation) ஊக்குவிப்பது, கல்வியை மையப்படுத்துவது (centralisation) என்ற போக்குகள் 2014-க்கு பிறகு அதிவேகமாக தலையெடுத்தது. உயர்மட்ட கல்விக்கான ( ஐஐடி, ஐஐஎம் , என்டிசி ஏஐஐஎம்எஸ் ) தேர்வு முறைகளை போன்று அனைத்து உயர் கல்வி சேர்க்கைக்கும் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை இப்படித் தான் அறிமுகமானது.
ஆனால் 2014 வரை இத்தகைய ஒருமையப்படுத்தும் முயற்சிகளை நீக்கு போக்குடன் ஆள்பவர்கள் கையாண்டதனால், முரண்பாடுகள் வெளியே தெரியவில்லை. 2002 ம் ஆண்டே இந்திய கல்வித் துறையை தன் கட்டுக்குள் கொண்டுவர ஆர் எஸ் எஸ் இயக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. வாஜ்பாய் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக (மனிதவள மேம்பாட்டு துறை ) இருந்த திரு. முரளிமனோகர் ஜோஷி , பாட திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது, பாட புத்தகங்களை மாற்றி எழுதுவது, இடது சாரி எண்ணமுடையவர்களை பல்கலைகழகங்களில் ஓரங்கட்டுவது, போன்ற கைங்கரியங்களை தொடங்கி வைத்தார். விவகாரம் உச்சநீதி மன்றம் வரை சென்று ஜோஷியின் முயற்சிகளுக்கு அப்போது முட்டுக்கட்டை போடப்பட்டது.
ஆனாலும் பல்கலைகழக துணை வேந்தர் பதவிகளில் ஆர் எஸ் எஸ் அனுதாபிகளை நியமிப்பதில், பாட புத்தகங்களை தீர்மானிக்கும் குழுக்களில் இந்துத்துவ கொள்கையாளர்களை, உறுப்பினர்களாக நியமிப்பதில் ஜோஷி வெற்றி கண்டார்.
2004 -ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் கல்வித் துறையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆதிக்கத்திற்கு இடையூறு நேர்ந்தது. இலைமறை காய்மறையாக தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்த ஆர் எஸ் எஸ் 2014-க்கு பிறகு முழு மூச்சுடன் கல்வித் துறையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட தொடங்கியது.

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைகழகங்களான ஜவகர்லால் நேரு பல்கலைகழகம் JNU, ஜாமியா இஸ்லாமியா பல்கலை கழகம், ஆஸ்மேனியா பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக் கழகம், ஹைதராபாத் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை நியமிப்பதிலும், நீட்டிப்பதிலும் தங்களது கைவரிசையை காட்ட தொடங்கியது. மாணவர்களை தேச விரோதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்தி பழிவாங்க தொடங்கியது. சங்கப்பரிவாரங்களில் ஒன்றான அகில இந்திய மாணவரணியை ABVP பல்கலைகழகங்களில் நுழைத்து வன்முறை வெறியாட்டத்தை ஆர் எஸ் எஸ் நிலை நாட்டியது.
2016 -ல் மோடியில் அரங்கேற்றப்பட்ட பணமதிப்பிழப்பின் விளைவாக இந்திய பொருளாதாரம் சிதைந்து சிறு குறு தொழில்கள் மாண்டன, வேலை இழப்பு பெருகியது.
ஒருபுறம் படித்தவர் எண்ணிக்கையும், மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்த வேளையில் தொழில்கள் நசிந்தன, வேலை வாய்ப்புகள் குறைந்தன. இந்த சிக்கலை சமாளிக்க மோடி அரசு கொண்டு வந்த திட்டமே புதிய கல்விக் கொள்கையாகும் NEP 2020.
ஒருபுறம் கல்வித் துறையில் மாணவர்களின் வரவு அதிகமாக இருந்த பொழுது கல்விக்காக அரசு செலவிடும் தொகையோ 4.5 % த்திலிருந்து 2.4 சதவிகிதமாக குறைந்தது, மோடியின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார கொள்கைகளினால் புதிய வேலைவாய்ப்புகள் மிகவும் அரிதாக மாறின.

அரசாங்க பணியிடங்கள், அரசு நிறுவனங்களில் ஏற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே காலியாக இருந்தன. பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் பணியிடங்கள் நிரப்பபடாமல் இருந்தன. அதற்காக நடத்தப்படும் தேர்வுகள் வினாத்தாள் கசிவால் தள்ளி போடப்பட்டு ஏராளமான இளைஞர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி போட்டது. ரயில்வே ரெக்ரூட்மெண்ட்!
தேர்வு முறைகேடு, ஆசிரியர் பணி தேர்வு முறைகேடு என தேர்வு முறைகேடுகள் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தொடர் கதையாக நீளுகிறது. எஞ்சியிருந்த ஒரே வாய்ப்பான ராணுவப் பணிக்கும் மோடி அரசு அக்னி வீர் திட்டத்தின் மூலம் முட்டுக்கட்டை போட்டது. இராணுவத்தில் பணியாற்றுவது உட்பட அனைத்து அரசுப் பணிகளையும் காண்ட்ராக்மயமாக்கியது மோடி அரசு.
கேள்வி ஏதும் கேட்காத, உரிமைகள் பற்றி பேசாத சொற்ப கூலிக்காக அலைபாயும் மக்களின் எண்ணிக்கையை பெருக்குவதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்தை மேலும் கூட்ட மோடி அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தியது.
ஏன்? , எதற்கு? என்ற கேள்வி கேட்கும் திறமையை வளர்க்காத கல்வியை வழங்கினால் தொழிலாளர் சந்தையில் கூட்டம் அதிகரிக்கும், முதலாளிகளின் ஆதிக்கம் இதன் மூலம் மேலும் வளரும் என்ற திட்டத்தில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது.
உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களை வடி கட்டுவது, அவர்களை தேர்வு மூலம் கழித்து கட்டுவது என்ற எக்சிட் பாலிசியே புதிய கல்விக் கொள்கையாகும்!
இதற்கு அடித்தளமாக ஒருமுனைபடுத்தப்பட்ட தேர்வு முறைகளை (centralised testing) மோடி அரசு கையிலெடுத்தது. தனியார் மயமான கல்வி, ஒருமுகப்படுத்த பட்ட தேர்வு முறை என்ற இந்த இரண்டு தண்டவாளங்களின் மீது தான் புதிய கல்வி கொள்கை என்ற வாகனம் பயணிக்கிறது. இதன்மூலம் மாநில உரிமைகள் , அம் மக்களின் உணர்வுகள் பறிக்கப்பட்டு நசுக்கப்பட்டன.

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி NTA என்ற அமைப்பு 2018-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு NEET- UG, JEE , UGC- NET, NEET-PG, போன்ற போட்டித் தேர்வுகளை நடத்துகிற ஒற்றை நிறுவனமாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆறரை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த அமைப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலமுள்ள 24 நபர்களே நிரந்தர பணியாளர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு இருநூறுக்கும் மேற்பட்ட காண்ட்ராக்ட் அமைப்புகள், அவுட் சோர்சிங் ஏஜெண்டுகள் மூலமே தேர்வுகளை – வினாத் தாள்களை தயாரித்தல், பதிப்பித்தல், தேர்வு மையங்களை தேர்வு செய்தல், அவற்றை நிர்வகித்தல், விடைத் தாள்களை சேகரித்தல், விடை தாள்களை திருத்துவோரை நியமித்தல் அவர்களை கண்காணித்தல், தேர்வு முடிவுகளை பட்டியலிடுதல், அறிவித்தல் மற்றும் சான்று வழங்குதல் என அனைத்து பணிகளையும் அவுட் சோர்சிங் மூலமே தேசிய தேர்வு முகமை அமைப்பு செய்கிறது. இந்த அமைப்பை கண்காணிக்க எந்த தணிக்கை முறையும் கிடையாது.
இதனுடைய தலைவராக இருப்பவர் திரு. பிரதீப் குமார் ஜோஷி என்ற அதிகாரி ஆவார். இவர் முன்னாள் UPSC தலைவராவார் . அதற்கு முன்னால் இந்த அதிகாரி மத்திய பிரதேச ப்ப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தலைவராக இருந்தார், அதற்கு பின்னர் சட்டீஸ்கர் மாநில சர்வீஸ் கமிஷனின் தலைவராக சில காலம் நீடித்தார், பிறகு யுபிஎஸ்சி தலைவர் இப்பொழுது NTC தலைவர்.
இந்த அமைப்பிற்கு ஆலோசனைகள் கூற ஒரு கவர்னிங் கவுன்சில் உள்ளது, இதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள் , ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி மற்றும் ஜே என் யூ ஆகிய அமைப்புகளின் துணை வேந்தர்கள் ஆவர் . இந்த குழு 2024 ல் நடந்த வினாத்தாள் கசிவிற்கு பின்னர் இன்று வரை இரண்டு முறை தான் கூடியுள்ளது என்ற செய்தி நமக்கு ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது. 2026-ல் இதுவரை ஒருமுறை கூட இக்குழு கூடவில்லை, வினாத்தாள் கசிவை தடுக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
இந்த போராட்டத்தின் ஊடே அரசு 36 NTA ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது . இவர்கள் அனைவரும் காண்ட்ராக்ட் ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள் தான்! புரியும்படி கூறினால் இவர்கள் “சின்ன மீன்கள்” தான். திமிங்கலமான NTA தலைவர் ஜோஷியை, மூளையாக செயல்படும் “அவுட் சோர்சிங் நிறுவனங்களை “ யாரும் கேள்வி கேட்க கூட அரசு அனுமதிக்கவில்லை. ஏனெனில் இவையாவும் பி ஜே பி யின் ஈகோ சிஸடத்தின் அங்கங்கள். அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது!
பிரதீப் குமார் ஜோஷி , மத்திய பிரதேச அரசு பணியில் அமர்ந்ததே ஒரு மோசடியாகும் . இவர் ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர் என்று ஆர் எஸ் எஸ் சின் பிராந்திய தலைவர் துபே அளித்த சிபாரிசின் அடிப்படையிலேயே அன்றைய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஜோஷியை மத்திய பிரதேச சர்வீஸ் கமிஷனின் உறுப்பினராக நியமித்தார். இவர் ஆர்.எஸ்.எஸ்சுடன் நேரடி தொடர்புள்ளவர்.

2009-10 ல் ம.பியில் நடந்த பல்கலைகழக ஆசிரியர் தேர்வில் நடந்த முறைகேட்டில் ஜோஷி சம்மந்தப்பட்டுள்ளார் என ம.பி அரசின் உண்மை அறியும் விசாரணை குழு கூறியுள்ளது. இவர் மேல் உரிய நடவடிக்கையை எடுக்க அக்குழு பரிந்துரைத்த பின்னரும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை சர்வீஸ் கமிஷன் சேர்மனாக பதவி உயர்வு கொடுத்தது! அதற்குப் பிறகு சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் , ஒன்றியத்தில் உள்ள யூனியன் ப்ப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கும் UPSC இந்த பேர்வழி தான் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்றும் அதே அரவணைப்பில் என் டி ஏ தலைவராக உள்ளார். இதற்கு பெயர் தான் ஆர் எஸ் எஸ் ஸின் ஆதிக்கம் என்பதாகும் .
இந்த அமைப்பு அவுட் சோர்சிங் முறையில் தேர்வுகளை நடத்த NTA அமைப்பு , நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
Eduquity Career Technologies P. Ltd.
Satvat Infosal P Ltd.,
CoEmpt Edutech P.Ltd.
ஆகிய நிறுவனங்களே இவற்றில் முக்கியமானவை. இவையாவும் பிஜேபி தலைவர்களுக்கு நெருக்கமான கம்பெனிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட, ஊழல்கறை படிந்த நிறுவனங்களாகும்.
ஆனாலும், என்டிஏ வின் நிரந்தர கூட்டாளிகளாக இந்த நிறுவனங்கள் வலம் வருகின்றன. இத்தனை (154) கசிவுகளுக்கு பின்னும் இவர்களது சேவை தொடருகிறது!
இவர்கள் எந்தவித பொறுப்புமின்றி தேர்வுகளை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்துவார்களாம்!
இதை கேள்வி கேட்பது மோடியின் அகராதியில் “வழி தவறிய இளைஞர்களின்” செயலாம்!

என்டி ஏ வில் எந்த தலையும் உருளவில்லை, எந்த கம்பெனியும் பொறுப்பாக்கபடவில்லை, வினாத்தாள் கசிவில் ஈடுபட்டோருக்கு தண்டனை காலத்தை கூட்டி சட்டமியற்றுவதும், அவ்வழக்குகளை விரைந்து முடித்து வைக்க துரித நீதிமன்றங்களை நிறுவுவதாக கூறுவதும் பிரச்சினையின் மூலத்தை களையும் நடவடிக்கை அல்ல. பிரச்சினையை திசை திருப்பும் ஏமாற்று வேலையாகும் . கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகியவரை ஹீரோ போல வருணித்து பாஜக வினர் வர வேற்பதும், அவருக்கு பதிலாக ஆர் எஸ் எஸ் கூடாரத்திலிருந்து வந்துள்ள பிரஹலாத் ஜோஷியை “கல்வி அமைச்சராக” நியமிப்பதும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவை மோடி அரசு சீரழிவாக ஏற்க மறுப்பதன் வெளிப்பாடுதானே!
2014 -க்குப்பிறகு, கல்லூரிகள் 50% அதிகரித்துள்ளன, பல்கலைகழகங்களோ 200% அதிகரித்துள்ளன என்றால், இதில் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை எண்ணி பாருங்கள். இவர்களது கல்வியறிவை,திறனை மேம்படுத்த போதிய ஆசிரியர்களை மோடி அரசு நியமித்ததா?
பல்கலைகழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் பணியிடங்கள் இன்று வரை 50.2% பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளன. ஐ ஐடி களில் மட்டும் 40% பணியிடங்கள் காலியாக உள்ளன. பிறகு யார் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பர்?
இது போதாதென்று யுஜிசியை மாற்றியமைத்து மாநிலத்தின் எஞ்சியுள்ள உரிமைகளை பறித்து, மத்திய அரசு வசம் ஒப்படைக்கவே உயர்கல்வி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, திட்டமிட்டு நடக்கும் ஒருமயப்படுத்துதலும், தனியார் மயப்படுத்துதலோடு கல்வித் துறையை காவிமயமாக்குதலும் (centralisation, privatisation and saffronisation of Education) பாஜ க ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை தொடரும். இது நாள் வரை நீட் எதிர்ப்பு போராட்டம் மாநில உரிமைகளை முன்னிறுத்தி நடைபெற்றதால் அந்த எதிர்ப்பு பாஜக அரசை எள் முனையளவு கூட பாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது பாஜகவினரின் ஆதரவாளர்களான வட மாநில நடுத்தர வர்க்க மக்களின் பிள்ளைகள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதால் விவகாரம் சிக்கலாகி உள்ளது.

இந்த போராட்டத்தை பாஜக எதிர் கொண்ட விதம் நமக்கு சில உண்மைகளை புலப்படுத்தக் கூடும். வெவ்வேறு மாநிலங்களில் வெடிக்கும் மாணவர் போராட்டங்களை தனிமைபடுத்துவதும், எதிர்கட்சிகள் இதை கையிலெடுக்காமல் தடுப்பதற்கு போராடுபவர்கள் ஒன்றிணைய பல இடையூறுகளை, பல மாய்மாலங்களை மோடி அரசு செய்தது.
ஒட்டுமொத்த அமைப்பின் கோளாறை சரி செய்வதற்கு பதிலாக ஆங்காங்கே நடக்கும் கசிவுகளுக்கு, முறைகேடுகளுக்கு கைதுகளை அரங்கேற்றிய பாஜக அரசு இதுவரை யாரையும் தண்டிக்கவில்லை. எதிர்கட்சிகள் மாணவர்களை தம்பக்கம் ஈர்ப்பதை தடுக்க பாஜகவினரே கரப்பான்பூச்சி கட்சியினரை ஆரம்பத்தில் ஊக்குவித்தனர், அதன் ஒருங்கிணைப்பாளர் தீப்கேவை முதலில் மிரட்டினர். பின்னர் அவரிடம் பாஜகவில் இணைய பேரம் பேசினர், அவரை தலீத் என அடையாளப்படுத்தி தனிமைபடுத்த முயன்றனர்,
காங்கிரஸ் கட்சியும் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும் மாணவர் போராட்டங்களை தன் வயப்படுத்துதலை தடுக்க கரப்பான் பூச்சி கட்சிக்கு ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த மோடி அரசு அனுமதித்தது. அரசியல் சாயத்தை தவிர்க்க சோனம் வாங்சுக் உண்ணாவிரத்த்தை கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்தது, ஆரம்பத்தில் (ஜூன் மாத்த்தில்) ஜந்தர் மந்தரில் நூறு இருநூறு நபர்களே கூடினர் . ஆனால் இடதுசாரி மாணவ இயக்கங்களான அகில இந்திய மாணவரமைப்பு (AISA), அகில இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் கிரந்திகரி யுவ சங்கத்தன், ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவரமைப்பு ஆகியவை இந்த போராட்டத்தின் தளபதிகளாக, படை வீரர்களாக செயல்பட்டனர்.
இதனால் இந்த போராட்டம் சோனம் வாங்சுக்கை கடத்திச் சென்று அவரது உண்ணாவிரதத்தை முறியடித்த மோடி அரசையும் மிஞ்சி செயல்பட்டது. சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ வை தூண்டிவிட்டு போராட்டத்தை கைவிட அறிக்கைவிட்டதை பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்ந்தது.
கரப்பான் பூச்சி கட்சி தலைமையே ஆச்சரியதக்க வகையில் மாணவர்கள் போலீசின் அத்து மீறல்களை எதிர்கொண்டு தன்னெழுச்சியாக திரண்டனர். பாராளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கு ஆதரவு பெருகிய நிலையில், காரியம் கைவிட்டு நழுவுவதை தடுக்க, உள்துறை அமைச்சர் அமீத் ஷா மாணவர்களை கலைத்து விரட்டியடிக்க உத்தரவிட்டதன் விளைவாக ,
துப்பாக்கி சூடும், தடியடியும் மாணவர்களை பதம் பார்த்தன.
இதையடுத்து மாணவர் கூட்டம் கலையாமல் , அரசின் வன்முறையை எதிர் கொள்ள மாணவர்கள் முன்னைவிட அதிகம் திரண்டதை மோடி அரசு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனவே, பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது, தர்மேந்திர பிரதான் வேண்டா வெறுப்பாக பதவி விலக நேர்ந்தது.

வளையாபதியான மோடி மாணவர்களின் முன்பு மண்டியிட்டு இன்ஸடா ரீல்ஸ் போட நேர்ந்தது. இந்த போராட்டம் ஒரு தொடக்கம் மட்டுமல்ல , இந்த போராட்டம் மோடி அரசிற்கு மட்டுமின்றி எதிர்கட்சிகளுக்கும் விடப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை மணியாகும் .
மோடி அரசின் காட்டு தர்பாருக்கு எச்சரிக்கை விட்ட இந்த மாணவரெழுச்சி எதிர்கட்சிகளுக்கு குறிப்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை இப்போராட்டம் வலியுறுத்தியது எனலாம்.
இந்த தன்னெழுச்சிக்கு இந்தியா முழுவதும் மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வீதிகளில் இறங்கியது இந்தியா விழித்து கொண்டதை உணர்த்துகிறது. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்கள் ஒன்றுகூடி போராட உரிமை உள்ளது என உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வு மோடி அரசு போராட்டக்கார்ர்களை தேச விரோதிகள், கலகக்கார்ர்கள் என அடையாளப்படுத்தும் முயற்சியை முறியடித்தது.
நேற்று வரை மாணவர்களை, வேலையற்றோரை கரப்பான் பூச்சி என நையாண்டி செய்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, மாணவர் போராட்டத்தில் அரசின் வன்முறைகளை எதிர்த்த மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதியும் இறங்கி வந்து மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை, காவல் துறையினர் கட்டுப்பாடுடன் நடக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது நினைவில் கொள்ள வேண்டும் .
ஆனால் நடத்தப்பட்ட அரசு வன்முறைக்கு பொறுப்பேற்காமல், பதில் கூறாமல் ஓடி ஒளியும் உள்துறை அமைச்சர் பற்றி வாய்திறக்காத பிரதமர் மோடி மாணவர்களை வழிதவறிய இளைஞர்கள் என்று வருணித்து நான் மன்னிக்கிறேன் என்பது நரித் தந்திரமா?
இளைய தலைமுறையினரிடம் அம்பலப்பட்ட மோடி , எதுவுமே நடக்காதது போல் , தந்திரமாக ரீல்கள் விடுவதும் அமைச்சர்களை இன்ஸ்டாவில் இறங்கி இளைய தலைமுறையினருடன் நெருங்கி பயணிக்கக் கோருவது தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், விஜய் கட்சியின் வெற்றிக்கு பின்னர் திமுகவினரை ஜென் சீக்களை நெருங்க இன்ஸ்டா ரீல்ஸ் போட சொன்னதை நமக்கு நினைவூட்டுகிறது.
மாணவர்களின் ராஜினாமா கோரிக்கையை ஏற்ற மோடி அரசு போராட்டத்திற்காக மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவதாகவும், நீட் தேர்வு குளறுபடிகளால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் தருவதாகவும் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பழி வாங்கி வருகிறது. இதனால் சிஜேபியின் ஒருங்கிணைப்பாளர் அப்ஜித் தீப்கே உறுதி அளித்தவற்றை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் மற்றும் இளம் பெண்களை பஜ்ரங் தள் அமைப்பினரும் வேறு சில மோடி பக்தர்களும் சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், ’கொலை செய்வோம், கற்பழிப்போம்’ என மிரட்டல்களையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.
விவசாயிகள் ,தொழிலாளர்கள் , மாணவர்கள் உழைக்கும் மகளிரை தொடர்ந்து இளம் மாணவியரையும் வசை பாடி ‘ட்ரோல் செய்து ‘ அடக்க நினைக்கும் மோடியின் சர்வாதிகாரம் நீண்ட நாள் நிலைக்க்குமா?
சர்வாதிகாரிகள் கையில் காவல் துறை, ஆயுத பலம், பண பலம் பத்திரிக்கை, ஊடக பலம் போன்றவை உள்ளன. நீதிமன்றங்களும் தங்கள் கடமை துறந்து நழுவுகின்றன. இந்த நிலையில் எதிர்த்து நிற்கும் மக்களிடமோ போராடுவதைத் வேறு ஆயுதம் கிடையாது . ஆளுபவர்களை எதிர்ப்பவர்களின் கோபம் ஜனநாயகத்தின் அடையாளம் அதை அடக்க முயல்வது கோமாளித்தனம்.
சர்வாதிகாரமும், கோமாளித்தனமும் சில சமயங்களில் ஒரே கோட்டில் பயணிப்பதை சார்லி சாப்ளின் நமக்கு எத்தனையோ படைப்புகளில் உணர்த்தியுள்ளாரே!
ச.அருணாச்சலம்























கல்வியில் ஆர்எஸ்எஸ் மயமாக்கம் எந்த அளவிற்கு ஆழமாக ஊடுருவியுள்ளது ,
என்பதை மிக விரிவாக சித்தரிக்கிறது இக்கட்டுரை.